Saturday, December 31, 2016

திருப்பதிக்கும், திருத்தணிக்கும்டிசம்பர் 19 அன்று வாழ்வில் முதன் முதல் வேலை அப்பாயிண்மெண்ட்டில் கையெழுத்திட்டேன். அன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் state bank learning center ல் ஓரியெண்டேஷன் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை அன்று வேலை செய்ய இருக்கும் இடத்தை குறித்த posting order கொடுத்து அனுப்பினார்கள்.
சென்னையிலிருந்து வீடு திரும்பியதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருத்தராக  ஐந்து நாட்கள் சென்னையில் இருந்த அனுபவத்தைக் கேட்டார்கள். கேட்ட அனைவரிடத்திலும் கொடுத்த பதில் ஒன்றுதான். ‘ஐந்து நாட்கள் ஐந்து நிமிடம் கடந்து வந்ததைப் போன்று உணர்வு’ என்று சொல்லி இருந்தேன். நூத்துக்கு நூறு சதவிகிதம் உண்மை. புதிதாக அறிமுகமான சக வகுப்பு நண்பர்களில் இருந்து அங்கு பணிபுரியும் ஒட்டு மொத்த அதிகாரிகளும் அருமையானவர்கள்.
வீடு திரும்பியதும் எடுத்ததும் சென்னையில் கிடைத்த அனுபவத்தைப் பற்றிதான் நிறைய எழுத நினைத்திருந்தேன். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு உடனடியாக திங்கட்கிழமை திருத்தணி ஸ்டேட் பேங்கில் சேர வேண்டி இருந்ததால் இடை பட்ட இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகளுக்கே சரியாக இருந்தது. நிச்சயம் எழுத வேண்டும் என்கிற ஆசை/விருப்பம் மனதில் உண்டு. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிதாக ஜூனியர் அசோசியேட் ரிக்ருட் செய்ய நோடிஃபிகேஷன் விட்டதும் சென்னை வட்டத்தில் தேர்வு எழுத முடிவு செய்திருந்தேன்.  நான் இருக்கும் ஹைதிரபாத் வட்டத்தில் ஓ கட்டாஃப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதென்பதால் ’எப்படியும் திருத்தனியில் போஸ்ட்டிங் வாங்கிடலாம்’, ‘வீட்டில் இருந்து தினமும் சென்று வர வசதியாக இருக்குமே’னு முன்கூட்டியே பல கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் போட்டுதான் அப்ளை செய்து தேர்வு எழுதி இருந்தேன்.
திட்டமிட்ட படி எல்லாம் சரியாக நடக்க விருப்பபட்ட இடத்தில் வேலை என எல்லாம் சரியாக அமைய உற்சாகத்தோடு 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலையில் அப்பாவும் நானும் ரயிலில் திருத்தனி ஸ்டேட் பேங்கில் சேர புறப்பட்டோம். இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர்தான். அன்றிலிருந்து தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நான் எழுந்து, குழித்து முடிப்பதற்குள் எனக்கு முன்பே அம்மா எழுந்து காலை மற்றும் மதிய உணவை சமைத்து தயாராக வைத்திருப்பார்கள். சரியாக வீட்டில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் திருப்பதி ரயில் நிலையம் இருப்பதால் தினமும் ஆறரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால் 6,45 மணிக்கு திருப்பதி-சென்னை ரயில் பிடிக்க சரியாக இருக்கும். இரண்டு மணி நேரம் ரயில் பயணத்திற்கு பிறகு சுமார் ஒன்பது மணி அளவில் திருத்தனி ரயில் நிலையத்தில் இறங்குவேன்.
வங்கி பத்து மணிக்குதான் துவங்கும் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு வந்த காலை உணவை ரயில் நிலையத்தில் முடித்து விட்டு நேரத்தையும் கடத்தி ஒன்பதரை மணி அளவில் வங்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தால் மெதுவாக நடந்தாலே பத்து நிமிடத்திற்குள் வங்கியை சென்றடையக்கூடிய தொலைவில்தான் பணி புரியும் ஸ்டேட் பேங்க் இருக்கிறது.
காலையில் வங்கிக்குள் நுழைவதில் இருந்து மாலை வெளியே வருவது வரையிலும் அலுவலக நேரம் எல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. கீழ்மட்ட பணியாளர்களில் இருந்து மேல் மட்ட அதிகாரிகள் வரை நன்றாக பழகுகிறார்கள். தேவைப்படும் உதவியைச் செய்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு போகப் போக எல்லாம் சரியாகி விட்டது. தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்ளவும் தெரிஞ்சுக்கவும் நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் செய்யும் வேலையில் திருப்தியும் இருக்கிறது.
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து வீதம் திருப்பதிக்குச் செல்லும் பேருந்து  வங்கி முன்பிலிருந்துதான் செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. வங்கி செக்கூரிட்டி அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஏற்றிவிடுகிறார்கள். அதனால் பேருந்து ஏறுவதில் சிக்கல் ஏதும் கிடையாது.
இரண்டு மணி நேர பேருந்து பயண  நேரம் தவிர காலையில் இருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் இரவு வீடு திரும்புவதற்குள் உடலும் மனமும் சோர்வடைந்து விடுகிறது. புதிதாக எதையும் வாசிக்கவும் எழுதவும் மனம் ஒத்துழைப்பது கிடையாது. கடந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே வீடு வேலை மட்டுமே மூளை முழுக்க ஆக்கிரமித்திருப்பதில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
வாழ்வின் அர்த்தமே தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வதில்தான் இருக்கிற்து என்பதை உணரத் துவங்கி இருக்கிறேன். அதனால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை வர வரும் புத்தாண்டில் இதற்கொரு நன்கு திட்டமிட்டு நல்ல முடிவெடுத்து வேலையும் தனி பட்ட வாழ்க்கையையும் சம அளவில் சமாளிக்க புத்தாண்டு சபதம் எடுக்க இருக்கிறேன். பார்ப்போம்.
மற்றதை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது ஆண்டில் சந்திப்போம்.

Thursday, December 15, 2016

வேலை


பொதுவா நம்ம ஊருல அறிவுரை சொல்லுறதுக்கும் சரி; ஆலோசனை சொல்லுறதுக்கும் சரி ஆட்களுக்கு பஞ்சமே கிடையாது. அந்த வரிசையில அப்பாவி பதிவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் ‘ரொம்ப நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க நல்ல எதிர் காலம் உங்களுக்கு இருக்கு’னு மனதார அடிச்சு விட்டிருக்கேன் :)
இத்தனை நாளா எவ்வளவு ஈசியா சொல்லி இருக்கேன். ஆனா செயல்ல அதைச் செய்யுறதுல இருக்குற சிக்கல் இருக்கே அப்பப்பா ரெண்டு மூணு நாளா ஒரு பதிவ எழுத ஆரம்பிக்க முயற்சி செஞ்சு செஞ்சு ஷ்ஷப்பா..ம்ம்ம்ம்.. ஒரு வழியா உட்கார்ந்து இதோ கிடுகிடுனு எழுத ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து பதிவை வாசிக்க இருப்பவர்களுக்கு போர் அடிக்கிறதொரு பதிவாக இருந்தால் நான் பொறுப்பாக மாட்டேன் :)
அட என்ன நீ எத்தனை நாள் கழிச்சு பதிவு பக்கம் எட்டிப்பாக்குற. ஆரம்பத்துலயே இப்படி புலம்புறதானு #நண்பர்கள்/அன்பர்கள் கேட்பது என் காதுகளில் கேட்காமல் இல்லை. என்ன செய்வது மிக நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வேண்டியச் சூழல் (நண்பர்களுக்கு ஒரு நல்ல விசயத்தச் சொல்ல பதிவு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறேன் :) )
சில தினங்களுக்கு முன்பு இல்லை பல வாரத்திற்கு முன்பே அந்த நல்ல விசயத்தின் துவக்கம் தெரிந்ததும் தெரிந்த பதிவர்கள்; நண்பர்களுக்கு தொலைபேசி வாயிலாக சொல்லி இருந்தேன். தேம்ஸ் நதிக்கரையிலே பாட்டி எலிசபத் ஊரிலே; வசித்து வரும் பதிவருக்கு மட்டும் அந்த விசயத்தை மின் அஞ்சலில் சொல்லியிருந்தேன். உடனடியாக நீண்டதொரு பதில் அனுப்பி என்னை திக்குமுக்காடச் செய்திருந்தார். பதில் அனுப்ப நினைத்து நினைத்து தொடர்ந்து பல தடைகள் நிஜமாகவே ஏற்பட ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியே சொல்லிட்டுவர்றதை விடவும் பதிவுல சொல்லிட்டா என்னுடைய ப்ளாக் வாசகர்களுக்கு (அப்படி யாராவது எங்காவது எட்டுத்திக்கிலும் இருந்தால் மகிழ்வார்கள் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்:))))
***
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் சுமார் 17000 ஜூனியர் அசோசியேட் (clerk) காலி இடங்களை நிரப்ப நோடிஃபிகேஷன் வெளியிட்டிருந்தது. prelims, mains முறையே தேர்வை நடத்தியது. மே மாதம் prelims எழுதியதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து june மாத கடைசியில் main தேர்வை எழுதி இருந்தேன். அதன் முடிவுகள் அக்டோபர் 27 இரவு வந்தது. மோடி அரசு குருப் c மற்றும் d பணிகளுக்கு interview நீக்க பட்டதால் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து மெடிக்கல் டெஸ்ட் மற்றும் டாக்குமெண்ட் வெரிபிகேஷன் சென்ற மாதம் நடந்தது. எல்லாம் சரியாக இருந்ததை அடுத்து 1-12-2016 அன்று மின் அஞ்சலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் வந்திருந்தது. வரும் திங்கட் கிழமை அதாவது 19ஆம் தேதில இருந்து முதலில் ஒரு வாரத்திற்கு சென்னை நுங்கபாக்கத்தில் இருக்கும் state bank learning center ல் பயிற்சி கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து அனேகமாக பயிற்சியின் கடைசி நாள் அன்று பணி செய்ய வேண்டிய இடத்திற்கான உத்தரவு கடிதம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ***
கிட்டதட்ட ஒரு வருட உழைப்பு. 2015 மே மாதம் எம்ஏ முடித்ததும் அடுத்து என்ன செய்வதென்று குழப்ப நிலையில் இருந்தேன். வங்கி பணிக்குச் சென்றால் நான் எதிர் பார்க்கும் அரசாங்க வேலை கிடைக்கும் என்பதால் தொடர்ந்து வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். முதலில் தோல்விகள் இருந்தாலும் தோல்விகளையே வெற்றிக்கான படிகளாக மாற்றி இறுதியாக இதோ எதிர்பார்த்தபடி வங்கி ஊழியராகப்போறேன். இது துவக்கம் தான். இந்த வெற்றியைக் கொண்டு என்னுடைய லச்சியங்களை எட்டுவதற்கான ஒரு ஏணிப் படிதான் இந்த வேலை என்பதை மனதில் உறுதிக்கொண்டு தொடர்ந்து இயங்க இருக்கிறேன்.
இனி அவ்வப்போது நேரம் கிடைத்தால் எழுதவும் முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் இத்துடன் நிறுத்திக்கொண்டு மற்றதை எல்லாம் வேறு ஒரு நாள் பார்க்கலாம்:)))

Friday, July 29, 2016

ஹீரோ ஆக நினைச்சு-ஜீரோ வாங்கிய கதை


நா படிச்ச பள்ளியப் பொறுத்த வரை பத்தாவது வரைக்கும் எந்த தேர்வானாலும் ஆசிரியர் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களையும் தனித் தனியே அழைச்சு தேர்வை நடத்துவாங்க. ஆசிரியர் கேள்வி கேட்க மாணவன் பதில் சொல்லனும். பத்தாவது வரைக்கும் அப்படிதான். பத்தாவதில் பொதுத் தேர்வு இருப்பதால் அந்த வருடம் முழுவதும் தேர்வு எழுதும் ஃபார்மெட் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு அதர்க்கேற்ப்ப நடத்துவார்கள்.

தேர்வு சமயத்தில் நாங்கள் சொல்லச் சொல்ல பதில்கள் வேறு ஒருத்தர் எழுத பள்ளி நிர்வாகம் எழுதுபவரை ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியே எழுத ஏற்பாடு செய்வார்கள். எழுத வருபவர்கள் பெரும்பாலும் எங்கள் பள்ளியைச் சுற்றி இருக்கும் கல்லூரிகளில் இருக்கும் என்.எஸ்.எஸ். மாணவர்களும் சில சமயம் அதே கல்லூரியில் விருப்ப பட்ட மாணவர்களும் தேர்வெழுத வர அவர்களது கல்லூரியே அனுமதிக்கும். அப்படி பத்தாவதில் ஆரம்பிச்சது பதினொன்னு பன்னிரெண்டாம் வகுப்பிலும் அதே ஃபார்மெட்டில்தான் தேர்வுகள் நடந்தது.

***

நா பத்தாவது வருவதற்கு முன்பு ஸ்டெல்லா மேரிஸ்ல இருந்தெல்லாம் தேர்வு எழுத மாணவிகள் வருவாங்களாம். அதன் பிறகு அவர்கள் கல்லூரிக்கும்-எங்கள்¬ பள்ளிக்கும் தூரம் என்பதால் நின்று விட்டார்கள்.

இப்போ அதனை நினைச்சு பார்த்தா எனக்குதான் ஒரே வருத்தம். நடிகை சமந்தா அவர்கள் ஸ்டெல்லா மேரிஸ்லதான் படிச்சாங்களாம். ஒருவேளை அவுங்க என்.எஸ்.எஸ் குழுவில் இருந்திருந்தால் எப்போதாவது...
நானும் சமந்தாவும் நேருக்கு நேர் உட்காந்துக்கொண்டு, ரெண்டு பேருக்கும் இடையே நான் சொல்லச் சொல்ல சமந்தா பதில்கள் எழுத ஒரு சின்ன மேசை இருப்பதாவும், ஓரடி இடைவெளியில ரெண்டு பேரும் மூணு மணி நேரம் தேர்வு எழுதுறத கற்பனை செய்ஞ்சு பார்த்தா
.
.
.
.
.
.
.
.
.
.
. . . . . . . .
கஷ்ட்டமா இருக்கு. பின்னே நா உடுர கதைய எல்லாம் பக்கம் பக்கமா ஆன்சர் ஷீட்ல எழுதனுமே. சாஃப்ட்டான சமந்தாவின் விரலுக்கு என்னால் ஒரு சோதனை வரணுமா செல்லம் ச்சி டங்க் சிலிப்... சமந்தா பாவம் :)

ஓகே நோ ஜோக்ஸ்... சீரியஸ்.

பத்தாவதில் இருந்து அப்படி என்றால் முந்தைய வகுப்புகள் எல்லாம் மேற் சொன்னது போல தேர்வை அந்தந்த பாட ஆசிரியரே நடத்துவார். நூறு மதிப்பெண்கள் கொண்ட தேர்வு தாளில் எப்படியும் முப்பது முதல் முப்பத்தஞ்சு மதிப்பெண்கள் வரையிலும் ஒரு மதிப்பெண்கள் கேள்விகள் இருக்கும். ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் அழைச்சு தனித் தனியே கேட்டிட்டு இருக்க முடியாது என்பதால், வகுப்பில் ஓரளவு நல்லா பார்க்க முடிஞ்ச மாணவர்கள எல்லாம் முதல் வரிசையில் உட்கார வைத்துவிடுவது.

அவர்களுக்கு பின்னால் மற்ற மாணவர்கள் உட்கார செய்து ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு கையை உயர்த்தி பதில் சொல்லனும். உதாரணத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் பகுதியில ஒரு கேள்விக்கு விடை எத்தனாவது ஆப்ஷனில் இருக்கோ அத்தனை விரல்களை கையை உயர்த்தி காட்டனும். ஆசிரியர் ஒவ்வொருத்தரையும் பார்த்து மதிப்பெண்கள் போட்டுக்கொண்டு வருவார்.

இதனால நேரம் மிச்சம் ஆவதோடு ஆசிரியருக்கும் ஒரே கேள்விய திரும்பத் திரும்ப கேட்க வேண்டி அவசியம் இருக்காது. அதன் பிறகு பெரிய கேள்விகள் மட்டும் ஆசிரியர் வகுப்பில் இருந்துக்கொண்டு ஒவ்வொருத்தரா அழைச்சு கேள்வி கேட்பார். தேர்வை எழுதாதவர்கள் வகுப்பிற்கு வெளியே இருப்பாங்க. எழுதி முடிச்சவுங்க வகுப்பில் இருப்பாங்க. இதுதான் பத்தாவது வரைக்கும் எங்க பள்ளியில் தேர்வு நடத்தும் முறை.

இப்படி இருக்க, எட்டாவதுல நினைக்குறேன். அரையாண்டு தேர்வு சமயம். சமூக அறிவியல் பாடம். நெல்சன் சார் தேர்வை நடத்த வந்தார். எப்போதும் போல் யார் யார் எங்கு அமரணுமோ அங்கேச் சென்று உட்காந்தோம். தேர்வு ஆரம்பிச்சது. நெல்சன் சார் முதல் கேள்விய கேட்க ஆரம்பிச்சார். தரையில் பஞ்சு விழுந்தாலும் கேக்குரளவு அமைதி-வகுப்பில். ஒவ்வொருத்தரா பதிலை காட்ட கையை உயர்த்த ஆரம்பிச்சோம். திடீரென ஒரு லேசான சப்தம். டொக் டொக் டொக். சப்தம் நின்று விட்டது. அடுத்த கேள்வி கேட்டார் நெல்சன் சார். விடையைச் சொல்ல கையை உயர்த்தி காட்ட வேண்டும். மீண்டும் அதே சப்தம் டொக் டொக் டொக். இப்படியே ஒரு பத்து கேள்விகள் ஆசிரியர் கேட்க திடீரென அவருக்கொரு சந்தேகம் வந்திடுச்சு. சரியா படிக்காத பசங்க எல்லாம் கூட கரெக்ட்டா பதில் சொல்லுறதுதான் காரணம்.

நெல்சன் சார் நாற்காலியை விட்டு வகுப்பறையில் சுற்றிக்கொண்டு தேர்வை தொடர்ந்தார். ஆனாலும் முன்பிருந்த அளவிற்கு டொக் டொக் டொக் சப்தம் வராட்டியும் லேசாக வந்தது- அதுவும் எனது மேஜையில் இருந்து. நெல்சன் சார் பக்கத்தில் வந்ததை நான் கவனிக்கவில்லை. திடீரென என்னை எழுந்திரிக்கச் சொல்லி தன்னுடன் அழைத்துச் சென்று தனது பக்கத்தில் தரையில் உட்கார வைத்துக்கொண்டார். அப்போதே விஷயம் புரிந்து விட்டது. செத்தோம்டா சேகருனு போய் உட்காந்தேன்.

சார் அடுத்த கேள்விய கேட்க பலரும் தப்பா பதில் காட்டினார்கள். நல்லா படிக்கிற நாலஞ்சு பேரும் விடை எத்தனாவது ஆப்ஷனில் இருக்கிறது என்பதை மேசையை லேசாக விரலால் தட்டி சைகை செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

’நாந்தான் எல்லாத்துக்கும் காரணம்’னு சார் முடிவுக்கு வந்திட்டார்

அப்பறம் என்ன, நெல்சன் சார் வேற பீட்டி வாத்தியாராச்சே மொத்திய மொத்த கதையையும் இங்க சொல்லவா வேனும்.

நண்பர்களுக்கு உதவி செஞ்சு ஹீரோ ஆகலாம்னு நினைச்ச எனக்கு அந்த பரிட்சையில் ஜீரோ மதிப்பெண்கள் வாங்கியதுதான் மிச்சம்:)))

Saturday, July 23, 2016

மகிழ்ச்சி தராத வெற்றி- கபாலிபடத்தை பார்ப்பதற்கு முன்பிருந்த மன நிலையை சற்று விளக்கிவிடுகிறேன்.
சிறுவயதில் இருந்தே ரஜினியோட தீவிர ரசிகன் நான்.
இன்னது தான் சரியாக காரணம் சொல்லத் தெரியல. தவறாமல் எல்லா ரஜினி படத்தையும் தியேட்டரில் தான் பார்ப்பேன். அப்பேர் பட்ட நான் லிங்கா படத்தை ஒரு சுப
தினத்தில் கணினியில்தான் பார்த்தேன். அதுவும் படம் வெளி வந்த ரெண்டு மூணு மாசத்துக்கு அப்பரம்தான்.
படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தான் பிடிச்சிருந்தது தவிர உண்மை ஒருநாள் வெல்லும் பாடலும், ‘ஒருநாள் சாப்பிடாம இருந்தால் பிரச்சனையே இல்ல. ஆனா
ஒருநாளும் சாப்பிடாம இருந்தாதான் பிரச்சனையே’நு வரும் வசனம் மட்டுமே மனதில் நின்றது. எந்த எதிர்பார்ப்பு இல்லாம பார்த்ததால் என்னவோ தாராளமா
ஒருதடவை படத்தை தலைவருக்காக பார்க்கலாம்ன்னு தோணிச்சு. அவ்வளவுதான்.
ஓவர்டூ கபாலி....
ரஜினியை இயக்குவது ரஞ்சித் என தெரிந்ததில் இருந்து கபாலி பற்றிய எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமா துளிர் விட ஆரம்பிச்சது. சின்னதா ஒரு பயமும்கூடவே.
தொடர்ந்து இரண்டு தோல்வி படங்கள் தலைவருக்கு. மெட்ராஸ் ஹார்ட் டிஸ்க்ல இருந்தாலும் பத்து நிமிஷத்துக்கு மேல பார்க்க பொறும இல்ல. ‘அப்பேர் பட்ட
இயக்குனர் எப்படி...’
ட்ரைலர் செமையா வந்திருந்தாலும் சாங்ஸ் விசயத்துக்கு வந்ததும் ஏமாற்றம்தான். ரகுமான் இல்லாததே ஏமாற்றத்திற்கு மிக முக்கிய காரணம்.
படம் வெளியிடும் தினம் உறுதி ஆவதற்கு முன்பே இம்முறை முதல்நாள் இல்லை முதல் ஒரு வாரம் கூட பார்க்க கூடாதுனுதான் முடிவு செய்திருந்தேன். தம்பி போன்
செய்து தமிழ் வர்சன்ல கபாலி பார்க்க ரெண்டு டிக்கெட் வாங்க சொல்லி இருந்தான். ’என்ன தெலுங்குல பார்க்கலியா?’ ‘தலைவர் டா தமிழ் டா’னு அழகான
அவனது தமிழ் (தோழா நாகார்ஜுனா பேச்சை நினைவு படுத்தியது) சொல்லி என்னை உசுப்பேத்தி விட்டான். பேசாம நாமளும் படத்தை பார்த்திடுவோமே யோசிக்க
ஆரம்பிச்சேன். வியாழன் இரவில் இருந்தே வரத்துவங்கிய படத்தோட
விமர்சனங்கள் ஒருவித நம்பிக்கை கொடுத்தது. தேங்க்ஸ் டூ மணிமாறன் சார்.
நேற்று காலைல சில பதிவர்கள் கொடுத்த நம்பிக்கையாலும் நிம்மதியா மூச்ச விட்டு எடுத்த சபதத்தை மீறும் விதமா கடைசியா இன்று காலை படத்தை
தமிழில்-திருப்பதியில் பார்த்தேன்:)
திருப்பதியில ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே தமிழில் படம் என்பதால் பதினொன்னரைக்குதான் காட்சி என்றாலும் பத்தரைக்கெல்லாம் தியேட்டருக்குச்
சென்றுவிட்டோம். டிக்கெட் கொடுக்கும் கவுண்டரில் கூட்டமே இல்ல. டிக்கெட் வாங்கிக்கொண்டு சிறிது நேரம் காத்திருந்தோம்.
அரங்கில் நுழைந்ததில் இருந்து படம் ஆரம்பிக்கும் நொடி வரையிலும் தனி பட்ட முறையில் எனக்கு ’எப்படி படம் இருக்குமோ’ சின்னதா ஓரத்தில் ஒருவித-பயம்.
என்னதான் மத்தவுங்க நல்லா இருக்குனு சொன்னாலும் எனக்கென ஒரு ரசனை இருக்கும் இல்லையா? அதனால படத்தை சந்தேக கண்ணோட்டத்தோடுதான் பார்க்க
ஆரம்பிச்சேன். படம் ஆரம்பிச்சதுல இருந்து சீக்கிரம் படத்தோடு ஒன்றிவிட முடிந்தது. கதை ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் எதிர்பாராத சில ட்விஸ்ட்டுக்கள்
ஆங்காங்கே இருப்பதால் இயல்பா படத்தை பார்க்க முடிஞ்சது.
ஆரம்பத்துல ஒரு இருவது நிமிசம் அரங்கு முழுவதும் விசில்/ஆட்டம்/கொண்டாட்டம் எல்லாம். அதன் பிறகு அரங்கு முழுவது அமைதி. பிறகு படம் என்னவோ மெதுவா
போறதா ஒரு ஃபீல். சில சமயம் நம்மை சோதிக்கிற ரேஞ்சுக்கு கொண்டு போய் விடுவாங்களோனு ஒரு பயம். அவ்வப்போது தலைவர் பேசும் வசனங்கள் நிமிர்ந்து
உட்கார வைக்கிறது.
 இடைவெளிக்கு முன்பு வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காதது.
இரண்டாம் பாதி முதல் பகுதி போல் சோதிக்கல. படத்தில் இரண்டாம் பாதிதான் எனக்கு பிடிச்சிருக்கு. கேங்ஸ்டர்கதையில ஃபேமலி செண்டிமெண்ட் போஷம்
அருமை. சொல்லப்போனால் அது மட்டுமே என்னை படத்தில் அசுவாசப் படுத்தியது.
படத்தில் ரஜினி பேச ஆரம்பிக்கும் முதல் வசனமான ‘மகிழ்ச்சி’ படத்தில் ஆங்காங்கே மீண்டும் மீண்டும் சொல்லுவது அழகு. (அதுவே சில தினங்களுக்கு ஒருவித
ட்ரெண்டாக மாறப்போவது நிச்சயம்)
பாடல்கள்ல சொதப்பினாலும் சந்தோஷ் பின்னணி இசை ஏவரேஜ்.
***
வீட்டுக்கு வந்ததும் எப்போதும் போல் அம்மா:
‘படம் எப்படி?’னு கேட்டாங்க
 சூப்பராவும் இல்ல சுமாரான படமாவும் தெரியல. நடு நிலையா இருக்குனு சோகத்தோடு சொன்னேன்.
***
 ஏனோ எனக்கு மட்டும்தான் இப்படியாத் தெரியல. மொத்தத்தில் கொண்டாட்டம்/மகிழ்ச்சி தராத வெற்றியா
தலைவரோட கபாலி இருக்கபோவதா எனக்கு தோணுது.
---
 உங்களுக்கு எப்படி?

Wednesday, July 20, 2016

சீரடி சாயி பாபா -சொன்னதும்-மக்கள் செய்வதும்!பூமியில் அவதார புருஷர்களது படையெடுப்பு சாயி பாபா பிறகு சத்திய சாயி பாபானு ஒருத்தர் ஆந்திராவில் புட்டபர்த்தியில் முளைத்தார். அதைத் தொடர்ந்து ஜக்கியாம்-கல்கியாம் ஒவ்வொருத்தரா தன்னை ஒரு அவதார புருஷனாக சிலரிடம் கூவச் சொல்லி ஊர் உலகத்த ஏமாத்திகிட்டு வர்ராய்ங்க.
இது சாமியார்களைப் பற்றி பதிவு என்றாலே (நன்றி-டாக்டர் நம்பள்கி) போலிச் சாமியார்கள் என்றுதான் எழுத கை பரபரத்தது‘ சாமியார் என்றாலே போலிதான்’ என்றும் (டாக்டரது கருத்து நினைவு வந்தது). கிடையாது என்பதால் சாயி பாபா விஷயத்துக்கு வருவோம்.
ஆமாம் என்ன திடீரென பாபாவை பத்தி எழுத காரணம்! நேத்தைக்கு குரு பெளர்ணமி.
பெளர்ணமி தெரியும் மாசம் மாசம் வானில் ஏற்படும்! அது என்ன குரு பெளர்ணமி? சாயி பாபா அவரோட பிறந்தநாளை அப்படிச் சொல்கிறார்களாம்!

கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னாடியே குரு பெளர்ணமி தினம் அன்று பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்ய விருப்பபட்டவர்கள் சந்தா கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்கிற அறிவிப்பு கோயிலில் இருந்ததா அம்மா சொல்லி தெரிய வந்தது. நேற்றைய தினம் அதிகாலையில் இருந்து தொடர்ந்து எத்தனை லிட்டர்கள் அபிஷேகம் பெயரில் பாலை வீண் செய்திருப்பார்களோ நினைத்து பார்க்கவே மனம் கனக்கிறது.
பக்தியோடு/நம்பிக்கையோடு இருந்த ஒரு காலத்தில் வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்த பாபா கோயிலுக்கு பல முறை சென்றிருக்கிறேன். கோயிலுக்கு நுழை வாசலில் இருபுறமும் பிச்சை எடுப்பவர்கள் பார்த்திருக்கிறேன். அதில் 80 முதல் 90 சதவீதம் பேர் வரை பிச்சை எடுப்பதே தொழிலாக வைத்திருப்பவர்கள் இருந்தாலும் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட வயதானவர்கள், மாற்று திரனாளிகள் என தங்களது தேவைக்காக பிச்சை எடுப்பவர்கள் இருப்பார்கள். இப்போ கூட அது மாதிரி யாராவது ஒருத்தராச்சும் இருக்கலாம். இருந்தாலும் அவருக்கு ஒரு டம்ளர் பாலையாச்சும் குடிக்க கொடுக்கலாமே!
 கொடுத்திருக்க மாட்டார்களே!

பாபா என்ன சொன்னார்? சக மனிதரை நேசி, உதவி செய், இத்யாதி இத்யாதி! ஆனால் கோயிலில் நடப்பதோ பாபா சொன்னதற்கு முற்றிலும் நேர் எதிராக நடக்கிறது! பஜனைகளும், பாபாவின் புகழையும்தான் பரப்புகிறார்கள்! பாபாவின் தத்துவங்கள்/போதனைகளை ஒரு சாமானிய பக்தர் எளிதில் புரியும் படி எடுத்துச் சொல்லலாமே? அவர் மனித நேயத்தைதான் பிரதானமாக கொண்டு போதனைகள் செய்து வந்திருக்கிறார். அதை ஊர் ஊராக பரப்புவதை விட்டுட்டு தெருக்குத் தெரு பாபா கோயில் எழுப்புவது-ஃபேஷனாகிடுச்சு! எனக்கு தெரிந்து இங்கு ஒரு மூத்த அரசியல் வாதி ஒருத்தர் சுமார் ஐந்து கோடிச் செலவில் சீரடியில் இருக்கும் கோயிலை விடவும் பிரம்மாண்டமான கோயில் ஒன்றை கட்டி இருக்கிறார். (இடம் சொன்னா அதுவே அவர்களுக்கு ஓசி விளம்பரம் ஆகிடும் என்பதால் சொல்லல).

சாயி பக்தர்கள் தமிழகத்தை விடவும் ஆந்திராவில்தான் அதிகம். தொன்னூருக்கு பிறகு பெற்றோர்கள் ஆண்-பெண் பேதமின்றி தங்களது பிள்ளைகளுக்கு சாயி பெயர் சூட்ட ஆரம்பித்தார்கள். கடந்த பத்தாண்டுகளில் சீரடிக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்கிற ஆசை பலரது மனதிலும் துளிர் விட ஆரம்பித்தது. அவ்வளவுதான் இதை தங்களுக்கு சாதகமாக கொண்டு பல தனியார் ஏஜன்சிக்கள் சீரடி யாத்திரை சாமானியனிடம் கொண்டு சேர்த்தனர்.
எந்த ஒரு வசதிகளும் இல்லாத சீரடி கிராமம் தற்போது சகல வசதிகளோடு நகரமாக மாறி விட்டது. மிகப்பெரிய அளவில் பாபாவை வைத்து அங்கு தொழில் நடப்பதால் பிழைப்பை நடத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. போகட்டும் அப்படியாவது பலருக்கு பிழைக்க ஒரு தொழில் கிடைச்சதா வெச்சுக்கலாம்.

எனக்கு பாபாவிடம் பிடிச்சதே இந்து-முஸ்லீம் ஒற்றுமையாக சேர்ந்திருக்கனும் என்கிற தமது உன்னத எண்ணத்தை செயல் படுத்த அவர் எடுத்த முயற்சிகள். தவிரவும் அவர் சக மனிதரை நேசிக்க வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் உயரிய கருத்துக்களால் கவரபட்டேன்.

ஒரு முறை அப்பா என்னிடம் ‘நம்ம ஊருலயும் ஒரு துறவி இருந்திருக்கிறார். அவரை யாரும் கண்டுக்காததால அவர பத்தி நம்ம ஊர்ல இருக்குரவுங்களுக்கே தெரியல’ சொன்னார். யோசித்து பார்த்தால் ஒரு உண்மை புரிந்தது. பாபாவின் சீடர்கள் அக்காலத்தில் பெரும் செல்வந்தர்களாக இருந்ததால் எளிதில் அவரது புகழ் சீரடியை விட்டு மாவட்டம், மானிலம் கடந்து உலகெங்கிலும் பரவத் துவங்கியது.

அவரை ஒரு பிராண்டாக மாற்றியவர்கள் அவரை ஒரு அவதார புருஷர் ரேஞ்சில் ஏற்றி தற்போது பாபா பெயரில் நடக்கும் அனைத்து கூத்துக்களுக்கும் அடிதளம் அமைத்திருக்கிறார்கள்.
அன்று புத்தருக்கு நடந்தது இன்று பாபாவிற்கும் நடக்கிறது! புத்தரும்-பாபாவும் சாதாரண மனிதர்கள்! அவர்களது போதனைகளை மக்களிடம் சேர்க்கச் சொன்னால் கோயில் கட்டி பணத்தை சம்பாதிக்கிறார்கள் இன்று பலர்!
அதை நம்பி பலர் ஏமாறுகிரார்கள்!
மக்கள் ஏமாறும்போது கஷ்டமாக இருக்கிறது!

எது எப்படியோ எதோ பாபாவ பத்தி எழுதனும்னு தோணிச்சு எழுதிட்டேன்.
---
 நன்றீ.

Monday, July 18, 2016

எத்தனை எண்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறது?நேற்று விடுமுறை என்பதால் அப்பா வீட்டிலிருப்பாரென கருதி அவரைத் தேடி ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு அவசர வேலையின் காரணமாக வெளியே சென்றிருப்பதாக அம்மா சொன்னதும் அவரோடு அவசரமாக பேச வேண்டும் எனச் சொன்னார். ‘அவருடைய அலைபேசி எண் கொடுக்குறீங்களா?’னு அம்மாவிடம் கேட்டிருக்கிறார். அம்மாவோ எண்ணை என்னைச் சொல்லச் சொன்னார்.
அப்பாவோட மொபைல் நம்பர்தானே ‘இதோ சொல்லுறேன்’ சொல்லி ஒவ்வொரு எண்ணாக சொல்ல ஆரம்பித்தேன். ’எட்டு, ஏழு, எட்ட்ட்ட்டு’, இல்ல இல்ல திரும்பவும் சொல்லுறேன் சொல்லி வெளியே எனது பதற்றத்தை காட்டிக்காம இம்முறை நிருத்தி நிதானமா யோசித்து எண்ணை சொல்லி முடித்தேன். வீட்டிற்கு வந்திருந்தவர் நான் சொன்னதை எழுதிக்கொண்டு ஒரு முறை சரி பார்த்து விட்டு சென்று விட்டார். அதன் பிறகு எனக்குதான் ஒரே யோசனை ஆரம்பிக்க துவங்கியது.

