Sunday, July 05, 2015

மறக்க முடியாத திருமண-பயண அனுபவம்அது 2014 செப்டம்பர் மாதம். கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒரு சக மாணவனுக்கு திடீரென குடும்பத்தாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்கு வகுப்பில் இருக்கும் அனைவரையும் அழைத்திருந்தான். திருமணம் அவனது சொந்த ஊரில் நடக்கிறது. திருப்பதியில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவு இருக்கலாம். எப்படியும் நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயண நேரம். அதைவிடவும் அந்த ஊருக்குச் செல்ல சரியான பேருந்து வசதி கிடையாது. திருப்பதியில் இருந்து தினசரி மூன்று பேருந்துகள் மட்டுமே நேராக அந்த ஊருக்கு இயக்கப்படுகிறது. முகூர்த்த நேரம் அதிகாலை ஐந்து மணிக்கு என்பதால் முந்தைய நாள் புறப்பட்டால்தான் முகூர்த்த சமயத்திற்கு அங்கு இருக்க முடியும். கூட்டி கழித்துப் பார்த்தால் இரண்டு நாள் தேவைப்படும் என்பதால் நண்பர்களிடம் ’நான் வரல’ சொல்லி இருந்தேன். இத்தனைக்கும் யூஜீல இருந்து நாங்க ரெண்டு பேரும் க்ளாஸ்மெட்ஸ். மற்றவர்கள் pg ல இருந்துதான் அவனுக்கு அறிமுகம். நண்பர்களும் அடுத்த நாள் திருமனத்திற்கு புறப்பட தயாராக இருந்தார்கள்.

இரவு ஒன்பது மணி இருக்கும். நண்பனிடம் இருந்து போன் கால். ‘கண்டிப்பா நீ திருமனத்திற்கு வரனும்’னு சொல்லி இருந்தான். பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து படித்தோம் என்பதால் என்னைப் பற்றி நன்கு தெரியும். ஆனாலும் அவன் கண்டிப்பாக திருமனத்திற்கு வர சொல்ல காரணம், தொடர்பில் இருக்கும் யூஜி ஃப்ரென்ட்ஸ் எவராலும் அப்போது திருமனத்திற்கு வர முடியாத சூழல். அந்த சமயம் அவனுக்கு யூஜி மற்றும் pg வகுப்புத்தோழன் மற்றும் நண்பன் முறையில் கண்டிப்பாக வரணும் சொல்லி இருந்தான். சரி நண்பனுக்காக போகாட்டி எப்படினு முடிவு செஞ்சு அடுத்தநாள் காலை வகுப்பு தோழர்களுடன் புறப்பட்டேன்.

நாங்கள் ஏற வேண்டிய பேருந்தை தவற விட்டதால், நண்பனது ஊருக்கு இருபது கிலோமிட்டர் தொலைவில் இருக்கும் வேறோரு ஊருக்கு பேருந்தை பிடித்தோம். எப்படியும் ஒரு நான்கு மணிநேர பயனத்திற்கு பிறகு அந்த ஊரில் இறங்கினோம். அங்கிருந்து ஆட்டோவில் பயணம். அதுவரையிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும் பயணித்த நான், இருபது கிமி ஆட்டோ பயண்அம் இந்தியாவின் மற்றோரு கோண்அத்தை காட்டியது. சீரான சாலை வசதி கிடையாது. வழி நெடுக்க சிறு சிறு கிராமங்கள். அந்த சாலையில் திருப்பதியில் இருந்து இயக்கப்படும் மூன்று பேருந்துகள் தவிர, நாங்கள் இறங்கினோம் அல்லவா அந்த ஊரில் இருந்து கிராமங்களை இணைக்க ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள் அவ்வளவுதான். மக்கள் ஆட்டோக்களைதான் நம்பி இருக்கிறார்கள். கரடு முரடான பாதையில் பயணித்து மதியம் இரண்டு மணிக்கு நண்பனது ஊரை அடைந்தோம். ‘இறங்கியதும் தகவல் சொல்லு’ அம்மா சொல்லி அனுப்பியது நினைவுக்கு வர, கைபேசி எடுத்து பார்த்தால் நெட்வர்க் சுலியம் பார் காட்டியது. விசாரித்ததில் எதோ ஒரு நெட்வர்க் சிக்னல்
மட்டும்தான் அந்த ஊருக்கு கிடைக்குமாம். அங்கு இருந்த ஒருத்தரிடம் கைபேசி வாங்கி வீட்டிற்கு தகவல் சொல்லி விட்டேன்.

எங்களுக்காக மதிய உணவு வீட்டில் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அன்று வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் இருந்தது. வீட்டிற்கு வெளியே எல்லோரும் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தோம். அந்தச் சூழல் எனக்கு புதிதாக இருந்தது. வாட்ஸாப் மெசேஜ் கிடையாது, வாகனங்கள் சப்தம் இருக்காது, எங்கு திரும்பினாலும் ஒரே அமைதி. உணவு சமைத்து முடித்ததும் எங்களை சாப்பிட அழைத்திருந்தார்கள். வீட்டில் சுவையாக சாப்பிட்டு பழகிய எனக்கு அவர்களது சமயல் மற்றும் அந்த கிராமச் சூழல் எனக்கு வித்யாசமாக பட்டது. ’தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை, பசி வந்தால் சுத்தம் தேவையில்லை’ என்கிர வைரமுத்து வரிகள் நினைவுக்கு வந்து போனது. உணவிற்கு பிறகு கிராமத்தைச் சுற்றிப்பார்க்க கிளம்பி இருந்தோம். நான்கு தெருக்கள் மற்றும் ஐம்பது குடும்பங்கள் கொண்டது அந்த கிராமம். விவசாயம் செய்ய ஏத்த பூமி கிடையாதாம். எங்கு பார்த்தாலும் பாறைகள்தான். எங்காவது அருகில் சுற்றிப்பார்க்க செல்லலாம் பார்த்தால் எதுவும் பக்கத்தில் கிடையாது. அதனால் இரவு ஏழுமணி வரை ஊர் கடைசியில் இருந்த ஒரு தோப்பில் அமர்ந்து நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு நண்பனது வீட்டை அடைந்தோம். இரவு உணவு எங்களுக்காக தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

இரவு ஒன்பது மனிக்கு திருமணச் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் தங்களது முதாதையரை வணங்கிவிட்டு பிறகு குல தெய்வ கோயிலுக்குச் சென்று அங்கு வழிபாடுகள் முடிந்த பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பினோம். மணி இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது. திருமணம் பெண்வீட்டார் ஊரில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்கத்து கிராமம்தான். மணமகன் தயார் ஆனதும் நாங்கள் அனைவரும் ட்ராக்டரில் புறப்பட்டோம். பெரிய பெரிய மண்டபங்கள் கிடையாது; ஆடம்பரமான அலங்காரங்கள் கிடையாது; ஊரில் இருக்கும் பள்ளி மைதானத்தில்தான் திருமண மேடை அமைத்திருந்தனர். அங்கு இறங்கியதில் இருந்து இரவு முழுவதும் திருமணம் முடியும் வரை அவர்களது ஒவ்வொரு சடங்கும் புதிதாக இருந்தது. அதன் பிறகு காலை ஏழுமணிக்கு அங்கிருந்து திருப்பதிக்கு நேராகச் செல்லும் பேருந்தை பிடித்து பதினோரு மணிவாக்கில் திருப்பதியில் இறங்கினோம். கிராமத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது; அவசர சிகிச்சைக்கு மருத்துவ மனைகள் கிடையாது; அதைவிடவும் அங்கு விவசாயத்திற்கும் வழி இல்லாததால் அவர்களது பொருளாதார நிலையும் பரிதாபமாக இருந்தது. பேருந்தைவிட்டு இறங்கியதும்தான் சகஜ நிலைக்கு திரும்பினேன். கிட்டதட்ட ஒரு நாள் புதிதாக வேறொரு உலகிற்குள் சென்று வந்த உணர்வு.
அதுவரையிலும் திருப்பதியில் என்ன இருக்கிறது; எதிர்காலத்தில் பெங்களூர் அல்லது சென்னைக்கு குடிபெயரலாம்; நினைப்பில் இருந்த எனக்கு நல்லதொரு பாடம் நண்பனது திருமனதிற்கு சென்ற  அனுபவம்.
தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

 1. Payanagal thotaratum. intha pativu 2015 sept. nu potu irukega.

  ReplyDelete
  Replies
  1. தவறை திருத்திவிட்டேன்
   மிக்க நன்றி நண்பா.

   Delete
 2. நல்லதொரு அனுபவம் மஹேஷ்...

  ReplyDelete
 3. அருமையான பயண அனுபவம்...

  ReplyDelete
 4. இப்படிப்பட்ட பயணங்கள்தான் இயற்கையையும் மனிதர்களையும் நமக்கு புரிய வைக்கும். அழகான பதிவு மகேஷ்!
  த ம 3

  ReplyDelete

 5. கூடவே இருந்து பயணித்தது போன்ற உணர்வு எற்பட்டது உங்களது எழுத்து நடையால்... அருமை..

  ReplyDelete
 6. எழுதியவிதம் என்னை ஆச்சரியப்படவைத்தது அன்னா!

  ReplyDelete