Tuesday, April 05, 2016

நாத்திகன் கோவிலுக்குச் செல்வதா?!சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவு எழுத ஒரு உத்தேசம். எவ்வளவு தூரம் மனதில் பகிர நினைத்ததை பதிவில் எழுத முடியும் எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதால் தயக்கம்+தடுமாற்றத்தோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
***
அது ஃபிப்ரவரி மாதம் கடைசியில் இருக்கலாம். பள்ளி நண்பன் பாலமுருகனிடம் சுமார் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கைப்பேசியில் அழைத்துப் பேசினேன். பள்ளியில் எனக்கு 2 ஆண்டுகள் சீனியர்.
ஆனாலும் மூன்றாண்டுகள் முன்பு வரையிலும் கைப்பேசி வாயிலாக அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வோம். திருப்பதி கோவிலுக்கு வரும்போதெல்லாம் நிச்சயம் தகவல் தெரிவித்து விடுவான். திடீரென ஒரு நாள் அவனது கைப்பேசி இயங்காமல் போக, பல முறை அவனோடு பேச முயற்சிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய ஒரு கட்டத்தில் முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.
இந்த வருடம் ஃபிப்ரவரி மாத கடைசியில், ஒரு மாலை பொழுது, நேரம் நகராமல் இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் சமயத்தில் தற்செயலாக பாலமுருகனது எண்ணை கைப்பேசியில் அழைத்துப் பார்க்க முயற்சித்தேன். முதல் முயற்சியிலே அவனோடு பேச முடிந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பேசுவதால் கொஞ்சம் நேரம் இருவரும் பரஸ்பரம் விசாரித்துவிட்டு இருவருக்கும் பொதுவாக பிடித்த விடயங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்.

பள்ளியில் இருந்தே பெரும்பாலும் நாங்கள் பேசிக்கொண்டால் எங்கள் இருவரது உரையாடல்கள் தொடர்வண்டியோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும். படித்து முடித்ததும் இந்திய ரையில்வேத் துறையில் பணியில் சேர நினைத்து இறுதியில் வேலூர் மாவட்டத்தில் நாற்றம் பள்ளி என்னும் கிராமத்தில் அரசு ஆசிரியராக பணி புரிந்து வருகிறான். கல்லூரியில் படிக்கும்போதே சக வகுப்புத் தோழியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான். இப்போது இரு குழந்தைகளும் பிறந்ததாகச் சொன்னான்.

அடுத்த நாள் மீண்டும் இருவரும் பேசும்போது நடுவே உடுப்பி என்னும் பெயர் அடிப்பட்டது. அந்தப் பெயர் அவனுக்கு புதிதாக இருந்ததால் அந்த ஊரின் சிறப்பு என்னவென்று கேட்டான்.
அந்தச் சமயம் எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன். அது வரை உடுப்பி பெயரை கேள்விப்படாத அவன் அந்த ஊரையும், கோவிலையும் பார்க்கும் ஆர்வத்தில் நான் சொல்லி முடிப்பதற்குள் ’உடுப்பி கோயிலுக்கு கட்டாயம் செல்லவேண்டும்’ என்று அவன் சொன்னதுதான் தாமதம்.

2015 மே மாதத்தோடு எனக்கு கல்லூரி முடிந்து விட்டது. அதன் பிறகு வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. அக்டோபரில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கும், 2016 ஜனவரியில் கார்த்திக் அண்ணாவின் ஆரஞ்சு முட்டாய் புத்தக வெளியீட்டிற்கும் சென்னைக்கு ஒரு நாள் சென்றதுதான். 9 மாதங்கள் வீட்டில் அடைப்பட்டுதான் கிடந்தேன். இந்த இடைவெளி எனது வாழ்வில் ஒரு கொடுரமான தருணம் என்றுச் சொல்லலாம். தனிமை எவ்வளவு கொடுமையானதென்று  உணர்வுபூர்வமாக புரிந்துக்கொண்ட நாட்கள்.
 இப்போது வெளியில் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை நழுவ விடுவேனா என்ன?
எங்கள் இருவருக்கும் பயணத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் உடனடியாக உடுப்பி செல்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டோம்.

 திருப்பதியில் இருந்து சுமார் 950கிமி தூரத்தில் உடுப்பி கர்னாடக மாநிலத்தில் மேற்கு கடர்க்கரையோரம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேரடியாக உடுப்பிக்கு தொடர்வண்டி வசதி இல்லாததால் முதலில் மங்களூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பிக்கு போக முடிவு செய்தோம். மங்களூருவில் இருந்து உடுப்பி சுமார் 70 கிலோமீட்டர் வடக்கே உள்ளது.
வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிதோறும் காலை ஆறு மணிக்கு காச்சிகூடா (தெலுங்கானா மாநில தலை நகரில் இருக்கும் ஒரு தொடர் வண்டி நிலையம்) அங்கிருந்து ரயில் புறப்படும். அன்று மாலை ஐந்து மணிக்கு திருப்பதிக்கு அருகில் சுமார் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா தொடர்வண்டி நிலையத்தை அடையும். அங்கு நான் ரயிலில் ஏறினால் பாலமுருகன் ஜோலார்பேட்டை நிலையத்தில் ஏற முடிவு செய்தோம். அடுத்த நாள் காலை (புதன் மற்றும் சனி கிழமைகளில்) காலை பதினோரு மணிக்கு மங்களூருவை அடைவோம். அங்கிருந்து உடுப்பிக்கு சென்று கிருஷ்ணர்ஐ தரிசித்துவிட்டு மீண்டும் மங்களூரு திரும்பி ரயிலில் ஊர் திரும்புவதுதான் எங்களது ஆரம்பகட்ட திட்டம்.

