Friday, July 03, 2015

இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?

2012ஆம் ஆண்டு, tv9 தெலுங்கு சேனலில் ரகசியம் என்கிற நிகழ்ச்சியில் ஒரு நாள் (இறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது?) என்னும் தலைப்பில் ஒலிபரப்ப பட்ட நிகழ்ச்சி பார்க்க ஸ்வாரஸ்யமாக இருந்ததால் அப்போது நிகழ்ச்சியை முழுவதுமாக தமிழில் மொழிபெயர்த்து இருந்தேன். அதை இப்போது இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

குறிப்பு: நான் ஒரு கடவுள் மறுப்பாளன்; சொர்க்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு என்கிற விடையங்களில் நம்பிக்கை இல்லாதவன்; அதனால் பதிவில் கூறப்பட்டிருக்கும் தகவலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன். அந்தச் சமயம் மொழிப்பெயர்ப்பில் ஒரு ஆர்வம் இருந்ததால் கல்லூரி விடுமுறை; நிகழ்ச்சியை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்தேன் அவ்வளவுதான்.

***
அதாவது நாம இறந்த பிறகு, நம்ம உயிர் எங்க போகுது என்ற கேள்வி, பல தலைமுறைகளாகவே மனித இனத்திற்கு இருந்து வரும் சந்தேகமான ஒன்று. சொர்க்கம், நரகம் என்ற 2 உலகம் இருப்பதாகவும், நம்முடைய பாவ புண்ணியங்களைப் பொறுத்து நாம எந்த உலகத்துக்குப் போவோம்னு எமதர்ம ராஜா முடிவு செய்வார் என்பது போன்றதான விசயங்கள் புனித நூல்கள் வாயிலாக நமக்குக் தெரிய வருகிறது! ஆனால் இதுல ஏதாவது உண்மை இருக்குமா? இது ஒரு பக்கம்! பரலோகம் சென்றால் ஏன் நம் இறந்த உடல் நம் கண் முன்னால் தெரிகிறது? இதற்கு விடையாக, உயிர் ஆவி ரூபமடைந்து, ஆவி பரலோகம் செல்லும் என்று சொல்கின்றனர் தத்துவ ஞானிகள்!
அடப் போங்கப்பா, இதெல்லாம் சுத்த வேஸ்ட்! செத்தவன் மண்ணுல புதையுண்டோ, நெருப்பில எரிஞ்சோ, மின் மயானத்துல தகனமாகியோ தான் போகனும்! அத விட்டுட்டு, பரலோகம், சொர்க்கம், நரகம் எல்லாமே சுத்த அர்த்தமில்லாதது! யாராச்சும் சொர்க்கத்துல இல்ல நரகத்துல இருக்கவங்க உங்களுக்கு வந்து அவங்களோட அட்ரஸ் குடுத்தாங்களா? என கேட்குறீங்களா?

