Wednesday, April 13, 2016

உடுப்பி

சமீபத்தில், 25 - 03- 2016 மற்றும் 26 - 03 - 2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடரின் இறுதிப் பகுதி இது.

25-03-2016 வெள்ளிக்கிழமை குருவாயூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டபோது நேரம் இரவு எட்டு கூட ஆகவில்லை. குருவாயூரில் பார்த்த புன்னத்தூர் கோட்டை யானை காப்பகத்தையும், கோவில் அனுபவத்தையும் அசைபோட்டுக்கொண்டு பேருந்தில் திரிசூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். பேருந்து பல நிறுத்தங்களில் நின்று நின்றுச் சென்றாலும் இரவு எட்டரைக்கெல்லாம் இறக்கி விட்டார்கள். பேருந்தை விட்டு இறங்கியதும் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் இருந்ததால் அங்கே இரவு உணவை முடித்துவிட்டு சற்றுத் தொலைவில் ஒரு கடையில் வகைவகையான சிப்ஸ், ஹல்வா விற்றுக்கொண்டிருந்தார்கள். கேரலாவிற்கு வந்ததற்கு நினைவாக சிலவற்றை வாங்கிக்கொண்டு ரையில் நிலையத்திற்குள் நடக்க ஆரம்பித்தோம்.

மாலையில் யானைகள் காப்பகத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்போது பயணச் சீட்டு உறுதிசெய்யப்பட்ட தகவலோடு தொடர்வண்டி பெட்டி மற்றும் படுக்கை எண் கைப்பேசிக்கு வந்திருந்தது. இருபது நிமிடங்கள் தாமதமாகத்தான் உடுப்பி வரை நாங்கள் பயணிக்க வேண்டிய எர்ணாகுளம்- ஓகா தொடர்வண்டி வந்தது. ரயிலில் ஏறியதும் முதல் வேலையாக அதிகாலை 04:30க்கு கைப்பேசியில் அலாரம் வைத்து படுத்துக்கொண்டேன். அதிகாலையில் அன்று விழித்துக்கொண்டதாலும், நாள் முழுவதும் மேற்கொண்ட பயணத்தால் களைப்பில் ரயிலில் படுத்ததும் உறங்கிவிட்டேன். சொர்னூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக பயணித்த எங்கள் ரயில் மறுநாள் விடியற்காலை அலாரம் அடிப்பதற்குள் தூக்கம் கலைந்தது எனக்கு. சற்று நேரத்தில் மங்களூரும் வந்து விட்டது. கொங்கண் தரிசனத்திற்கு உடனடியாக என்னை ஆயத்தம் செய்துக்கொண்டேன்.

மங்களுர்-மும்பையை இணைக்கும் இருப்பு பாதைக்கு கொங்கண் தொடர்வண்டிப் பாதை என்று பெயர். இந்த தடத்தில் ஒருமுறையாவது பகல் நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு உண்டு. இந்த நொடி வரையில் அந்த ஆசை நிறைவேறவில்லை என்றாலும், மங்களுர்-உடுப்பி இடையிலான 80கிமி தொலைவிற்காவது கொங்கண் பாதையை பார்க்க இருக்கும் ஆர்வத்தில்தான் சீக்கிரம் எழுந்திரித்துவிட்டேன்.

காலை ஐந்து மணிக்கு மங்களுர்-சந்திப்பு நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட பத்துநிமிடத்திற்குள் நீண்டதொரு குகை வழியாகச் சென்றது. எப்படியும் குரைந்தது இரண்டு நிமிடமாவது குகைக்குள் பயணித்திருப்போம். அதன் பிறகு சிரியது-பெரியதுமாக எதாவது ஓர் இரு குகைகள் வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். குகைகள் ஏதும் தென்படவில்லை தவிர- இருபுறமும் மலைகளை குடைந்து பாதை அமைத்ததால் உடுப்பி வரையிலும் மலைகளுக்கிடையே பயணம் மேற்கொண்டோம். அந்த அனுபவத்திற்கு பிறகு கொங்கண் பயணத்தின்மீதான ஈர்ப்பு இன்னும் அதிகரித்தது.

காலை ஆரறை மணிக்கு உடுப்பி நிறுத்தத்தில் இறங்கி, தொடர்வண்டி நிலையத்திலிருந்த காத்திருப்பு அறையில் அன்றைய தினம் சுற்றிப்பார்க்க தயார் ஆக ஆரம்பித்தோம். பயணிகள் கூட்டம் இல்லை. குழியல் அறை-கழிப்பரை இரண்டும் அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள். சுமார் எட்டரை அளவில் அனைவரும் தயாராகிவிட ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தோம். உடுப்பி ரயில் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு சுமார் 4கிமி தொலைவு இருக்கலாம். அந்தச் சமயம் பேருந்து ஏதும் வராததால் ஆட்டோவில் செல்ல பரிந்துரைத்தார்கள். மூன்று நபர்கள் பயணிக்க ருபா எழுபது வசூலிக்கிறார்கள். பத்து பதினைந்து நிமிடத்திற்குள் ஸ்ரீ கிருஷ்ணா மடத்துக்கு அருகில் நம்மை இறக்கி விடுகிறார்கள்.