’போயும் போயும் அப்பாவோட நம்பர சில நொடிகள் மறந்து போய்/குழப்பத்தில் சொல்ல ஆரம்பிச்சேனே’ என்கிற உறுத்தல் சிறிது நேரம் என்னை யோசிக்கச் செய்தது. தற்போது அப்பா பயன்படுத்தும் எண் ஒன்றும் புதுசு கிடையாது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேல பயன்படுத்துகிறார்.
‘எனக்கு என்னவோ ஆச்சுடோய்’னு ஒரு சின்ன பரிட்சை எனக்கு நானே செய்துக்கொண்டு பார்த்தேன்.
அதுக்கு முன்னாடி......

நான் ஆறாவது படிக்கும்போதுதான் வீட்டில் முதல் கைபேசி வந்த நினைவு. அப்போது குடும்பத்தில் ஒரு கைப்பேசி இருந்தாலே பெரிய விஷயம். தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என எனக்கு தெரிந்தவர்களது எண்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பேன். நடு இரவில் கேட்டா கூட கிடுகிடுனு சொல்லிடுவேன். அதெல்லாம் பன்னிரெண்டாவது முடிக்கிற வரைக்கும் சொல்லலாம். கல்லூரிக்கு வந்ததும் கைப்பேசி பயன்படுத்த ஆரம்பிச்சேன். நிலமை ஒன்னும் அப்போ மோசமொன்னும் ஆகல. புதிய எண் யாராவது சொன்னாலும் கைபேசியில் பதிவு செய்து விட்டு அப்படியே மூளையிலும் போட்டு வைப்பேன்.
அது எப்போதில் இருந்து சரியாக தெரியல படிபடியாக சோம்பேறி பட்டோ இல்ல வேறு என்ன காரணமோ தெரியல நேற்று வரையிலும் புதிய எண் யாராவது சொன்னால் நேரடியாக கைபேசியில் பதிந்து விட்டுவிடுவேன்.
இன்றைய கால கட்டத்தில் நமக்கு தெரிந்த கைபேசி எண்களையெல்லாம் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றதுனு நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான எண்கள்; அதில் சிலர் அடிக்கடி மாற்றுபவர்கள்; அப்படி இருக்க அனைத்து எண்களையும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றது.
ஆனாலும் தற்போதையச் சூழலில் பலரும் தங்களது குடும்பத்தாருடைய எண்களை கூட நினைவில் வைக்க முடியாத அவல நிலைக்கு வந்து விட்டோம்.
அப்பா கைபேசி எண்ணை சொல்ல ஆரம்பிச்சதும் ஏற்பட்ட தடுமாற்றம் குற்ற உணர்ச்சி காரணமாக எனக்கு நானே ஒரு பரிட்சைசெய்துக்கொண்டேன் சொன்னேன் இல்லயா?
அது என்னன்னா தற்போது எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கிறதென எண்ணிப் பார்த்தேன். சொன்னால் வெட்கக்கேடு
***
 நீங்களும் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு ‘உங்களுக்கு எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கு’னு உங்களை நீங்கள் சோதித்து பாருங்கள்.
--
 நன்றி.

Wednesday, April 13, 2016

உடுப்பி

சமீபத்தில், 25 - 03- 2016 மற்றும் 26 - 03 - 2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடரின் இறுதிப் பகுதி இது.

25-03-2016 வெள்ளிக்கிழமை குருவாயூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டபோது நேரம் இரவு எட்டு கூட ஆகவில்லை. குருவாயூரில் பார்த்த புன்னத்தூர் கோட்டை யானை காப்பகத்தையும், கோவில் அனுபவத்தையும் அசைபோட்டுக்கொண்டு பேருந்தில் திரிசூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். பேருந்து பல நிறுத்தங்களில் நின்று நின்றுச் சென்றாலும் இரவு எட்டரைக்கெல்லாம் இறக்கி விட்டார்கள். பேருந்தை விட்டு இறங்கியதும் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் இருந்ததால் அங்கே இரவு உணவை முடித்துவிட்டு சற்றுத் தொலைவில் ஒரு கடையில் வகைவகையான சிப்ஸ், ஹல்வா விற்றுக்கொண்டிருந்தார்கள். கேரலாவிற்கு வந்ததற்கு நினைவாக சிலவற்றை வாங்கிக்கொண்டு ரையில் நிலையத்திற்குள் நடக்க ஆரம்பித்தோம்.

மாலையில் யானைகள் காப்பகத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்போது பயணச் சீட்டு உறுதிசெய்யப்பட்ட தகவலோடு தொடர்வண்டி பெட்டி மற்றும் படுக்கை எண் கைப்பேசிக்கு வந்திருந்தது. இருபது நிமிடங்கள் தாமதமாகத்தான் உடுப்பி வரை நாங்கள் பயணிக்க வேண்டிய எர்ணாகுளம்- ஓகா தொடர்வண்டி வந்தது. ரயிலில் ஏறியதும் முதல் வேலையாக அதிகாலை 04:30க்கு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்துக்கொண்டேன். அதிகாலையில் அன்று விழித்துக்கொண்டதாலும், நாள் முழுவதும் மேற்கொண்ட பயணத்தால் களைப்பில் ரயிலில் படுத்ததும் உறங்கிவிட்டேன். சொர்னூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக பயணித்த எங்கள் ரயில் மறுநாள் விடியற்காலை அலாரம் அடிப்பதற்குள் தூக்கம் கலைந்தது எனக்கு. சற்று நேரத்தில் மங்களூரும் வந்து விட்டது. கொங்கண் தரிசனத்திற்கு உடனடியாக என்னை ஆயத்தம் செய்துக்கொண்டேன்.

மங்களுர்-மும்பையை இணைக்கும் இருப்பு பாதைக்கு கொங்கண் தொடர்வண்டிப் பாதை என்று பெயர். இந்த தடத்தில் ஒருமுறையாவது பகல் நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு உண்டு. இந்த நொடி வரையில் அந்த ஆசை நிறைவேறவில்லை என்றாலும், மங்களுர்-உடுப்பி இடையிலான 80கிமி தொலைவிற்காவது கொங்கண் பாதையை பார்க்க இருக்கும் ஆர்வத்தில்தான் சீக்கிரம் எழுந்திரித்துவிட்டேன்.

காலை ஐந்து மணிக்கு மங்களுர்-சந்திப்பு நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட பத்துநிமிடத்திற்குள் நீண்டதொரு குகை வழியாகச் சென்றது. எப்படியும் குரைந்தது இரண்டு நிமிடமாவது குகைக்குள் பயணித்திருப்போம். அதன் பிறகு சிரியது-பெரியதுமாக எதாவது ஓர் இரு குகைகள் வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். குகைகள் ஏதும் தென்படவில்லை தவிர- இருபுறமும் மலைகளை குடைந்து பாதை அமைத்ததால் உடுப்பி வரையிலும் மலைகளுக்கிடையே பயணம் மேற்கொண்டோம். அந்த அனுபவத்திற்கு பிறகு கொங்கண் பயணத்தின்மீதான ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது.

காலை ஆரறை மணிக்கு உடுப்பி நிறுத்தத்தில் இறங்கி, தொடர்வண்டி நிலையத்திலிருந்த காத்திருப்பு அறையில் அன்றைய தினம் சுற்றிப்பார்க்க தயார் ஆக ஆரம்பித்தோம். பயணிகள் கூட்டம் இல்லை. குழியல் அறை-கழிப்பரை இரண்டும் அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள். சுமார் எட்டரை அளவில் அனைவரும் தயாராகிவிட ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தோம். உடுப்பி ரயில் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு சுமார் 4கிமி தொலைவு இருக்கலாம். அந்தச் சமயம் பேருந்து ஏதும் வராததால் ஆட்டோவில் செல்ல பரிந்துரைத்தார்கள். மூன்று நபர்கள் பயணிக்க ருபா எழுபது வசூலிக்கிறார்கள். பத்து பதினைந்து நிமிடத்திற்குள் ஸ்ரீ கிருஷ்ணா மடத்துக்கு அருகில் நம்மை இறக்கி விடுகிறார்கள்.

வெளியில் இருந்து மடத்துக்கு உள்ளே செல்ல வரிசையில்தான் போக வேண்டும். கேரள கோயில்களைப்போன்று இங்கும் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்தான் சாமியை தரிசிக்க செல்லவேண்டும் என்கிறார்கள். நாங்கள் சென்ற சமயம் கூட்டம் இல்லாததால் சீக்கிரம் மடத்திற்குள் நுழைந்தோம். அடுத்த ஒரு சில நிமிடத்திற்குள் சன்னல் ஒன்றைக்காட்டி க்ரிஷ்ணரை பார்க்கச் சொன்னார்கள். உடுப்பியில் சன்னல் வழியாகத்தான் குட்டி க்ரிஷ்ணரை பார்க்க முடியும். உள்ளே எட்டிப் பார்ப்பதற்குள் நொடிப்பொழுதில் அடுத்தவர் பார்க்க நம்மை நகரச் சொல்கிறார்கள். அடுத்ததாக மடத்திற்குள் இருந்த வேறு சில இடங்களைப் பார்த்துவிட்டு கடைசியாக மடத்திற்குள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

உடுப்பி போனா அன்னதானம் மிஸ் பண்ணாம டேஸ்ட் பண்ணிவான்னு நண்பர்கள் சொல்லிருந்தாலும் வெளியெ வந்தபோது நேரம் பதினொன்று தான் ஆகி இருந்தது. மதியம் பன்னிரெண்டுக்குள்தான் அன்னதானம் ஆரம்பிப்பார்கள் என்பதால் உடுப்பியில் கிடைத்த நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்பதால் மடத்திற்கு வெளியே ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு. அடுத்ததாக உடுப்பியில் புகழ் பெற்ற மால்பே கடற்கரைக்குச் செல்ல உடுப்பி பேருந்து நிலையத்திற்கு வந்தோம். கிருஷ்ணா மடத்துக்கு பத்து நிமிட நடை தூரத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மால்பேக்கு அடிக்கடி பேருந்து இருக்கிறது. 20 நிமிட பயணம் என்பதால் எப்படியும் 6 கிமிக்குள்தான் இருக்கும். பேருந்துக்கட்டணம்-11.

மதியம் பன்னிரெண்டு மணி அளவில் கொதிக்கும் வெயிலில் மால்பே கடற்கரையில் இறங்கினோம். காலில் செருப்பு இருந்ததால் தப்பித்தோம். கடற்கரை மணல் அவ்வளவு சூடு. மதியத்தில் இப்படிதான் இருக்கும் எனத் தெரிந்ததால் கடல் தண்ணில கால் நனைத்தால் எல்லாம் சரி ஆகிடும்ன்னு என்னை நான் சமாதானப்படுத்தி கொண்டு நண்பர்களோடு நடக்க ஆரம்பித்தேன். மதியம்+வெயில் என்பதால் கடற்கரையில் மக்கள் கூட்டம் இல்லை. ஆங்காங்கு உடுப்பி கோயிலுக்கு வந்தவர்கள்தான் தென்பட்டார்கள். மும்பைக்கு இரண்டுமுறை சென்றிருந்தாலும்அரபிக் கடலில் கால் நனைக்க முடியலியேஎன்கிற வருத்தம் எனக்குள் இருந்து வந்தது. இம்முறை உடுப்பி பயணத்தில் அந்த ஆசையை தீர்த்துக்கொண்டேன். அரபிக் கடல் அலைகள் கால்களை நனைத்துச் செல்ல வெப்பம் தணிந்திருந்தது.

சென்னையில் மெரினா, எலியட்ஸ், மகாபலிபுரம் என எந்த கடற்கரையையும் விட்டுவைக்கவில்லை. பல மணி நேரம் வங்கக்கடலில் குளித்திருக்கிறேன். பல நாட்களுக்கு பிறகு கடலைப் பார்ப்பதால் அரபிக் கடலில் குளிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சிறிது நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டு கடல் அலைகளில் கால்களை நனைத்து விட்டு மனலிற்கு வந்தோம்.

அருகில் இருக்கும் தீவிற்கு படகு சவாரி நடந்துக்கொண்டிருந்தது. தீவிற்கு சென்று-வர நபருக்கு 200. ஒவ்வொரு முறையும் 20 பேர் ஏறினால் கரையில் இருந்து புறப்படும் படகு இருபது நிமிடத்திற்குள் கடலில் பயணித்து குட்டித் தீவை அடைகிறது. தீவில் சுற்றிப் பார்க்க தென்னை மரங்களையும், பாறைகளையும் தவிர வேறு ஏதும் இல்லை. தெலுங்கு, ஹிந்தி என பலதரபட்ட மொழி பேசும் மக்கள் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் அந்த தீவில் கிடைத்த தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு சுற்றுவதை கவனித்தேன். நாங்களும் குட்டி மதிய உணவை அங்கே முடித்துக்கொண்டு படகில் கரைக்கு திரும்பி பேருந்தில் உடுப்பிக்கு சுமார் மூன்று மணி அளவில் வந்து விட்டோம்.

எங்களுக்கு திருப்பு பயணம் அன்று இரவு எட்டு மணிக்கு மங்களூருவில்தான் இரயில். உடுப்பியில் இருந்து மங்களூருக்குச் செல்ல அந்தச் சமயம் தொடர்வண்டி ஏதும் இல்லாததால் பேருந்தில் மங்களூரு செல்ல முடிவு செய்து பேருந்தில் ஏறினோம். உடுப்பி- மங்களூரு பயண கட்டணம் ருபாய் 55 ஒன்னரை மணி நேர பயணம். காலையில் இருந்து தொடர்ந்து நடந்ததால் அனைவரும் களைப்பால் பேருந்தில் தூங்கி எழுந்தோம். நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வர நடத்துனர் சொல்ல பேருந்தை விட்டு இறங்கினோம். சாலைக்கு எதிர்புரத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கவனித்தேன். அதிகாலையில் உடுப்பிக்கு இரயிலில் சென்றதால் மங்களூரு நகரத்தை பார்க்க முடியவில்லை. அகலமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், சாலையின் இரு புறமும் பெரிய பெரிய கட்டிடங்களென இரண்டாம் கட்ட நகரத்திற்கு தேவையான அனைத்துவித வசதிகளையும் உள்ளடக்கியதொரு நகரமாக மங்களூரு காட்சி அளித்தது.
பெங்கலூருக்கு அடுத்ததாக மங்களூரு கர்னாடகாவில் முக்கியமானதொரு நகரமாக இருக்கலாம் எனத் தோன்றியது. தமிழகத்தை விடவும் நிலப்பரப்பில் பெரிதாக கர்னாடக மாநிலம் இருந்தாலும் புவியியல் ரீதியாக 3 பிரிவுகளாக கர்னாடக மாநிலம் பிரிந்திருப்பதால் 300 கிலோ மீட்டருக்கு மட்டுமே கடற்கரை இருக்கிறது. அதில் மங்களூரு துறைமுகம் சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் இந்தியாவில் குறிப்பிடதக்க பங்கு வகிக்கிறது.

கொஞ்ச நேரம் மங்களூரு நகரை காலால் சுற்றிவிட்டு மங்களூரு மையத் தொடர்வண்டி நிலையத்திற்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்து விட்டோம். (கவனிக்க மங்களூரு சந்திப்பு நிலையம் வேறு, மங்களூரு மைய்ய ரயில் நிலையம் வேறு. இரண்டிற்கும் இடையே சுமார் 5கிமி தூரம் இருக்கும்.) திருப்பு பயணத்திற்கான மங்களூரு-காச்சிகூடா தொடர்வண்டி இரவு எட்டு மணிக்குதான் புறப்படும் என்பதால் அதுவரையிலும் குளிர்சாதன வசதிக்கொண்ட காத்திருப்பு அறையில் காத்திருந்து செல்வோம் என நுழைவு சீட்டு- ஒரு மணி நேரத்திற்கு நபருக்கு 15ருபாய் வாங்கி காத்திருப்பறைக்குள் கால்களுக்கு ஓய்வு கொடுத்தோம். இங்கும் குளியலறை-கழிப்பறை அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள். பலரும் அங்கு இருந்தவர்கள் சுற்றுலா வந்த பயணிகள் நாள் முழுவதும் சுற்றிய கசகசப்பை போக்க குளித்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆனதால் தொடர்வண்டி நிலைய கேண்டினுள் இரவு உணவை வாங்கிக்கொண்டு இரயிலில் ஏறினோம். நாகர்கோவிலில் இருந்து எங்களோடு திருசூரில் இணைந்துக்கொண்ட வேல்முருகனும் - அவனது மனைவியும் எங்களோடு பயணம் செய்து மறுநாள் பாலமுருகன் வீட்டில் (ஜோலார்பேட்டையில்) தங்கி திருநெல்வேலிக்குச் செல்லும்படி முன்பே திட்டம் வகுத்திருந்ததால் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்டர் தினத்தன்று காலை எட்டரைக்கு ஜோலார்பேட்டை நிலையத்தில் நண்பர்கள் அனைவரும் விடைப்பெற்றுவிட மீண்டும் தனி ஒருவனாக திருப்பதிக்கு அருகில் சுமார் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா நிறுத்தம் வரையிலும் அதே இரயிலில் பயனித்தேன். ***

பல நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு இரண்டு நாள் புதிதாக வெவ்வேறு இடங்களில் நண்பர்களோடு பயணித்த அனுபவம் மனதிற்கு ஒரு வித உற்சாகத்தை கொடுத்ததோடு அல்லாமல் எனக்குள் இருந்த சோர்வையும், சோம்பேறிதனத்தையும் போக்கி புதிய மனிதனாக உணர்ந்தேன் வீட்டிற்குள் நுழையும்போது!

***
 இத்தொடரை ஆரம்பத்தில் இருந்து பொறுமையாக வாசித்து கருத்துச் சொன்ன அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள். காயத்ரி அக்காவிற்கு எப்படிதான் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. பதிவுகள் ஏதும் எழுதாததால் ப்ளாக்கில் தூசிதட்டும் ஒரு முயற்சியாகதான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன்.
உடனுக்குடன் பிழைகளைத் திருத்தி பதிவு எழுதிக் கொடுத்து உற்சாகத்தோடு மேலும் தொடர ஊக்குவித்த அக்காவுக்கு மிக்க நன்றி நன்றி.

***
 விரைவில் வேறொரு பதிவில், வேறு ஒரு நாள் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

***
 அடிக்கடி பயணம் மேற்கொள்ளுங்கள். புத்துணர்வோடு என்றென்றும் இருங்கள்! 
 ***
 நன்றி.


Monday, April 11, 2016

குருவாயூர்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதி.இரண்டாம் பகுதி.

2011 அக்டோபர் முதல் வாரத்தில், புதுச்சேரி, திருச்சுராப்பள்ளி மற்றும் கோயம்பத்தூர் என இணையம் வாயிலாக அறிமுகமான நண்பர்களை நேரில் சந்திக்கச் சென்றபோது, கோயம்புத்தூர் நண்பன் பிரகாஷ் ‘சும்மா வீட்டுலயே இருந்தோம்ன்னா போர் அடிக்கும். வந்ததற்கு பாலக்காட்டிலுள்ள மலம்புழா அணையை பார்த்துவருவோம்’ எனச் சொல்லி அழைத்துச் சென்றான். கோயம்பத்தூர் -பாலக்காடு பேருந்தில் பயணித்து அங்கிருந்து 12கிமி தொலைவில் மழம்புழா அணை இருப்பதால் அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடித்துச் சென்றோம்.
ஆந்திராவில் நாங்கள் வசிப்பது ராயலசீமா பகுதி என்பதால், வரண்ட ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் பார்த்து சலித்துப்போன எனக்கு மலம்புழா அணையின் நீர்மட்டம், அணைக்கு வரும் நீர்வரத்தை பார்த்தபோது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நாங்கள் சென்றது விடுமுறை தினம் என்பதால் எங்களைப் போன்று பல சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அணைக்கு அருகில்-சற்று தொலைவில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப்வே அமைத்து ஒரு சிறந்த அனுபவத்தை நமக்குத் தருகிறார்கள். 2011ல் அப்போது நபருக்கு 40ருபாய் ரோப்வேயில் பயணிக்க கட்டணமாக வசூலித்ததாக நினைவு. தவிரவும் அருகில் பாம்புப் பண்ணை, மீன் பண்ணையை பார்த்த ஞாபகம். அன்று இரவே திருப்பதிக்கு புறப்பட இருந்ததால் மழம்புழா அணைக்கு டாட்டா சொல்லிவிட்டு நண்பனது வீட்டிற்கு வந்து விட்டோம்.
பிரகாஷ் காரணமாக தற்செயலாக எதிர்பாராவிதத்தில் எனது முதல் கேரள பயணம் அன்று ஆரம்பித்தது. அதன் பிறகு கால ஓட்டத்தில் இயந்திர தனமான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்டு கேரளாவையே மறந்துவிட்டேன். சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இதோ 2011க்கு பிறகு 2016ல் இரண்டாவது முறையாக கேரள மண்ணில் மீண்டும் காலடி வைக்கிறேன்.

திருப்பதியில் இருந்து திரிசூர் வரை பயணம் மேர்க்கோண்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ் சராசரியாக மணிக்கு 60கிமி வேகத்தில் பயனித்து பத்து மணி நேரத்தில் 603 கிமி தொலைவு கடந்து நேரத்தில் இரக்கி விட்டது. குருவாயூர் பயணத்தை பற்றி நவீணிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். சொன்னபடியே நாங்கள் இரயில் நிலையத்தில் இறங்கவும் நொடிப்பொழுதில் எனக்கு முன்பு தோன்றி ஆச்சர்யப்படுத்தினான். இத்துடன் இன்னும் இருவர் எங்களுடன் பயணத்தில் சேர்ந்து பயணிக்க இரயில் நிலைய காத்திருப்பு அறையில் காத்திருந்தார்கள். நாங்கள் இறங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நாகர்கோவிலில் இருந்து நாகர்கோயில்-மங்கலூர் பரசுராம் தொடர்வண்டியில் வந்திறங்கி காத்திருந்தார்கள் வேல் முருகனும்-அவனது மனைவியும்.
 பள்ளியில் வேல்முருகன் எனக்கு நாங்காண்டு சீணியர் என்பதால் அந்தச் சமயம் பரிச்சையம் அதன் பிறகு சுமார் 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்கிறோம்.
மதிய உணவு யாரும் சாப்பிடாததால் இரயில் நிலையத்தில் சாப்பிட்டுவிட்டு குருவாயூரை நோக்கி பயணிக்க முடிவு செய்தோம். ’திரிசூர் இரயில் நிறுத்தத்தில் இருந்து வெளியில் வந்த சில நிமிடங்களுக்குள் பேருந்து நிலையத்தை அடையலாம்’ சொல்லிருந்தார்கள். நாங்கள் பிரதான சாலையை அடையவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. சரியாக மதியம் 03:00 அளவில் பேருந்தில் ஏறினோம். இணையத்தில் சுமார் 30கிமி தொலைவு இருப்பதாக படித்தேன். எப்படியும் ‘35-ரூபாய் பேருந்துக் கட்டனம் இருக்கலாம் என யூகித்திருந்த எனக்கு நடத்துனரிடம் கட்டணம் எவ்வளவு கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. 45 முதல் 50 நிமிட பயணம்-25 கிமி இருக்கலாம். பேருந்துக் கட்டணம் 21ரூபாய்.

