Tuesday, June 23, 2015

வள்ளி-சிறுகதை


பத்தாண்டுகளுக்கு முன்பு வள்ளிக்கு வயது அப்போது முப்பதை தாண்டி இருக்கலாம். அரசாங்க உத்யோகம்தான். கன்னத்தை கிள்ளினால் ரத்தம் வரும் அளவிற்கு சிகப்பழகி கூட. இந்திய பெண்களின் சராசரியான 5.5 உயரம் மிக கச்சிதமாக இருப்பாள். தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திரித்து மாசுப்படாத தூய காற்றில் அந்த அமைதியான சூழலில் அதிகாலை நேரத்தில் தியானம் மற்றும் யோகா செய்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றுவிடுவது வள்ளியின் தினசரி பழக்கவழக்கம். ஆறு மணிக்கு மாடியில் இருந்து கீழ இறங்கி குளியல் முடித்துவிட்டு சமையலில் அம்மாவிற்கு உதவ ஆரம்பிப்பாள். சரியாக ஏழரைக்குள் காலை உணவை முடித்துவிட்டு மதியத்திற்கு சமைத்த உணவை ஒரு டப்பாவில் அடைத்துக்கொண்டு தனது கைப்பையில் வைத்துக்கொண்டு தன்னை அதிகம் முகச்சாயம் செய்துக்கொள்ளாமல் வெறும் பவுடரை பூசிக்கொண்டு வீட்டு பின்னால் தோட்டத்தில் பூத்திருக்கும் ரோஜா பூவை தலையில் சூடிக்கொண்டு ஒரு நொடி பூஜை அறைக்கு சென்று சாமியை கும்பிட்டு அவசரமா தனது பையை எடுத்துக்கொண்டு ஊருக்கென இருக்கும் ஆலமர பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுவாள்.

கிராமத்தில் இருந்து சரியாக எட்டு மணிக்கு புறப்படும் பேருந்தை பிடித்தால்தான் பள்ளிக்கு நேரத்தில் சேர முடியும். எட்டுமணி பேருந்தை விட்டால் பத்துமணிக்குதான் அடுத்த பேருந்து என்பதால் தினமும் பேருந்து ஏறும்வரை பரபரப்பான காலை வேளை வள்ளிக்கு.

பேருந்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை நல்ல பொழுது போக்கு வள்ளிக்கு. கிராமத்தில் இருந்து கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்கள் கூட்டத்திலிருந்து, தினமும் நகரத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரிடத்திலும் வள்ளிக்கு நல்ல மரியாதை. அவர்கள் எல்லாம் வள்ளியை தமிழ் அம்மா என்றுதான் அழைப்பார்கள். வள்ளிக்கூட ஒருபோதும் தான் ஒரு ஆசிரியை என்கிற அதிகாரத்திலும் ஆணவத்திலும் அவர்களுடன் அணுகியது கிடையாது. ஒன்னரை மணிக்கும் மேல் பயண நேரம் என்பதால் கலகலப்பாக பேசிக்கொண்டு, பாட்டுக்கு பாட்டு விளையாடுவதும், எதை பற்றியாவது விவாதித்துக்கொண்டு அனைவரும் பயண தூரத்தை கடப்பார்கள்.
மீண்டும் பள்ளி முடிந்ததும் ஐந்து மணி பேருந்து பிடித்தால் எப்படியும் சூரியன் மறைந்த பிறகுதான் வீட்டை அடைய முடியும். முகத்தை கழுவிக்கொண்டு கொஞ்ச நேரம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசி விட்டு இரவு எட்டுமணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் குடும்பத்தாருடன் நேரம் செலவு செய்து தனது அறைக்குச் சென்றுவிடுவாள் வள்ளி. அடுத்தநாள் தான் எடுக்க வேண்டிய பாடங்களை ஒரு முறை பார்த்துவிட்டு உறங்கிவிடுவாள். திங்கள் முதல் வெள்ளிவரை பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் இதுதான் வள்ளியின் தினசரி செயல்.

வள்ளியின் பெற்றோருக்கு வள்ளி ஒருத்திதான் மகள். அவர்களுக்கு இருக்கும் இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்துக்கொண்டு அவளை படிக்க வைத்தார்கள். இருவத்திரெண்டு வயதில் பி.எட் படிப்பை முடித்ததும் ஆசிரியர் பணிக்காக அரசாங்கம் நடத்தும் தகுதித் தேர்வு எழுதியதில் மாநிலத்திலே மூன்றாவதாக இடத்தை பெற்று அன்றைய தமிழக முதல்வரது கையில் வேலைக்கான உத்திரவாத பத்திரத்தை வாங்கினாள். பணியில் சேர்ந்ததில் இருந்து எட்டு வருடம் ஆகப்போகிறது. அன்றிலிருந்து அரசு மேல்நிலை பள்ளியில்தான் தமிழ் ஆசிரியராக பணி செய்துக்கொண்டு வருகிறாள்.

