Sunday, November 15, 2015

ஹனியும் நானும்-அதிர வைத்த ஒரு கேள்வியும்பி.எட் படித்துக் கொண்டிருந்தச் சமயம். கல்லூரியில் ஒரு முறை பேச்சுப்போட்டி வைப்பதாக சொல்லி இருந்தார்கள். ஆன்-தி-ஸ்பார்ட் பேச்சுப்போட்டி என்பதால் போட்டிக்கான தலைப்பேதும் அறிவிக்காமல் தேதி மட்டும் அறிவித்திருந்தனர். போட்டி நடக்கும் தினத்தன்று போட்டியில் பங்கேற்பவர் போட்டி நடுவர்கள் முன்பு பெட்டியில் இருந்து ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அதன் பிறகு எடுக்கப்பட்ட சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தலைப்பில் மூன்றில் இருந்து ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும். அதுதான் அந்த போட்டிக்கான விதிமுறைகள். அனேகமாக தப்பித் தவறி  இரண்டு அல்லது மூன்று முறை அதற்கு முன்பு பள்ளியில் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற ஞாபகம். அதற்கு மேல் இருக்க வாய்ப்பே கிடையாது. அது சிறுவயது என்பதால் அந்த வயதிற்கே உரித்தான பயம் என்னுள் இருந்திருக்கலாம். இப்போதுதான் கல்லூரிக்கு வந்ததால் ஒருவேளை போட்டிக்கான தலைப்பை அறிவித்துவிட்டு போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தால் முயற்சித்திருக்கலாம். இடைப்பட்ட நாட்களில் எதையாவது பார்த்துக்கொண்டால் சமாளித்துவிடலாம். ஆனால் இதுவோ ஆன்-தி-ஸ்பார்ட் போட்டி ஆச்சே. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் சரி போட்டியில் பங்கு பெற்றுதான் பார்ப்போமேன்னு முடிவு செய்ததும் எனது பெயரை கொடுத்துவிட்டேன்.
போட்டி நடக்கும் தினம் வந்துவிட்டது. எனக்கு முன்பு பேசுபவர்கள் அனைவரும் ப்ரமாதமாக பேசிக்கொண்டிருந்தார்கள். பல போட்டிகளில் பங்கு பெற்ற அனுபவம் கொண்டவர்கள். எனக்கோஎன்ன தலைப்பு வருமோ?’ ‘எப்படி பேசப்போறேனோ?’ என்கிற படபடப்பு என்னுள் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. நான் பேச வேண்டிய நேரமும் வந்துவிட்டது. மைக்கில் எனது பெயரை அழைத்தார்கள். சீட்டை எடுத்தேன். நடுவர் தலைப்பை அறிவித்தார். பேச வேண்டிய தலைப்பு தெரிந்ததும் அதுவரை இருந்த பதற்றம் கட்டுக்குள் வந்தது போன்றதொரு உணர்வு. நடுவர் மணி அடித்துவிட்டார். இனி நான் பேசத்துவங்கனும். தெரிந்த தலைப்பு என்பதால் மூன்று நிமிடம் தாக்குப்பிடித்து விட்டேன். அதற்குள்ளயும் நாக்கு வரண்டு போனதொரு உணர்வு.அவ்வளவுதான் இதுக்கு மேல பேச முடியாது என தெரிந்ததும் முடித்துக்கொண்டேன்.
பேசி முடிக்கவும் என்னை அழைத்துச் செல்ல கார்த்திக் வருவான் எதிர்பார்த்து சில நொடிகள் நின்றுக்கொண்டிருந்தேன். அவனைக்காணவில்லை. வேறு ஒருத்தர் எனது கையை பிடித்து அழைத்துச் சென்றார். அவர் பேச்சைக் கொடுத்ததும்-அது அனிதா என்று கண்டுப் பிடித்தேன். சக வகுப்புத் தோழி. எம்.எஸ்.சி பிசிக்ஸ் முடித்துவிட்டு பி.எட் சேர்ந்தாள். ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் கெமிஸ்ட்ரியும் செட் ஆனதால் நட்பும் பூத்தது.