வெளியில் இருந்து மடத்துக்கு உள்ளே செல்ல வரிசையில்தான் போக வேண்டும். கேரள கோயில்களைப்போன்று இங்கும் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல்தான் சாமியை தரிசிக்க செல்லவேண்டும் என்கிறார்கள். நாங்கள் சென்ற சமயம் கூட்டம் இல்லாததால் சீக்கிரம் மடத்திற்குள் நுழைந்தோம். அடுத்த ஒரு சில நிமிடத்திற்குள் சன்னல் ஒன்றைக்காட்டி க்ரிஷ்ணரை பார்க்கச் சொன்னார்கள். உடுப்பியில் சன்னல் வழியாகத்தான் குட்டி க்ரிஷ்ணரை பார்க்க முடியும். உள்ளே எட்டிப் பார்ப்பதற்குள் நொடிப்பொழுதில் அடுத்தவர் பார்க்க நம்மை நகரச் சொல்கிறார்கள். அடுத்ததாக மடத்திற்குள் இருந்த வேறு சில இடங்களைப் பார்த்துவிட்டு கடைசியாக மடத்திற்குள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

உடுப்பி போனா அன்னதானம் மிஸ் பண்ணாம டேஸ்ட் பண்ணிவான்னு நண்பர்கள் சொல்லிருந்தாலும் வெளியெ வந்தபோது நேரம் பதினொன்று தான் ஆகி இருந்தது. மதியம் பன்னிரெண்டுக்குள்தான் அன்னதானம் ஆரம்பிப்பார்கள் என்பதால் உடுப்பியில் கிடைத்த நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்பதால் மடத்திற்கு வெளியே ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு. அடுத்ததாக உடுப்பியில் புகழ் பெற்ற மால்பே கடற்கரைக்குச் செல்ல உடுப்பி பேருந்து நிலையத்திற்கு வந்தோம். கிருஷ்ணா மடத்துக்கு பத்து நிமிட நடை தூரத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மால்பேக்கு அடிக்கடி பேருந்து இருக்கிறது. 20 நிமிட பயணம் என்பதால் எப்படியும் 6 கிமிக்குள்தான் இருக்கும். பேருந்துக்கட்டணம்-11.

மதியம் பன்னிரெண்டு மணி அளவில் கொதிக்கும் வெயிலில் மால்பே கடற்கரையில் இறங்கினோம். காலில் செருப்பு இருந்ததால் தப்பித்தோம். கடற்கரை மணல் அவ்வளவு சூடு. மதியத்தில் இப்படிதான் இருக்கும் எனத் தெரிந்ததால் கடல் தண்ணில கால் நனைத்தால் எல்லாம் சரி ஆகிடும்ன்னு என்னை நான் சமாதானப்படுத்தி கொண்டு நண்பர்களோடு நடக்க ஆரம்பித்தேன். மதியம்+வெயில் என்பதால் கடற்கரையில் மக்கள் கூட்டம் இல்லை. ஆங்காங்கு உடுப்பி கோயிலுக்கு வந்தவர்கள்தான் தென்பட்டார்கள். மும்பைக்கு இரண்டுமுறை சென்றிருந்தாலும்அரபிக் கடலில் கால் நனைக்க முடியலியேஎன்கிற வருத்தம் எனக்குள் இருந்து வந்தது. இம்முறை உடுப்பி பயணத்தில் அந்த ஆசையை தீர்த்துக்கொண்டேன். அரபிக் கடல் அலைகள் கால்களை நனைத்துச் செல்ல வெப்பம் தணிந்திருந்தது.

சென்னையில் மெரினா, எலியட்ஸ், மகாபலிபுரம் என எந்த கடற்கரையையும் விட்டுவைக்கவில்லை. பல மணி நேரம் வங்கக்கடலில் குளித்திருக்கிறேன். பல நாட்களுக்கு பிறகு கடலைப் பார்ப்பதால் அரபிக் கடலில் குளிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சிறிது நேரம் நண்பர்களோடு பேசிக்கொண்டு கடல் அலைகளில் கால்களை நனைத்து விட்டு மனலிற்கு வந்தோம்.

அருகில் இருக்கும் தீவிற்கு படகு சவாரி நடந்துக்கொண்டிருந்தது. தீவிற்கு சென்று-வர நபருக்கு 200. ஒவ்வொரு முறையும் 20 பேர் ஏறினால் கரையில் இருந்து புறப்படும் படகு இருபது நிமிடத்திற்குள் கடலில் பயணித்து குட்டித் தீவை அடைகிறது. தீவில் சுற்றிப் பார்க்க தென்னை மரங்களையும், பாறைகளையும் தவிர வேறு ஏதும் இல்லை. தெலுங்கு, ஹிந்தி என பலதரபட்ட மொழி பேசும் மக்கள் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் அந்த தீவில் கிடைத்த தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு சுற்றுவதை கவனித்தேன். நாங்களும் குட்டி மதிய உணவை அங்கே முடித்துக்கொண்டு படகில் கரைக்கு திரும்பி பேருந்தில் உடுப்பிக்கு சுமார் மூன்று மணி அளவில் வந்து விட்டோம்.

எங்களுக்கு திருப்பு பயணம் அன்று இரவு எட்டு மணிக்கு மங்களூருவில்தான் இரயில். உடுப்பியில் இருந்து மங்களூருக்குச் செல்ல அந்தச் சமயம் தொடர்வண்டி ஏதும் இல்லாததால் பேருந்தில் மங்களூரு செல்ல முடிவு செய்து பேருந்தில் ஏறினோம். உடுப்பி- மங்களூரு பயண கட்டணம் ருபாய் 55 ஒன்னரை மணி நேர பயணம். காலையில் இருந்து தொடர்ந்து நடந்ததால் அனைவரும் களைப்பால் பேருந்தில் தூங்கி எழுந்தோம். நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வர நடத்துனர் சொல்ல பேருந்தை விட்டு இறங்கினோம். சாலைக்கு எதிர்புரத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கவனித்தேன். அதிகாலையில் உடுப்பிக்கு இரயிலில் சென்றதால் மங்களூரு நகரத்தை பார்க்க முடியவில்லை. அகலமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், சாலையின் இரு புறமும் பெரிய பெரிய கட்டிடங்களென இரண்டாம் கட்ட நகரத்திற்கு தேவையான அனைத்துவித வசதிகளையும் உள்ளடக்கியதொரு நகரமாக மங்களூரு காட்சி அளித்தது.
பெங்கலூருக்கு அடுத்ததாக மங்களூரு கர்னாடகாவில் முக்கியமானதொரு நகரமாக இருக்கலாம் எனத் தோன்றியது. தமிழகத்தை விடவும் நிலப்பரப்பில் பெரிதாக கர்னாடக மாநிலம் இருந்தாலும் புவியியல் ரீதியாக 3 பிரிவுகளாக கர்னாடக மாநிலம் பிரிந்திருப்பதால் 300 கிலோ மீட்டருக்கு மட்டுமே கடற்கரை இருக்கிறது. அதில் மங்களூரு துறைமுகம் சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் இந்தியாவில் குறிப்பிடதக்க பங்கு வகிக்கிறது.

