Monday, November 10, 2014

கத்தினேன், கதறினேன், முடிந்தவரை கதவின் மீதும் மோதிப்பார்த்தேன்!நவம்பர் ஐந்து, 2014 மாலை நான்கு மணி. எப்பவும் போல் அன்றைய தினமும் சரியாக நான்கு மணிக்கு கடைசி வகுப்பும் முடிந்திருக்கும். ஒவ்வொருவராக வகுப்பை விட்டு விடுதிக்கும்,
வீட்டிற்க்கும் சென்றிருப்பார்கள். ஆனால் நான் மட்டும்...
எனக்கு நினைவு வந்த சமயம், இரண்டு கண்களையும் திறந்து பார்த்தேன். என்னை சுற்றிலும் கும்மென்று ஒரே இருட்டு, ஒரே நிசப்தம். அந்த சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ள
சில நொடிகள் போதுமானதாக இருந்தது எனக்கு. நான் ஒரு அறையில் தனியாக இருக்கிறேன். இப்போது வகுப்பில் மாணவர்கள் யாரும் கிடையாது. வகுப்பின் கதவு, ஜன்னல் எல்லாம்
மூடப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் வகுப்பில் வைத்து பூட்டபட்டிருக்கிறேன். நான் படுத்திருந்த நிலையில் இருந்துக்கொண்டு, தலையை
மட்டும் தூக்கி, ஜன்னலின் மேல்பகுதியில் இருந்து வரும் வெளிச்சத்தைப் பார்த்தேன். மாலைப்பொழுது முடிந்து இரவு ஆரம்பித்திருக்க வேண்டும். என் முகத்தில் சில்லென
காற்று வீசத்துவங்கியது. அப்படியே வயிறும் பசிக்க ஆரம்பித்தது. அன்று மதியம் வரை நன்றாகத்தான் இருந்தேன். அதன் பிறகுதான் எனக்கு ஏதோ ஆகிவிட்டது. வகுப்புகள்
நடந்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் நான் என்னை அறியாமல் என்னை மறந்து கடைசி பெஞ்சில் மூலையில் சாய்ந்து விட்டேன். வகுப்பு முடிந்ததும் அனைவரும் சென்றுவிட்டார்கள்.
யாரும் என்னை கவனிக்கவில்லை. அதுதான் தவறுதலாக என்னை உள்ளேவைத்துப் பூட்டியிருப்பார்கள். இப்போது நான் என்ன செய்வேன்.
நேரம் ஆக ஆக எனக்குள் பயம் எடுக்க ஆரம்பித்தது. பொதுவாக இருட்டென்றாலே எனக்கு பயம். அதுவும் இப்போது நான் மட்டும் தனியாக ஒரு அறையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.
பசியை விடவும் பயமே என்னை வாட்டத் துவங்கியது. என்னால் முடிந்த வரை சப்தத்தை ஏற்படுத்தி கத்தினேன், கதறினேன், முடிந்தவரை கதவின் மீதும் மோதிப்பார்த்தேன். நான்
எழுப்பிய சப்தம் யாருக்கும் கேட்க்கவில்லை போலும். நேரம் ஆக ஆக ஒரு பக்கம் பசி, இன்னொரு பக்கம் பயம் இருக்க மூண்றாவதாக அடுத்து அவசரமாக எனக்கு வந்துவிட்டது.
ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னால் அடக்கி வைக்க முடியவில்லை. அந்த சமயம்  இருந்த இடத்திலேயே போய்விட்டேன். அதன் பிறகு கொஞ்சம் பயம் அடங்கியதாகத் தெரிந்தது. பசியுடன்
சேர்ந்து உடல் சோர்வடைந்து நான் மயங்கி ஒரு மூலையில் சுருண்டுவிட்டேன். அடுத்த நாள் காலை, வகுப்பின் கதவு திறந்த கல்லூரி க்லார்க், என்னை  விரட்டும்போதுதான்
எனக்கு தூக்கம் கலைந்து விழிப்பு வந்தது. உடனே சுறுசுறுப்பாக எழுந்துவிட்டேன்  வேகமாக கதவின் பக்கம் பாய்ந்து வெளியே ஓடினேன். எனக்காக என் நண்பர்கள் இரவு முழுவதும்
தேடி இருப்பார்கள் போலும். என்னை பார்த்ததும் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. கூட்டமாக என்னை அவர்கள் சூழ்ந்து என்னை விசாரித்தார்கள். அதன் பிறகு நாங்கள் அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து விடுதியில் மீந்துப்போன டிஃபன் கொட்டும் இடத்தை நோக்கி சாப்பிடப் போனோம்.
***
எங்க க்லாஸ் சுற்றத்தில் ஒரு நாய் சுற்றிக்கொண்டிருக்கும். வகுப்பில் யாரும் இல்லை என்றால்  பென்ச் கீழே சென்று படுத்து தூங்கும். போன வாரம் வகுப்புகள் முடிந்ததும்
அவசரத்தில் க்லார்க் கதவை மூடி இருந்திருக்கிறார். மீண்டும் அடுத்த நாள் காலை கதவு திறக்கும்போதுதான்  அவருக்கு அதிர்ச்சி. இரவு முழுவதும் நாயை வைத்து பூட்டி
இருக்கிறோமே என்றுன தெரிந்தது. அதற்குள்ளாக நாய் செய்ய வேண்டியதெல்லாம் செய்துவிட்டது வகுப்பில். 17 மணி நேரம், தனியாக ஒரு அறையில். நினைத்துப் பார்த்தாலே பயமாக
இருக்கிறது. அந்த நாய்  எப்படி ஃபீல் பண்ணியிருக்கும்னு ஒரு சின்ன கற்பனையில் எழுதியதே இந்த பதிவு:-)))
தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

 1. நல்லா கற்பனை பண்ணுறீங்க :)

  ReplyDelete
 2. நண்பரே! மிக நல்ல கற்பனையில் அழ்கிய நடையுடன் கூடிய எழுத்து. கால் பகுதி வந்ததுமே தெரிந்துவிட்டது அது நாலுகால் நன்றி உள்ள ஜீவன் என்று! ஏனென்றால், உங்க வகுப்பு மாணவரோ, மாணவியாகவோ இருந்திருந்தால் கண்டிப்பாக மொபைல் ஃபோன் வைத்திருந்திருப்பார். கூப்பிட்டிருந்திருப்பார். இப்பல்லாம் மொபைல் இல்லாம யாருமே கிளம்பறது இல்லையே!

  ReplyDelete
 3. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
 4. நான்கூட ”ஐயையஓ நீங்களா?” நு பயஞ்துட்டேன்.

  ReplyDelete
 5. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete