Sunday, August 02, 2015

கடவுள் இருக்கிறாரா...? தேடலின் பயணம்-1

’ இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு காரணம் என்ன? பூமியில் மட்டும் ஜீவராசிகளை தோற்றுவித்தது யார்? இதற்கெல்லாம் பெரும்பாலானவர்கள் நம்புவது போல் கடவுள் தான் காரணமா? அப்படி ஒருத்தர் உண்மையில் இருக்கிறாரா?’ என்கிற கேள்வி எனக்குள்  பள்ளி  பருவத்தில் இருந்தே மனதில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். ஆனால் அதை கண்டுக்கல. காரணம் எனக்கு ஒரு கடவுள்  தேவைப்பட்டார். அவரிடம் வேண்டினால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் என்கிற நம்பிக்கை எனது ஆழ் மனதில் பதிந்திருந்தது. ஒரு இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பன்னிரெண்டு ஆண்டுகள் கத்தோலிக்க பள்ளியில் படித்ததால் அவர்களது தாக்கம் சிறுவயதில் என்மீது சற்று அதிகமாகவே இருந்ததாக தெரிகிறது. பிறகு உயர் வகுப்புகளுக்கு வந்ததும் படிப்படியாக அது இந்து கடவுள்கள் பக்கம் திரும்பியது. தேர்வு சமயத்தில் பக்திமானாக ஆகிவிடுவேன். ‘நா நினைச்சது போல நடந்திச்சுனா மலை ஏறி  உன்னை தரிசிப்பேன்’ என்றெல்லாம் பெருமாள் கிட்ட உடன்படிக்கை போட்ட நாட்கள் எல்லாம் உண்டு. அதன் பிறகு கல்லூரி சேர்ந்த சில நாட்களில் கூட படிக்கும் சக மாணவர்களில் சிலரது வாழ்க்கையை பார்த்தபோது ’ஏன் அவர்களது வாழ்வில் அத்தனை துன்பங்கள், துயரங்கள் நிறைஞ்சிருக்கு?’ என்று கோவம். எனக்கு வீட்டில் எல்லா வசதிகள் இருந்தாலும் சக வகுப்பு தோழர்கள் படும் கஷ்ட்டங்கள், அது தவிர எனது சுற்றத்தில் இருக்கும் பலரது கதைகள் செவிக்கு எட்டியதிலும் ஏற்பட்ட கோவத்தாலும்/வருத்தத்தாலும் கடவுளின்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை முழுமையாக  குறையாட்டியும்,இளங்கலை முடிவில் கடவுள் ஒருத்தர் இருந்தால் அவர் கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தியாக (இயற்கை வடிவில்) இருப்பார் என முடிவுக்கு வந்திருந்தேன்.

 பிறகு பிஎட் சேர்ந்தபோது வகுப்பில் கல்கி பகவானை வணங்கும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். தெலுங்கு தொலைகாட்சியில் கல்கி பகவான் ஆஷ்ரமத்தில் அரங்கேறும் அக்கிரமங்களை அம்பல படுத்திய வீடியோக்க்ளை பார்த்ததால் எனக்கு எழும் சந்தேகங்கள் /விமர்சனங்களை  அந்த நண்பர் முன்பு வைத்தேன். சரியான பதில் வராததால் மேற்கொண்டு அதைப் பற்றி விவாதிப்பதால் ஒரு புரயோஜனம்  இருக்காததால் விட்டுட்டேன். அதன் பிறகு பிஎட் முடிவில் நான் புரிந்துக்கொண்ட விஷயம் கடவுளின் அவதாரமாக தங்களை பிரகடனம் செய்துக்கொண்டு சிலர் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என புரிந்து கொண்டேன்.

அதே போல நான் கவனித்ததில் வேறு எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவிற்கு குறிப்பாக இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டில் பல போலி சாமியார்கள் அவதார புருஷர்களாக அவதரிப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் கதை ஆதாரங்களுடன் சிக்கி இருப்பதால் என்னதான் மகிமைகள் செய்தாலும், தீட்சை தருவதாகச் சொல்லி ஏமாற்றினாலும் அதில் சந்தேகம் இல்லாததால் அந்த அத்யாயம் அதோடு மூடிவிட்டேன்.

***

 என்னுடைய ஒட்டுமொத்த கடவுள் நம்பிக்கை திசை திரும்பியது முதுகலையின் போதுதான்.

 கல்லூரியில் எனக்கொரு நண்பனிருந்தான். வைணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவன். பெருமாளுக்காகவே; கோயம்பத்தூரில் இருந்து இங்கு வந்து படித்தான். நல்ல திறமை மிக்க பையன் என்பதால் அவனுக்கு பாண்டிச்சேரி செண்ட்ரல் யூனிவர்சிடியிலும் இடம் கிடைத்தும் இங்கு வந்து சேர்ந்ததால் பலரும் அவனைப் பார்த்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டார்கள். அவனுக்கோ தெலுங்கு தெரியாது; வகுப்பில் என்னைத் தவிர வேறு யாருக்கும் தமிழ் தெரியாது.

 இருவரும் பல விஷயங்களை விவாதிப்போம். கடவுள் பற்றி பேச்சு எடுத்தால் இன்னும் சூடு பிடிக்கும். அவன் எதற்கெடுத்தாலும் பெருமாள் என்பான்; நானோ போடா என்பேன். ஒருமுறை சென்னையில் இருந்து என்னுடைய நண்பர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்திருந்தார்கள். அவர்களது திட்டம் பெருமாளை தரிசித்து விட்டு அப்படியே திருப்பதிக்கு 35 கிமி தூரத்தில் இருக்கும் சைவர்கள் புனித தலத்தை தரிசித்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு திருப்பதிக்கு வராமல் தடா வழியாக திரும்புவது அவர்களது திட்டம்.
’ ஊருக்கு புதுசு நீ; சென்னையில் இருந்து நண்பர்கள் வந்திருக்கிறார்கள்; திருப்பதியில் இருக்கும் கோவில்கள் எல்லாவற்றையும் நீ பார்த்தாச்சு; அப்படியே சைவர்களின் புனித தலமான   காளஹஸ்தியையும் சுற்றிக்காட்டச் செல்கிறேன் வருவியா’ என கேட்டிருந்தேன். காரணம் அவன் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து திருப்பதியை தவிர அருகில் எங்கும் செல்லாததால் சிவன் கோவிலை காட்ட கேட்டிருந்தேன். எங்களோடு வர மறுத்தான். அவனைப் பற்றிதான் தெரியுமே. அவர்களைப்பொருத்தவரை; விஷ்ணுதான் எல்லாம் ; அதே போல சைவர்களும் அதேதான். ஒரு படி கீழேதான் பெருமாள் அவர்களுக்கு. தன் சாமி மட்டும்தான் உண்மை என்று நினைப்பதில் தவறு கிடையாது; மற்ற சமய சாமீங்க பொம்மைனு நினைப்பதுதான் தவறு.
அப்போதுதான் ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பித்தது. இந்துச் சமயத்தில் இருக்கும் இரண்டு பெரிய சமய கிளைகள் எவ்வளவு தீவிரமாக தத்தம் சமய நம்பிக்கைகளில் இருக்கிறார்கள் என்று.

ஒரு சராசரி ஹிந்துக்கு ஏன் எனக்கும் இதெல்லாம் அதுவரையிலும் தெரியாது. அதன் பிறகு எப்போதெல்லாம் அவன் விஷ்ணுவை முன்வைத்து பேசுவானோ அவனுக்கு பதில் அடி கொடுக்கவே நான் எடுத்த ஆயுதம் நாத்திகம் மற்றும்  பகுத்தறிவு. அது வரையிலும் ஒரு குறிப்பிட்ட சாமியையோ அல்லது கடவுள் நம்பிக்கையோ எனக்கு கிடையாது என்பதால் தைரியமாக அவனோடு விவாதம் பண்ண ஆரம்பித்தேன். அதற்காக எனது தேடல் ஆரம்பித்தேன். அதனால் எனக்கு கிடைத்த பலன் தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சது.

  பயணம் தொடரும்.