2011இல் புதுச் சேரியில் முதன்முதலாக பயணித்தபோது பேருந்து கட்டணம் என்னை ஆச்சர்யபடுத்தியது. அதே இம்முறை கேரளாவில். தொடர்ந்து 6 அல்லது 7 மலையாலப்பாடல்களை கேட்க முடிந்தது- பேருந்தில். இதில் தெலுங்கு மற்றும் தமிழில் கேட்ட இரண்டு பாடல்களை மலையாளத்தில் கேட்டேன். இசையை ரசித்துக்கொண்டே பயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை. குருவாயூர்வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

கடிகாரத்தில் மணி அப்போது மாலை நான்கைகூட தொடவில்லை. கோயில் சன்னதி மதியம் 12மணிக்கு சாத்தினால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் மீண்டும் திறக்கப்படும் என இணையத்தில் படித்ததால் அதற்குள்ளாக முதலில் அனைவரும் 3கிமி தொலைவில் இருக்கும் புன்னத்தூர் கோட்டை யானைகள் சரணாலயத்தை பார்த்து வர முடிவு செய்தோம். 10நிமிட ஆட்டோ பயணத்தின் பிறகு நாங்கள் யானை காப்பகத்தை அடைந்தோம். குருவாயூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இருக்கிறது. குருவாயூருக்கு நாங்கள் ஒதுக்கிய நேரம் குறைவாகவே இருந்ததால் எப்போது பேருந்து வரும் தெரியாததால் ஆட்டோவில் பயணித்தோம்.

சுமார் 18ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த யானை சரணாலயத்தில் சுற்றி வர நுழைவு கட்டணம் ஆக நபருக்கு ரூபாய் 5 வசூலிக்கிறார்கள். நுழைவாயுலுக்குள் நாம் நுழையவும் யானையின் மலம்-சாணம் வாசனை நமது நாசிக்குள் நுழைகிறது. சிறியது முதல் பெரியது வரை என வயதில் 60க்கும் மேலான யானைகளை இங்கு பராமரித்து வருகிறார்கள். கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் யானைகள்தான் இங்கு இருக்கும் பெரும்பாலானவை. அத்தனை யானைகளையும் ஒரே இடத்தில் ஒன்றாக பார்ப்பது புதிதாக இருந்தது. ஒரு சில யானைகள் எழுப்பும் சப்தத்தைக் கேட்கவும், அது செய்யும் சேஷ்ட்டைகளைப் பார்க்கவும் உள்ளுக்குள் கொஞ்சம் திகிலாகவும், ஒருவித த்ரில்லாகவும் இருந்தது!
 யானை காப்பக வளாகத்திற்குள் சுற்றிப் பார்த்த அரைமணி நேரம் அருமையாக இருந்தது. காப்பகத்தில் கிடைத்த அனுபவத்தை பற்றி சொல்ல நிறையவே இருக்கு. எழுதினால் பதிவு நீண்டுக்கொண்டே செல்வதால் குருவாயூர் சென்றால் தவறவிடாமல் ஒரு முறை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்.

ஐந்து மணிக்கெல்லாம் கோயில் பிரகாரத்திர்க்குள் வந்துவிட்டோம். குருவாயூர் போக வேண்டும் என முடிவு செய்ததும் இனையத்தில் தேவையான தகவகலை துலாவினால் கோயில் பிரகாரத்திற்குள் ஆண்கள் நுழைய வேஸ்ட்டியும், மேல் சட்டை இல்லாமலும் போக வேண்டும் என படித்தேன். இந்த வகையான சாம்ரதாயம் எனக்கு புதிதாக இருந்தது. அதற்கான ஏற்பாட்டோடு வந்ததால் உடனடியாக கோயில் சீருடைக்கு மாறிவிட்டோம் குழுவில் இருந்த 4ஆண்களும். சாமியை தரிசிக்க செல்லும் முன்பு கோயிலுக்கு இருக்கும் குளத்தில் நீராடிவிட்டு செல்ல வேண்டும் என்கிற பாரம்பரிய நம்பிக்கையின் படி குளத்தினுள் காலை நனைத்துவிட்டு சாமியை தரிசிக்க வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து செல்ல சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கு பிறகு கிரிஷ்ணரை தரிசிக்க முடிந்தது. திருப்பதியில் 'ஜருகண்டி’ சொல்வதுபோல் இங்கு மலயாலத்தில் எதோ நடை சொல்கிறார்கள். கருவறைக்குள் மூலவருக்கு முன்பு பல விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்தது.

நாங்கள் அனைவரும் இரவு 09:20க்கு திரிசூரில் இருந்து உடுப்பிச் செல்ல எர்ணாகுளம்-ஓகா தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் இரவு எட்டு மணிக்கெல்லாம் குருவாயூரை விட்டு வெளியேரவேண்டும் என திட்டமிட்டதால் சாமியை தரிசித்துவிட்டு அவசரமாக குழுவில் நண்பர்களது மனைவியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஷாப்பிங் செய்துவிட்டு பேருந்து நிலையத்தை அடைந்தோம். நவின் அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் மீண்டும் க்ரிஷ்ணரை தரிசித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி எங்களை பேருந்தில் ஏற்றிவிட்டு எங்களிடமிருந்து விடை பெற்றான். குருவாயூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டபோது நேரம் இரவு எட்டுகூட ஆகவில்லை. குருவாயூரில் பார்த்த புன்னத்தூர் கோட்டை யானை காப்பகத்தையும், கோவில் அனுபவத்தையும் அசைபோட்டுக்கொண்டு பேருந்தில் திரிசூரை நோக்கி பயணித்தோம்.
***
(தொடரும்)

Thursday, April 07, 2016

குருதேவ் எக்ஸ்பிரெஸ்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதியை வாசிக்க.


ஷாலிமரில் இருந்து நாகர்கோவில் வரை பயணிக்கும் வாராந்திர குருதேவ் எக்ஸ்பிரெஸ் ரயில் வாரத்தில் புதன்தோறும் இரவு பதினோரு மணிக்கு கொல்கத்தா நகரத்தில் இருக்கும் ஷாலிமர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்படும். கரக்பூர், புபனேஷ்வர், விஜயவாடா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளத்திற்குள் நுழைந்து பாலக்காடு, திரிசூர், எர்னாகுளம், செங்கனூர், திருவனந்தபுரம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு கடைசியாக நாகர்கோயில் இரயில் நிலையத்தை அடையும்.
25-03-16 வெள்ளிக்கிழமை திருப்பதியில் இருந்து குருவாயூர்க்குச் செல்ல திரிசூர் வரை இந்த குருதேவ் வண்டியில்தான் முன்பதிவு செய்திருந்தேன். முதலில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது. 23-03-2016 அன்று இந்த ரயில் ஷாலிமரில் புறப்படுவதால் புதன் கிழமை இரவே பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டதாக குறுந்தகவல் கைபேசிக்கு வந்துவிட்டது.

25-03-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு புறப்பட தயாராகிவிட்டேன். முந்தைய நாள் இரவே அம்மா சப்பாத்தி செய்து வைத்ததால் அதிகாலையில் பயனத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட நேரம் சரியாக இருந்தது. வீட்டில் இருந்து திருப்பதி ரயில் நிலையம் நடை தூரத்தில் இருந்தாலும் அதிகாலையில் தெருக்களில் நாய்கள் தொல்லை இருக்கும் என்பதால் தம்பியின் அறிவுரையின் படி பைக்கில் அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றிவிடுவதாகச் சொன்னான்.
எப்போதும் திருப்பதி வழியாக கடந்துச் செல்லும் வெளியூர் தொடர்வண்டிகள் முதல் தடத்தில் வந்து போகும் என எதிர்பார்த்து முதல் நடைமேடையில் காத்திருந்த எங்களுக்கு ஒலிபெருக்கியின் மூன்றாம் தடத்தில் குருதேவ் எக்ஸ்பிரெஸ் வரப்போவதாக அறிவிப்பைக் கேட்டு அவசரமாக ஓவர் ஹெட் ப்ரிட்ஜில் ஏரி மூன்றாம் தடத்தை அடைந்தோம். இந்திய ரயில்கள் எப்போதுதான் சரியான நேரத்தில் இயங்கி இருக்கிறது. அதிகாலை 3:25க்கு வர வேண்டிய ரயில் அன்று இருவது நிமிடங்கள் தாமதமாகத்தான் வந்தது. பெரும்பாலும் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள். என்னோடு ரயிலில் ஏறியவர்களோ பாலாஜியை தரிசித்துவிட்டு கேரளாவிற்குச் செல்லும் மக்கள்.

திருப்பதியை விட்டு புறப்படுவதற்கு முன்பாகவே மொழிப் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எளிதில் மலையாளம் புரிந்துக்கொள்ள முடியும் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அன்று புரிந்துக்கொண்டேன். எனக்கு எதிரில் மூன்று மலையாளீஸ் திருப்பதியில் ஏறினார்கள். ஒட்டுமொத்த பெட்டிக்கு கேட்கும் அளவிற்கு சப்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு எப்படி பத்து மணி நேரம் பயணிக்கப்போகிறேனோ! என எனக்கு ஒதுக்கப்பட்ட லோயர் ப்ரத்தில் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்க அந்த அதிகாலை ரயிலின் தாலாட்டில் முகத்தில் அடிக்கும் சில் என்ற காற்றில் உறங்கிவிட்டேன்.

திடீரென தூக்கம் கலய பார்த்தால் ரயில் எதோ நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தது. ச்சாயா விற்கும் ஒருவரிடம் கேட்டதற்கு காட்பாடி சொன்னார். ‘காட்பாடி வந்ததும் ஒரு மிஸ்கால் விடு, வீட்டிலிருந்து புறப்பட்டால் வண்டி ஜோலார்பேட்டை வருவதற்குள் ஸ்டேஷனுக்கு வர சரியா இருக்கும்’ன்னு பாலா சொல்லி இருந்ததால் அவனுக்கு நினைவு படுத்தினேன்.
காட்பாடியை விட்டு ரயில் புறப்பட்டது. அப்போது மணி காலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்ததால் எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எனக்கு மேலே மிடில் பர்த்தில் யாரும் இல்லாததால் உட்காந்துக்கொண்டேன்.
சென்னை-கோயம்பத்தூர் இரண்டு வழி இருப்புபாதை என்பதால் காட்பாடியில் இருந்து வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. நமது ரசனையை விஸ்தாரன படுத்திக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது. வேகமாகச் செல்லும் ரயில், தண்டவாளத்தில் இருந்து ரயில் ஓடும்போது எழும் சப்தம், பக்கத்தில் எதிர் திசையில் இருந்து வேகமாக ரயில் கடக்கும்போது கிடைக்கும் அனுபவம் எல்லாம் சன்னல் வழியே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அனுபவம் நீண்ட நாட்கள் கழித்து புதிதாக ஒரு வித உற்சாகத்தை தூண்டியது.

நேரத்திற்கு அன்று வண்டி ஜோலார்பேட்டை நிலையத்தை அடைந்தது. பாலாவும் நந்தினி அக்காவும் தங்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி உட்காந்துக்கொண்டதாகச் போனில் அழைத்துச் சொன்னான். ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலும் புறப்பட்டது. மீண்டும் அதே வேகம். சென்னை எழும்பூரில் இருந்து குமரி வரையிலும் இரண்டு வழி இருப்புப்பாதை போட்டால் நன்றாய் இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்தேன். திடிரென பாலா வந்து அருகில் உட்காந்தான். சிறிது நேரம் பேசியப்பிறகு பையை எடுத்துக்கொண்டு ’ நம்மளோட சீட்டுக்கு வா ‘ என்று அழைத்துச் சென்றான். நல்ல தூக்கத்தில் எதிரில் இருந்த மலயாலிஸ் இருந்தார்கள். ‘இங்கிருந்து தப்பித்தால் போதும் என நினைத்துக்கொண்டிருக்க பாலா நந்தினி அக்கா இருக்கும் இடத்திலோ பெங்காலி கூட்டம். பத்து நிமிடம் கூட இருக்காது நாங்கள் மூவரும் பேசத் தூவங்கியதும் பக்கத்தில் இருப்பவர்களது பேச்சு பெரிதாக தெரியவில்லை.

