Monday, July 27, 2015

“அங்கிள்! பாவம் திவ்யா ”நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பா வீட்டில் இருப்பார் என கருதி ஜெயராமன் அங்கிள் வந்திருந்தார். அரசு வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே பொண்ணுதான். பேரு திவ்யா. சென்ற வருடமே பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டாள்.
படிச்சா எம்.பி.பி.எஸ்தான் சேரணும்னு பெற்றோர் சொல்ல வேற வழி இல்லாம லாங் டர்ம் கோச்சிங் எடுத்துக்கொண்டு இந்த வருடம் மீண்டும் எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்க முயன்று பார்த்தாள். அவளின் அதிர்ஸ்ட்டம் தெரிய நாள் நெருங்கியதால் அதைபற்றி விசாரிக்க ஜெயராமன் அங்கிள் வீட்டிற்கு வந்திருந்தார்.

பொதுவாக ஆந்திராவை பொறுத்த வரையிலும் உயர் கல்வி பயில அது எந்த படிப்பாக இருந்தாலும் நுழைவு தேர்வு கட்டாயம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். உதாரணத்திற்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவன் பொறியியல் படிக்க விரும்பினால் அவன் eamcet என்னும் தேர்வை எழுதுவதன் மூலம் கிடைக்கும் ரேங்க் அடிப்படையில் கலந்தாய்வில் கல்லூரியை தேர்ந்தெடுத்து பொறியியல் படிப்பை படிக்க முடியும். (மெனெஜ்மெண்ட் கோட்டால சேர நுழைவு தேர்வு எல்லாம் அவசியம் கிடையாது).

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் இதற்கு முற்றிலும் வித்யாசம். 2007 வரை தமிழகத்திலும் நுழைவு தேர்வின் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. கிராம மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற அடிப்படையில் நுழைவுத் தேர்வை அரசு ரத்து செய்துவிட்டது. தற்போது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை அடிப்படையாக கொண்டு கிடைக்கும் கட்டாஃப் பொறுத்து கலந்தாய்வில் கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் பொறியியல் படிப்பார்கள். இதுதான் மருத்துவத்திற்கும் பின்பற்றும் வழிமுறை (மருத்துவத்திற்கு கணிதத்திற்கு பதிலாக தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண்களை கட்டாஃபிற்கு எடுத்துக்கொள்வார்கள்).

மருத்துவம் படிப்பவர்கள் சராசரி மாணவர்களை விடவும் கொஞ்சம் அதிகமாக இண்டலிஜெண்டாக இருப்பார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் இந்த eamcet மருத்துவ நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் வந்தவர்களுக்குதான் ஆந்திராவில் சீட்டு கிடைக்கும். எம்பிபிஎஸ்க்கு அடுத்து பிடியஸ், வெட்னரி, அக்ரி, ஃபார்மசி என பாடங்களை தேர்ந்தெடுத்தும் படிக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களின் ஆசை/ கோரிக்கை/ விருப்பம் எல்லாம் எம்பிபிஎஸ் படிப்பில் சேரணும். திவ்யா மெடிசினில் சேர தேர்வு கடந்த வருடமே எழுதி இருந்தாள். எம்பிபிஎஸ் சீட்டு  கிடைக்காததால் லாங் டர்ம் அதாவது ஒரு வருட கோச்சிங் க்ளாசிற்கு சென்று இந்த வருடம் மே மாதம் மீண்டும் ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதி இருந்தாள். இங்கு இது போன்று நடப்பது சகஜம். அப்படிதான் நண்பன் தங்கச்சி ஒருத்தி கூட லாங் டர்ம் கோச்சிங் எடுத்தும் ரேங்கில் எந்த முன்னேற்றம் இல்லாததால் கடைசியில் பிஎஸ்ஸி சேர்ந்து விட்டாள். பாவம் தேவையற்ற அழுத்தம், ஒரு வருடம் வீண் ஆச்சு. இன்னும் சிலரை பார்த்திருக்கிறேன். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு ஒரு வருடம் கேப் எடுத்துக்கொண்டு தயாரித்ததில் மருத்துவ சீட்டு கிடைத்திருக்கிறது.

பொதுவாக மருத்துவ படிப்பு மற்ற படிப்பை விடவும் அதிக செலவு பிடிக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் இங்கு நுழைவு தேர்வு வழியாக அரசு அல்லது சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் அரசு பங்கு இடங்களில் சேர விருப்பம் காட்ட காரணம் குறைந்தச் செலவில் எம்பிபிஎஸ் படிக்கலாம் என்பதற்குதான். எப்படியும் ஒரு பத்து லச்சத்திற்குள் எம்பிபிஎஸ் முடிச்சிடலாம் நினைக்கிறேன்.

