Sunday, November 15, 2015

ஹனியும் நானும்-அதிர வைத்த ஒரு கேள்வியும்பி.எட் படித்துக் கொண்டிருந்தச் சமயம். கல்லூரியில் ஒரு முறை பேச்சுப்போட்டி வைப்பதாக சொல்லி இருந்தார்கள். ஆன்-தி-ஸ்பார்ட் பேச்சுப்போட்டி என்பதால் போட்டிக்கான தலைப்பேதும் அறிவிக்காமல் தேதி மட்டும் அறிவித்திருந்தனர். போட்டி நடக்கும் தினத்தன்று போட்டியில் பங்கேற்பவர் போட்டி நடுவர்கள் முன்பு பெட்டியில் இருந்து ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அதன் பிறகு எடுக்கப்பட்ட சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தலைப்பில் மூன்றில் இருந்து ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும். அதுதான் அந்த போட்டிக்கான விதிமுறைகள். அனேகமாக தப்பித் தவறி  இரண்டு அல்லது மூன்று முறை அதற்கு முன்பு பள்ளியில் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற ஞாபகம். அதற்கு மேல் இருக்க வாய்ப்பே கிடையாது. அது சிறுவயது என்பதால் அந்த வயதிற்கே உரித்தான பயம் என்னுள் இருந்திருக்கலாம். இப்போதுதான் கல்லூரிக்கு வந்ததால் ஒருவேளை போட்டிக்கான தலைப்பை அறிவித்துவிட்டு போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தால் முயற்சித்திருக்கலாம். இடைப்பட்ட நாட்களில் எதையாவது பார்த்துக்கொண்டால் சமாளித்துவிடலாம். ஆனால் இதுவோ ஆன்-தி-ஸ்பார்ட் போட்டி ஆச்சே. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் சரி போட்டியில் பங்கு பெற்றுதான் பார்ப்போமேன்னு முடிவு செய்ததும் எனது பெயரை கொடுத்துவிட்டேன்.
போட்டி நடக்கும் தினம் வந்துவிட்டது. எனக்கு முன்பு பேசுபவர்கள் அனைவரும் ப்ரமாதமாக பேசிக்கொண்டிருந்தார்கள். பல போட்டிகளில் பங்கு பெற்ற அனுபவம் கொண்டவர்கள். எனக்கோஎன்ன தலைப்பு வருமோ?’ ‘எப்படி பேசப்போறேனோ?’ என்கிற படபடப்பு என்னுள் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. நான் பேச வேண்டிய நேரமும் வந்துவிட்டது. மைக்கில் எனது பெயரை அழைத்தார்கள். சீட்டை எடுத்தேன். நடுவர் தலைப்பை அறிவித்தார். பேச வேண்டிய தலைப்பு தெரிந்ததும் அதுவரை இருந்த பதற்றம் கட்டுக்குள் வந்தது போன்றதொரு உணர்வு. நடுவர் மணி அடித்துவிட்டார். இனி நான் பேசத்துவங்கனும். தெரிந்த தலைப்பு என்பதால் மூன்று நிமிடம் தாக்குப்பிடித்து விட்டேன். அதற்குள்ளயும் நாக்கு வரண்டு போனதொரு உணர்வு.அவ்வளவுதான் இதுக்கு மேல பேச முடியாது என தெரிந்ததும் முடித்துக்கொண்டேன்.
பேசி முடிக்கவும் என்னை அழைத்துச் செல்ல கார்த்திக் வருவான் எதிர்பார்த்து சில நொடிகள் நின்றுக்கொண்டிருந்தேன். அவனைக்காணவில்லை. வேறு ஒருத்தர் எனது கையை பிடித்து அழைத்துச் சென்றார். அவர் பேச்சைக் கொடுத்ததும்-அது அனிதா என்று கண்டுப் பிடித்தேன். சக வகுப்புத் தோழி. எம்.எஸ்.சி பிசிக்ஸ் முடித்துவிட்டு பி.எட் சேர்ந்தாள். ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் கெமிஸ்ட்ரியும் செட் ஆனதால் நட்பும் பூத்தது.
எப்படிடா கொஞ்சம் கூட பயம் இல்லாம பேசுன?’-அனிதா.
ஏன் இந்த திடீர் கேள்வி?'-நான்.
ஆடியன்ஸை பார்க்க முடியாது என்பதால உனக்கு பயம் இருக்காது இல்லையா?’
அப்படினு உனக்கு யார் சொன்னா?’
இல்லடா நாங்கெல்லாம் பேசுறப்போ எங்க பார்வை பார்வையாளர் பக்கம் இருக்கும். நீ தான் பார்க்க போறதில்லையே. அதுனாலதான் பயம் இருக்காதுனு நினைச்சுகிட்டேன்
இத்தனை நாட்கள் நாம் பழகியதில் அவ்வளவுதான் என்னை நீ புரிஞ்சுகிட்டதா அனி?’
எதாவது நான் தவறாக கேட்டுட்டேனா மஹேஷ்?’
சே அதெல்லாம் ஒன்னும் இல்ல அனி!
இருவரும் போட்டி நடக்கும் அரங்கத்தை விட்டு பேசிக்கொண்டு நடந்ததில் கல்லூரி கேண்டினை வந்தடைந்திருந்தோம். அனிதா என்னிடம் கேட்ட கேள்வியும்-அவள் -குறுகிய நேரத்தில் யூகித்து வைத்திருந்த பதிலும் ஒருவித அதிச்சி நிலையில் மீள சிறிது நேரம் பிடித்தது. எப்படி எல்லாம் அனிதா யோசித்திருக்கிறாள்! எதாவது ஏடாகூடமாக நான் கேட்டுவைக்க அவள் அன்று வாங்கித்தருவதாகச் சொன்ன ஹார்லிக்ஸ் வாங்கி கொடுக்காமல் போனால் ஒரு கப் ஹார்லிக்ஸ் மிஸ் பண்ணிடுவோம் என்பதால் அப்போதைக்கு அனிதாவிடம் எதுவும் கேட்டுக்கலை:))) அவ்வ்வ்வ்
***
இங்கு சாகர்னு ஒரு அண்ணா இருக்கிறார். கடை வைத்திருக்கிறார். அவரிடம்தான் முடிவெட்ட ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு முறை தலயை அவரிடம் கொடுப்பது. நாங்கள் சந்திப்பதே முடிவெட்டும் சமயம் என்பதால் வேலை செய்துக்கொண்டே நிறைய பேசுவோம். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் எனக்கு இருக்கு. ரொம்ப பொறுமையான-மனிதர். அதுனாலயே அவர் கடையில் இருக்கிறாரா என்று ஒருமுறை விசாரித்துவிட்டுதான் செல்வது வழக்கம். அப்படிதான் அது ஒரு செவ்வாய்க் கிழமை மதியம் நினைக்கிறேன். சாகர் அண்ணா கடையில் இருப்பார் என நினைத்துக்கொண்டு விசாரிக்காமல் கடைக்குச் சென்றேன். கடையில் அவரைக் காணோம். புதிதாக ஒருத்தர் கடையில் இருந்தார். அண்ணனைப் பற்றி விசாரித்ததற்கு அவசர வேலையின் காரணமாக வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார். சரி கடைக்கு வந்தாச்சு இவரிடம் தலையை கொடுத்திடுவோம்ன்னு முடிவு செய்து முடிவெட்டனும்சொன்னேன்.
அப்படியா வாங்க வாங்கனு ஒரு வித பரபரப்போடு படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை பக்கத்தில் வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமரச் சொன்னார். கூட வந்த நண்பர் நாற்காலியைக் காட்டிவிட்டு பக்கத்தில் ஒரு வேலை இருப்பதாகவும், இதோ ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிரேன்சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது மதியம் மூன்று மணி இருக்கும். திருப்பதி 45 டிகிரி வெப்பத்தில் தகதகவென  கொதித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயம் கடையில் வேறு எந்த மனிதரும் கிடையாது. அறை முழுவதும் அமைதி. ஃபேன் டொக் டொக் கத்திக்கொண்டுஅறையில் நானும் இருக்கிறேன்என சப்தத்தை எழுப்பிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. கடையில் இருக்கும் புதிய மனிதர் வெட்ட ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்கும் மேல் ஆனது. இருவருக்கும் இடையே இருக்கும் நிசப்தத்தை முடிவெட்டுபவர்தான் கலைத்தார்.
உங்க பேரு என்னங்க?’ முடிவெட்டுபவர்.
மஹேஷ்’-நான்.
என்ன பண்ணுறீங்க?’