இந்த திட்டத்தில் ஒரு சிக்கல் எங்களுக்கு இருந்தது. நாங்கள் உடுப்பிச் செல்லும் தினத்தன்றே இரவு எட்டு மணிக்கு ஊர் திரும்ப ரயில் இருந்ததால் இடைப்பட்ட சமயத்தில் உடுப்பிக்குச் சென்று வர முடியுமா என யோசித்தோம். இறுதியில் முதலில் குருவாயூருக்கு போவோம் அங்கிருந்து உடுப்பிக்குச் சென்று சனிக்கிழமை இரவு எட்டுமணிக்கு புறப்படும் மங்களூரு காச்சிகூடா வண்டியை பிடித்து ஊர் திரும்ப திட்டமிட்டோம்.

முதலில் குருவாயூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பி போக முடிவு செய்ததும் நண்பனது மனைவி நந்தினி அக்கா அவர்கள் குருவாயூர் பார்க்காததால் தானும் எங்களோடு வருவதாகச் சொன்னார். பிறகு பால முருகன் குடும்பத்தோடு பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பயணத்திற்கான அனைத்து தகவல்களும் சேகரித்து; சேகரித்த தகவலைக் கொண்டு திட்டமிட்டு; மார்ச் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விடுமுறை தினங்களில் குருவாயூர் மற்றும் உடுப்பி சென்று வர முடிவு செய்து தொடர்வண்டியில் முன்பதிவு செய்ய தயார் ஆனோம்.

வீட்டில் மேற்சொன்ன கோவில்களுக்கு செல்வதாக தெரிவித்தபோது ’நாத்திகன் கோயிலுக்குச் செல்வதா’ என்கிற பொதுப்படையான கேள்வி வீட்டில் கேட்டார்கள். ’கோவிலுக்குச் செல்வதைவிடவும் கேரளா மற்றும் கர்னாடகாவைவைப் பார்ப்பதில்தான் எனக்கு ஆர்வம்’ என்று எனது பதிலை அழுத்தம்திருத்தமாக சொன்னேன். வீட்டிலும் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. பயணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ததால் மொத்த பயணத்தில் 3 தொடர்வண்டியில் இரண்டில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
***
 நீங்களும் அடுத்த பகுதியை வாசிக்க ஒரு நாள் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு நாளை தொடர்கிறேன்.
நன்றி.
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

 1. தாரளமாக போகலாம்! தம்பிக்கு கல்யாணம் ஆயிடுத்தா? இல்லையென்றால் அவசியம் போகனும். அதான் கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளனர்; நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

  கல்யாணமான புதிதில் நான் திருப்தியில் செய்த அங்கப் பிரதட்சணம் பற்றிய இடுகை ஒன்று டிராப்ட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறது.

  இப்ப நம்பிக்கை இல்லை என்றாலும் கணவன் என்ற கடமை ஒன்று உள்ளது. அதானால் வருடம் இரண்டு மூன்று முறை மனிவியிடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இங்கு எல்லோருக்கும் religious freedom உண்டு. என் மனைவி வேறு மத்தை செர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் அங்கு செல்வேன்.

  ReplyDelete
 2. நாத்திகன் கோயிலுக்கு செல்வதில் தவறில்லை என்பது எனது கணிப்பு நண்பரே ரசனையான இடங்களில் கோயிலும் ஒன்றுதானே.... நானும் ஆவலுடன் வருகிறேன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. மகேஷ் என்ன தப்பு. நாத்திகம் என்பது வேறு. கோயிலை ரசிப்பது என்பது வேறு. கோயிலிலும் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே. அதே போன்று ஆத்திகன் என்றால் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பதும் இல்லை. எல்லாம் அவரவர் விருப்பம். நாம் ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்று நினைக்கின்றேன். தொடர்வண்டியில் நானும் தொடர்கின்றேன். இடம் கிடைக்கும்தானே??!! இல்ல வெயிட் லிஸ்ட்ல இல்ல இருக்கு அதான்...

  கீதா

  ReplyDelete
 4. நல்ல பயண அனுபவம் மகேஷ்! நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம்.
  த ம 3

  ReplyDelete
 5. எனக்குத் தெரியும். வீட்டில் கேட்டிருப்பார்கள் என்று. ”நாத்திகன் கோவிலுக்கு செல்வதா?” ப்ரசாதமும், பிற சாதமும் நல்லா இருந்தா யாருவேனும்னாலும் போகலாம்.

  ReplyDelete