Wednesday, February 17, 2016

ஒரு பிள்ளை மட்டும்- சிறுகதைஞாயிறு மாலை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரண்டு காதுகளிலும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தனியாக வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக சின்மையியின் குரலுக்கு சொக்கிப்போய் நண்பன் படத்தில் வரும் அஸ்குலக்கா பாடலை கைபேசியில் ஓடவிட்டு திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். சூடாக கையில் எதோ படும் ஸ்பரிசத்தை உனர்ந்ததும்தான் கவனித்தேன். ஒரு கையில் தோசையும் மரு கையில் காபியையும் வைத்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தாள் எனதருமை மனைவி அனிதா.

எவ்வளவு நேரமா உங்கள கீழ வரச் சொல்லி கூப்பிட்டேன் தெரியுமா? கொஞ்சம் கூட அவளுக்கு பொருந்தாத சீரியஸ்னெஸ் முகத்தில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டு தனது கையில் இருக்கும் காபி கப்பை நான் வாங்க எனது கை அருகே கொண்டு வந்தாள்.

அது... பாட்ட கேட்டுகிட்டே இருந்தேனா... அப்படியே அந்த குரலுக்கு சொ.க்.கிப்சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டவளாய் போதும். போதும். சொல்லிக்கொண்டு வெளியே கேட்கா வண்ணம் எதையோ அவள் தனக்குள் முனங்க ஆரம்பித்தாள்.

“கொஞ்சம் சத்தமா முனங்கினா நாங்களும்தான் கேட்போம்ல” சொல்லிக்கொண்டு அவளை தலை முதல் பாதம் வரை பார்த்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வர ஆரம்பிச்சது. மதிய உணவு முடிச்சதும் ஈவினிங் அனிதாவை வெளியே கூட்டிட்டு போறதாகச் சொல்லி இருந்தேன்.

எங்களோடது பெற்றோர் பார்த்து நிச்சயித்து ஒரு சுப தினத்தில் நடந்த திருமணம். இருவருக்கும் திருமணம் முடிந்ததில் இருந்து தனியாக வெளியே விருப்பமான இடத்திற்கு எங்கும் செல்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் யாராவது உறவினர்கள் விருந்திற்கு அழைத்து விடுவார்கள். காலையில் சென்று விட்டால் இரவுதான் வீடு திரும்ப முடியும். அலுவலகத்தில் ஞாயிறு மட்டும்தான் எனக்கு கிடைக்கும் ஒரே விடுமுறை நாள். நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று ஒரு சுற்று எல்லாரது வீடுகளுக்கும் சென்று முடிந்ததால் இன்றுதான் வீட்டில் பகல் நேரத்தில் இருக்க சமயம் கிடைத்தது.

மதிய உணவிற்கு பிறகு ஓய்வெடுக்கும்போதுதான் அனிதா ஏங்க சாயங்காலம் எங்காவது வெளியே கூட்டிட்டு போங்க” என்று  கேட்டிருந்தாள். சரிடா செல்லம்ன்னு அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கி விட்டேன். விழித்து பார்த்த போது கட்டிலில் அனிதாவை காணவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மாவும் அனிதாவும் சமையல் அறையில் ஏதோ சமைத்துக்கொண்டிருந்தார்கள். அனிதாவிடம் பார்வையாலே மொட்டை மாடிக்குப் போறதாச் சொல்லிவிட்டு ஒரு நடை போடுவோம்னு மொட்டை மாடிக்கு வந்திருந்தேன். மணி அப்போது ஐந்தைத்தான் தொட்டிருந்தது.

அதுக்குள்ளயும் ரெடி ஆயாச்சா அனி? நான் காஷுவலாக கேட்க மணி என்ன ஆகுது தெரியுமா” என்னையே திரும்ப கேட்கும் தொனியில் தனது கை கடிகாரத்தை காட்டினாள். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. “ஷட்” எனக்குள் சொல்லிக்கொண்டு சரி கொண்டு வந்ததை இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் நேரம் பேசிட்டு கீழ போவோம்”ன்னு சொல்லி மொட்டை மாடியின் ஒரு கார்னரில் போடப்பட்டிருந்த நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினேன். அனிதாவும் என்னை நோக்கி வர ஆரம்பித்தாள்.

நாங்கள் குடி இருக்கும் வீட்டைச் சுற்றிலும் வேப்ப மரம், அரச மரம், முருங்கை மரம் என பல வகையான மரங்கள் இருந்ததாலும், எங்களுக்கு மேலே வேப்ப மரத்தின் ஒரு பெரியக் கிளை படர்ந்திருந்ததாலும் அதன் அசைவில் கிடைக்கும் காற்றும், மாலைப் பொழுதிற்கான அந்த குளிர்ச்சியும், புது மனைவியின் அருகாமையும் அந்த சிட்சுவேஷன் எனக்கு ரம்மியமாக இருந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம் என்று தெரியவில்லை. வெளியில் செல்ல வேண்டும் என்கிற அனிதாவின் ஆசையை மறந்து இருவரும் வெகு நேரம் தனிமையில் மனதை விட்டு பேசிக்கொண்டிருந்தோம். இப்போது சூரியன் முற்றிலும் மறைந்து தம்பி சந்திரன் வானில் வந்திருந்தான்.

ஏங்க அத்தை கூப்பிடுர மாதிரி இருக்கு” சொல்லி அனிதா எங்களது பேச்சுக்கொரு கமா வைத்தாள். ஆமாம் இப்போது எனக்கும் கேட்டது. அது அம்மாவின் குரல்தான்.

சாப்பிடுவதற்கான நேரம் ஆயிடுச்சு இருவரையும் கீழே வரச் சொல்லதான் அந்த குரல். சரி நீ மொதல்ல போ பின்னாடியே நான் வர்ரேன்”னு சொல்லி அனிதாவை முதலில் கீழே அணுப்பினேன்.

சில நொடிகள் கண்களை சுற்றிலும் சுழலவிட்டேன். தெரு விளக்கு எரியவில்லை போலும். எங்கும் இருள் வியாபித்திருந்தது. அருகில் ஒரு மொட்டை மாடியில் மட்டும் சிறு வெளிச்சத்தில் அதை கவனித்தேன். பத்து வயது இருக்கும் ஒரு சிறுவன் தனியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.

இந்த நேரம் என்ன தம்பி தனியா கிரிக்கெட்” அவனுக்கு கேட்கும் படி குரலை கொஞ்சம் உயர்த்தி பேச்சை ஆரம்பித்தேன்.
நா எப்பவுமே தனியாதான் விளையாடுவேன்
ஏன் கூட பொறந்தவுங்க யாரும் இல்லையா? என்று கேட்க இப்போது மனைவி கீழே இருந்து கூப்பிட்டாள்.
இல்ல நான் மட்டும்தான்” என்று  சொன்னான். “தோ நிமிஷத்துல வர்ரேன்”னு மனைவியின் குரலுக்கு பதில் சொல்லி அந்த பையனிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.

புதிதாக ரவி அண்ணன் வீட்டிற்கு குடி வந்தவர்களாம். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாம். அம்மா வீட்டில்தான் இருக்கிறார். ஒரே பையன் என்பதால் பொருளாதார பிரச்சனை இல்லைபோலும், அவன் படிக்கும் பள்ளியின் பேரைக்கேட்டதும் புரிந்துக்கொண்டேன்.

“சரிடா வர ஞாயிற்றுக் கிழமை நானும் வர்ரேன் ரெண்டு பேரும் மைதானத்துல கிரிக்கெட் விளையாடலாம்” என்று  சொன்னேன். அந்த இருட்டிலும் அவனது முகம் மலருவதைக் கண்டேன்.

சரி பாய்டா தம்பி” சொல்ல அவன் கையை உயர்த்தி “பைய் அண்ணா” சொல்லி நொடிப் பொழுதில் உருவான அந்த புதிய உறவுக்கு கமா வைத்தேன்.

மாடி படிகளில் நான் இறங்கவும், நான் வராததால் அனிதாவே மேலே வர தயாராக இருந்தாள். எதுவும் பேசிக்கொள்ளாமல் கையை கழுவிக்கொண்டு நானும் அனிதாவும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடிக்க ஹாலில் அம்மாவோடு தொலைக்காட்சி பார்க்க ரெண்டு பேரும் உக்காந்தோம்.

அன்றைய நீயா நானாவில் இன்றையச் சூழலில் ஒரு குழந்தை வளர்ப்பு சிறந்ததா இரண்டு குழந்தை சிறந்ததா என்கிற தலைப்பில் கோபிநாத் ரெண்டு அணிகளிடமும் விவாதித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் இல்லாததால் அம்மாவிடமும் மனைவியிடம் சொல்லி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எனக்கு பின்னால் அனிதாவும் வந்துவிட்டாள்.
அனிதாதான் ஆரம்பித்தாள். நான் கீழ வந்ததுக்கப்பரம் நீங்க கீழ இறங்கி வர பத்து நிமிடம் பிடிச்சதே என்னங்க ஆச்சு? அதற்கு முன்னாடி நல்லாதானே மாடியில பேசிகிட்டிருந்தோம். பிறகு கிழ வரும்போது எதையோ பெருசா யோசிச்சுகிட்டு வர்ரதா உங்க கண்ணு காட்டியதே அத்தை இருப்பாங்க என்பதால் எதுவும் கேட்டுக்கல, என்னங்க ஆச்சு?’ என்று கேட்டாள்.

“அதுவா.. இல்லமா அ.னி.த்.தா நாம முடிவு செஞ்சோம்ல நமக்கு ஒரு குழந்தை பொண்ணோ இல்ல பையனோ போதும்ன்னு”
ம்ம் ஆமா அதுக்கென்ன இப்போ அனிதா கேட்க நான்  மொட்டை மாடியில் கண்ட காட்சியையும் எனது யோசனையும் ஜோடித்து அனிதாவிற்கு புரியும் படி சொன்னேன்.
“ஐய்யோ வேணாம்ங்க அப்போ தனிமை ரொம்ப கொடுமையானதுங்க. எல்லா சமயத்திலும் நாம அவுங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதுங்க. ரெண்டு பசங்களாக இருந்தா அதுங்க ரெண்டும் ஒன்னுக்கு இன்னொன்னு ஒத்தாசையா இருக்கும்” என்று  சொன்னாள்.

அவளது வார்த்தைகளை கேட்டதும் ஒரே சந்தோஷம். என்னைப்போலவே அவளும் கொஞ்சம் நேரத்துலயே புரிஞ்சுகிட்டா என்கிற சந்தோஷத்தில் இருவருக்கும் இடையே பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உடல் பேச ஆரம்பித்துக்கொண்டது.
***
பத்து மாதங்களுக்கு பிறகு. பிரசவ வலி வந்ததால் அனிதாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். மருத்துவர் வந்து மிஸ்டர் மஹேஷ் கங்ராஜுலேஷன். மிஸஸ் அனிதா அவுங்களுக்கு ட்வின்ஸ் பொறந்திருக்குறாங்க கொஞ்சம் நேரத்துல நீங்க அவுங்கள பார்க்கலாம்” என்று சொல்லிச் சென்றார். கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்த மாதிரி மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் தாயையும் குழந்தைகளையும் பார்க்க போலாம் சொன்னதும் அறைக்குள் நுழைந்தேன். அனிதாவிற்கு இடது வலது என பையன் பொண்ணு இருவர் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்கள். அனிதாவின் முகம் பார்த்தேன். எதுவும் பேசவில்லை. அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் வருவதாக சொல்லி வெளியே வந்தேன்.