Saturday, September 30, 2017

சிங்கப்பூரில் முதல் மெட்ரோ பயணம் - சிங்கப்பூர் பயண தொடர் (பாகம் - 6)


இந்தியாவில் சுற்றிப்பார்ப்பதைவிடவும் சிங்கப்பூரில் சுற்றிப்பார்ப்பது ரொம்ப ஈசி+பாதுகாப்பானது’ என்று அகிலா அக்கா சொல்லி இருந்தாங்க. சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பதை சிங்கப்பூரில் இறங்கியதில் இருந்து உணர முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூர் MRT ரயில்/ மெட்ரோ.


Wednesday, September 13, 2017

சிங்கப்பூருக்கு! (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.


நாங்கள் சிங்கப்பூருக்கு பயணிக்கும் ஏர் இந்தியா விமானம் சாங்கி விமான நிலைய ரன்வேயை தொடும் போது மணிக்கு 27கிமி வேகம் இருந்தது. படிப்படியாக நான்கு கிமி நீளம் கொண்ட ரன்வேயில் ஓடி வேகத்தை குறைத்து சரியாக மாலை ஐந்தரை மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு) சாங்கி விமான நிலையத்தை அடைந்தோம். உதவி தேவைப்படுவர்களை முதலில் விமானத்தில் இருந்து வெளியே அனுமதித்த பிறகுதான் மற்றவரை வெளியே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். விமானத்தில் இருந்து டெர்மினல்க்கு செல்ல ஏரோ பிரிட்ஜைதான் பயன்படுத்துகிரார்கள். அதில் நடக்கும்போது சென்னையில் இருந்த ஏரோ பிரிட்ஜுக்கும் இதற்கும் ஏதோ வித்யாசம் இருப்பதாக உணர்ந்தேன். சில நொடிகள் அதில் நடந்தால் இரண்டாம் டெர்மினலில் அரைவல் பகுதியை அடைவோம். அங்கிருந்து இமிக்ரேஷன் பகுதிக்குள் நுழைந்தோம்.

Tuesday, September 05, 2017

சிங்கப்பூருக்கு! (4). விமான பயண அணுபவம்.

சிங்கப்பூருக்கு! (4). விமான பயண அணுபவம்.

 என் முதல் வெளிநாட்டு பயணம் துவங்கிய சில நொடிகளில் விமானம் புறப்பட்டு விமானத்தின் பிரேக் திடீரென ஜாம் ஆனதால் விமானத்தை விடவும் கற்பனை வேகமாக பயணிக்க ஆரம்பிச்சது. அது வரை கேள்வி பட்ட விமான விபத்துக்கள் நினைவுக்கு வந்து என்னை பதற்றமடையச் செய்தது. மதியம் ஒரு மணிக்கு மீண்டும் பைலெட் ’பிரச்சனை சரி செய்ய பொரியாளர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிரார்கள்‘னு அறிவித்திருந்தார். கடைசி வரைக்கும் பழுது சரி செய்யாவிடில் என்ன ஆகும்னு எனக்கு யோசனை ஓட ஆரம்பிச்சது. சிங்கப்பூரில் இறங்கிய நொடியில் இருந்து ஒவ்வொரு வினாடியும் வீண் செய்யாமல் சுற்றிப்பார்க்கனும்னு முடிவு செய்திருந்தேன். அன்று இரவு சிங்கப்பூர் சென்றதும் உடனடியாக லிட்டில் இந்தியாவில் 24 மணி நேரம் இயங்கும் முஸ்தப்பா ஷாப்பிங் மால் பார்க்க திட்டம் போட்டிருந்தேன். சென்னை விமான நிலையத்துலயே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகப்போவதை நினைத்ததும் என்ன செய்வதென்று யோசிச்சுகிட்டே இருக்க பைலெட்டிடமிருந்து இன்னொரு அறிவிப்பு. ’உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. விமானம் புறப்பட தயாராகி விட்டது. வானிலை ஒத்துழைத்தால் மூணரை மணி நேரத்தில் சிங்கப்பூரில் சேர்க்க முயற்சிக்கிறோம்’னு சொன்னார்.

பைலேட் பேசி முடித்ததை அடுத்து தனித்தனியே ஏர் ஹோஸ்டஸ் ஒவ்வொருத்தரையும் சீட் பெல்ட் சரியாக போட்டிருக்கிறார்களா என செக் செய்துச் சென்றார்கள். இரண்டு மணி நேர தாமதத்தின் பிறகு மதியம் 1:30க்கு நாங்கள் பயணிக்கும் விமானம் சப்தமின்றி மெதுவாக முன்னோக்கி நகர துவங்கியதும் லேசாக ஏற்பட்ட அதிர்வால் விமானம் புறப்பட்டதென உணர முடிஞ்சது. சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று ரன்வேயில் நின்றது. எங்களுக்கு முன்னால் வேறு எதோ ஒரு விமானம் டேகாஃப் ஆவதால் காத்திருக்க சில நொடிகள் நின்றது. மீண்டும் புறப்பட்டது. ரன்வேயில் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை கூட்டி ரன்வேயின் கடைசி வரைச் சென்று யூடன் அடித்து மேலும் வேகத்தை கூட்டி ஃபைலெட் ஒரு கட்டத்தில் புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக செங்குத்தாக விமானத்தை மேலே எழுப்ப துவங்கினார். பயணிகள் அனைவரும் சீட்டில் பின்னோக்கி சாய்வார்கள். தொடர்ந்து விமானம் சில நொடிகள் செங்குத்தாக மேல் நோக்கி செல்லவும் பிறகு சமமாக வரவும் மீண்டும் செங்குத்தாக மேல்நோக்கிச் செல்லவும் திடீரென சில மீட்டர்கள் கீழே இறங்கவும் என மாறி மாறி செய்வதால் காற்றில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக புதிதாக விமானத்தில் பயணிப்பவர் + குழந்தைகளுக்கு டேகாப் சமயம் இரண்டு காதுகள் அடைத்துக்கொள்வதை நன்றாக உணரமுடிந்தது. குறிப்பிட்ட உயரம் அடைந்ததும் சீட் பெல்ட் கலட்டிக்குமாறு பைலட்டிடம் இருந்து அறிவிப்பு வந்திருந்தது.

மணி மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு புறம் பசி இன்னொரு புறம் பயம் இந்த இரண்டும் என்னை வாட்டத் துவங்கியதும் எனக்கு பக்கத்தில் இருக்கும் பெண் நினைவுக்கு வந்ததும் கொஞ்சம் கூல் ஆகிவிட்டேன்:) சென்னையில் விமானத்தில் ஏறியதில் இருந்து அந்தப் பெண் போனில் பிசியாக இருந்தாள். இருவரும் எதுவும் அதுவரை பேசிக்கல. ‘சிங்கப்பூருக்கு டூர் போறீங்களா?’ ஆரம்பித்தேன். ‘இல்ல. என்னோட அண்ணா அங்க வேலை செய்றான்’ சொன்னாங்க. அடுத்து ’எந்த ஊரு?’ ‘என்ன செய்யுறீங்க?’ என்றல்லாம் கேட்க நினைத்தாலும் எதையும் கேட்டுக்கல.

 நாங்கள் பயணிக்கும் ஏர் இந்தியா 346 விமானத்தில் ட்ரிங்ஸ் மற்றும் சாப்பாடு இலவசம் என்பதால் ஏர் ஹோஸ்டஸ் தங்களது பணியை ஆரம்பித்திருந்தார்கள். முதலில் ஒவ்வொருவருக்கும் சாப்பிட peanuts கொண்டு வந்து கொடுத்தார்கள். அதனை அடுத்து குடிப்பதற்கு கூல் ட்ரிங்ஸ் மற்றும் ஹாட் ட்ரிங்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். எப்படியும் ஐந்து அல்லது ஆறு ஏர் ஹோஸ்டஸ் விமானத்தில் இருந்தார்கள். அதில் ஆண்கள்/பெண்கள் என கலவையாக இருந்தார்கள். அதிலும் எங்களுக்கு பரிமாறியதெல்லாம் ஆண் ஏர் ஹோஸ்டஸ் :(((
 இரண்டு வகையான கூல் ட்ரிங்ஸ் கையில் வைத்திருக்கிறார்கள். நம்மிடம் வரும்போது எது வேண்டுமோ அதைச் சொன்னால் அந்தவகையை பாட்டலில் இருந்து ஒரு க்ளாசில் ஊற்றி கொடுக்கிறார்கள். சரக்கு வேண்டும் என்பவர்களுக்கு சரக்கு ஊற்றி தருகிறார்கள். எனக்கு பின்னால் இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்மனி ஓட்கா க்லாஸ் க்லாஸா உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள்.

ட்ரிங்ஸ் சமாச்சாரம் முடிந்ததும் சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருக்கும் பெண் அது வரை எதுவும் என்னிடம் கேட்காதவள் திடீரென ‘ஆமாம் மீல்ஸ் எல்லாருக்கும்தானே கொடுப்பார்கள்?’னு கேட்டாள். ‘ஆமாம்’னு நான் பதில் சொல்லவும் வெஜ் ஆர் நான்வெஜானு ஏர் ஹோஸ்டஸ் ஒவ்வொருத்தராக கேட்டுட்டே வந்து அதற்கேற்ப உணவை பறிமாரிக்கொண்டு வந்தார்கள். பக்கத்தில் இருப்பவள் வெஜிடேரியன் ஆகதான் இருப்பாள் என யூகித்து வைத்திருந்தேன் (கொஞ்சம் ஓவரதான் அவரைப் பற்றி யோசிக்கிறேனோ:) நான் வெஜ் கேட்டு வாங்கிக்கொண்டாள். நானும் நான் வெஜ் கேட்டு வாங்கிக்கொண்டேன். சுடச் சுட சிக்கன் பிரியாணி + அதோடு சப்பாத்தி என பல ஐட்டம்கள் பிளாஸ்டிக் ட்ரே போன்ற தட்டில் எல்லாம் வைத்து நமக்கு முன்னால் விரித்திருக்கும் பலகை மீது வைப்பார்கள்.

 எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. நேரம் 2:30 நெருங்கிக்கொண்டிருக்கும். எப்படியும் விமானத்தில் பயணிகளுக்கு சாப்பாடு சப்ளை செய்பவர்கள் காலை 11:00 மணிக்கெல்லாம் சமைச்சு பேக் செய்து விமான நிலையத்திற்கு கொண்டுவந்து விமானத்தில் ஏற்றியிருக்க வேண்டும். தினமும் 11:30க்கு புறப்படும் விமானம் அன்றைய தினம் விமானத்தின் பிரேக் புறப்பட்டதும் பழுதடைந்ததால் இரண்டு மணி நேர தாமதத்தின் பிறகு புறப்பட்டாலும் கொண்டு வந்து கொடுத்த உணவு ஆவி வரும் அளவிற்கு பயங்கர சூடாக இருந்தது. எப்படி சாத்தியமாச்சுனு ஒரே டவுட்டு எனக்கு. இப்படியே யோசிச்சுகிட்டே இருந்தா இருக்கும் சூடு ஆறிடப்போகுதுனு சாப்பிட ஆரம்பிச்சதும் சிக்கல் வந்தது. ஸ்பூனா இல்ல கையா ’எதுல சாப்பிடுறது’ அப்படினு. எனக்கு ஸ்பூன்ல சாப்பிடுவதை விடவும் கையில் சாப்பிடுவதில்தான் வசதியும்+சுவையும். அதிக நேரம் யோசிக்காமல் கைதான் முடிவு செய்து ’எப்படியும் கைகழுவ தண்ணி இருக்காது’ என்பதால் விரல்களின் நுனியில் மட்டும் படும் அளவிற்கு எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். சுவை நன்றாக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் டிஷு பேப்பரில் துடைத்துக்கொண்டேன்.

எல்லாரும் சாப்பிட்டு முடிக்கவும் ட்ரே ஏர் ஹோஸ்டஸ் எடுத்து போகவும் சாப்பாடு சமாச்சாரம் எல்லாம் முடிய மூன்றாகி இருந்தது. பைலேட் ‘சாப்பிட்டு முடிஞ்சது போதும் இனி தூங்குங்க’னு விமானத்திற்குள் எரியும் விளக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டார்கள். விமானத்தில் ஒரே இருட்டு. ஆங்காங்ஙே ஜீரோ வாட் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு ஒன்னரை மனி நேரம் ஆகி இருந்தது. நேரமோ மூன்றாகி இருந்தது. சரி இப்போ என்ன செய்வதென்று தெரியாமல் விமானத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர் அவர் இருக்கைக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் குட்டி டீவி மாதிரியான திரையை நோண்ட ஆரம்பிச்சோம். மூவிஸ் ஏற்கனவே பார்த்ததால் வேற என்னஎன்ன இருக்கு பார்த்துகிட்டே வர ம்யூசிக், கேம்ஸ், மேப்ஸ் என இருந்தது. இதில் மேப்ஸ் செலக்ட் செய்து உள்ளே செல்ல அடுத்த இரண்டரை மணி நேரம் ஸ்வாரஸ்யமாக போனது.

இந்த மேப்ஸ் பகுதியில் முதலில் நாங்கள் பார்த்தது விமானம் எந்த வழியாக சிங்கப்பூருக்கு பறந்துக்கொண்டிருக்கிறோம் பார்க்க முடிந்தது. நாங்கள் அந்தச் சமயம் அந்தமான் தீவுகள் மீது சென்றுக்கொண்டிருந்தோம். அடுத்து கவனித்தது விமானத்தின் வேகம், கடல் மட்டத்தில் இருந்து பறக்கும் உயரம் மற்றும் வெளிப்புற சீதோஷ்ண நிலையை பார்க்க முடிந்தது. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து 40,000 அடி (12,000 மீட்டர்) உயரத்தில் மணிக்கு 850 கிமி வேகத்தில் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தோம். அந்தச் சமயம் விமானத்தின் வெளி சீதோஷ்ண நிலை மைனஸ் 40டிகிரி செல்சியேஸ். இந்த தகவல்கள் எல்லாம் ஆட்டோ ரீஃப்ரேஷ் ஆவதால் புள்ளி விபர தகவல்களை துல்லியமாக உடனுக்குடன் பார்க்க முடிகிறது. அந்தமான் அடுத்து நிக்கோபார் தீவு வந்தது. பொதுவாக மலையின் உயரமான பகுதிக்குச் செல்ல செல்ல காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துக்கொண்டே வரும். நாங்களோ உலகத்திலேயே மிக உயர்ந்த, இமயமலையில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை விடவும் உயர்ந்த இடத்தில் பறந்துக்கொண்டிருக்கிறோம் என தெரிந்ததும் பிரமிப்பாக இருந்தது.

சாப்பிடுவதற்கு முன்பு குடித்த ஜூஸ் மற்றும் சாப்பிட்டதும் குடித்த தண்ணி வேலை செய்ததால் டாய்லெட் போக வேண்டி வந்தது. விமானத்தில் டாய்லேட் பின் பகுதியில் இருந்ததால் விமானத்துக்குள்ளே பின்பகுதியை நோக்கி நடந்து போய் டாய்லெட்டுக்குள் போக கதவு திறக்க வேண்டும். நான்குக்கு நான்கு அடியில் விமானம் டாய்லெட் இருக்கும். டாய்லெட்டில் இருந்த சில நிமிடங்கள் பயமாக இருந்தது. நம்ம ஊர் ரயில்களில் டாய்லெட்டிற்குள் சென்றால் ஏற்படும் அதிர்வுப்போன்று விமான டாய்லெட்டிலும் பயங்கர அதிர்வு + சப்தமும் கூட. கைகழுவ தண்ணீர் இருக்காது நினைத்தால் டாய்லெட்டில் ஒரு மூலையில் குட்டி வாஷ் பேஷன் இருந்தது. கை சுத்தம் செய்ய கையை நீட்டினால் வித்யாசமாக காற்றோடு தண்ணீர் வந்தது. டாய்லெட் சமாச்சாரம் முடிந்ததும் மீண்டும் சீட்டிற்கு வந்து மேப்ஸ் திறந்து பார்த்தால் நிக்கோபார் தீவுகளை கடந்து க்ரேட் சேனல் எனப்படும் கடல் பகுதியில் பறந்துக்கொண்டிருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் எவ்வளவு நேரம் தோராயமாக பிடிக்கலாம் என்கிற விவரங்களையும் பார்க்க முடிந்தது. ஒரு பத்து நிமிஷத்துக்கு பிறகு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுகள் வழியாக சென்றுக்கொண்டிருந்தோம்.
 சிங்கப்பூர் நாட்டிற்குள் செல்லும் பயணிகள் மட்டும் இமிக்ரேஷன் ஃபார்ம் வாங்கிக்குமாறு ஏர் ஹோஸ்டஸ் கொடுத்துக்கொண்டு வந்தார்கள். சிலர் சென்னையில் இருந்து ஆஸ்ட்ரேலியா, ஜப்பான் நியூசிலேந்த் போன்ற நாடுகளுக்குச் செல்ல ட்ரான்சிட் காக மட்டும் சிங்கப்பூரில் இறங்கி அங்கிருந்து வேறு ப்ளைட் பிடித்துச் செல்வார்கள். அவர்கள் அந்த இமிக்ரேஷன் ஃபார்ம் வாங்க வேண்டாம் சொன்னார்கள். மற்றவர்கள் ஃபார்ம் நிரப்பி சிங்கப்பூரில் இறங்கியதும் இமிக்ரேஷன் சமயத்தில் கேட்பார்கள் தயாராக வைத்திருக்கச் சொன்னார்கள். விமானம் மணிக்கு 850 கிமி வேகத்தில் பறப்பதால் அழுத்தத்தின் காரணமாக லேசான அதிர்வும் அவ்வப்போது பயங்கரமாகவும் அதிர்வு உணர முடிந்தது. விமானம் கண்டு பிடித்தது, அதனை காலத்திற்கேற்ப மாற்றி அமைப்பது என்பதை பற்றியெல்லாம் நினைக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது.

மாலை ஐந்து மணி அளவில் பைலேட் ‘லாண்டிங்கிற்கு தயாராக இருங்கள். இன்னும் கொஞ்சம் நேரத்துல தரை இறங்கப் போறோம்’னு அறிவித்தார். அப்போது சிங்கப்பூருக்கு வெறும் 500 கிமி தொலைவில்தான் இருக்க 12 கிமி உயரத்தில் இருந்து படிபடியாக உயரம் குறைத்துக்கொண்டே வர விமானத்தின் வேகமும் 850கிமில இருந்து 700கிமிக்கு குறைந்தது. அடுத்த சில நிமிடத்திற்குள் நானுறு, மூன்னூரு, இருநூறு கிமி தூரம்தான் சிங்கப்பூருக்கு என குறைந்துகிட்டே வர பறக்கும் உயரமும் பத்து, எட்டு, ஏழு கிமி என குறைந்துக்கொண்டே வந்தது. விமானத்தின் வெளிப்புற சீதோஷ்ண நிலையிலும் மாற்றம் இருந்தது. மைனஸ் 40 செல்சியசில் இருந்து குறைந்து மைனஸ் ஐந்து செல்சியத்திற்கு குறைந்தது. மாலை ஐந்து இருவது இருக்கும். இன்னும் 100 கிமி தூரம்தான் சிங்கப்பூருக்கு இருக்குனு அப்பா அம்மாவிடம் சொல்வதற்குள் வெறும் பத்து கிமி தூரம்தான் இருப்பதாக காட்டியது. அப்போது ஒரே அடியா நான்கு கிமி உயரத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு விமானம் இறங்கியது. இந்தச் சமயம் காதுகள் மீண்டும் அடைக்க ஆரம்பிச்சது அதோடு மேலிருந்து கீழே இறங்குவதால் வயிற்றில் ஒருவித உணர்வு ஏற்பட்டது. விமான நிலையம் நெருங்க நெருங்க மீண்டும் பயம். ’கரெக்ட்டா தரை இறங்கும்போது ப்ரேக் பிடிக்குமா’னு... மாலை 5:28க்கு விமானம் ரன்வேயை தொடும் போது மணிக்கு 27கிமி வேகம் இருந்தது. படிப்படியாக நான்கு கிமி நீளம் கொண்ட ரண்வேயில் ஓடி வேகத்தை குறைத்து சரியாக மாலை ஐந்தரை மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு) சாங்கி விமான நிலையத்தை அடைந்தோம். விமானத்தின் விளக்குகள் எரிந்ததும் எதோ தியேட்டரில் திரைப்படம் பார்த்ததைப் போன்ற திருப்தி இருந்தது. பைலேட் சிங்கப்பூர் லோக்கல் டைம் சொல்லி போன் மற்றும் கைகடிகாரங்களில் மாற்றிக்குமாறு சொன்னார். அடுத்து வெளியேச் செல்ல உதவி தேவைப்படுவர்களை மட்டும் முதலில் அழைத்தார்கள். ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததால் இறங்க மக்கள் சீக்கிரம் வெளியே போக அவர் அவர் இருக்கைகளில் நின்று விட்டார்கள். சிறிது நேரம்கழித்து மற்றவரை வெளியே அனுமதிக்க ஆரம்பித்தார்கள்.