மனிதன் எப்பவுமே தான் வாழும் இவ்வுலகம் தவிர வேறோர் உலகம் இருப்பதாக நம்புகிறான்! தான் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு தான் இறந்த பின்னர் தக்க தண்டனைகளும் ராஜோபச்சாரங்களும் காத்திருப்பதாகவும் நம்புகிறான்! இதெல்லாம் வெறும் நம்பிக்கைதானா அல்லது இதில ஏதாவது சிறிதளவேனும் உண்மை உள்ளதா என்ற கேள்வி கூட நம் மனதில் எழும்! அப்படியே இதில் உண்மை இருந்தாலும், நம்மால் எப்படி அந்த உண்மையை அறிய முடியும்!
---
மரணத்தின் பிடியில், உயிர் ஊசலாடும் தருணத்தில், வாழ்வா சாவா இடையே மனிதனின் மூச்சு திணறும் அந்த சில நிமிடங்கள்! சொந்த பந்தங்களை  வெட்டிய உயிர்க்கு ஒரு பூரிப்பை ஏற்படுத்திய அதிசய உலகம்! இமை மூட விடாமல் தடுக்கும் ஒரு இன்பமான ஒரு உருவம்! தன் பின்னால் வரும்படி அழைக்கும் சொந்தங்களின் அழைப்புக் குரல்! செத்துக் கிடந்த உடம்பில் மீண்டும் அசைவு! மரணத்தின் பின் உயிர் என்னவாகும்? சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் மனிதர்களின் கற்பனையா? இல்லையா? சாவின் விளும்பைத் தொட்டு மறுபிறப்பெடுத்த மனிதர்களது அனுபவத்தின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன. நாம் சாகும் அனுபவம் எப்படி இருக்கும். இறந்து போன பிறகு உயிர் எங்கே செல்லும்? உயிர் ஆவி உருவத்தை எடுக்கும் என்பது உண்மைதானா?
ஆவிகள் கடவுளிடம், அதாவது (சொர்கத்துக்கு) போகுமா? அப்படியே பாவிகளின் ஆவிகள் நரகத்துக்கும் பயணிக்குமா? ஆவிகள் மீண்டும் மனிதனாக பிறக்குமா? இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டவர்கள் மீண்டும் உயிர் பிழைத்தது எதைக் காட்டுகிறது? அப்படி மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவர்களில் பலர் தாங்கள் சொர்க்கத்தைக் கண்டு வந்ததாகச் சொல்கிறார்கள்! இதை நம்பலாமா? மனிதன் பிறவிச் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருப்பான்! இறந்ததும் கடவுளைச் சென்று சந்தித்து தன் விதிப்படி மற்றொரு ஜென்மம் எடுப்பான்! கடவுளிடம் சரணாகதியடைந்து பல்வேறு புண்ணியச் செயல்களைச் செய்தவன் மட்டுமே நிரந்தரமாக சொர்கத்தில் இருப்பான்! பிறப்பு இறப்பற்றவனாவான்! அளவிட முடியாத பேரானந்தத்தை மட்டுமே அனுபவிப்பான்!
பாவிகள் மரணத்தின் பின் நரகம் செல்வார்கள்! எமன் அவர்களுக்குத் தக்க தண்டனை அளிப்பார்! அவரவர் செய்த பாவத்திற்கேற்ப மீண்டும் பூமியில் கேவலமான ஜென்மம் எடுப்பார்கள் என்றெல்லாம் இந்து மதத்தில் பிறப்பு இறப்பு, சொர்கம், நரகம் பற்றி சொல்வார்கள்!

மரணத்தின் எல்லையைத் தொட்டவர்களில் பலர் தாங்கள் பரலோகத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்! புதிய புதிய கண்டுபிடிப்புகள்  வரவும் near death experience இருப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது! மருத்துவர்கள் செய்யும் நவீன சிகிச்சைகள் மூலம் கோமாவிற்குச் சென்றவர்கள் கூட உயிர் பிழைத்து வருகிறார்கள்! அவ்வாறு பிழைத்தவர்கள் கூறும் அனுபவம் விஞ்ஞானிகளை யோசிக்க வைக்கிறது!
இந்த அனுபவங்கள் சாதாரணமாக தாங்கள் பின்பற்றும் மதத்தைச் சார்ந்ததாக இருக்குமா? டாக்டர் கென்னத்ரின் என்கிற American மனோதத்துவ ப்ரொஃபசர் இது போன்றவர்களை ஆய்வு செய்து புத்தகம் கூட எழுதியுள்ளார்! தான் பார்த்த சிலர், மேலே இருந்து கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவித்ததாகவும், அங்கு இருந்து தன் இறந்த உடலைப் பார்த்ததாகவும், அது மட்டுமல்லாமல், தாங்கள் இருட்டான ஓர் வழியே பயணித்து வெளிச்சமான ஓரிடத்தை அடைந்து எல்லையற்ற மகிழ்ச்சியையும், அன்பையும் அனுபவித்ததாகவும் அவர்கள் சொன்னார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

நாம் எங்கிருந்து வந்தோம், ஏன் இந்த பூமியில் வாழ்கிறோம், இறுதியில் எங்கு செல்லப் போகிறோம் என்று அனைவரும் தத்தம் மதத்தின் புனித நூல்களில் விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்! ஆனால் இது போன்ற நூல்களில் சொல்லப்படும் கருத்துகளை விஞ்ஞானிகளும் நாத்திகர்களும் நம்புவதில்லை! அவர்களுக்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் தேவை! நேரடி சான்றுகள் தேவை!

உலக மக்கள் தொகையில் பல சதவிகிதத்தினர், மறு ஜென்மம், சொர்கம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளனர்! ஆனால் சாட்சிகளோ, விடைகளோ இல்லாத கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!
இவற்றை எல்லாம் தாண்டி, சொர்கம் நரகம் பார்த்ததாகச் சொல்பவர்களின் அனுபவங்களை பார்க்கப் போகிறோம்! தமது பார்வையில், ஏன் தங்கள் கைகளில் உயிர் விட்ட நோயாளிகள் மீண்டும் உயிர் பிழைத்து சொன்னதாக மருத்துவர்கள் சொல்வதையும் பார்க்கப் போகிறோம்!
---
அமெரிக்காவில், ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்த ஒரு பெண்மணியைப் பிழைக்க வைக்க மருத்துவர்கள் எத்தனை போராடியும் காப்பாற்ற முடியவில்லை! life support கூட பயனளிக்கவில்லை! இறுதியாக இதயத் துடிப்பு நின்றது! இறந்துவிட்டாரென முடிவு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி! அவர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தார்!
பிழைத்ததோடு அல்லாமல், தான் மருத்துவமனையின் மேல் பாகத்திற்கு மிதந்து கொண்டு சென்றதாகவும், அங்கே ஒரு புகை கூண்டைக் கண்டதாகவும், பின்னர் அங்கிருந்து சொர்கம் சென்றதாகவும் கூறினார்!
அவர் சொன்னது போலவே மருத்துவமனையின் மேற்பாகத்தில் புகைக்கூடு இருப்பது உண்மைதான்! இந்த செய்தியைக் கேட்ட மருத்துவமனை தரப்பு சற்று அதிர்ந்தது! கோமாவில் இருக்கும் ஒருவருக்கு எப்படி மருத்துவமனையின் மேற்பாகத்திலுள்ள புகைக் கூண்டு தெரியும் என்று வியந்தனர்! அதனால் அவர் சொர்கத்தைப் பார்த்திருப்பது உண்மையாக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்!

பரலோகம் இல்லை என்று வாதிடுபவர்களுக்கு ஜிம் அண்ட்ருசன் கதை விடையாக இருக்கிறது. சில நாட்களாக ICU-வில் இருந்த இவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கருதினர்! ஆனால் மீண்டும் அவரது இதயம் துடிக்கத் துவங்கியது! இவரது இறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இடையே நடந்ததாக இவர் கூறும் சம்பவங்கள் நம்மை ஆச்சர்யத்திலும் யோசனையிலும் ஆழ்த்துகிறது! அப்படி என்ன நடந்திருக்கும்?

ஜிம் ஆண்ட்ருசன் கழிவு நீர் ட்ரிட்மெண்ட் பிலேண்டில் சூப்பர்வைசராக 12 மணி நேரம் வேலை. மிகவும் கஷ்ட்டப்படுவார்! சிறந்த மனைவி மக்களோடு வாழ்க்கையைக் கழித்து வந்தார்!
இதற்குள் எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது! இரவு படுத்த அவருக்கு தீவிர நெஞ்சு வலி வந்ததும் மருத்துவமனையில் அனுமதித்தனர்!
மருத்துவர்கள் இதயத்திற்குள் பலூன் அமர்த்தியதும் அவர் தேறுதலடைவார் என்பது போல் இருந்தது! இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் முடிவு செய்தனர்! 2 நாட்களுக்குப் பின் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது! உயிர் பிழைக்க வைக்க மருத்துவர்களாலான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது! அதன் பின் நடந்த அனுபவத்தை இவ்வாறு அவர் கூறுகிறார்!
எனக்கு எங்கோ நீருக்குள் போகும் அனுபவம் ஏற்பட்டது! கண் முன்னர் கும்மிருட்டு! இதற்குள் வெண்ணெய் போன்ற வெள்ளை ஒளி! மெல்ல மெல்ல அந்த வெளிச்சம் விரிந்து கொண்டே என்னிடம் வந்தது தெரிந்தது! மிக அழகாகவும் தெளிவாகவும் ப்ரகாசமாகவும் இருந்தது அந்த ஒளி! ஏதோ பேச்சும் ப்ரார்த்தனைகளும் கேட்கிறது! நான் மெல்ல அந்த வெளிச்சத்தோடு கலந்துவிட்டேன்! நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்! எல்லாமே எனக்கு மிக அதிசயமாகவே இருந்தது! உண்மையான அன்பு இங்கேதான் இருப்பதாக உணர்ந்தேன்! அங்கிருந்து பார்க்கும் போது, என் இறந்த உடலைப் பலர் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது! எனக்காக என் மனைவி எவ்வளவு பக்தியுடன் வேண்டுகிறாள் என்பது தெரிகிறது! அவள் முகத்தைப் பார்த்ததும் அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் நினைவிற்கு வருகிறது! எவ்வளவோ உணர்வுகள் எனக்குள் ஏற்பட்டது! நான் அவளை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டேன்! ஆம்! அவளைத் தனியே விட்டு விட்டு வந்துவிட்டேன் என்ற யோசனையே எனக்குள் ஏற்பட்டு என்னை பாதித்தது!
மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் முயற்சியைக் கைவிடாமல் செய்த மருத்துவம் பலித்தது போலத் தெரிகிறது! இதயம் துடிப்பதை மருத்துவர்களால் கேட்க முடிகிறது! அப்படியானால் இறந்தவர் மீண்டும் பிழைத்துவிட்டார்!
நான் திரும்பவும் வந்துவிட்டேன்! என் பேச்சு கேட்கிறதா என்று யாரோ கேட்டுக் கொண்டு இருக்கிறார்! ஜிம் பிழைத்துவிட்டாலும் அவரது இதயம் முழுமையாக இயங்கவில்லை! அதனால் ICU-வில் 17 நாட்கள் வைத்திருந்தனர்! அச்சமயத்தில் பல முறை அவர் செத்து பிழைத்தார்! உனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவு இருக்கிறதா என்று இயேசு அவரிடம் ஒவ்வொரு முறை இறந்த போதும் கேட்டு இருக்கிறார்!
இறுதியாக ஜிம் கோமாவில் இருந்து வெளியே வந்தார்! அவருக்கு இதயம் மாற்ற வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் முடிவு செய்தனர்! இரண்டு மூன்று நாட்களில் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்! இது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகிறது! இப்போது அவர் தனது குடும்பத்தினருடன் சந்தோசமாகவே காலம் கழித்து வருகிறார்! இது நடந்த கதை! கற்பனை இல்லை!
---
மரணித்துவிட்டார் என மருத்துவர்கள் நினைத்து, பின் பிழைத்த பலர் இருக்கிறார்கள்! இவர்களும் ஜிம் போன்றே, தாங்களும் சொர்கத்தைப் பார்த்ததாகவும், இன்னும் பலர் நரகத்தைப் பார்த்ததாகவும் சொல்கின்றனர்! நவீன காலத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது என்றால் புராண காலத்திலும் இந்த அனுபவங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா? இதைப் பற்றி பூர்வீகம் எங்காகிலும் உள்ளதா? பைபிள், மகாபாரதம் இன்னும் இது போன்ற பழம் பெரும் புனித நூல்களில் இருக்கிறது! இயேசு மரணித்த பின் உயிர் பிழைத்தார்! கடவுளின் ராஜியம் எப்படி இருக்கும் என்பது பற்றி பைபிளில் விரிவாக உள்ளது! மனிதனைக் கடவுள் உருவாக்கினார் என்றும், மீண்டும் இறப்பிற்கு பின் மனித உயிர் ஆவி ரூபத்தில் கடவுளைச் சேருவான் என்றும், மீண்டும் பிறப்பான் என்றும் ஆவி நிரந்தரமானது என்றும் உடல் நிலையற்றது என்றும் கிறுத்தவம் சொல்கிறது! இதைத்தான் நாம் மேலே பார்த்த கிறிஸ்த்தவர்களின் அனுபவங்களும் ப்ரதிபலிக்கிறது!
பரலோகத்திற்கு சென்று வந்ததாகச் சொல்லும் மக்களின் பேச்சில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என விஞ்ஞாணிகள் சொல்கின்றனர்! ஆனால் அவர்களது பேச்சை நம்பி, சொர்கம் நரகம் இருக்கிறது என நம்பவும் முடியாது என்கிறார்கள்! இது என்ன முரண்பாடாக இருக்கிறது? நம்புங்க, ஆனா நம்பாதிங்கனு சொல்றாங்களே! எனப்பா நம்ம்ம்மள கொளப்புறாங்களே! இதன் பின்னணி என்னனு பாக்கலாம்! தொடர்ந்து படியுங்கள்:
 --


சொர்கத்தைப் பார்த்த சிலரைப் போல நரகத்தைப் பார்த்த சிலரும் இருக்கிறார்களாம்! ஏன் இரண்டையுமே பார்த்தவர்களும் இருக்கின்றனர்! ஆனால் இரண்டோட சரியான லொக்கேஷனையுமே யாராலயுமே சரியா சொல்ல முடியலையாம்!
கிறிஸ்தவ மதத்தின்படி சொர்கத்திற்கு அருகிலேயே நரகமும் இருக்கும்! ஆனால் இந்து மதப்படி, சொர்கம் எங்கயோ மேல இருக்க, நரகம் அதள பாதாளத்தில் இருக்கு என்று கூறுவார்கள்! மொத்தத்தில் சொர்கம் நரகம் இரண்டுமே இருப்பதை அனைத்து மதங்களுமே நம்புகின்றன, ஒப்புக் கொள்கின்றன! சாதாரனமாக அம்மதங்களைப் பின்பற்றுபவர்களும் இவற்றை நம்புகின்றனர்! நம்பினால் ஓகேதான்! அது அவரவர் நம்பிக்கை! ஆனால் ப்ரச்சனையே, நாங்கள் சொர்கத்தைப் பார்த்தோம் நரகத்தைப் பார்த்தோம் என்று சொல்பவர்களிடமே இருக்கிறது! அவர்களது பேச்சை எப்படி நம்பிட முடியும்னுதான் பலர் கேட்கிறார்கள்! அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமா பேசும் போது நம்பாமயும் இருக்க முடியல! அவங்க சொல்றது 100% உண்மையாதான் இருக்க முடியும், நிச்சயமா பொய் சொல்ல வாய்ப்பே இருக்க முடியாதுனுதான் தோணுது! பின்னர் இதை எவ்வாறு உறுதி செய்வது?
இதை உறுதி செய்ய, முதலில், மரணத்தை நெருங்கியவர்களது மூளை எப்படி வேலை செய்யும் என்று பார்க்க வேண்டும்! இதயம் நின்ற பிறகும் மூளை வேலை செய்யுமா? மூளையும் மனதும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? முதலில் இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்!
---
 டாக்டர் ரீட்டர் ஃபின்மில்க்! பெயர் பெற்ற neuro psychologist! இதயம் நின்ற 8 நொடிகளில் மூளை வேலை செய்வது நின்றுவிடும் என்று தனது அனுபவத்தில் கண்டுபிடித்துள்ளார்! நமக்கு ஏதாவது ஓரு விசயம் அனுபவத்திற்கு வரணும் எனில் மூளை வேலை செய்தால் மட்டுமே அது சாத்தியம்!
ஒரு வேளை, மனிதன் இறந்த பின்பும் பலவித அனுபவங்களை அனுபவிக்க முடியுமெனில் நாம் மூளையும் மனதும் வேறு வேறாகக் கொள்ள வேண்டும் என்கிறார் இவர்! இது உண்மை என்றால் மூளையின் செயல்பாடு குறித்த அறிவியல் கோட்பாடுகள் நிச்சயம் திருத்தி எழுத வேண்டியவை! ஆனால் சுசாம் ப்லாக்மோர் போன்ற மனோத்தத்துவ நிபுனர்கள் மரணம் எல்லை வரை சென்றவர்களை ஆய்வு செய்தனர்! தங்களது அனுபவத்திலிருந்து ஒரு முடிவுக்கு வந்தனர்! கோமாவிற்கு சென்று பிழைத்து வந்தவர்களின் மூளை செய்யும் மாயாஜால விளையாட்டே இப்படிப்பட்ட கற்பனை நிகழ்வுகள் என்றனர்!
கோடிக் கணக்கான நரம்புகள் அதாவது neurons சேர்ந்து இருப்பதால் இந்த உலகம் பற்றிய நிர்ணயங்கள், நம்பிக்கைகள் எல்லாம் தேங்கி இருக்கும்! அவசர சிகிச்சை நேரத்தில், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, மருத்துவர்களுடைய ஆரவாரம், நவீன கருவிகள், உறவினர்களின் அழுகை, மூச்சுக் காற்று சரிவரக் கிடைக்காதது ஆகிய அனைத்துமே தான் மரணமடையப் போகிறோமென்ற எண்ணத்தை ஏற்படுத்தும்!
இச்சமயத்தில் மூளையில் ஒரு வித ரசாயன திரவம் உற்பத்தியாகும்! ஏற்கனவே மூளையில் பதிவான விசயங்களை இந்த ரசாயண திரவம் தூண்டிவிடும்! இதனால் சொர்கம் நரகம் பற்றி நாம் கேட்ட விசயங்கள் நமக்கு தூண்டப்படும்! தூண்டப்படுவதோடு அல்லாமல், நம் கண் முன் அனைத்துமே நிஜமாலுமே காண்பது போலவே ஒரு ப்ரமையான காட்சியை நம் மூளை காட்டும்! அதனால், மனிதன் கோமாவிற்குப் போகும் முன்னரே நடக்கும் இந்த ரசாயன மாற்றமும் அதன் காரணமாக ஏற்படும் இக்காட்சிகளையே அவன் கோமாவிலிருந்து மீண்டு வந்ததும் கூறுகிறான்! மூளையின் இந்த மேஜிக் தெரியாதவர்கள் தாங்கள் நிஜமாலுமே சொர்கம் நரகம் சென்று வந்ததாக நம்புகிறார்கள் அதையே நம்மிடம் கூறுகிறார்கள்! இது சுசான் மோர் போண்ற மருத்துவர்களின் கருத்து!

