Monday, October 20, 2014

ஹெப்பி பர்த்டே அக்கா!அது 2008-ஆம் ஆண்டு. நான் ப்ளஸ்-டூ படித்துக் கொண்டிருந்த சமயம். அகிலா அக்கா, ப்ரவின் அண்ணா மற்றும் வேல்ராஜ் அண்ணா எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் மூன்றுபேரும் அப்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டு இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தனர். மாலை நேரங்களில் தங்களுக்கு சமயம் கிடைக்கும்போது எங்கள் பள்ளிக்கு வந்து புத்தகம் வாசித்துக் காட்டுவார்கள். அப்படிதான் அந்த மூன்று பேரும் பழக்கம் எங்களுக்கு.

பெரும்பாலான சமயம் அகிலா அக்கா, சின்ன பசங்க வகுப்புகளுக்கு படிச்சு காட்ட செல்வார்கள். ப்ரவின் அண்ணா மற்றும் வேல்ராஜ் அண்ணாதான் எங்களுடன் இருப்பார்கள். . வெளியில் இருந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்கு யாராவது உதவ வந்தால், நாங்க அவர்களிடம் புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லி, நாங்க அதை கேட்டு ப்ரைலி முறையில் நோட்ஸ் தயாரிச்சுக்குறதும், இல்லாட்டி அவர்களை படிக்க சொல்லி நாங்க காதுல கேட்டுக்குறதுமாத்தான் தினமும் மாலை நேரம் நடக்கும். ஒரு பாட புத்தகத்தில் ஒரு பக்கத்தில் இருக்கும் விஷயத்தை நாங்கள் ப்ரைலியில் நோட்ஸ் எடுத்துக்க குறைந்தது 20 நிமிடம் ஆச்சும் தேவைப்படும். தொடர்ந்து ஒரு மணி நேரம் ப்ரைலியில் எழுதினால் எழுதுவர்களுக்கு கையும் வலிக்கும்.

நாங்க படிக்கும் சமயம் எங்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் கைட் எங்களுக்கு ஏற்ப ப்ரைலி ஃபார்மட்டில் இல்லாததால், எங்களுக்கு உதவவரும் நல்ல மனிதர்களின் மூலம் ப்ரைலியில் நோட்ஸ் தயாரித்து, பிறகு அதை படித்துதான் நாங்கள் தேர்வு எழுதுவோம். இதெல்லாம் படிக்கணும்னு ஆர்வம் இருக்கும் பசங்க நல்ல சின்சியரா செய்யிறது.. ஆனா நாம அப்படி இல்லையே! பேசிக்கலி ஐயம் பிக் சோம்பேறி. சோ... பெரும்பாலும் யாராவது படிக்க வந்தால் பேசியே நேரத்தை செலவிடுவது. தேர்வு நேரத்தில் மட்டும் புத்தகத்தை கொடுத்து வாசிச்சு காட்ட சொல்லி கேக்குறது. புரிஞ்சத வெச்சு தேர்வு எழுதிடுறது. அவ்வளவுதான்.

ஹாஸ்ட்டலில் நாங்க தங்கி படித்ததால் நாட்டு நடப்புகள், என்ன நடக்கிறது.. என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. சோ... வாசித்து காட்ட வருபவர்கள் மூலம் தான் நிறைய பேசி தெரிஞ்சுக்குவோம். அப்படி பழக்கம் ஆனவர்கள் தான் அகிலா அக்கா, ப்ரவின் அண்ணா, மற்றும் வேல்ராஜ் அண்ணா அவர்கள். 2009 மார்ச் மாதம் நாங்க கடைசி தேர்வு எழுதி முடிச்ச அன்னைக்கு மூன்று பேரும் வந்து எங்களை சந்தித்து சென்றனர். அதுதான் நாங்கள் கடைசியாக சந்தித்தது. அதன் பிறகு நான் ஹாஸ்ட்டலில் இருந்து வீட்டுக்கு வந்திட்டேன். கொஞ்சம் நாட்களில் அவர்களும் இன்ஜினியரிங் முடித்து தம்தம் திசைகளை நோக்கி பறந்தார்கள்.

 இப்போது ஐந்தாண்டுகளுக்கு பிறகு திரும்பி பார்க்கிறேன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது நிறைய பேரிடம் நான் வாசிக்க சொல்லி கேட்டிருக்கிறேன். அவர்களில் யாரும் இப்போது தொடர்பில் இல்லை. ஆனால் இந்த மூன்று பேர் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் டெக்னாலஜியின் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. ப்ளஸ்ட்டூ முடிக்கும்வரை ஒரு ஈமெயில் ஐடியும் என் பெயரில் இல்லை, ஆனால் இப்போது பேச நினைத்தால் ஒரு நொடி போதும். அவர்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
 2012 ஃபெப்ரவரியில் அகிலா அக்காவிற்கும், 2014 ஃபெப்ரவரியில் ப்ரவின் அண்ணாவிற்கும் திருமணம் நடந்தது. அந்த சமயம் எதோ ஒரு வேலை இருந்ததால் செல்ல முடியாமல் இருந்தேன். நிச்சயமாக வேல்ராஜ் அண்ணன் திருமணத்திற்காவது கட்டாயம் செல்ல முடிவு எடுத்திருக்கிறேன். பார்ப்போம்.

 சரி விஷயத்திற்கு வருகிறேன்..
20/10/2014 இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் அகிலா அக்கா அவர்களுக்கு நான்,வினோத்
 மற்றும் விழியின் ஓவியம் வாசகர்களின் அனைவரின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா... வாழ்வில் நீங்கள் நினைத்ததை சாதிக்கவும், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாகவும் இருக்க இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
***
 அப்படியே இதே மாதத்தில் 27ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் ப்ரவின் அண்ணாவிற்கும் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.! 2012 ஜூன் மாதம் இவர் எனக்கு தக்க சமயத்தில் செய்த உதவி என்னாலும் மறக்க முடியாதது.
***
எப்படியோ ஒரே கல்லில் ரெண்டு மாங்கா கதையா ரெண்டு பேரோட பிறந்தநாளுக்கு வாழ்த்தியாச்சு. அடுத்ததா தீபாவளி வருகிறது. மூன்று பேருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, இத்துடன் இந்த பதிவிற்கு ஃபுல்ஸ்டாப் வைக்கிறேன்....
தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

  1. ரொம்ப சென்டிமென்ட்டா போட்டு புழிங்ஜி எடுக்காம கேஷுவலா இருந்தது, இதத்தான்டா உன்னோட வாசகர்கள் எல்லாம் எதிர் பாக்குரது!
    மிஸ்ட்டர் வேல்ராஜ் க்கு மட்டும் ஏன் ஹேப்பி பர்த்தடே சொல்லல?

    ReplyDelete