எதுவும் பண்ணலீங்க
படிச்சிருக்குறீங்களா?’
ம்ம்ம்
கல்யாணம் பண்ணிக்குவீங்களா?’
ம்ம்ம்ம்இப்போது கேள்வி கேட்பதை நிறுத்தி இருந்தார்.
மீண்டும் இருவருக்கும் இடையே நிசப்தம். சிறிது நேரத்தில் மீண்டும் முடி வெட்டுபவர்.
நா ஒன்னு கேக்கலாமா?’
ம்ம்ம் கேளுங்க
என்னை தவறா எடுத்துக்க மாட்டீங்களே?’
அதெல்லாம் ஒன்னும் எடுத்துக்க மாட்டேன்
கேக்கலாமா?’
ம்ம்
சிறிது நேர அமைதிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
கல்யாணம் பண்ணிடுவீங்க சரி,’ ‘அதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்க?’ கேட்டு அமைதியாயிட்டார்.
(சென்சார்-எடிட்டிங் கேள்வில:)
எதோ யோசித்துக்கொண்டிருந்த நான் அவரது கேள்வியை கேட்டதும் கொஞ்சம் அதிர்ந்து சுய நினைவிற்கு வந்தவனாய் தலையை அசைக்க-கத்தரியை கீழே அவர் போடாத குறை.
***
பொது மக்கள் பார்வையற்றவர்களைப் பற்றி எப்படி எல்லாம் நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு சேம்பிள்தான். இவரைப் போல பலருக்கும் பல வித சந்தேகங்களும்-கேள்விகம் மனதில் எழுவதுண்டு. என்னிடம் யாராவது எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லுவேன். அன்று அவருக்கு பதில் சொல்லவும், முடிவெட்டி முடிக்கவும், நண்பரும் வேலையை முடித்து விட்டு வரவும் சரியாக இருந்தது. காசு கொடுத்துவிட்டு கடையின் படியை விட்டு இறங்கும்போது மனதில் என்னை நான் திட்டிக்கொண்டிருந்தேன். இன்னேரம் என்னுடைய ஹனி-அ.னி.த்.தாவுக்கு நான் ஓக்கே சொல்லி இருந்தால் ஆதாரப்பூர்வ பதில் கடைக்காரருக்கு ஒரு சிங்கக் குட்டியோ-மான் குட்டியோ காட்டி இருந்திருக்கலாம். என்ன செய்வது சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி கணிதத்துல மிஸ் ஆகி இப்போ மிஸ்ஸெஸ் அனிதா ராஜேஷாக ஒரு வயசு பிள்ளைக்கு அம்மா ஆயிட்டாங்க. rajesh-mahesh ரெண்டு எழுத்துதான் வித்யாசம். என்ன செய்வது ஒரே ஃபீலிங்:))) அவ்வ்

Friday, November 13, 2015

பார்வையற்றவர்கள் கணினி பயன்படுத்துவது எப்படி?நேற்றைய பதிவில் டைரக்டர் அட்லி இயக்கிய குறும்படத்தை பகிர்ந்திருந்தேன். படத்தைப் பற்றி மேலோட்டமாக எழுதி பதிவை முடித்துக்கொண்டேன். கடைசி ட்விஸ்ட் முக்கியம் என்பதால். குறும்படத்தை பார்த்தவர்கள் நன்றாய் இருப்பதாகவும் சொன்னார்கள். நன்றி. பொறுமை/நேரம் இருப்பவர்கள்இங்கேச் சென்று முதலில் அந்த படத்தை பார்த்து வந்தால் இந்த பதிவை புரிந்துக்கொள்வதில் எந்த சந்தேகமும் இருக்காதென நினைக்கிறேன்.
