Monday, January 19, 2015

பெருசா சொல்ல வந்திட்டாய்ங்கபொங்கல் விடுமுறை முடியும் தருணத்தில் வீட்டில் இருந்து நேற்றே உற்றார் உறவினர்கள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள். சந்தோஷமான விஷயம். எவ்வளவு சந்தோஷம் என்றால் அவர்கள் சென்ற பிறகுதான் மனசு நிம்மதியா இருக்கு. கிட்டதட்ட மூன்று நாட்கள் சிக்கிக்கொண்டேன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஒரே அட்வைஸ் மழைதான். அது வரை ஒரு உதவியும் செய்திருக்க மாட்டார்கள் அல்லது நலம் கூட விசாரித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் என்மீது அக்கறை இருப்பது போல் ஒரே அட்வைஸ் மழைதான். பயங்கர கோவம். ஆனால் வெளிய காட்டிக்கதான் முடியுமா?. இதுல வேற அடுத்தவுங்க சொல்லுரத கேட்டு அப்பா அம்மா வேற ஒரே டார்ச்சர். ஏற்கனவே அவர்கள் என்மீது பயங்கர எதிர்பார்ப்போடு இருக்கும்போது இப்போது வீட்டில் உறவினர்களின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதைதான்.

இன்னும் மூன்று மாதங்களில் முதுகலை படிப்பு எம்.ஏ முடிக்க இருக்கிறேன். யாராவது என்னிடம் வந்து ‘அடுத்து என்ன பண்ண போற?’ என கேட்டுட்டா பதில் என்ன சொல்லுறதுனே தெரியாது. திருதிருனு முழிப்பேன். கடந்த ஆறு மாதங்களாக அந்த கேள்வியை எனக்குள் நான் தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் அதற்கான சரியான விடை நானே கண்டு பிடிக்கல. பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நான் பதில் சொல்லுறது?.

அம்மாவோட ஒரே வருத்தம் என் வயது ஒத்த பசங்க எல்லாம் வேலை கிடைச்சு பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் செட்டில் ஆவதை பார்த்த அவர்களுக்கு சீக்கிரம் நானும் ஒரு நல்ல வேலையில் செட்டில் ஆகணும் என்பது... ஹும் அது கூட ஏத்துக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் சமீபமா அதை பற்றியே என்னிடம் நச்சரிக்கிறார்கள் என்பதில் பின்னால் இருக்கும் விஷயம்தான் நினைத்தாலே உடல் நடுங்குகிறது. பயம் ஏற்படுகிறது. வேலை கிடைச்சதும் அடுத்து எனக்கு திருமணம் செய்து வைக்கணுமாம். அதுதான் ப்ரச்சனை. பொதுவா இது எல்லாரது வீட்டிலும் நடப்பதுதானே அதுல என்ன உனக்கு கசப்புனு நீங்க யோசிக்கலாம்.

ஒரு பார்வையற்ற மாற்றுதிறனாளியாக பிறந்த ஒரே காரணத்தால் ஆர்ட்ஸ் குருப் எடுத்து படிக்கவேண்டிய கட்டாயம். என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் எல்லாம் வெறும் நாங்காண்டுகள் பி.இ படித்து கேம்பஸ் வந்தால் சரி அல்லது சொந்தமாகவோ எதோ ஒரு வேலை தேடி சென்று விடுகிறார்கள். ஆனால் ஆர்ட்ஸ் குருப்பில் படித்த எத்தனை பேர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் தெரியுமா?
அதிலும் ஒரு பார்வையற்ற மாற்று திறனாளியின் நிலை மிகவும் பரிதாபம். தனியார் துறையில் வேலைக்கு சேர்வது மிகவும் கஷ்ட்டம். இருக்கும் ஒரே வழி அரசாங்க வேலைதான். எல்லா அரசும் தமிழக அரசு போல இருக்குமா என்ன?

ஒரு மாற்று திறனாளியை பேணிக்காப்பதில் பெற்றோருக்கு எவ்வளவு தூரம் பங்கு உண்டோ அதே அளவுக்கு அரசாங்கத்திற்கும் அக்கறை இருக்கிறது. படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்க வழி செய்து கொடுக்கணும்னு எதிர்பார்க்கல. சரியான முறையில் இட ஒதுக்கீட்டை பின் பற்றி எங்களுக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தந்தால் போதும். மற்றது நாங்க பார்த்துக்குவோம்.
நமது நாட்டில் பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு மாற்றுதிறனாளி குழந்தை பிறந்தால் அவர்களை எப்படி வளர்க்கணும், அவர்களின் தேவை என்ன என்பதை பற்றியெல்லாம் தெரியமாட்டீங்கிறது. அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. குறைந்தபட்சம் புரிஞ்சிக்க முயற்சி எடுத்தாலே போதும்.

ஒரு விதத்தில் நான் மிகவும் அதிர்ஷ்ட்டசாலிதான். பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் வீட்டில் இல்லாததால் படிக்க வைத்தார்கள் . கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தார்கள். படித்து முடிக்க இருக்கும் சமயத்தில் எல்லா பெற்றோரை போலவே எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு வேலை முதலில். பெற்றோர்கள் யோசிப்பதில் தவறு இல்லைதான். ஆனால் உடனே ஒரு வேலை அதற்கு எவ்வளவு தூரம் சாத்தியம் அசாத்தியம் இருக்கிறது என்பதை பற்றி தெரியாமல் பேசுவதும் அவர்கள் அமைதியாக இருந்தாலும் யாராவது சொந்தக்காரங்க பேசினா எரிச்சல்தான் ஏற்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

 1. நம் சமூகத்தில் அட்வைஸ் ஓன்று மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கிறது. அதனால்தான் வாரி வழங்குகிறார்கள் போலும். கவலைப் படாதீர்கள் மகேஷ்... சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. என்மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

   இப்படியான சம்பவங்கள் எதிர்படும்போதுதான் நமது பலமும் பலவீனமும்
   நமக்கு தெரியவரும்.

   நன்றி சார்.

   Delete
  2. ஆஹாா மகேே் ஐ இப்்ோபோோான்்பார்க்கிறேன்...

   Delete
 2. இதற்கெல்லாம் தளாராதீர்கள் மகேஷ்! .. உங்கள் எதிர் நீச்சலை பிட்டு கொண்டே இருங்கள், வெற்றி நிச்சயம் உண்டு.

  ReplyDelete