எப்படிடா கொஞ்சம் கூட பயம் இல்லாம பேசுன?’-அனிதா.
ஏன் இந்த திடீர் கேள்வி?'-நான்.
ஆடியன்ஸை பார்க்க முடியாது என்பதால உனக்கு பயம் இருக்காது இல்லையா?’
அப்படினு உனக்கு யார் சொன்னா?’
இல்லடா நாங்கெல்லாம் பேசுறப்போ எங்க பார்வை பார்வையாளர் பக்கம் இருக்கும். நீ தான் பார்க்க போறதில்லையே. அதுனாலதான் பயம் இருக்காதுனு நினைச்சுகிட்டேன்
இத்தனை நாட்கள் நாம் பழகியதில் அவ்வளவுதான் என்னை நீ புரிஞ்சுகிட்டதா அனி?’
எதாவது நான் தவறாக கேட்டுட்டேனா மஹேஷ்?’
சே அதெல்லாம் ஒன்னும் இல்ல அனி!
இருவரும் போட்டி நடக்கும் அரங்கத்தை விட்டு பேசிக்கொண்டு நடந்ததில் கல்லூரி கேண்டினை வந்தடைந்திருந்தோம். அனிதா என்னிடம் கேட்ட கேள்வியும்-அவள் -குறுகிய நேரத்தில் யூகித்து வைத்திருந்த பதிலும் ஒருவித அதிச்சி நிலையில் மீள சிறிது நேரம் பிடித்தது. எப்படி எல்லாம் அனிதா யோசித்திருக்கிறாள்! எதாவது ஏடாகூடமாக நான் கேட்டுவைக்க அவள் அன்று வாங்கித்தருவதாகச் சொன்ன ஹார்லிக்ஸ் வாங்கி கொடுக்காமல் போனால் ஒரு கப் ஹார்லிக்ஸ் மிஸ் பண்ணிடுவோம் என்பதால் அப்போதைக்கு அனிதாவிடம் எதுவும் கேட்டுக்கலை:))) அவ்வ்வ்வ்
***
இங்கு சாகர்னு ஒரு அண்ணா இருக்கிறார். கடை வைத்திருக்கிறார். அவரிடம்தான் முடிவெட்ட ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு முறை தலயை அவரிடம் கொடுப்பது. நாங்கள் சந்திப்பதே முடிவெட்டும் சமயம் என்பதால் வேலை செய்துக்கொண்டே நிறைய பேசுவோம். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் எனக்கு இருக்கு. ரொம்ப பொறுமையான-மனிதர். அதுனாலயே அவர் கடையில் இருக்கிறாரா என்று ஒருமுறை விசாரித்துவிட்டுதான் செல்வது வழக்கம். அப்படிதான் அது ஒரு செவ்வாய்க் கிழமை மதியம் நினைக்கிறேன். சாகர் அண்ணா கடையில் இருப்பார் என நினைத்துக்கொண்டு விசாரிக்காமல் கடைக்குச் சென்றேன். கடையில் அவரைக் காணோம். புதிதாக ஒருத்தர் கடையில் இருந்தார். அண்ணனைப் பற்றி விசாரித்ததற்கு அவசர வேலையின் காரணமாக வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார். சரி கடைக்கு வந்தாச்சு இவரிடம் தலையை கொடுத்திடுவோம்ன்னு முடிவு செய்து முடிவெட்டனும்சொன்னேன்.
அப்படியா வாங்க வாங்கனு ஒரு வித பரபரப்போடு படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை பக்கத்தில் வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமரச் சொன்னார். கூட வந்த நண்பர் நாற்காலியைக் காட்டிவிட்டு பக்கத்தில் ஒரு வேலை இருப்பதாகவும், இதோ ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிரேன்சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது மதியம் மூன்று மணி இருக்கும். திருப்பதி 45 டிகிரி வெப்பத்தில் தகதகவென  கொதித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் கடையில் வேறு எந்த மனிதரும் கிடையாது. அறை முழுவதும் அமைதி. ஃபேன் டொக் டொக் கத்திக்கொண்டுஅறையில் நானும் இருக்கிறேன்என சப்தத்தை எழுப்பிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. கடையில் இருக்கும் புதிய மனிதர் வெட்ட ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்கும் மேல் ஆனது. இருவருக்கும் இடையே இருக்கும் நிசப்தத்தை முடிவெட்டுபவர்தான் கலைத்தார்.
உங்க பேரு என்னங்க?’ முடிவெட்டுபவர்.
மஹேஷ்’-நான்.
என்ன பண்ணுறீங்க?’
எதுவும் பண்ணலீங்க
படிச்சிருக்குறீங்களா?’
ம்ம்ம்
கல்யாணம் பண்ணிக்குவீங்களா?’
ம்ம்ம்ம்இப்போது கேள்வி கேட்பதை நிறுத்தி இருந்தார்.
மீண்டும் இருவருக்கும் இடையே நிசப்தம். சிறிது நேரத்தில் மீண்டும் முடி வெட்டுபவர்.
நா ஒன்னு கேக்கலாமா?’
ம்ம்ம் கேளுங்க
என்னை தவறா எடுத்துக்க மாட்டீங்களே?’
அதெல்லாம் ஒன்னும் எடுத்துக்க மாட்டேன்
கேக்கலாமா?’
ம்ம்
சிறிது நேர அமைதிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
கல்யாணம் பண்ணிடுவீங்க சரி,’ ‘அதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்க?’ கேட்டு அமைதியாயிட்டார்.
(சென்சார்-எடிட்டிங் கேள்வில:)
எதோ யோசித்துக்கொண்டிருந்த நான் அவரது கேள்வியை கேட்டதும் கொஞ்சம் அதிர்ந்து சுய நினைவிற்கு வந்தவனாய் தலையை அசைக்க-கத்தரியை கீழே அவர் போடாத குறை.
***
பொது மக்கள் பார்வையற்றவர்களைப் பற்றி எப்படி எல்லாம் நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு சேம்பிள்தான். இவரைப் போல பலருக்கும் பல வித சந்தேகங்களும்-கேள்விகம் மனதில் எழுவதுண்டு. என்னிடம் யாராவது எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லுவேன். அன்று அவருக்கு பதில் சொல்லவும், முடிவெட்டி முடிக்கவும், நண்பரும் வேலையை முடித்து விட்டு வரவும் சரியாக இருந்தது. காசு கொடுத்துவிட்டு கடையின் படியை விட்டு இறங்கும்போது மனதில் என்னை நான் திட்டிக்கொண்டிருந்தேன். இன்னேரம் என்னுடைய ஹனி-அ.னி.த்.தாவுக்கு நான் ஓக்கே சொல்லி இருந்தால் ஆதாரப்பூர்வ பதில் கடைக்காரருக்கு ஒரு சிங்கக் குட்டியோ-மான் குட்டியோ காட்டி இருந்திருக்கலாம். என்ன செய்வது சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி கணிதத்துல மிஸ் ஆகி இப்போ மிஸ்ஸெஸ் அனிதா ராஜேஷாக ஒரு வயசு பிள்ளைக்கு அம்மா ஆயிட்டாங்க. rajesh-mahesh ரெண்டு எழுத்துதான் வித்யாசம். என்ன செய்வது ஒரே ஃபீலிங்:))) அவ்வ்