ஈரோடு நிலயத்தில் கழிப்பறைகள் சுத்திகரித்துச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து கழிப்பறைக்குச் சென்று வருவோம் என்று கொஞ்சம் நேரத்தில் சென்றால் உள்ளே நிற்க முடியவில்லை. அவ்வளவு நாற்றம். எவ்வளவு தூரம் ரயில் பயணம் அருமையானதோ அதே அளவிற்கு ரயில் கழிப்பறைகளை பயன்படுத்துவது கொடுமையானது. அந்த நொடி என்னுடைய கனவு பயண திட்டத்தில் ஒன்றான ’ஒரு முறை கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் வரையிலும் விவேக் எக்ஸ்பிரெஸ்-ல் பயணிக்க வேண்டும்’ என்கிற ஆசயை புதைத்துவிட்டேன். அரைநாள் பயணத்திற்கே இந்த கதி என்றால் மூன்று நாட்களுக்கு சொல்லவே வேண்டாம். பிறகு கொண்டு வந்த சப்பாத்தியை சாப்பிட எடுத்தால் ‘வெள்ளிக்கிழமை 12மணிக்கு மேலதான் சாப்பிடுவேன்’ன்னு நந்தினி அக்கா சொல்ல நானும் பாலாவும் சாப்பிட்டோம்.

காலை பதினொன்னரை அளவில் கோயம்பத்தூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். கோயம்பத்தூர் வரை இரண்டு முறை வந்திருக்கிறேன். இரண்டு முறையுமே இரவு நேரம் என்பதால் எதையும் பார்க்க முடியவில்லை. இம்முறை பகல் நேரம் என்பதால் சேலத்தில் இருந்து பாதையை ஒட்டியே வரும் கிழக்கு மலைக் குன்றுகள் பார்க்க முடிந்தது.
கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு இடையிலான பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே புகுந்து கேரளாவிற்குள் புகுந்தோம். நீண்ட தொலைவிற்கு தண்டவாளத்திற்கு இரு புறத்திலும் மலைகளாகத்தான் இருக்கிறது.
நாங்கள் பயணிப்பதற்கு முன்பே ’வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரம் ரயில் பயணம் ரொம்ப கஷ்டம்’ என்று சிலர் சொல்லிருந்தார்கள். பாலக்காடு வரையிலும் எதுவும் தெரியவில்லை. பகல் பன்னிரெண்டரைக்கு பாலக்காடை அடைந்தோம். அதன் பிறகு அனல் காற்று வண்டிக்குள் வீசத் துவங்கியது. ரயிலில் ஓடும் மின் விசிறியில் இருந்து வரும் காற்றோ ஏசீ கம்ப்ரசரில் இருந்து வரும் காற்றுப்போல் வெப்பமாக வீசிக்கொண்டிருந்தது.
’அடுத்த ஸ்டாப்பிங் திரிசூர்தான் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு உட்காந்திருந்தோம். திருப்பதியில் ரயில் ஏறும்போது இந்திய ரயில்வேயை நேரத்திற்கு வராதென விமர்சித்தாலும் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் ஈரோடு, கொயம்பத்தூர், பாலக்காடு என அனைத்து ரயில் நிலையத்திற்கும் சரியான நேரத்தில் வந்தது குருதேவ் எக்ஸ்பிரெஸ் . சரியாக மதியம் 1:45க்கு நாங்கள் இறங்க வேண்டிய திரிசூர்-ம் வந்து விட்டது.
 குருவாயூர் பயணத்தை பற்றிகல்லூரி நண்பன் நவீனிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். ரயிலை விட்டு நாங்கள் இறங்கியதும் நொடிப்பொழுதில் எங்களுக்கு முன்பு காட்சி அளித்தான். எங்களை இறக்கி விட்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ்-ம் நாகர்கோவிலை நோக்கி திரிசூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
 ***
தொடர்ச்சியை படிக்க நீங்களும் இன்று சென்று
 நாளை வாருங்கள்.
நன்றி.

Tuesday, April 05, 2016

நாத்திகன் கோவிலுக்குச் செல்வதா?!சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவு எழுத ஒரு உத்தேசம். எவ்வளவு தூரம் மனதில் பகிர நினைத்ததை பதிவில் எழுத முடியும் எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதால் தயக்கம்+தடுமாற்றத்தோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
***
அது ஃபிப்ரவரி மாதம் கடைசியில் இருக்கலாம். பள்ளி நண்பன் பாலமுருகனிடம் சுமார் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கைப்பேசியில் அழைத்துப் பேசினேன். பள்ளியில் எனக்கு 2 ஆண்டுகள் சீனியர்.
ஆனாலும் மூன்றாண்டுகள் முன்பு வரையிலும் கைப்பேசி வாயிலாக அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வோம். திருப்பதி கோவிலுக்கு வரும்போதெல்லாம் நிச்சயம் தகவல் தெரிவித்து விடுவான். திடீரென ஒரு நாள் அவனது கைப்பேசி இயங்காமல் போக, பல முறை அவனோடு பேச முயற்சிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய ஒரு கட்டத்தில் முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.
இந்த வருடம் ஃபிப்ரவரி மாத கடைசியில், ஒரு மாலை பொழுது, நேரம் நகராமல் இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் சமயத்தில் தற்செயலாக பாலமுருகனது எண்ணை கைப்பேசியில் அழைத்துப் பார்க்க முயற்சித்தேன். முதல் முயற்சியிலே அவனோடு பேச முடிந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பேசுவதால் கொஞ்சம் நேரம் இருவரும் பரஸ்பரம் விசாரித்துவிட்டு இருவருக்கும் பொதுவாக பிடித்த விடயங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்.

பள்ளியில் இருந்தே பெரும்பாலும் நாங்கள் பேசிக்கொண்டால் எங்கள் இருவரது உரையாடல்கள் தொடர்வண்டியோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும். படித்து முடித்ததும் இந்திய ரையில்வேத் துறையில் பணியில் சேர நினைத்து இறுதியில் வேலூர் மாவட்டத்தில் நாற்றம் பள்ளி என்னும் கிராமத்தில் அரசு ஆசிரியராக பணி புரிந்து வருகிறான். கல்லூரியில் படிக்கும்போதே சக வகுப்புத் தோழியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான். இப்போது இரு குழந்தைகளும் பிறந்ததாகச் சொன்னான்.

அடுத்த நாள் மீண்டும் இருவரும் பேசும்போது நடுவே உடுப்பி என்னும் பெயர் அடிப்பட்டது. அந்தப் பெயர் அவனுக்கு புதிதாக இருந்ததால் அந்த ஊரின் சிறப்பு என்னவென்று கேட்டான்.
அந்தச் சமயம் எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன். அது வரை உடுப்பி பெயரை கேள்விப்படாத அவன் அந்த ஊரையும், கோவிலையும் பார்க்கும் ஆர்வத்தில் நான் சொல்லி முடிப்பதற்குள் ’உடுப்பி கோயிலுக்கு கட்டாயம் செல்லவேண்டும்’ என்று அவன் சொன்னதுதான் தாமதம்.

2015 மே மாதத்தோடு எனக்கு கல்லூரி முடிந்து விட்டது. அதன் பிறகு வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. அக்டோபரில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கும், 2016 ஜனவரியில் கார்த்திக் அண்ணாவின் ஆரஞ்சு முட்டாய் புத்தக வெளியீட்டிற்கும் சென்னைக்கு ஒரு நாள் சென்றதுதான். 9 மாதங்கள் வீட்டில் அடைப்பட்டுதான் கிடந்தேன். இந்த இடைவெளி எனது வாழ்வில் ஒரு கொடுரமான தருணம் என்றுச் சொல்லலாம். தனிமை எவ்வளவு கொடுமையானதென்று  உணர்வுபூர்வமாக புரிந்துக்கொண்ட நாட்கள்.
 இப்போது வெளியில் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை நழுவ விடுவேனா என்ன?
எங்கள் இருவருக்கும் பயணத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் உடனடியாக உடுப்பி செல்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டோம்.

 திருப்பதியில் இருந்து சுமார் 950கிமி தூரத்தில் உடுப்பி கர்னாடக மாநிலத்தில் மேற்கு கடர்க்கரையோரம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேரடியாக உடுப்பிக்கு தொடர்வண்டி வசதி இல்லாததால் முதலில் மங்களூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பிக்கு போக முடிவு செய்தோம். மங்களூருவில் இருந்து உடுப்பி சுமார் 70 கிலோமீட்டர் வடக்கே உள்ளது.
வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிதோறும் காலை ஆறு மணிக்கு காச்சிகூடா (தெலுங்கானா மாநில தலை நகரில் இருக்கும் ஒரு தொடர் வண்டி நிலையம்) அங்கிருந்து ரயில் புறப்படும். அன்று மாலை ஐந்து மணிக்கு திருப்பதிக்கு அருகில் சுமார் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா தொடர்வண்டி நிலையத்தை அடையும். அங்கு நான் ரயிலில் ஏறினால் பாலமுருகன் ஜோலார்பேட்டை நிலையத்தில் ஏற முடிவு செய்தோம். அடுத்த நாள் காலை (புதன் மற்றும் சனி கிழமைகளில்) காலை பதினோரு மணிக்கு மங்களூருவை அடைவோம். அங்கிருந்து உடுப்பிக்கு சென்று கிருஷ்ணர்ஐ தரிசித்துவிட்டு மீண்டும் மங்களூரு திரும்பி ரயிலில் ஊர் திரும்புவதுதான் எங்களது ஆரம்பகட்ட திட்டம்.

இந்த திட்டத்தில் ஒரு சிக்கல் எங்களுக்கு இருந்தது. நாங்கள் உடுப்பிச் செல்லும் தினத்தன்றே இரவு எட்டு மணிக்கு ஊர் திரும்ப ரயில் இருந்ததால் இடைப்பட்ட சமயத்தில் உடுப்பிக்குச் சென்று வர முடியுமா என யோசித்தோம். இறுதியில் முதலில் குருவாயூருக்கு போவோம் அங்கிருந்து உடுப்பிக்குச் சென்று சனிக்கிழமை இரவு எட்டுமணிக்கு புறப்படும் மங்களூரு காச்சிகூடா வண்டியை பிடித்து ஊர் திரும்ப திட்டமிட்டோம்.

முதலில் குருவாயூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பி போக முடிவு செய்ததும் நண்பனது மனைவி நந்தினி அக்கா அவர்கள் குருவாயூர் பார்க்காததால் தானும் எங்களோடு வருவதாகச் சொன்னார். பிறகு பால முருகன் குடும்பத்தோடு பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பயணத்திற்கான அனைத்து தகவல்களும் சேகரித்து; சேகரித்த தகவலைக் கொண்டு திட்டமிட்டு; மார்ச் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விடுமுறை தினங்களில் குருவாயூர் மற்றும் உடுப்பி சென்று வர முடிவு செய்து தொடர்வண்டியில் முன்பதிவு செய்ய தயார் ஆனோம்.