கொஞ்ச நேரம் மங்களூரு நகரை காலால் சுற்றிவிட்டு மங்களூரு மையத் தொடர்வண்டி நிலையத்திற்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்து விட்டோம். (கவனிக்க மங்களூரு சந்திப்பு நிலையம் வேறு, மங்களூரு மைய்ய ரயில் நிலையம் வேறு. இரண்டிற்கும் இடையே சுமார் 5கிமி தூரம் இருக்கும்.) திருப்பு பயணத்திற்கான மங்களூரு-காச்சிகூடா தொடர்வண்டி இரவு எட்டு மணிக்குதான் புறப்படும் என்பதால் அதுவரையிலும் குளிர்சாதன வசதிக்கொண்ட காத்திருப்பு அறையில் காத்திருந்து செல்வோம் என நுழைவு சீட்டு- ஒரு மணி நேரத்திற்கு நபருக்கு 15ருபாய் வாங்கி காத்திருப்பறைக்குள் கால்களுக்கு ஓய்வு கொடுத்தோம். இங்கும் குளியலறை-கழிப்பறை அடிக்கடி சுத்தம் செய்கிறார்கள். பலரும் அங்கு இருந்தவர்கள் சுற்றுலா வந்த பயணிகள் நாள் முழுவதும் சுற்றிய கசகசப்பை போக்க குளித்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆனதால் தொடர்வண்டி நிலைய கேண்டினுள் இரவு உணவை வாங்கிக்கொண்டு இரயிலில் ஏறினோம். நாகர்கோவிலில் இருந்து எங்களோடு திருசூரில் இணைந்துக்கொண்ட வேல்முருகனும் - அவனது மனைவியும் எங்களோடு பயணம் செய்து மறுநாள் பாலமுருகன் வீட்டில் (ஜோலார்பேட்டையில்) தங்கி திருநெல்வேலிக்குச் செல்லும்படி முன்பே திட்டம் வகுத்திருந்ததால் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்டர் தினத்தன்று காலை எட்டரைக்கு ஜோலார்பேட்டை நிலையத்தில் நண்பர்கள் அனைவரும் விடைப்பெற்றுவிட மீண்டும் தனி ஒருவனாக திருப்பதிக்கு அருகில் சுமார் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா நிறுத்தம் வரையிலும் அதே இரயிலில் பயனித்தேன். ***

பல நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு இரண்டு நாள் புதிதாக வெவ்வேறு இடங்களில் நண்பர்களோடு பயணித்த அனுபவம் மனதிற்கு ஒரு வித உற்சாகத்தை கொடுத்ததோடு அல்லாமல் எனக்குள் இருந்த சோர்வையும், சோம்பேறிதனத்தையும் போக்கி புதிய மனிதனாக உணர்ந்தேன் வீட்டிற்குள் நுழையும்போது!

***
 இத்தொடரை ஆரம்பத்தில் இருந்து பொறுமையாக வாசித்து கருத்துச் சொன்ன அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள். காயத்ரி அக்காவிற்கு எப்படிதான் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. பதிவுகள் ஏதும் எழுதாததால் ப்ளாக்கில் தூசிதட்டும் ஒரு முயற்சியாகதான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன்.
உடனுக்குடன் பிழைகளைத் திருத்தி பதிவு எழுதிக் கொடுத்து உற்சாகத்தோடு மேலும் தொடர ஊக்குவித்த அக்காவுக்கு மிக்க நன்றி நன்றி.

***
 விரைவில் வேறொரு பதிவில், வேறு ஒரு நாள் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

***
 அடிக்கடி பயணம் மேற்கொள்ளுங்கள். புத்துணர்வோடு என்றென்றும் இருங்கள்! 
 ***
 நன்றி.


Monday, April 11, 2016

குருவாயூர்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதி.இரண்டாம் பகுதி.

2011 அக்டோபர் முதல் வாரத்தில், புதுச்சேரி, திருச்சுராப்பள்ளி மற்றும் கோயம்பத்தூர் என இணையம் வாயிலாக அறிமுகமான நண்பர்களை நேரில் சந்திக்கச் சென்றபோது, கோயம்புத்தூர் நண்பன் பிரகாஷ் ‘சும்மா வீட்டுலயே இருந்தோம்ன்னா போர் அடிக்கும். வந்ததற்கு பாலக்காட்டிலுள்ள மலம்புழா அணையை பார்த்துவருவோம்’ எனச் சொல்லி அழைத்துச் சென்றான். கோயம்பத்தூர் -பாலக்காடு பேருந்தில் பயணித்து அங்கிருந்து 12கிமி தொலைவில் மழம்புழா அணை இருப்பதால் அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடித்துச் சென்றோம்.
ஆந்திராவில் நாங்கள் வசிப்பது ராயலசீமா பகுதி என்பதால், வரண்ட ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் பார்த்து சலித்துப்போன எனக்கு மலம்புழா அணையின் நீர்மட்டம், அணைக்கு வரும் நீர்வரத்தை பார்த்தபோது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நாங்கள் சென்றது விடுமுறை தினம் என்பதால் எங்களைப் போன்று பல சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அணைக்கு அருகில்-சற்று தொலைவில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப்வே அமைத்து ஒரு சிறந்த அனுபவத்தை நமக்குத் தருகிறார்கள். 2011ல் அப்போது நபருக்கு 40ருபாய் ரோப்வேயில் பயணிக்க கட்டணமாக வசூலித்ததாக நினைவு. தவிரவும் அருகில் பாம்புப் பண்ணை, மீன் பண்ணையை பார்த்த ஞாபகம். அன்று இரவே திருப்பதிக்கு புறப்பட இருந்ததால் மழம்புழா அணைக்கு டாட்டா சொல்லிவிட்டு நண்பனது வீட்டிற்கு வந்து விட்டோம்.
பிரகாஷ் காரணமாக தற்செயலாக எதிர்பாராவிதத்தில் எனது முதல் கேரள பயணம் அன்று ஆரம்பித்தது. அதன் பிறகு கால ஓட்டத்தில் இயந்திர தனமான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்டு கேரளாவையே மறந்துவிட்டேன். சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இதோ 2011க்கு பிறகு 2016ல் இரண்டாவது முறையாக கேரள மண்ணில் மீண்டும் காலடி வைக்கிறேன்.

திருப்பதியில் இருந்து திரிசூர் வரை பயணம் மேர்க்கோண்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ் சராசரியாக மணிக்கு 60கிமி வேகத்தில் பயனித்து பத்து மணி நேரத்தில் 603 கிமி தொலைவு கடந்து நேரத்தில் இரக்கி விட்டது. குருவாயூர் பயணத்தை பற்றி நவீணிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். சொன்னபடியே நாங்கள் இரயில் நிலையத்தில் இறங்கவும் நொடிப்பொழுதில் எனக்கு முன்பு தோன்றி ஆச்சர்யப்படுத்தினான். இத்துடன் இன்னும் இருவர் எங்களுடன் பயணத்தில் சேர்ந்து பயணிக்க இரயில் நிலைய காத்திருப்பு அறையில் காத்திருந்தார்கள். நாங்கள் இறங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நாகர்கோவிலில் இருந்து நாகர்கோயில்-மங்கலூர் பரசுராம் தொடர்வண்டியில் வந்திறங்கி காத்திருந்தார்கள் வேல் முருகனும்-அவனது மனைவியும்.
 பள்ளியில் வேல்முருகன் எனக்கு நாங்காண்டு சீணியர் என்பதால் அந்தச் சமயம் பரிச்சையம் அதன் பிறகு சுமார் 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்கிறோம்.
மதிய உணவு யாரும் சாப்பிடாததால் இரயில் நிலையத்தில் சாப்பிட்டுவிட்டு குருவாயூரை நோக்கி பயணிக்க முடிவு செய்தோம். ’திரிசூர் இரயில் நிறுத்தத்தில் இருந்து வெளியில் வந்த சில நிமிடங்களுக்குள் பேருந்து நிலையத்தை அடையலாம்’ சொல்லிருந்தார்கள். நாங்கள் பிரதான சாலையை அடையவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. சரியாக மதியம் 03:00 அளவில் பேருந்தில் ஏறினோம். இணையத்தில் சுமார் 30கிமி தொலைவு இருப்பதாக படித்தேன். எப்படியும் ‘35-ரூபாய் பேருந்துக் கட்டனம் இருக்கலாம் என யூகித்திருந்த எனக்கு நடத்துனரிடம் கட்டணம் எவ்வளவு கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. 45 முதல் 50 நிமிட பயணம்-25 கிமி இருக்கலாம். பேருந்துக் கட்டணம் 21ரூபாய்.

2011இல் புதுச் சேரியில் முதன்முதலாக பயணித்தபோது பேருந்து கட்டணம் என்னை ஆச்சர்யபடுத்தியது. அதே இம்முறை கேரளாவில். தொடர்ந்து 6 அல்லது 7 மலையாலப்பாடல்களை கேட்க முடிந்தது- பேருந்தில். இதில் தெலுங்கு மற்றும் தமிழில் கேட்ட இரண்டு பாடல்களை மலையாளத்தில் கேட்டேன். இசையை ரசித்துக்கொண்டே பயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை. குருவாயூர்வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

கடிகாரத்தில் மணி அப்போது மாலை நான்கைகூட தொடவில்லை. கோயில் சன்னதி மதியம் 12மணிக்கு சாத்தினால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் மீண்டும் திறக்கப்படும் என இணையத்தில் படித்ததால் அதற்குள்ளாக முதலில் அனைவரும் 3கிமி தொலைவில் இருக்கும் புன்னத்தூர் கோட்டை யானைகள் சரணாலயத்தை பார்த்து வர முடிவு செய்தோம். 10நிமிட ஆட்டோ பயணத்தின் பிறகு நாங்கள் யானை காப்பகத்தை அடைந்தோம். குருவாயூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இருக்கிறது. குருவாயூருக்கு நாங்கள் ஒதுக்கிய நேரம் குறைவாகவே இருந்ததால் எப்போது பேருந்து வரும் தெரியாததால் ஆட்டோவில் பயணித்தோம்.

சுமார் 18ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த யானை சரணாலயத்தில் சுற்றி வர நுழைவு கட்டணம் ஆக நபருக்கு ரூபாய் 5 வசூலிக்கிறார்கள். நுழைவாயுலுக்குள் நாம் நுழையவும் யானையின் மலம்-சாணம் வாசனை நமது நாசிக்குள் நுழைகிறது. சிறியது முதல் பெரியது வரை என வயதில் 60க்கும் மேலான யானைகளை இங்கு பராமரித்து வருகிறார்கள். கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் யானைகள்தான் இங்கு இருக்கும் பெரும்பாலானவை. அத்தனை யானைகளையும் ஒரே இடத்தில் ஒன்றாக பார்ப்பது புதிதாக இருந்தது. ஒரு சில யானைகள் எழுப்பும் சப்தத்தைக் கேட்கவும், அது செய்யும் சேஷ்ட்டைகளைப் பார்க்கவும் உள்ளுக்குள் கொஞ்சம் திகிலாகவும், ஒருவித த்ரில்லாகவும் இருந்தது!
 யானை காப்பக வளாகத்திற்குள் சுற்றிப் பார்த்த அரைமணி நேரம் அருமையாக இருந்தது. காப்பகத்தில் கிடைத்த அனுபவத்தை பற்றி சொல்ல நிறையவே இருக்கு. எழுதினால் பதிவு நீண்டுக்கொண்டே செல்வதால் குருவாயூர் சென்றால் தவறவிடாமல் ஒரு முறை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்.

ஐந்து மணிக்கெல்லாம் கோயில் பிரகாரத்திர்க்குள் வந்துவிட்டோம். குருவாயூர் போக வேண்டும் என முடிவு செய்ததும் இனையத்தில் தேவையான தகவகலை துலாவினால் கோயில் பிரகாரத்திற்குள் ஆண்கள் நுழைய வேஸ்ட்டியும், மேல் சட்டை இல்லாமலும் போக வேண்டும் என படித்தேன். இந்த வகையான சாம்ரதாயம் எனக்கு புதிதாக இருந்தது. அதற்கான ஏற்பாட்டோடு வந்ததால் உடனடியாக கோயில் சீருடைக்கு மாறிவிட்டோம் குழுவில் இருந்த 4ஆண்களும். சாமியை தரிசிக்க செல்லும் முன்பு கோயிலுக்கு இருக்கும் குளத்தில் நீராடிவிட்டு செல்ல வேண்டும் என்கிற பாரம்பரிய நம்பிக்கையின் படி குளத்தினுள் காலை நனைத்துவிட்டு சாமியை தரிசிக்க வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து செல்ல சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கு பிறகு கிரிஷ்ணரை தரிசிக்க முடிந்தது. திருப்பதியில் 'ஜருகண்டி’ சொல்வதுபோல் இங்கு மலயாலத்தில் எதோ நடை சொல்கிறார்கள். கருவறைக்குள் மூலவருக்கு முன்பு பல விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்தது.

நாங்கள் அனைவரும் இரவு 09:20க்கு திரிசூரில் இருந்து உடுப்பிச் செல்ல எர்ணாகுளம்-ஓகா தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் இரவு எட்டு மணிக்கெல்லாம் குருவாயூரை விட்டு வெளியேரவேண்டும் என திட்டமிட்டதால் சாமியை தரிசித்துவிட்டு அவசரமாக குழுவில் நண்பர்களது மனைவியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஷாப்பிங் செய்துவிட்டு பேருந்து நிலையத்தை அடைந்தோம். நவின் அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் மீண்டும் க்ரிஷ்ணரை தரிசித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி எங்களை பேருந்தில் ஏற்றிவிட்டு எங்களிடமிருந்து விடை பெற்றான். குருவாயூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டபோது நேரம் இரவு எட்டுகூட ஆகவில்லை. குருவாயூரில் பார்த்த புன்னத்தூர் கோட்டை யானை காப்பகத்தையும், கோவில் அனுபவத்தையும் அசைபோட்டுக்கொண்டு பேருந்தில் திரிசூரை நோக்கி பயணித்தோம்.
***
(தொடரும்)

Thursday, April 07, 2016

குருதேவ் எக்ஸ்பிரெஸ்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதியை வாசிக்க.


ஷாலிமரில் இருந்து நாகர்கோவில் வரை பயணிக்கும் வாராந்திர குருதேவ் எக்ஸ்பிரெஸ் ரயில் வாரத்தில் புதன்தோறும் இரவு பதினோரு மணிக்கு கொல்கத்தா நகரத்தில் இருக்கும் ஷாலிமர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்படும். கரக்பூர், புபனேஷ்வர், விஜயவாடா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளத்திற்குள் நுழைந்து பாலக்காடு, திரிசூர், எர்னாகுளம், செங்கனூர், திருவனந்தபுரம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு கடைசியாக நாகர்கோயில் இரயில் நிலையத்தை அடையும்.
25-03-16 வெள்ளிக்கிழமை திருப்பதியில் இருந்து குருவாயூர்க்குச் செல்ல திரிசூர் வரை இந்த குருதேவ் வண்டியில்தான் முன்பதிவு செய்திருந்தேன். முதலில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது. 23-03-2016 அன்று இந்த ரயில் ஷாலிமரில் புறப்படுவதால் புதன் கிழமை இரவே பயணச் சீட்டு உறுதி செய்யப்பட்டதாக குறுந்தகவல் கைபேசிக்கு வந்துவிட்டது.

25-03-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு புறப்பட தயாராகிவிட்டேன். முந்தைய நாள் இரவே அம்மா சப்பாத்தி செய்து வைத்ததால் அதிகாலையில் பயனத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட நேரம் சரியாக இருந்தது. வீட்டில் இருந்து திருப்பதி ரயில் நிலையம் நடை தூரத்தில் இருந்தாலும் அதிகாலையில் தெருக்களில் நாய்கள் தொல்லை இருக்கும் என்பதால் தம்பியின் அறிவுரையின் படி பைக்கில் அழைத்துச் சென்று ரயிலில் ஏற்றிவிடுவதாகச் சொன்னான்.
எப்போதும் திருப்பதி வழியாக கடந்துச் செல்லும் வெளியூர் தொடர்வண்டிகள் முதல் தடத்தில் வந்து போகும் என எதிர்பார்த்து முதல் நடைமேடையில் காத்திருந்த எங்களுக்கு ஒலிபெருக்கியின் மூன்றாம் தடத்தில் குருதேவ் எக்ஸ்பிரெஸ் வரப்போவதாக அறிவிப்பைக் கேட்டு அவசரமாக ஓவர் ஹெட் ப்ரிட்ஜில் ஏரி மூன்றாம் தடத்தை அடைந்தோம். இந்திய ரயில்கள் எப்போதுதான் சரியான நேரத்தில் இயங்கி இருக்கிறது. அதிகாலை 3:25க்கு வர வேண்டிய ரயில் அன்று இருவது நிமிடங்கள் தாமதமாகத்தான் வந்தது. பெரும்பாலும் ரயிலில் இருந்து இறங்கியவர்கள் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள். என்னோடு ரயிலில் ஏறியவர்களோ பாலாஜியை தரிசித்துவிட்டு கேரளாவிற்குச் செல்லும் மக்கள்.

திருப்பதியை விட்டு புறப்படுவதற்கு முன்பாகவே மொழிப் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக நினைத்துக்கொண்டிருந்தேன். எளிதில் மலையாளம் புரிந்துக்கொள்ள முடியும் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அன்று புரிந்துக்கொண்டேன். எனக்கு எதிரில் மூன்று மலையாளீஸ் திருப்பதியில் ஏறினார்கள். ஒட்டுமொத்த பெட்டிக்கு கேட்கும் அளவிற்கு சப்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு எப்படி பத்து மணி நேரம் பயணிக்கப்போகிறேனோ! என எனக்கு ஒதுக்கப்பட்ட லோயர் ப்ரத்தில் படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்க அந்த அதிகாலை ரயிலின் தாலாட்டில் முகத்தில் அடிக்கும் சில் என்ற காற்றில் உறங்கிவிட்டேன்.

திடீரென தூக்கம் கலய பார்த்தால் ரயில் எதோ நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தது. ச்சாயா விற்கும் ஒருவரிடம் கேட்டதற்கு காட்பாடி சொன்னார். ‘காட்பாடி வந்ததும் ஒரு மிஸ்கால் விடு, வீட்டிலிருந்து புறப்பட்டால் வண்டி ஜோலார்பேட்டை வருவதற்குள் ஸ்டேஷனுக்கு வர சரியா இருக்கும்’ன்னு பாலா சொல்லி இருந்ததால் அவனுக்கு நினைவு படுத்தினேன்.
காட்பாடியை விட்டு ரயில் புறப்பட்டது. அப்போது மணி காலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்ததால் எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எனக்கு மேலே மிடில் பர்த்தில் யாரும் இல்லாததால் உட்காந்துக்கொண்டேன்.
சென்னை-கோயம்பத்தூர் இரண்டு வழி இருப்புபாதை என்பதால் காட்பாடியில் இருந்து வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. நமது ரசனையை விஸ்தாரன படுத்திக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இந்த உலகத்தில் ரசிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது. வேகமாகச் செல்லும் ரயில், தண்டவாளத்தில் இருந்து ரயில் ஓடும்போது எழும் சப்தம், பக்கத்தில் எதிர் திசையில் இருந்து வேகமாக ரயில் கடக்கும்போது கிடைக்கும் அனுபவம் எல்லாம் சன்னல் வழியே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அனுபவம் நீண்ட நாட்கள் கழித்து புதிதாக ஒரு வித உற்சாகத்தை தூண்டியது.

நேரத்திற்கு அன்று வண்டி ஜோலார்பேட்டை நிலையத்தை அடைந்தது. பாலாவும் நந்தினி அக்காவும் தங்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி உட்காந்துக்கொண்டதாகச் போனில் அழைத்துச் சொன்னான். ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலும் புறப்பட்டது. மீண்டும் அதே வேகம். சென்னை எழும்பூரில் இருந்து குமரி வரையிலும் இரண்டு வழி இருப்புப்பாதை போட்டால் நன்றாய் இருக்கும் என யோசித்துக்கொண்டு இருந்தேன். திடிரென பாலா வந்து அருகில் உட்காந்தான். சிறிது நேரம் பேசியப்பிறகு பையை எடுத்துக்கொண்டு ’ நம்மளோட சீட்டுக்கு வா ‘ என்று அழைத்துச் சென்றான். நல்ல தூக்கத்தில் எதிரில் இருந்த மலயாலிஸ் இருந்தார்கள். ‘இங்கிருந்து தப்பித்தால் போதும் என நினைத்துக்கொண்டிருக்க பாலா நந்தினி அக்கா இருக்கும் இடத்திலோ பெங்காலி கூட்டம். பத்து நிமிடம் கூட இருக்காது நாங்கள் மூவரும் பேசத் தூவங்கியதும் பக்கத்தில் இருப்பவர்களது பேச்சு பெரிதாக தெரியவில்லை.

ஈரோடு நிலயத்தில் கழிப்பறைகள் சுத்திகரித்துச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து கழிப்பறைக்குச் சென்று வருவோம் என்று கொஞ்சம் நேரத்தில் சென்றால் உள்ளே நிற்க முடியவில்லை. அவ்வளவு நாற்றம். எவ்வளவு தூரம் ரயில் பயணம் அருமையானதோ அதே அளவிற்கு ரயில் கழிப்பறைகளை பயன்படுத்துவது கொடுமையானது. அந்த நொடி என்னுடைய கனவு பயண திட்டத்தில் ஒன்றான ’ஒரு முறை கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் வரையிலும் விவேக் எக்ஸ்பிரெஸ்-ல் பயணிக்க வேண்டும்’ என்கிற ஆசயை புதைத்துவிட்டேன். அரைநாள் பயணத்திற்கே இந்த கதி என்றால் மூன்று நாட்களுக்கு சொல்லவே வேண்டாம். பிறகு கொண்டு வந்த சப்பாத்தியை சாப்பிட எடுத்தால் ‘வெள்ளிக்கிழமை 12மணிக்கு மேலதான் சாப்பிடுவேன்’ன்னு நந்தினி அக்கா சொல்ல நானும் பாலாவும் சாப்பிட்டோம்.

காலை பதினொன்னரை அளவில் கோயம்பத்தூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். கோயம்பத்தூர் வரை இரண்டு முறை வந்திருக்கிறேன். இரண்டு முறையுமே இரவு நேரம் என்பதால் எதையும் பார்க்க முடியவில்லை. இம்முறை பகல் நேரம் என்பதால் சேலத்தில் இருந்து பாதையை ஒட்டியே வரும் கிழக்கு மலைக் குன்றுகள் பார்க்க முடிந்தது.
கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு இடையிலான பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே புகுந்து கேரளாவிற்குள் புகுந்தோம். நீண்ட தொலைவிற்கு தண்டவாளத்திற்கு இரு புறத்திலும் மலைகளாகத்தான் இருக்கிறது.
நாங்கள் பயணிப்பதற்கு முன்பே ’வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரம் ரயில் பயணம் ரொம்ப கஷ்டம்’ என்று சிலர் சொல்லிருந்தார்கள். பாலக்காடு வரையிலும் எதுவும் தெரியவில்லை. பகல் பன்னிரெண்டரைக்கு பாலக்காடை அடைந்தோம். அதன் பிறகு அனல் காற்று வண்டிக்குள் வீசத் துவங்கியது. ரயிலில் ஓடும் மின் விசிறியில் இருந்து வரும் காற்றோ ஏசீ கம்ப்ரசரில் இருந்து வரும் காற்றுப்போல் வெப்பமாக வீசிக்கொண்டிருந்தது.
’அடுத்த ஸ்டாப்பிங் திரிசூர்தான் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு உட்காந்திருந்தோம். திருப்பதியில் ரயில் ஏறும்போது இந்திய ரயில்வேயை நேரத்திற்கு வராதென விமர்சித்தாலும் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் ஈரோடு, கொயம்பத்தூர், பாலக்காடு என அனைத்து ரயில் நிலையத்திற்கும் சரியான நேரத்தில் வந்தது குருதேவ் எக்ஸ்பிரெஸ் . சரியாக மதியம் 1:45க்கு நாங்கள் இறங்க வேண்டிய திரிசூர்-ம் வந்து விட்டது.
 குருவாயூர் பயணத்தை பற்றிகல்லூரி நண்பன் நவீனிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். ரயிலை விட்டு நாங்கள் இறங்கியதும் நொடிப்பொழுதில் எங்களுக்கு முன்பு காட்சி அளித்தான். எங்களை இறக்கி விட்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ்-ம் நாகர்கோவிலை நோக்கி திரிசூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
 ***
தொடர்ச்சியை படிக்க நீங்களும் இன்று சென்று
 நாளை வாருங்கள்.
நன்றி.

Tuesday, April 05, 2016

நாத்திகன் கோவிலுக்குச் செல்வதா?!சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவு எழுத ஒரு உத்தேசம். எவ்வளவு தூரம் மனதில் பகிர நினைத்ததை பதிவில் எழுத முடியும் எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதால் தயக்கம்+தடுமாற்றத்தோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
***
அது ஃபிப்ரவரி மாதம் கடைசியில் இருக்கலாம். பள்ளி நண்பன் பாலமுருகனிடம் சுமார் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கைப்பேசியில் அழைத்துப் பேசினேன். பள்ளியில் எனக்கு 2 ஆண்டுகள் சீனியர்.
ஆனாலும் மூன்றாண்டுகள் முன்பு வரையிலும் கைப்பேசி வாயிலாக அவ்வப்போது இருவரும் பேசிக்கொள்வோம். திருப்பதி கோவிலுக்கு வரும்போதெல்லாம் நிச்சயம் தகவல் தெரிவித்து விடுவான். திடீரென ஒரு நாள் அவனது கைப்பேசி இயங்காமல் போக, பல முறை அவனோடு பேச முயற்சிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய ஒரு கட்டத்தில் முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.
இந்த வருடம் ஃபிப்ரவரி மாத கடைசியில், ஒரு மாலை பொழுது, நேரம் நகராமல் இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் சமயத்தில் தற்செயலாக பாலமுருகனது எண்ணை கைப்பேசியில் அழைத்துப் பார்க்க முயற்சித்தேன். முதல் முயற்சியிலே அவனோடு பேச முடிந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பேசுவதால் கொஞ்சம் நேரம் இருவரும் பரஸ்பரம் விசாரித்துவிட்டு இருவருக்கும் பொதுவாக பிடித்த விடயங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்.

பள்ளியில் இருந்தே பெரும்பாலும் நாங்கள் பேசிக்கொண்டால் எங்கள் இருவரது உரையாடல்கள் தொடர்வண்டியோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும். படித்து முடித்ததும் இந்திய ரையில்வேத் துறையில் பணியில் சேர நினைத்து இறுதியில் வேலூர் மாவட்டத்தில் நாற்றம் பள்ளி என்னும் கிராமத்தில் அரசு ஆசிரியராக பணி புரிந்து வருகிறான். கல்லூரியில் படிக்கும்போதே சக வகுப்புத் தோழியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான். இப்போது இரு குழந்தைகளும் பிறந்ததாகச் சொன்னான்.

அடுத்த நாள் மீண்டும் இருவரும் பேசும்போது நடுவே உடுப்பி என்னும் பெயர் அடிப்பட்டது. அந்தப் பெயர் அவனுக்கு புதிதாக இருந்ததால் அந்த ஊரின் சிறப்பு என்னவென்று கேட்டான்.
அந்தச் சமயம் எனக்குத் தெரிந்த ஒரு சிலவற்றை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன். அது வரை உடுப்பி பெயரை கேள்விப்படாத அவன் அந்த ஊரையும், கோவிலையும் பார்க்கும் ஆர்வத்தில் நான் சொல்லி முடிப்பதற்குள் ’உடுப்பி கோயிலுக்கு கட்டாயம் செல்லவேண்டும்’ என்று அவன் சொன்னதுதான் தாமதம்.

2015 மே மாதத்தோடு எனக்கு கல்லூரி முடிந்து விட்டது. அதன் பிறகு வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. அக்டோபரில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கும், 2016 ஜனவரியில் கார்த்திக் அண்ணாவின் ஆரஞ்சு முட்டாய் புத்தக வெளியீட்டிற்கும் சென்னைக்கு ஒரு நாள் சென்றதுதான். 9 மாதங்கள் வீட்டில் அடைப்பட்டுதான் கிடந்தேன். இந்த இடைவெளி எனது வாழ்வில் ஒரு கொடுரமான தருணம் என்றுச் சொல்லலாம். தனிமை எவ்வளவு கொடுமையானதென்று  உணர்வுபூர்வமாக புரிந்துக்கொண்ட நாட்கள்.
 இப்போது வெளியில் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை நழுவ விடுவேனா என்ன?
எங்கள் இருவருக்கும் பயணத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் உடனடியாக உடுப்பி செல்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டோம்.

 திருப்பதியில் இருந்து சுமார் 950கிமி தூரத்தில் உடுப்பி கர்னாடக மாநிலத்தில் மேற்கு கடர்க்கரையோரம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேரடியாக உடுப்பிக்கு தொடர்வண்டி வசதி இல்லாததால் முதலில் மங்களூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பிக்கு போக முடிவு செய்தோம். மங்களூருவில் இருந்து உடுப்பி சுமார் 70 கிலோமீட்டர் வடக்கே உள்ளது.
வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிதோறும் காலை ஆறு மணிக்கு காச்சிகூடா (தெலுங்கானா மாநில தலை நகரில் இருக்கும் ஒரு தொடர் வண்டி நிலையம்) அங்கிருந்து ரயில் புறப்படும். அன்று மாலை ஐந்து மணிக்கு திருப்பதிக்கு அருகில் சுமார் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா தொடர்வண்டி நிலையத்தை அடையும். அங்கு நான் ரயிலில் ஏறினால் பாலமுருகன் ஜோலார்பேட்டை நிலையத்தில் ஏற முடிவு செய்தோம். அடுத்த நாள் காலை (புதன் மற்றும் சனி கிழமைகளில்) காலை பதினோரு மணிக்கு மங்களூருவை அடைவோம். அங்கிருந்து உடுப்பிக்கு சென்று கிருஷ்ணர்ஐ தரிசித்துவிட்டு மீண்டும் மங்களூரு திரும்பி ரயிலில் ஊர் திரும்புவதுதான் எங்களது ஆரம்பகட்ட திட்டம்.

இந்த திட்டத்தில் ஒரு சிக்கல் எங்களுக்கு இருந்தது. நாங்கள் உடுப்பிச் செல்லும் தினத்தன்றே இரவு எட்டு மணிக்கு ஊர் திரும்ப ரயில் இருந்ததால் இடைப்பட்ட சமயத்தில் உடுப்பிக்குச் சென்று வர முடியுமா என யோசித்தோம். இறுதியில் முதலில் குருவாயூருக்கு போவோம் அங்கிருந்து உடுப்பிக்குச் சென்று சனிக்கிழமை இரவு எட்டுமணிக்கு புறப்படும் மங்களூரு காச்சிகூடா வண்டியை பிடித்து ஊர் திரும்ப திட்டமிட்டோம்.

முதலில் குருவாயூருக்குச் சென்று அங்கிருந்து உடுப்பி போக முடிவு செய்ததும் நண்பனது மனைவி நந்தினி அக்கா அவர்கள் குருவாயூர் பார்க்காததால் தானும் எங்களோடு வருவதாகச் சொன்னார். பிறகு பால முருகன் குடும்பத்தோடு பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பயணத்திற்கான அனைத்து தகவல்களும் சேகரித்து; சேகரித்த தகவலைக் கொண்டு திட்டமிட்டு; மார்ச் மாதம் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விடுமுறை தினங்களில் குருவாயூர் மற்றும் உடுப்பி சென்று வர முடிவு செய்து தொடர்வண்டியில் முன்பதிவு செய்ய தயார் ஆனோம்.

வீட்டில் மேற்சொன்ன கோவில்களுக்கு செல்வதாக தெரிவித்தபோது ’நாத்திகன் கோயிலுக்குச் செல்வதா’ என்கிற பொதுப்படையான கேள்வி வீட்டில் கேட்டார்கள். ’கோவிலுக்குச் செல்வதைவிடவும் கேரளா மற்றும் கர்னாடகாவைவைப் பார்ப்பதில்தான் எனக்கு ஆர்வம்’ என்று எனது பதிலை அழுத்தம்திருத்தமாக சொன்னேன். வீட்டிலும் அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. பயணத்திற்கு இருபது நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ததால் மொத்த பயணத்தில் 3 தொடர்வண்டியில் இரண்டில் காத்திருப்பு பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
***
 நீங்களும் அடுத்த பகுதியை வாசிக்க ஒரு நாள் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு நாளை தொடர்கிறேன்.
நன்றி.