தொடர்புடைய பதிவுகள் :


18 comments:

 1. கிடைத்த தலைப்பு என்னவென்றே சொல்லலையே.....

  ReplyDelete
  Replies
  1. தருமி சார், முழு தலைப்பு சரியாக நினைவு இல்லாததால் விட்டுட்டேன்.
   வருகைக்கு மிக்க நன்றி சார்.

   Delete
 2. Very nice thambi. Narration very good. God will bless u soon.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும்-
   பதிவை பாராட்டியதற்கும்-
   மிக்க நன்றி
   @nimmathiillathavan!

   Delete
 3. ஆன்-தி-ஸ்பார்ட் பேச்சுப்போட்டி என்பதால் போட்டிக்கான தலைப்பேதும் அறிவிக்காமல் தேதி மட்டும் அறிவித்திருந்தனர்

  makesh உரிமையுடன் ஒரு திருத்தம், ஆன்-தி-ஸ்பாட் போட்டிக்கி சரியான வாரத்தை: extempore speech

  ReplyDelete
  Replies
  1. வாங்க நம்பள்கி சார்!
   குரு சொன்னால் சிஷ்ய பிள்ளை கேக்குறதுதானே அழகு!
   சரியான வார்த்தை திருத்தத்திற்கு மிக்க நன்றி சார்!

   Delete
 4. மகேஷ்,

  அனுமையான பதிவு.

  "அணி" வகுத்து "இனி" வரும் "ஹனி"களுள் உன் வாழ்வை அலங்கரிக்கும் "அணி"கலனான "ஹனி"யை தேர்ந்தெடுத்து மகிழ வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. சார்,
   கவிதை-அருமை.
   வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
 5. மகேஷ் அருமையான பதிவு! மிகவும் ரசித்துப் படித்தோம். இந்த வகையானப் பேச்சுப் போட்டிகளுக்கு எக்ஸ்டெம்போர் என்று சொல்லப்படுவது.

  இந்த சமூகத்தின் பார்வைதான் மோசமானது மகேஷ். குறுகிய பார்வை.

  அனி/ஹனி கனியாததற்கு நீங்கள் சொல்லும் நடைமுறைச் சிக்கல்கள் என்பவை தீர்க்கமுடியாத அளவிற்குப் பெரிய சிக்கல்களா மகேஷ். நல்ல கெமிஸ்ட்ரி யில் கணிதம் தவறக் கூடாதே மகேஷ்!!!

  கீதா: மேலே சொல்லப்பட்ட அந்தக் கடைசி வரிகள்....எனக்கு இதை வாசித்ததும் மனம் கஷ்டமாகிய என்பது உண்மை மகேஷ்..

  ReplyDelete
  Replies
  1. துளசி சார் மற்றும் கீதா மேடம்,
   இருவரும் பதிவை ரசித்து, படித்து, கருத்திட்டமைக்கு நன்றி.

   Delete
 6. Wohnderful Mahesh, as usual. Extremely thought-provoking. The question is "who are the people who are really visually impaired?" The answer is anybody's guess.

  ReplyDelete
 7. சந்தோஷமா இருக்கு மஹேஷ்.. பாசிட்டிவ் மனுஷனப் பாத்த திருப்தி. ஹாஹா திருப்பதிலேருந்து.

  உங்களுக்கான ஹனி எங்கேயோ இருப்பா. கூடிய சீக்கிரம் கிடைப்பா. என் வலைத்தளத்துக்கு வந்து வாசிச்சு கருத்திட்டமைக்கும் நன்றி.


  நான் இன்னும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் இருக்கேன் மஹேஷ். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. !

  ReplyDelete
  Replies
  1. மேடம் நீங்கள் ஹைதராபாத் தெரியும், புதுக்கோட்டையில் சந்திக்க நினைத்தேன்--தங்களின்­ அம்மாவின் உடல் நிலைக் காரணமாக வர முடியவில்லை என்று சொன்னதாய் படித்த நினைவு.
   முதல் வருகைக்கும்--பாராட்டி--வாழ்த்தியதற்கும் நன்றி.

   Delete
 8. கல்லூரி நினைவுகளை சரளமாக சொல்லிச் சென்றீர்கள்.
  பாராட்டுகள் நண்பரே!

  ReplyDelete
 9. அருமை மகேஸ் சார்...இனி வருவேன்

  ReplyDelete
 10. அருமையான பதிவு ,,,,,
  இனிய ஹனி அமையட்டும், வாழ்த்துக்கள்.

  ReplyDelete