 ஹ்ம்ம் அதுக்கெல்லாம் எங்களுக்கு எங்க டைம் இருக்குன்னு நினைக்குறீங்களா? நோ ப்ராப்ளம். தொடர்ந்து பதிவை வாசிக்கவும்:)
பொதுவாகவே சமூகத்தில் பார்வையற்றவர்கள் என்றால் இப்படிதான் என்று சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அவர்களுக்கு இசையில் இருக்கும் நாட்டம். எங்காவது வெளியேப் போனால் ஒரு பாட்டு பாடுங்களேன்என்று என்னிடம் சிலர் கேட்ட அனுபவம் உண்டு. ஐய்யோ எனக்கு சரிகம கூட வராதுங்க’ ’எனக்கும் அதுக்கும்பங்காளி சண்டைங்கன்னு சொல்லாதக்குறைதான். உண்மைதான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஹார்மோனியம், கித்தார், ட்ரம்ஸ் ஹ்ம்ம்ம் சுத்தம். அதெல்லாம் உனக்கு வராதுடான்னு மண்டையில் உரைக்க சில வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்பவும் சின்ன ஏக்கம் மனசுல இருக்கு :)
பள்ளியில் இசையைத் தவிர வேற எந்த கோ-கரிகுல ஆக்டிவிட்டிசும் எங்களுக்குத் தேவை இல்லைனு நான் படித்த சிறப்பு பள்ளி நினைத்ததன் விளைவால் வேறு எந்த துறையிலும் எங்களை ஊக்குவிக்கவில்லை. எனக்கு சிறுவயதில் இருந்தே கணினி மேல் ஒரு ஈர்ப்பு/காதல் எதோ ஒண்ணு. வீட்டில் கணினி கிடையாது, பள்ளியில் கம்ப்யூட்டர் இருந்தும் சொல்லி தந்தது கிடையாது. பனிரெண்டாவது முடிச்சதும் அப்பாவிடம் எனக்கு கம்யூட்டர் வேனும்ப்பான்னு கேட்டது. அனேகமா அப்பா அந்த ஒரு விசயத்துலதான் ஏன், எதுக்கு எல்லாம் கேக்காம வாங்கி கொடுத்தார் :)
நான் கம்ப்யூட்டர் வாங்கிய தினம் ஜூன்7 2009. வாழ்வில் மிக சந்தோஷமாக உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்று. புதிய கம்ப்யூட்டர் என்பதால் அதில் இருந்து வரும் ஒரு வித வாசனை, கம்யூட்டர் ஆன் செஞ்சதும் கீக் என வரும் சப்தம் எல்லாம் மிகவும் ரசித்தேன். கம்ப்யூட்டரில் அப்போது விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ரேடிங் ஸிஸ்டம் நிறுவி இருந்தார்கள்.
எடுத்ததும் நான் கம்ப்யூட்டரில் எனக்கு தேவையான மென்பொருள் (jaws). நிறுவினேன். அதாவது இந்த (jaws-ஜாஸ்) மென்பொருளோட வேலை என்னனு பார்த்தீங்கனா படிச்சுக்காட்டுறது. அதாவது கம்ப்யூட்டரோட ஸ்க்ரீன்ஐ ரீட் செஞ்சு காட்டுறதைத்தான் அப்படிச் சொன்னேன். இன்னும் விளக்கமாச் சொல்லனும்னா ஜாஸ் அப்படிங்கிறது ஸ்கிரீன் ரீடர் வகை மென்பொருளைச் சேர்ந்தது.
ஸ்கிரீன் ரீடர் என்றால் என்ன?’ உங்களுக்குச் சந்தேகம் வரலாம். அதாவது திரையில் தோன்றும் எழுத்துக்களை படித்துக் காட்டுவதே ஸ்கிரீன் ரீடராகும். ஜாஸ் மென்பொருள் நிறுவிய எந்த கம்ப்யூட்டரிலும் கீபோர்டில் எந்த கீயையும் அழுத்தினால் அதற்கான விடை கம்ப்யூட்டரில் இணைத்திருக்கும் ஸ்பீக்கர்ஸ் வழியே கேட்கலாம். நாங்கள் mouse பயன்படுத்துவதே கிடையாது. முழுவதும் கீபோர்ட் மீதுதான் சார்ந்திருக்கிறோம். இதனால் எதுவும் பெரிதாக இழப்பு கிடையாது. நிறைய ஷாட்கட் கீஸ் யூஸ் செய்வோம். உதாரணத்திற்கு கட், காபி, பேஸ்ட் எக்செட்ரா...
ஆமா ஜாஸ் மென்பொருள் நிறுவினால் எந்த கம்ப்யூட்டரும் ஸ்க்ரீனை படிச்சுக்காட்டும் சரி, என்னென்ன வேலைகள் கம்ப்யூட்டர்ல செய்ய முடியும்ன்னு சந்தேகம் வரலாம்.