வீட்டில் மேற்சொன்ன கோவில்களுக்கு செல்வதாக தெரிவித்தபோது ’நாத்திகன் கோயிலுக்குச் செல்வதா’ என்கிற பொதுப்படையான கேள்வி வீட்டில் கேட்டார்கள். ’கோவிலுக்குச் செல்வதைவிடவும் கேரளா மற்றும் கர்னாடகாவைவைப் பார்ப்பதில்தான் எனக்கு ஆர்வம்’ என்று எனது பதிலை அழுத்தம்திருத்தமாக சொன்னேன். வீட்டிலும் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. பயணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ததால் மொத்த பயணத்தில் 3 தொடர்வண்டியில் இரண்டில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
***
 நீங்களும் அடுத்த பகுதியை வாசிக்க ஒரு நாள் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு நாளை தொடர்கிறேன்.
நன்றி.

Wednesday, February 17, 2016

ஒரு பிள்ளை மட்டும்- சிறுகதைஞாயிறு மாலை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரண்டு காதுகளிலும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தனியாக வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக சின்மையியின் குரலுக்கு சொக்கிப்போய் நண்பன் படத்தில் வரும் அஸ்குலக்கா பாடலை கைபேசியில் ஓடவிட்டு திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். சூடாக கையில் எதோ படும் ஸ்பரிசத்தை உனர்ந்ததும்தான் கவனித்தேன். ஒரு கையில் தோசையும் மரு கையில் காபியையும் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தாள் எனதருமை மனைவி அனிதா.

எவ்வளவு நேரமா உங்கள கீழ வரச் சொல்லி கூப்பிட்டேன் தெரியுமா? கொஞ்சம் கூட அவளுக்கு பொருந்தாத சீரியஸ்னெஸ் முகத்தில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டு தனது கையில் இருக்கும் காபி கப்பை நான் வாங்க எனது கை அருகே கொண்டு வந்தாள்.

அது... பாட்ட கேட்டுகிட்டே இருந்தேனா... அப்படியே அந்த குரலுக்கு சொ.க்.கிப்சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டவளாய் போதும். போதும். சொல்லிக்கொண்டு வெளியே கேட்கா வண்ணம் எதையோ அவள் தனக்குள் முனங்க ஆரம்பித்தாள்.

“கொஞ்சம் சத்தமா முனங்கினா நாங்களும்தான் கேட்போம்ல” சொல்லிக்கொண்டு அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வர ஆரம்பிச்சது. மதிய உணவு முடிச்சதும் ஈவினிங் அனிதாவை வெளியே கூட்டிட்டு போறதாகச் சொல்லி இருந்தேன்.

எங்களோடது பெற்றோர் பார்த்து நிச்சயித்து ஒரு சுப தினத்தில் நடந்த திருமணம். இருவருக்கும் திருமணம் முடிந்ததில் இருந்து தனியாக வெளியே விருப்பமான இடத்திற்கு எங்கும் செல்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் யாராவது உறவினர்கள் விருந்திற்கு அழைத்து விடுவார்கள். காலையில் சென்று விட்டால் இரவுதான் வீடு திரும்ப முடியும். அலுவலகத்தில் ஞாயிறு மட்டும்தான் எனக்கு கிடைக்கும் ஒரே விடுமுறை நாள். நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று ஒரு சுற்று எல்லாரது வீடுகளுக்கும் சென்று முடிந்ததால் இன்றுதான் வீட்டில் பகல் நேரத்தில் இருக்க சமயம் கிடைத்தது.

மதிய உணவிற்கு பிறகு ஓய்வெடுக்கும்போதுதான் அனிதா ஏங்க சாயங்காலம் எங்காவது வெளியே கூட்டிட்டு போங்க” என்று  கேட்டிருந்தாள். சரிடா செல்லம்ன்னு அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கி விட்டேன். விழித்து பார்த்த போது கட்டிலில் அனிதாவை காணவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மாவும் அனிதாவும் சமையல் அறையில் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தார்கள். அனிதாவிடம் பார்வையாலே மொட்டை மாடிக்குப் போறதாச் சொல்லிவிட்டு ஒரு நடை போடுவோம்னு மொட்டை மாடிக்கு வந்திருந்தேன். மணி அப்போது ஐந்தைத்தான் தொட்டிருந்தது.

அதுக்குள்ளயும் ரெடி ஆயாச்சா அனி? நான் காஷுவலாக கேட்க மணி என்ன ஆகுது தெரியுமா” என்னையே திரும்ப கேட்கும் தொனியில் தனது கை கடிகாரத்தை காட்டினாள். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. “ஷட்” எனக்குள் சொல்லிக்கொண்டு சரி கொண்டு வந்ததை இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டு கீழ போவோம்”ன்னு சொல்லி மொட்டை மாடியின் ஒரு கார்னரில் போடப்பட்டிருந்த நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினேன். அனிதாவும் என்னை நோக்கி வர ஆரம்பித்தாள்.

நாங்கள் குடி இருக்கும் வீட்டைச் சுற்றிலும் வேப்ப மரம், அரச மரம், முருங்கை மரம் என பல வகையான மரங்கள் இருந்ததாலும், எங்களுக்கு மேலே வேப்ப மரத்தின் ஒரு பெரியக் கிளை படர்ந்திருந்ததாலும் அதன் அசைவில் கிடைக்கும் காற்றும், மாலைப் பொழுதிற்கான அந்த குளிர்ச்சியும், புது மனைவியின் அருகாமையும் அந்த சிட்சுவேஷன் எனக்கு ரம்மியமாக இருந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம் என்று தெரியவில்லை. வெளியில் செல்ல வேண்டும் என்கிற அனிதாவின் ஆசையை மறந்து இருவரும் வெகு நேரம் தனிமையில் மனதை விட்டு பேசிக்கொண்டிருந்தோம். இப்போது சூரியன் முற்றிலும் மறைந்து தம்பி சந்திரன் வானில் வந்திருந்தான்.

ஏங்க அத்தை கூப்பிடுர மாதிரி இருக்கு” சொல்லி அனிதா எங்களது பேச்சுக்கொரு கமா வைத்தாள். ஆமாம் இப்போது எனக்கும் கேட்டது. அது அம்மாவின் குரல்தான்.

சாப்பிடுவதற்கான நேரம் ஆயிடுச்சு இருவரையும் கீழே வரச் சொல்லதான் அந்த குரல். சரி நீ மொதல்ல போ பின்னாடியே நான் வர்ரேன்”னு சொல்லி அனிதாவை முதலில் கீழே அணுப்பினேன்.

சில நொடிகள் கண்களை சுற்றிலும் சுழலவிட்டேன். தெரு விளக்கு எரியவில்லை போலும். எங்கும் இருள் வியாபித்திருந்தது. அருகில் ஒரு மொட்டை மாடியில் மட்டும் சிறு வெளிச்சத்தில் அதை கவனித்தேன். பத்து வயது இருக்கும் ஒரு சிறுவன் தனியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.

இந்த நேரம் என்ன தம்பி தனியா கிரிக்கெட்” அவனுக்கு கேட்கும் படி குரலை கொஞ்சம் உயர்த்தி பேச்சை ஆரம்பித்தேன்.
நா எப்பவுமே தனியாதான் விளையாடுவேன்
ஏன் கூட பொறந்தவுங்க யாரும் இல்லையா? என்று கேட்க இப்போது மனைவி கீழே இருந்து கூப்பிட்டாள்.
இல்ல நான் மட்டும்தான்” என்று  சொன்னான். “தோ நிமிஷத்துல வர்ரேன்”னு மனைவியின் குரலுக்கு பதில் சொல்லி அந்த பையனிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.

புதிதாக ரவி அண்ணன் வீட்டிற்கு குடி வந்தவர்களாம். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாம். அம்மா வீட்டில்தான் இருக்கிறார். ஒரே பையன் என்பதால் பொருளாதார பிரச்சனை இல்லைபோலும், அவன் படிக்கும் பள்ளியின் பேரைக்கேட்டதும் புரிந்துக்கொண்டேன்.

“சரிடா வர ஞாயிற்றுக் கிழமை நானும் வர்ரேன் ரெண்டு பேரும் மைதானத்துல கிரிக்கெட் விளையாடலாம்” என்று  சொன்னேன். அந்த இருட்டிலும் அவனது முகம் மலருவதைக் கண்டேன்.

சரி பாய்டா தம்பி” சொல்ல அவன் கையை உயர்த்தி “பைய் அண்ணா” சொல்லி நொடிப் பொழுதில் உருவான அந்த புதிய உறவுக்கு கமா வைத்தேன்.

மாடி படிகளில் நான் இறங்கவும், நான் வராததால் அனிதாவே மேலே வர தயாராக இருந்தாள். எதுவும் பேசிக்கொள்ளாமல் கையை கழுவிக்கொண்டு நானும் அனிதாவும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடிக்க ஹாலில் அம்மாவோடு தொலைக்காட்சி பார்க்க ரெண்டு பேரும் உக்காந்தோம்.

அன்றைய நீயா நானாவில் இன்றையச் சூழலில் ஒரு குழந்தை வளர்ப்பு சிறந்ததா இரண்டு குழந்தை சிறந்ததா என்கிற தலைப்பில் கோபிநாத் ரெண்டு அணிகளிடமும் விவாதித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் இல்லாததால் அம்மாவிடமும் மனைவியிடம் சொல்லி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எனக்கு பின்னால் அனிதாவும் வந்துவிட்டாள்.
அனிதாதான் ஆரம்பித்தாள். நான் கீழ வந்ததுக்கப்பரம் நீங்க கீழ இறங்கி வர பத்து நிமிடம் பிடிச்சதே என்னங்க ஆச்சு? அதற்கு முன்னாடி நல்லாதானே மாடியில பேசிகிட்டிருந்தோம். பிறகு கிழ வரும்போது எதையோ பெருசா யோசிச்சுகிட்டு வர்ரதா உங்க கண்ணு காட்டியதே அத்தை இருப்பாங்க என்பதால் எதுவும் கேட்டுக்கல, என்னங்க ஆச்சு?’ என்று கேட்டாள்.

“அதுவா.. இல்லமா அ.னி.த்.தா நாம முடிவு செஞ்சோம்ல நமக்கு ஒரு குழந்தை பொண்ணோ இல்ல பையனோ போதும்ன்னு”
ம்ம் ஆமா அதுக்கென்ன இப்போ அனிதா கேட்க நான்  மொட்டை மாடியில் கண்ட காட்சியையும் எனது யோசனையும் ஜோடித்து அனிதாவிற்கு புரியும் படி சொன்னேன்.
“ஐய்யோ வேணாம்ங்க அப்போ தனிமை ரொம்ப கொடுமையானதுங்க. எல்லா சமயத்திலும் நாம அவுங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதுங்க. ரெண்டு பசங்களாக இருந்தா அதுங்க ரெண்டும் ஒன்னுக்கு இன்னொன்னு ஒத்தாசையா இருக்கும்” என்று  சொன்னாள்.

அவளது வார்த்தைகளை கேட்டதும் ஒரே சந்தோஷம். என்னைப்போலவே அவளும் கொஞ்சம் நேரத்துலயே புரிஞ்சுகிட்டா என்கிற சந்தோஷத்தில் இருவருக்கும் இடையே பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உடல் பேச ஆரம்பித்துக்கொண்டது.
***
பத்து மாதங்களுக்கு பிறகு. பிரசவ வலி வந்ததால் அனிதாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். மருத்துவர் வந்து மிஸ்டர் மஹேஷ் கங்ராஜுலேஷன். மிஸஸ் அனிதா அவுங்களுக்கு ட்வின்ஸ் பொறந்திருக்குறாங்க கொஞ்சம் நேரத்துல நீங்க அவுங்கள பார்க்கலாம்” என்று சொல்லிச் சென்றார். கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்த மாதிரி மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் தாயையும் குழந்தைகளையும் பார்க்க போலாம் சொன்னதும் அறைக்குள் நுழைந்தேன். அனிதாவிற்கு இடது வலது என பையன் பொண்ணு இருவர் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்கள். அனிதாவின் முகம் பார்த்தேன். எதுவும் பேசவில்லை. அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் வருவதாக சொல்லி வெளியே வந்தேன்.