Thursday, April 07, 2016

குருதேவ் எக்ஸ்பிரெஸ்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதியை வாசிக்க.


ஷாலிமரில் இருந்து நாகர்கோவில் வரை பயணிக்கும் வாராந்திர குருதேவ் எக்ஸ்பிரெஸ் ரயில் வாரத்தில் புதன்தோறும் இரவு பதினோரு மணிக்கு கொல்கத்தா நகரத்தில் இருக்கும் ஷாலிமர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்படும். கரக்பூர், புபனேஷ்வர், விஜயவாடா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளத்திற்குள் நுழைந்து பாலக்காடு, திரிசூர், எர்னாகுளம், செங்கனூர், திருவனந்தபுரம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு கடைசியாக நாகர்கோயில் இரயில் நிலையத்தை அடையும்.
25-03-16 வெள்ளிக்கிழமை திருப்பதியில் இருந்து குருவாயூர்க்குச் செல்ல திரிசூர் வரை இந்த குருதேவ் வண்டியில்தான் முன்பதிவு செய்திருந்தேன். முதலில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது. 23-03-2016 அன்று இந்த ரயில் ஷாலிமரில் புறப்படுவதால் புதன் கிழமை இரவே பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டதாக குறுந்தகவல் கைபேசிக்கு வந்துவிட்டது.

25-03-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு புறப்பட தயாராகிவிட்டேன். முந்தைய நாள் இரவே அம்மா சப்பாத்தி செய்து வைத்ததால் அதிகாலையில் பயனத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட நேரம் சரியாக இருந்தது. வீட்டில் இருந்து திருப்பதி ரயில் நிலையம் நடை தூரத்தில் இருந்தாலும் அதிகாலையில் தெருக்களில் நாய்கள் தொல்லை இருக்கும் என்பதால் தம்பியின் அறிவுரையின் படி பைக்கில் அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றிவிடுவதாகச் சொன்னான்.
எப்போதும் திருப்பதி வழியாக கடந்துச் செல்லும் வெளியூர் தொடர்வண்டிகள் முதல் தடத்தில் வந்து போகும் என எதிர்பார்த்து முதல் நடைமேடையில் காத்திருந்த எங்களுக்கு ஒலிபெருக்கியின் மூன்றாம் தடத்தில் குருதேவ் எக்ஸ்பிரெஸ் வரப்போவதாக அறிவிப்பைக் கேட்டு அவசரமாக ஓவர் ஹெட் ப்ரிட்ஜில் ஏரி மூன்றாம் தடத்தை அடைந்தோம். இந்திய ரயில்கள் எப்போதுதான் சரியான நேரத்தில் இயங்கி இருக்கிறது. அதிகாலை 3:25க்கு வர வேண்டிய ரயில் அன்று இருவது நிமிடங்கள் தாமதமாகத்தான் வந்தது. பெரும்பாலும் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள். என்னோடு ரயிலில் ஏறியவர்களோ பாலாஜியை தரிசித்துவிட்டு கேரளாவிற்குச் செல்லும் மக்கள்.

திருப்பதியை விட்டு புறப்படுவதற்கு முன்பாகவே மொழிப் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எளிதில் மலையாளம் புரிந்துக்கொள்ள முடியும் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அன்று புரிந்துக்கொண்டேன். எனக்கு எதிரில் மூன்று மலையாளீஸ் திருப்பதியில் ஏறினார்கள். ஒட்டுமொத்த பெட்டிக்கு கேட்கும் அளவிற்கு சப்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு எப்படி பத்து மணி நேரம் பயணிக்கப்போகிறேனோ! என எனக்கு ஒதுக்கப்பட்ட லோயர் ப்ரத்தில் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்க அந்த அதிகாலை ரயிலின் தாலாட்டில் முகத்தில் அடிக்கும் சில் என்ற காற்றில் உறங்கிவிட்டேன்.

திடீரென தூக்கம் கலய பார்த்தால் ரயில் எதோ நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தது. ச்சாயா விற்கும் ஒருவரிடம் கேட்டதற்கு காட்பாடி சொன்னார். ‘காட்பாடி வந்ததும் ஒரு மிஸ்கால் விடு, வீட்டிலிருந்து புறப்பட்டால் வண்டி ஜோலார்பேட்டை வருவதற்குள் ஸ்டேஷனுக்கு வர சரியா இருக்கும்’ன்னு பாலா சொல்லி இருந்ததால் அவனுக்கு நினைவு படுத்தினேன்.
காட்பாடியை விட்டு ரயில் புறப்பட்டது. அப்போது மணி காலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்ததால் எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எனக்கு மேலே மிடில் பர்த்தில் யாரும் இல்லாததால் உட்காந்துக்கொண்டேன்.
சென்னை-கோயம்பத்தூர் இரண்டு வழி இருப்புபாதை என்பதால் காட்பாடியில் இருந்து வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. நமது ரசனையை விஸ்தாரன படுத்திக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது. வேகமாகச் செல்லும் ரயில், தண்டவாளத்தில் இருந்து ரயில் ஓடும்போது எழும் சப்தம், பக்கத்தில் எதிர் திசையில் இருந்து வேகமாக ரயில் கடக்கும்போது கிடைக்கும் அனுபவம் எல்லாம் சன்னல் வழியே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அனுபவம் நீண்ட நாட்கள் கழித்து புதிதாக ஒரு வித உற்சாகத்தை தூண்டியது.

நேரத்திற்கு அன்று வண்டி ஜோலார்பேட்டை நிலையத்தை அடைந்தது. பாலாவும் நந்தினி அக்காவும் தங்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி உட்காந்துக்கொண்டதாகச் போனில் அழைத்துச் சொன்னான். ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலும் புறப்பட்டது. மீண்டும் அதே வேகம். சென்னை எழும்பூரில் இருந்து குமரி வரையிலும் இரண்டு வழி இருப்புப்பாதை போட்டால் நன்றாய் இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்தேன். திடிரென பாலா வந்து அருகில் உட்காந்தான். சிறிது நேரம் பேசியப்பிறகு பையை எடுத்துக்கொண்டு ’ நம்மளோட சீட்டுக்கு வா ‘ என்று அழைத்துச் சென்றான். நல்ல தூக்கத்தில் எதிரில் இருந்த மலயாலிஸ் இருந்தார்கள். ‘இங்கிருந்து தப்பித்தால் போதும் என நினைத்துக்கொண்டிருக்க பாலா நந்தினி அக்கா இருக்கும் இடத்திலோ பெங்காலி கூட்டம். பத்து நிமிடம் கூட இருக்காது நாங்கள் மூவரும் பேசத் தூவங்கியதும் பக்கத்தில் இருப்பவர்களது பேச்சு பெரிதாக தெரியவில்லை.

ஈரோடு நிலயத்தில் கழிப்பறைகள் சுத்திகரித்துச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து கழிப்பறைக்குச் சென்று வருவோம் என்று கொஞ்சம் நேரத்தில் சென்றால் உள்ளே நிற்க முடியவில்லை. அவ்வளவு நாற்றம். எவ்வளவு தூரம் ரயில் பயணம் அருமையானதோ அதே அளவிற்கு ரயில் கழிப்பறைகளை பயன்படுத்துவது கொடுமையானது. அந்த நொடி என்னுடைய கனவு பயண திட்டத்தில் ஒன்றான ’ஒரு முறை கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் வரையிலும் விவேக் எக்ஸ்பிரெஸ்-ல் பயணிக்க வேண்டும்’ என்கிற ஆசயை புதைத்துவிட்டேன். அரைநாள் பயணத்திற்கே இந்த கதி என்றால் மூன்று நாட்களுக்கு சொல்லவே வேண்டாம். பிறகு கொண்டு வந்த சப்பாத்தியை சாப்பிட எடுத்தால் ‘வெள்ளிக்கிழமை 12மணிக்கு மேலதான் சாப்பிடுவேன்’ன்னு நந்தினி அக்கா சொல்ல நானும் பாலாவும் சாப்பிட்டோம்.