இங்கு (ஆந்திராவில்) கிட்டதட்ட 4000 அரசு பங்கு மருத்துவ சீட்டுக்கள் இருக்கிறது. மருத்துவம் படிக்க முயலும் எல்லாருக்கும் சீட்டு கிடைக்காது அல்லவா. பணம் இருப்பவர்கள் டொனேஷன் கட்டி சீட்டு வாங்கி கூட படிக்கலாம் ஆனால் மொத்தமாக செலவு சராசரியாக ஒன்னரை கோடியை தொட்டுவிடும். மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் எல்லாராலும் சீட்டை விலைக்கு வாங்கி படிக்க முடியாது. எதோ ஒரு காரணத்தால் சீட்டு கிடைக்காத மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கும் இன்னொரு வழி வெளி நாடுகளுக்குச் சென்று இங்கு நிறைவேறாத தங்களின் மருத்துவம் ஆசையை அங்கு பூர்த்தி செய்துக்கொள்கிறார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் எந்த நுழைவு தேர்வு இல்லாமல் இதற்கென இருக்கும் தனியார் ஏஜண்டுக்கள் மூலம் தற்போது பலரும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க ஆசியாவில் சீனா, பிலிபைன்ஸ்,. ஐரோப்பாவில் ரஷ்யா, யுக்ரெயின் போன்ற நாடுகள் தேர்ந்தெடுத்து மானவர்களை அனுப்புகிறார்கள். அந்த நாடுகளில் ஐந்து முதல் ஐந்தரை ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்கிறார்கள். செலவு பார்த்தால் இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் மருத்துவ சீட்டை டொனேஷன் கட்டி வாங்க ஆகும் செலவில் வெளி நாடுகளில் ஆகும் மொத்த செலவையும் அங்கு படித்து முடிக்கலாம். இதில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் மாணவர்கள் மெடிகல் கவுன்சில் ஆஃப் இந்தியா (mci) நடத்தும் ஸ்க்ரீனிங் டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் இந்தியாவில் மருத்துவம் பயிற்சி செய்ய எம்சிஐ அனுமதி கொடுக்கும்.

உறவுக்காரன் பையன் ஒருத்தன் இங்கு சீட்டு கிடைக்காததால் சீனாவில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு ஸ்க்ரீனிங் டெஸ்ட் பாஸ் ஆகி தற்போது சென்னை அப்போலோவில் பணி புரிந்து வருகிறான். வெளி நாடுகளில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு சிலர் ஸ்க்ரீனிங் டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போவதும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முந்தைய தலைமுறை பொருத்தவரையிலும் பெரும்பாலான மருத்துவர்கள் எம்பிபிஎஸுடன் நிறுத்திக்கொண்டு ஹவுஸ் சர்ஜனாக தங்களது பயிற்சியை ஆரம்பிப்பார்கள். ஆனால் தற்போது வளர்ந்து வரும் மருத்துவ துறை வளர்ச்சி காரணமாக பெருகிவரும் நோய்கள் மற்றும் அதற்கேற்ப தனி சிகிச்சை பிரிவுகள் புதிது புதிதாக வந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மருத்துவத் துறையில் மருத்துவராக செட்டில் ஆக விரும்புவர்கள் தற்போது எம்பிபிஎஸ்க்கு அடுத்து எதாவது ஒரு பிரிவில் ஸ்பெஷலைசேஷன் செய்யும் வகையில் திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும். அதனால் பிஜி படிப்பு கூட நாளுக்கு நாள் டிமெண்ட் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தர்போது மருத்துவ படிப்பு பொறுத்தவரையிலும் முதலில் இன்வெர்ஸ்மெண்ட் செய்துட்டு யூஜி மற்றும் பிஜிய முடிச்சிட்டு ஒரு ஹாஸ்பிடல திறந்திட்டா போட்ட காசை மீண்டும் எடுக்கும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி விட்டது. நோபல் ப்ரொஃபஷன் என்பதெல்லாம் மலை ஏறி பல வருடங்கள் ஆச்சு.

திவ்யாவை பொருத்தவரையிலும் தன்னால் முடிந்த வரை ஒராண்டு கடும் முயற்சி பிறகு இந்த வருடம் eamcet தேர்வை எழுதி இருந்தாள். சென்ற வருடத்தை விடவும் ரேங்கில் பெரிய முன்னேற்றம் கிடையாது. ஆனாலும் இந்த வருடம் எம்பிபிஎஸ் சீட்டு எதாவது கல்லூரியில் கிடைக்கும் நம்பிக்கையில் அப்பாவை சந்திக்க வந்திருந்தார் ஜெயராமன் அங்கிள். அவரது நம்பிக்கைக்கு காரணம் ஆந்திராவில் இந்த வருடம் புதிதாக நான்கு மருத்துவ கல்லூரிகள் இயங்க எம்சிஐ அனுமதி கொடுத்தது. சராசரியாக ஒரு ஆயிரம் சீட்டுக்கள் அதிகரிக்கும் என்பதால் திவ்யாவிற்கு சீட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். அப்பா அரசு தரப்பில் புதிதாக கட்டும் மருத்துவ கல்லூரிகளில் எலக்ட்ரிகல் இஞ்சினீராக பணி புரிந்து வருவதால் அதிகரித்த சீட்டு நிலவரம் பற்றி தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் விசாரிக்க வந்திருந்தார். அப்பாவும் தனக்கு தெரிந்த தகவல் சொல்லி இருந்தார். இருவரின் உரையாடலின் போது ஜெயராமன் அங்கிளின் வருத்தம் என்னால் தெளிவாக புரிஞ்சுக்க முடிந்தது.

தனது மகளை மருத்துவம் படிக்கவைத்து மருத்துவராக ஆக்குவதில் தவறேதும் கிடையாது. ஆனால் முதலில் அதற்கான திரமை/ஆர்வம் மகளுக்கு இருக்கிறதா என தெரிந்து கொண்டு அதற்கேற்ப்ப நடந்துக்கிறதுதான் நல்ல பெற்றோரின் லட்சனம். இங்கு படிக்க போவது மானவர்கள். பெற்றோர்கள் கிடையாது. மாணவருக்கு இருக்கும் ஆர்வத்தை விடவும் பெற்றோருக்கு இருக்கும் பேராசையே அதிகம்.

கடைசியாக வீட்டை விட்டு ஜெயராமன் அங்கிள் கிளம்பும்போது என்னிடம் பேச்சு கொடுத்தபோது “அங்கிள்! பாவம் திவ்யா ” என்று சொன்னேன். அவர் அதை எப்படி புரிந்திருப்பார் தெரியாது!.
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

 1. பெற்றோர்கள் தான் உணர்ந்து திருந்த வேண்டும் மஹேஷ்...

  ReplyDelete
 2. பெற்றோரின் ஆசைகள் பிள்ளைகளின் மேல் திணிப்பதாக நினைக்காமல், பிள்ளைகளும் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற அதற்க்கான முயற்சிகளிலும் ஈடுபடுவது நல்லதுதான், என்றாலும் இந்த காலத்தில் பிள்ளைகளிடம் எதை சொல்வது எதை எதிர்பார்ப்பது என்று எந்த பெற்றோருக்கும் துல்லியமாக கணிக்க முடிவதில்லை.

  பிள்ளைகள், மருத்துவராகவேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பது பேராசை அல்ல, முதலில் இருந்து தம் பிள்ளைகளை அந்தந்த துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தி வருவதும் பிள்ளைகளின் மனதில் தங்கள் விருப்பத்தையும் அதன் ஞாயங்களையும் போதித்து வளர்க்கும் பட்சத்தில், பேராசை என்ற பேச்சுக்கோ அல்லது திறமையின்மை என்ற பேச்சுக்கோ இடமில்லை.

  படிப்பது பிள்ளைகள்தான் என்றாலும் பிள்ளைகள் ஒரு உன்னத நிலைமைக்கு வரவேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறொன்றும் இல்லை.
  16 அல்லது 18 வயது பிள்ளைகளுக்கு எல்லாம் தெரியும் என்றோ பெற்றோருக்கு ஏதும் தெரியாது என்றோ சொல்ல முடியாது. ஜெயராமன் போன்ற அங்கிள்கள் உங்கள் தகப்பனாரை போன்ற அவரகளது நண்பர்களோடு ஆலோசிப்பதும், கருத்து கேட்பதும் எதற்காக?, அதேபோல் அனுபவம் முதிர்ந்தவர்களோடு பல விஷயங்களையும் கேட்டறிந்து பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்காலத்திற்க்கான நல வாழ்வை அமைத்துகொடுக்க நினைக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கின்றேன்.
  இது தொர்டர்பான எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை , இது என் கருத்து மட்டுமே.

  அருமையான பதிவு மகேஷ்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நீண்ட இந்த
   ரிப்லைக்கு நன்றி சார்.

   தெலிவாக உங்கள் கருத்து சொன்னதுக்கு மீண்டும் ஒரு நன்றிகள்:-)

   Delete
 3. @திண்டுக்கல் தனபாலன் sir
  @Vinoth Subramanian
  வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. மருத்துவம் படிப்பவர்கள் சராசரி மாணவர்களை விடவும் கொஞ்சம் அதிகமாக இண்டலிஜெண்டாக இருப்பார்கள். // அப்படி எல்லாம் இல்லை மகேஷ்! எல்லோரும் திறமை மிக்கவர்களே ஒவ்வொரு துறையிலும். இதில் யாரையும் யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது......

  பெற்றோர்களின் ஆசை இருந்தாலும், குழந்தைகளுக்குச் சூஸ் பண்ணத் தெரியாவிட்டால் பெற்றோர் சொல்வதை ஏற்று அதற்காகத் தங்களைத்தயார்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குழந்தைகள் தெளிவாக இருந்தால், தாங்கள் என்னவாக வெண்டும் என்பதில், இருந்தால் பெற்றோர் அவர்கள் வழி செல்வதுதான் நல்லது....

  ReplyDelete