'பொண்ணு பார்க்க லச்சனமா இருக்கா, நாலு காசும் சம்பாரிக்குறா சீக்கிரம் வள்ளிய நல்லா பாத்துக்குற பயனா பார்த்து கொடுத்திடலாம்ல’னு சுற்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் வள்ளியின் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அவர்களும் தெரிந்தவர்கள் இடத்தில் எல்லாம் தங்களது மகளுக்கு ஒரு நல்ல பையனை பார்க்க சொல்லி வருடங்கள் கடந்துவிட்டது. பார்க்க வருபவர்கள் எல்லாம் வள்ளியை பார்த்ததும் ‘இதோ ஒரு வாரத்துல செய்திய சொல்லி அனுப்புறோம்’ சொல்லி சென்றவர்கள்தான். அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இருக்காது. ஆரம்பத்தில் வள்ளிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் போகப்போக அவள் எதார்தத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். வள்ளியின் பெற்றோருக்குதான் கவலை.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. வள்ளி கிராமத்தில் இருக்கும் சிறுசுங்களுக்கு தனது வீட்டு பின்னாடி இருக்கும் தோட்டத்தில் பாட்டு சொல்லிக்  கொடுத்துக் கொண்டிருந்தாள். சொல்ல மறந்திட்டேனே. வள்ளி இசைக்கருவிகளின் ராணியான வயலின் வாசிப்பதில் புலமை பெற்றிருந்தாள். தனக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் வயலினை எடுத்து வாசிப்பாள்.

அன்று வெளியில் எங்கோ சென்றிருந்த அப்பா வந்ததும் வராததுமா “வள்ளிமா போன மாசம் உன்னைய பார்க்க டவுனுல இருந்து வந்திருந்த வரன் நல்ல செய்தி சொல்லி அனுப்சிருக்காங்கமா” மூச்சிரைக்க சொல்லி முடித்தார். அப்பாவிற்கு இருந்த விருப்பம் வள்ளிக்கு இப்போது இந்த விஷயத்தில் இல்லை. “அவுங்க கிட்ட எல்லாம் எடுத்து சொன்னீங்களாப்பா”னு வள்ளி கேட்க, “ஆமாம்மா. அந்த குடும்பத்துல இருக்கும் பெரியவர்களுக்கு இதுல மொதல்ல விருப்பம் இல்லாட்டியும் அந்த பையன் எடுத்துச்சொன்னதால அவுங்களும் பையனோட வாழ்க்கையாச்சே அவன் விருப்ப படிதான் நடக்கட்டும்னு விட்டுட்டாங்களாம். முகூர்த்ததுக்கு வேற தேதி குறிக்க சொல்லி செய்தி அனுப்ச்சாய்ங்கமா”
அப்பா சொன்னதும் வள்ளிக்கு பயம் எடுக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கூட அவள் எதிர்பார்க்காதது. ஒரு வேளை தன்னுடைய வேலையை பார்த்து பையன் வீட்டார் ஒத்துக்கொண்டிருப்பாங்களோனு ஒரு சந்தேகம் வள்ளிக்கு. யோசிக்க ஆரம்பித்தாள். அவளும் அப்போது ஒரு முடிவு எடுத்திருந்தாள். எப்படியும் அப்பா அம்மா இருக்கும் வரை தன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பிறகு புகுந்த வீட்டுக்காரங்க எப்படி இருப்பார்கள், கட்டிக்கபோறவனும் கண்கலங்காம பாத்துக்குவானா என்பதில் நம்பிக்கை இல்லை அவளுக்கு. அதனால் திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டாலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு ரெண்டு பேருக்கும் ஒத்துவராம எதாவது பிரச்சனைனா பிரிஞ்சிட்டு தனியாக குழந்தைய வளர்க்க ஆரம்பிச்சிடலாம்னு முடிவு எடுத்து அப்பாவிடம் தனது சம்மதத்தை தெரிவித்தாள்.
அடுத்த சில மாதங்களில் ஆடம்பரமாகவும் இல்லாமல் அடுத்தவர் குறைகூற முடியாத அளவில் எளிமையாக வள்ளிக்கும் மோகனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

 பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது வள்ளி எட்டுவயது பிள்ளைக்கு தாய். மூன்றாவது படிக்கிறான். குடும்பம் சந்தோஷமாகவும் மோகனுக்கும் வள்ளிக்கும் இடையே எந்த மன கசப்பும் இல்லாமல் நல்லா போயிக்கொண்டிருக்கிறது. இறுதிவரை அது தொடரட்டும் என்று வாழ்த்தி ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதிய இந்த பதிவை முடிக்கிறேன்.