ஆனால் இதை டாக்டர் பானியா நம்புவது கிடையாது! பரலோகம் சென்ற அனுபவம் சரியாக எப்போது நோயுற்று இருந்தவர்களுக்கு ஏற்பட்டது என்பதில் சரியான தெளிவு இல்லாததால் இது பற்றி மேலும் பல ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும் என்கிறார்!
சாதாரணமாக இருக்கும் போது இந்த அனுபவங்கள் ஏற்பட்டதா?, மயக்கமுற்று இருக்கும் போதா? இல்லை மயக்கம் தெளிந்த பிறகா? என்பது ஒரு பெரிய காரணியாக அவர் கூறுகிறார்!
--
 மரணத்தின் எல்லையைத் தொட்டவர்களில் 63 பேரை இண்டர்வ்யூ செய்ததில் 4 பேருக்கு மட்டுமே பரலோகம் சென்று வந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது என்று பானியா கூறுகிறார்! ஏன் வெறும் 4 பேருக்கு மட்டுமே இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட வேண்டும்? மற்றவர்களுக்கு ஏன் இவ்வாறான அனுபவங்கள் ஏற்படவில்லை? ஒரு வேளை மரணத்தின் அருகில் செல்பவர்களுக்கு இரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது என்றால் அனைவருக்குமே தானே பரலோக அனுபவம் கிடைத்திருக்க வேண்டும்!
அதனால் உண்மை வெளி வர மேலும் ஆராய்ச்சிகள் பல நடைபெற வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்! அப்போதைக்கு மறணித்து பின்னர் பிழைத்தவர்கள் கூறும் அனுபவத்தை தட்டிக் கழிக்க முடியாது! மூடத்தனம் என்றும் சொல்லிவிட இயலாது! நாம் அறிந்தவை மட்டுமே உண்மை என்றும் மற்றவை எல்லாம் மூடத்தனம் என்றும் முடிவு செய்வது சரியன்று! மறணித்த பிறகு ஆவி எங்கே செல்கிறது என்பது முக்கியமோ அவ்வளவு முக்கியம் உயிர் எப்படி உடலுக்குள் வந்தது என்பதுமாகும்! அது கூட புரியாமல் இருக்கும் புதிரான ப்ரச்சனைதானே! இதன் பின் ஒளிந்து இருக்கும் ரகசியத்தைக் புரிந்து கொள்ளும் முயற்சியில் மனிதன் இன்னும் இருக்கிறான்! ஆனால் இந்த விசயங்கள் பற்றி தலைமுறை தலைமுறையாக பல விசயங்கள் உலவி வருகின்றன! அதிசயங்கள் பல இருப்பதாக நம்பப்பட்டும் வருகின்றன! நம் முன்னோர் சொர்கம் நரகம் பற்றி அளித்த தகவல்கள் முழுதும் பொய்யானவை என்று குருட்டுத்தனமாக சொல்லிவிடக் கூடாது! அதற்காக, நாம் மூடநம்பிக்கையை ஆதரிப்பதாக பொருள் கொள்ள வேண்டாம்! ஒரு விசயம் உண்மையோ பொய்யோ நிரூபிக்க விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்கள் தேவை! அப்படி ஆதாரங்கள் இல்லாமல் எதையும் ஒதுக்கிவிடக்கூடாது என்பது எங்களது கருத்து!
தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. சுவாரஸ்யமாக இருக்கு மஹேஷ்... அவ்வளவே...!

  நல்ல மொழிப்பெயர்ப்பு...

  ReplyDelete
 2. சுவராஸ்யமான ஒரு பகிர்வு.
  மொழி பெயர்ப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 3. நல்ல திகிலான ஆராய்ச்சி.. படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 4. நல்ல பதிவு. மஹேஷ். இதற்கும், உங்களது சில கேள்விகளுக்கும் பதியலாக ஒரு பதிவு எங்கள் தளத்தில் நாங்கள் ஏற்கனவே எழுதுவதாக இருந்த பதிவு விரைவில் வரும்....

  ReplyDelete
 5. Super!!!! fantastic!!!! such a good post Mahesh!!! Great!!! keep it up!!!

  ReplyDelete
 6. ஒன்னுமே இல்லாம ஒன்னரை மணிநேரம் பேச அழைக்கவும் திரு மகேஷ் அவர்களை.

  ReplyDelete
 7. மகேஷ்,

  அருமையான மொழி பெயர்ப்பு.

  பால பருவத்தில் மரணத்தை தழுவி, சவபெட்டியிலேயும் வைக்கப்பட்டு,கல்லறைக்கு கொண்டு செல்லுமுன்,மீண்டும் உயிர்பெற்று அதன் பின்னர் பல காலங்கள் வாழ்ந்த ஒருவரின் அனுபவத்தை நேரில் கேட்டவன் என்ற வகையில் மறு உலகம் (சொர்க்கம் / நரகம்) என்ற தாத்பரியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.

  இறை நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்று சொல்லுவதன் பின்னணியையும் பதிவாக்குங்களேன்.

  கட்டுரை அசத்தல்.

  வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete
 8. எனது மகன் இறந்து விட்டான் வயது அவன் எங்கு இருப்பான்

  Deivendran

  ReplyDelete