  யாருடைய உதவியுமின்றி சுயமாக கணினியை இயக்கிக் கொள்ள முடியும். அதாவது: எல்லா விதமான டாக்குமெண்ட்ஸ் படிப்பது, பாட்டுக் கேட்பது, படம் பார்ப்பது, டைப் பண்ணுவது, இணையத்தில் தகவல்களைப் பெறுவது, மின்னஞ்சல் படிப்பது, அனுப்புவது, செய்தித்தாள் படிப்பது, பதிவுகள் படிப்பது மற்றும் எழுதுவதெல்லாம் கிட்டத்தட்ட 95% வேலைகளைச் செய்ய முடியும்! உபரித்தகவல்: ரெண்டு வருஷமா ஒரு சீனாக்காரியோட ஸ்கைப்ல நட்பு பாராட்டி வந்தேன் . கல்யாணம் ஆகி போயிட்டா :) அவ்வ்வ்
இந்த சாஃப்ட்வேர்ல ஒரு ப்யூட்டி என்னன்னா, இந்த சாஃப்ட்வேர் படிக்கறது ரொம்பவும் இயந்திரத்தனமாக இல்லாமல் மனிதன் படிப்பது போலவே பஞ்ச்சுவேஷன் குறிகளுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோட வாசிக்கும் :) அதைப் பற்றிய அனுபவம் சிலவற்றைஇங்கே எழுதி இருக்கேன் படிச்சுப்பார்க்கலாம்.
இந்த ஜாஸ் மென்பொருள் இலவசம் கிடையாது. இது ஒரு பெய்ட் சாஃப்ட்வேர். இந்திய ருபாயில் கிட்டதட்ட இருபதாயிரம் வரலாம். ஆனால் ஜாஸ் நிறுவனம் அவர்கள் இலவசமாக கொடுத்திருக்கும் டெமோ வர்ஷன் 40 நிமிடம் வரைதான் பேசும். கம்ப்யூட்டர் ரி-ஸ்டார்ட் செய்து வந்தால்தான் பயன்படுத்த முடியும். இது மாதிரி ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு முறை கம்ப்யூட்டர் ரீ-ஸ்டார்ட் பண்ணிகிட்டே இருக்கணும். இதற்கு ஒரு தீர்வு இருக்கு. க்ராக் செய்யணும். அப்படி க்ராக் செய்துட்டா தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
ஜாஸ் தவிரவும் இன்னொரு மென்பொருள் இருக்கு. அதுவும் திரையை வாசித்துக்காட்ட உதவும். அது ஒரு ஓபன் ஸோர்ஸ் மென்பொருள். பேரு (nvda) என்.வி.டி.ஏ. குறைந்த நேரத்தில் எந்த கம்ப்யூட்டரிலும் நிறுவலாம். எல்லா வேலைகளையும் செய்யலாம். தொடர்ந்து பயன்படுத்தலாம். யாருக்காவது முயன்றுப்பார்க்க ஆசை இருப்பின் இந்தஇணையதிற்குச் சென்று என்விடிஎ மென்பொருள் பதிவிறக்கம் செய்து நிறுவி பார்க்கலாம்.
பி.கு: மூனரை வருஷத்துக்கும் மேல தமிழ் பதிவுகள் வாசிச்சுகிட்டும், இரண்டரை வருஷத்திர்க்கும் மேலாக பதிவுகள் எழுதுவதெல்லாம், மெர்ச்சொன்ன மென்பொருட்க்கள் உதவியால்தான் சாத்தியம்ஆனது:)
வேலூரில் இந்த வருடம் நடந்த குட்டி பதிவர் சந்திப்பின் போதுதான் முதன் முதலாக வெளியே தலைகாட்டினேன்.
அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை பதிவர்களின் ஏற்பாட்டைப் பார்த்துவிட்டு வலைப்பதிவர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டேன். அப்போது பலர் என்னிடம் எப்படி கணினி பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருந்தனர். நானும் எழுத சோம்பேறிப்பட்டு எப்படியோ இதோ எழுதி முடிச்சிட்டேன்.
என்ன பதிவர்கள்/வாசகர்களே இந்த பதிவை வாசிச்ச உங்களுக்கு பார்வையற்றவர்கள் எப்படி கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்கனு ஓரளவிற்காவது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பதிவிற்கு தொடர்பாக எதாவது சந்தேகம்/கேள்விகள் இருக்குமாயின் தாராளமாக  பின்னோட்டப் பெட்டியில் கேட்கலாம்.
நன்றி.