***
 பின் குறிப்பு:
 இரண்டு வயதாக இருக்கும்போது வள்ளிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதில் கிராமத்தில் சிகிச்சை செய்ததால் பார்வை முழுவதும் போய்விட்டது. அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனை படி சென்னையில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியான சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கப் பட்டாள். சிறுவயதுமுதலே படிப்பில் படுசுட்டி அவள். இருவத்திரெண்டு வயதில் அரசாங்க வேலையில் சேர்ந்தாலும் தன்னுடைய அங்க குறைபாட்டால் தாமதமாக பத்தாண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் முடிந்தது. இப்போது வள்ளியை கேட்டால் திருமணத்திற்கு முன் தன்னுடைய கணவனை பற்றி கணக்கு போட்டது எவ்வளவு முட்டாள்தனமான விசயம் என சொல்கிராள்.

 இந்தச் சமயத்தில் எந்த ஒரு தயக்கமின்றி தைரியமாக தனது குடும்பத்தாரை ஒத்துக்க வெச்சு நூறுசதவிகித ஒரு பார்வையற்ற பெண்ணை மணம் முடித்த மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மெம்மேலும் இவரை போன்ற மோகன்கள் சமுதாயத்தில் முன்னுக்கு வர வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. அருமையான நிகழ்வு நண்பரே மோகன் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டும்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. கடவுள் என்பது கற்பனையில் கூட சாத்தியமில்லை... ஆனால் மனித ரூபத்தில் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அதாவது மோகன் போன்றோர்...

  நீங்கள் சொன்னது போன்ற ஒரு நிகழ்வு எங்கள் குடும்பத்திலும் நடந்தது. அதே கண் குறைபாடுடைய பெண்தான்.. ஆனால் கல்லூரி வரை படித்திருந்தார். அவரை மணமுடிக்க கட்டிட தொழிலாளி ஒருவர் விரும்பினார். பொன்,பணம் நிறைய செலவழித்துக் கட்டிவைத்தார்கள்.. ஐந்து வருடத்தில் மூன்று செல்வங்கள்.. கூடவே கருத்து வேறுபாடு... குறைபாடு உடைவள் என்பது ஆறு வருடங்கள் கழித்துதான் அவனுக்கு உறுத்தியதாம். தற்போது இன்னொரு பெண்ணுடன் தொடர்பு. அதனால்தான் மோகன் போன்றோர் நடமாடும் கடவுள்...

  அருமையாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. மகேஷ்,

  ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியை சிறுகதையின் முன்னணியில் வைத்து உங்களுக்கே உரித்தான எளிய - இனிய நடையில் சிறுகதை புனைந்துள்ள உங்களுக்கும், தம் உறுதியான முடிவினால் வள்ளியை கரம்பிடித்து உலகத்தின் கண்களை திறந்து வைத்த மோகனுக்கும்,உங்கள் கதையின் நாயகி வள்ளிக்கும் அவர்களது 8 வயது பிள்ளைக்கும் எந்தன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  "ஆடம்பரமாகவும் இல்லாமல் அடுத்தவர் குறைகூற முடியாத அளவில்...." போன்ற வரிகள் சிறுகதையின் இனிமை.

  தொடருங்கள்.

  வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete
 4. அன்னா, கதை, இல்லையில்லை உன்மை நிகழ்வு அருமையாக்த்தான் கதையாக்கப்பட்டுள்ளது. ஆனால், பிண்குரிப்பில் சொல்லப்பட்ட விஷியத்தை என்னால் முன்கூட்டியே கணிக்க முடிந்தது.

  ReplyDelete
 5. பாராட்ட வார்த்தைகள் இல்லை....

  ReplyDelete
 6. அருமையான நிகழ்வு! என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை...மோஹன் பாராட்டப்பட வேண்டியவர். இவரைப் போன்று பலர் வந்தால் இந்த சமூகம் எங்கோ போய்விடும்....

  ReplyDelete
 7. வலைச்சரத்தில் கார்த்திக் புகழேந்தி அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. சிறப்பான கதை நெஞ்சம் நெகிழ வைத்தது

  ReplyDelete