காலை பதினொன்னரை அளவில் கோயம்பத்தூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். கோயம்பத்தூர் வரை இரண்டு முறை வந்திருக்கிறேன். இரண்டு முறையுமே இரவு நேரம் என்பதால் எதையும் பார்க்க முடியவில்லை. இம்முறை பகல் நேரம் என்பதால் சேலத்தில் இருந்து பாதையை ஒட்டியே வரும் கிழக்கு மலைக் குன்றுகள் பார்க்க முடிந்தது.
கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு இடையிலான பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே புகுந்து கேரளாவிற்குள் புகுந்தோம். நீண்ட தொலைவிற்கு தண்டவாளத்திற்கு இரு புறத்திலும் மலைகளாகத்தான் இருக்கிறது.
நாங்கள் பயணிப்பதற்கு முன்பே ’வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரம் ரயில் பயணம் ரொம்ப கஷ்டம்’ என்று சிலர் சொல்லிருந்தார்கள். பாலக்காடு வரையிலும் எதுவும் தெரியவில்லை. பகல் பன்னிரெண்டரைக்கு பாலக்காடை அடைந்தோம். அதன் பிறகு அனல் காற்று வண்டிக்குள் வீசத் துவங்கியது. ரயிலில் ஓடும் மின் விசிறியில் இருந்து வரும் காற்றோ ஏசீ கம்ப்ரசரில் இருந்து வரும் காற்றுப்போல் வெப்பமாக வீசிக்கொண்டிருந்தது.
’அடுத்த ஸ்டாப்பிங் திரிசூர்தான் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு உட்காந்திருந்தோம். திருப்பதியில் ரயில் ஏறும்போது இந்திய ரயில்வேயை நேரத்திற்கு வராதென விமர்சித்தாலும் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் ஈரோடு, கொயம்பத்தூர், பாலக்காடு என அனைத்து ரயில் நிலையத்திற்கும் சரியான நேரத்தில் வந்தது குருதேவ் எக்ஸ்பிரெஸ் . சரியாக மதியம் 1:45க்கு நாங்கள் இறங்க வேண்டிய திரிசூர்-ம் வந்து விட்டது.
 குருவாயூர் பயணத்தை பற்றிகல்லூரி நண்பன் நவீனிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். ரயிலை விட்டு நாங்கள் இறங்கியதும் நொடிப்பொழுதில் எங்களுக்கு முன்பு காட்சி அளித்தான். எங்களை இறக்கி விட்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ்-ம் நாகர்கோவிலை நோக்கி திரிசூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
 ***
தொடர்ச்சியை படிக்க நீங்களும் இன்று சென்று
 நாளை வாருங்கள்.
நன்றி.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. மகேஷ் கை கொடுங்கள்! விவரணம் அருமை!!! உங்களைத் தெரிந்த பலருக்கும் இது எப்படி என்று வியப்பாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. உங்களைப் புரிந்து கொள்ள முடியும்...புரிந்தும் வைத்திருக்கின்றோம். எல்லாமே நம் நமன் நிலையில்தான் இருக்கிறது!

  உங்கள் மனோ திடத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். மிக மிக நேர்மறை எண்ணங்களையும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கும் உடைய நீங்கள் நிச்சயமாக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி அடைவீர்கள். எல்லோருக்கும் முன் மாதிரியாகத் திகழ்வீர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...மனம் நிறைந்த வாழ்த்துகள் மகேஷ்!!! உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் என்றென்றும் உண்டு. வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...

  ReplyDelete
 2. அழகான... அருமையான விவரணை...
  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 3. மகேஷ்,

  தாய் மொழி தமிழில்லை என்பதை ஏற்க மறுக்கிறது என் உள்ளம். அருமையான எழுத்து நடை, சிறப்பான பயண கட்டுரை.

  வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete