Saturday, December 31, 2016

திருப்பதிக்கும், திருத்தணிக்கும்டிசம்பர் 19 அன்று வாழ்வில் முதன் முதல் வேலை அப்பாயிண்மெண்ட்டில் கையெழுத்திட்டேன். அன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் state bank learning center ல் ஓரியெண்டேஷன் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை அன்று வேலை செய்ய இருக்கும் இடத்தை குறித்த posting order கொடுத்து அனுப்பினார்கள்.
சென்னையிலிருந்து வீடு திரும்பியதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருத்தராக  ஐந்து நாட்கள் சென்னையில் இருந்த அனுபவத்தைக் கேட்டார்கள். கேட்ட அனைவரிடத்திலும் கொடுத்த பதில் ஒன்றுதான். ‘ஐந்து நாட்கள் ஐந்து நிமிடம் கடந்து வந்ததைப் போன்று உணர்வு’ என்று சொல்லி இருந்தேன். நூத்துக்கு நூறு சதவிகிதம் உண்மை. புதிதாக அறிமுகமான சக வகுப்பு நண்பர்களில் இருந்து அங்கு பணிபுரியும் ஒட்டு மொத்த அதிகாரிகளும் அருமையானவர்கள்.
வீடு திரும்பியதும் எடுத்ததும் சென்னையில் கிடைத்த அனுபவத்தைப் பற்றிதான் நிறைய எழுத நினைத்திருந்தேன். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு உடனடியாக திங்கட்கிழமை திருத்தணி ஸ்டேட் பேங்கில் சேர வேண்டி இருந்ததால் இடை பட்ட இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகளுக்கே சரியாக இருந்தது. நிச்சயம் எழுத வேண்டும் என்கிற ஆசை/விருப்பம் மனதில் உண்டு. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிதாக ஜூனியர் அசோசியேட் ரிக்ருட் செய்ய நோடிஃபிகேஷன் விட்டதும் சென்னை வட்டத்தில் தேர்வு எழுத முடிவு செய்திருந்தேன்.  நான் இருக்கும் ஹைதிரபாத் வட்டத்தில் ஓ கட்டாஃப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதென்பதால் ’எப்படியும் திருத்தனியில் போஸ்ட்டிங் வாங்கிடலாம்’, ‘வீட்டில் இருந்து தினமும் சென்று வர வசதியாக இருக்குமே’னு முன்கூட்டியே பல கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் போட்டுதான் அப்ளை செய்து தேர்வு எழுதி இருந்தேன்.
திட்டமிட்ட படி எல்லாம் சரியாக நடக்க விருப்பபட்ட இடத்தில் வேலை என எல்லாம் சரியாக அமைய உற்சாகத்தோடு 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலையில் அப்பாவும் நானும் ரயிலில் திருத்தனி ஸ்டேட் பேங்கில் சேர புறப்பட்டோம். இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர்தான். அன்றிலிருந்து தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நான் எழுந்து, குழித்து முடிப்பதற்குள் எனக்கு முன்பே அம்மா எழுந்து காலை மற்றும் மதிய உணவை சமைத்து தயாராக வைத்திருப்பார்கள். சரியாக வீட்டில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் திருப்பதி ரயில் நிலையம் இருப்பதால் தினமும் ஆறரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால் 6,45 மணிக்கு திருப்பதி-சென்னை ரயில் பிடிக்க சரியாக இருக்கும். இரண்டு மணி நேரம் ரயில் பயணத்திற்கு பிறகு சுமார் ஒன்பது மணி அளவில் திருத்தனி ரயில் நிலையத்தில் இறங்குவேன்.
வங்கி பத்து மணிக்குதான் துவங்கும் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு வந்த காலை உணவை ரயில் நிலையத்தில் முடித்து விட்டு நேரத்தையும் கடத்தி ஒன்பதரை மணி அளவில் வங்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தால் மெதுவாக நடந்தாலே பத்து நிமிடத்திற்குள் வங்கியை சென்றடையக்கூடிய தொலைவில்தான் பணி புரியும் ஸ்டேட் பேங்க் இருக்கிறது.
காலையில் வங்கிக்குள் நுழைவதில் இருந்து மாலை வெளியே வருவது வரையிலும் அலுவலக நேரம் எல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. கீழ்மட்ட பணியாளர்களில் இருந்து மேல் மட்ட அதிகாரிகள் வரை நன்றாக பழகுகிறார்கள். தேவைப்படும் உதவியைச் செய்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு போகப் போக எல்லாம் சரியாகி விட்டது. தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்ளவும் தெரிஞ்சுக்கவும் நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் செய்யும் வேலையில் திருப்தியும் இருக்கிறது.
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து வீதம் திருப்பதிக்குச் செல்லும் பேருந்து  வங்கி முன்பிலிருந்துதான் செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. வங்கி செக்கூரிட்டி அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஏற்றிவிடுகிறார்கள். அதனால் பேருந்து ஏறுவதில் சிக்கல் ஏதும் கிடையாது.
இரண்டு மணி நேர பேருந்து பயண  நேரம் தவிர காலையில் இருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் இரவு வீடு திரும்புவதற்குள் உடலும் மனமும் சோர்வடைந்து விடுகிறது. புதிதாக எதையும் வாசிக்கவும் எழுதவும் மனம் ஒத்துழைப்பது கிடையாது. கடந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே வீடு வேலை மட்டுமே மூளை முழுக்க ஆக்கிரமித்திருப்பதில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
வாழ்வின் அர்த்தமே தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வதில்தான் இருக்கிற்து என்பதை உணரத் துவங்கி இருக்கிறேன். அதனால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை வர வரும் புத்தாண்டில் இதற்கொரு நன்கு திட்டமிட்டு நல்ல முடிவெடுத்து வேலையும் தனி பட்ட வாழ்க்கையையும் சம அளவில் சமாளிக்க புத்தாண்டு சபதம் எடுக்க இருக்கிறேன். பார்ப்போம்.
மற்றதை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது ஆண்டில் சந்திப்போம்.

Thursday, December 15, 2016

வேலை


பொதுவா நம்ம ஊருல அறிவுரை சொல்லுறதுக்கும் சரி; ஆலோசனை சொல்லுறதுக்கும் சரி ஆட்களுக்கு பஞ்சமே கிடையாது. அந்த வரிசையில அப்பாவி பதிவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் ‘ரொம்ப நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க நல்ல எதிர் காலம் உங்களுக்கு இருக்கு’னு மனதார அடிச்சு விட்டிருக்கேன் :)
இத்தனை நாளா எவ்வளவு ஈசியா சொல்லி இருக்கேன். ஆனா செயல்ல அதைச் செய்யுறதுல இருக்குற சிக்கல் இருக்கே அப்பப்பா ரெண்டு மூணு நாளா ஒரு பதிவ எழுத ஆரம்பிக்க முயற்சி செஞ்சு செஞ்சு ஷ்ஷப்பா..ம்ம்ம்ம்.. ஒரு வழியா உட்கார்ந்து இதோ கிடுகிடுனு எழுத ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து பதிவை வாசிக்க இருப்பவர்களுக்கு போர் அடிக்கிறதொரு பதிவாக இருந்தால் நான் பொறுப்பாக மாட்டேன் :)
அட என்ன நீ எத்தனை நாள் கழிச்சு பதிவு பக்கம் எட்டிப்பாக்குற. ஆரம்பத்துலயே இப்படி புலம்புறதானு #நண்பர்கள்/அன்பர்கள் கேட்பது என் காதுகளில் கேட்காமல் இல்லை. என்ன செய்வது மிக நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வேண்டியச் சூழல் (நண்பர்களுக்கு ஒரு நல்ல விசயத்தச் சொல்ல பதிவு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறேன் :) )
சில தினங்களுக்கு முன்பு இல்லை பல வாரத்திற்கு முன்பே அந்த நல்ல விசயத்தின் துவக்கம் தெரிந்ததும் தெரிந்த பதிவர்கள்; நண்பர்களுக்கு தொலைபேசி வாயிலாக சொல்லி இருந்தேன். தேம்ஸ் நதிக்கரையிலே பாட்டி எலிசபத் ஊரிலே; வசித்து வரும் பதிவருக்கு மட்டும் அந்த விசயத்தை மின் அஞ்சலில் சொல்லியிருந்தேன். உடனடியாக நீண்டதொரு பதில் அனுப்பி என்னை திக்குமுக்காடச் செய்திருந்தார். பதில் அனுப்ப நினைத்து நினைத்து தொடர்ந்து பல தடைகள் நிஜமாகவே ஏற்பட ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியே சொல்லிட்டுவர்றதை விடவும் பதிவுல சொல்லிட்டா என்னுடைய ப்ளாக் வாசகர்களுக்கு (அப்படி யாராவது எங்காவது எட்டுத்திக்கிலும் இருந்தால் மகிழ்வார்கள் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்:))))
***
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் சுமார் 17000 ஜூனியர் அசோசியேட் (clerk) காலி இடங்களை நிரப்ப நோடிஃபிகேஷன் வெளியிட்டிருந்தது. prelims, mains முறையே தேர்வை நடத்தியது. மே மாதம் prelims எழுதியதில் தேர்ச்சி பெற்றதை அடுத்து june மாத கடைசியில் main தேர்வை எழுதி இருந்தேன். அதன் முடிவுகள் அக்டோபர் 27 இரவு வந்தது. மோடி அரசு குருப் c மற்றும் d பணிகளுக்கு interview நீக்க பட்டதால் மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து மெடிக்கல் டெஸ்ட் மற்றும் டாக்குமெண்ட் வெரிபிகேஷன் சென்ற மாதம் நடந்தது. எல்லாம் சரியாக இருந்ததை அடுத்து 1-12-2016 அன்று மின் அஞ்சலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் வந்திருந்தது. வரும் திங்கட் கிழமை அதாவது 19ஆம் தேதில இருந்து முதலில் ஒரு வாரத்திற்கு சென்னை நுங்கபாக்கத்தில் இருக்கும் state bank learning center ல் பயிற்சி கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து அனேகமாக பயிற்சியின் கடைசி நாள் அன்று பணி செய்ய வேண்டிய இடத்திற்கான உத்தரவு கடிதம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ***
கிட்டதட்ட ஒரு வருட உழைப்பு. 2015 மே மாதம் எம்ஏ முடித்ததும் அடுத்து என்ன செய்வதென்று குழப்ப நிலையில் இருந்தேன். வங்கி பணிக்குச் சென்றால் நான் எதிர் பார்க்கும் அரசாங்க வேலை கிடைக்கும் என்பதால் தொடர்ந்து வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். முதலில் தோல்விகள் இருந்தாலும் தோல்விகளையே வெற்றிக்கான படிகளாக மாற்றி இறுதியாக இதோ எதிர்பார்த்தபடி வங்கி ஊழியராகப்போறேன். இது துவக்கம் தான். இந்த வெற்றியைக் கொண்டு என்னுடைய லச்சியங்களை எட்டுவதற்கான ஒரு ஏணிப் படிதான் இந்த வேலை என்பதை மனதில் உறுதிக்கொண்டு தொடர்ந்து இயங்க இருக்கிறேன்.
இனி அவ்வப்போது நேரம் கிடைத்தால் எழுதவும் முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் இத்துடன் நிறுத்திக்கொண்டு மற்றதை எல்லாம் வேறு ஒரு நாள் பார்க்கலாம்:)))