*
சிங்கப்பூர் பத்திரமாக வந்தாச்சு:)
அடுத்து என்ன நடந்தது?
அடுத்த பகுதியில்-தொடரும்:)

Monday, August 28, 2017

சிங்கப்பூருக்கு! (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.ஆகஸ்ட் 11-வெள்ளிக்கிழமை இரவு பயணத்திற்கு  தேவையான பொருட்கள், சாப்பிடுவதற்கான தீனிபண்டங்கள்,  ஐந்து நாட்கள் அணிய வேண்டிய துணிகள் எல்லாம் பைகளில்  அடுக்கினாலும் அடுத்த நாள் (12 ஆகஸ்ட் சனிக்கிழமை) எழுந்திரிச்சதுல இருந்து வீட்டை விட்டு புறப்படும் கடைசி நிமிடம் வரை ஒரே பரபரப்புதான். ’அத எடுத்தியா’ ‘இது மறக்கலியே’னு மாறி மாறி எங்களுக்குள்ள கேட்டுகிட்டு ஒரே ரகளை. ஒருவழியா சரியா அதிகாலை மூன்று மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டோம். முதலில் திருப்பதிக்கு அருகில் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா தொடர்வண்டி நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆட்டோ ஒன்றை பிடித்து ரேணீகுண்டா ரயில் நிலையத்திற்குச் சென்றோம். அங்கிருந்து காச்சிகூடா-சென்னை எக்மோர்-வழியாக செங்கல்பட்டு வரை  செல்லும் தினசரி ரயிலில் சென்னைக்கு போக வேண்டும். அங்கிருந்து சிங்கப்பூர் போவதற்கான  விமானம் ஏறவேண்டும். அதுதான் எங்களது திட்டம்.

Wednesday, August 23, 2017

சிங்கப்பூருக்கு! (2). ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி?திட்டமிட்டபடி முதல் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. எதிர்பார்த்ததைவிடவும் சிங்கப்பூர் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நம்மை சிங்கப்பூருக்கு ஈர்க்க கூடிய காந்த சக்தி கொண்ட நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரைப்பற்றி கேள்விப்பட்டதைவிடவும் சிங்கப்பூர் செமையா இருந்தது. அங்கு சென்று இறங்கியதில் இருந்து அந்த அனுபவத்தை என்னால் தரிசிக்க முடிஞ்சது. சிங்கப்பூரில் நான் பெற்ற அனுபவத்தை, அதன் வழியாக ஏற்பட்ட எண்ணங்களை எல்லாம் தொடராக எழுத ஆசை. எவ்வளவு தூரம் எண்ணங்களை எழுத்தில் கொண்டுவருவேன் என்பதில் சிறு தயக்கம்.
முதல் பகுதி

 வாசிச்சு கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள். அதனுடைய தொடர்ச்சியாக இந்த பதிவு இருக்கும். முதல் பாகத்தில் சிங்கப்பூர் போக ஏற்பாடு செய்ததில் சிலவற்றை எழுதி இருந்தேன். விமான டிக்கெட் முன்பதிவு செய்தது, சிங்கப்பூரில் தங்கும் இடம் தேர்ந்தெடுத்தது மற்றும் விசா பெறுவது வரை எழுதி இருந்தேன். அதன் பிறகு நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி.

சிங்கப்பூருக்கு போக முடிவு செய்ததில் இருந்து மாதங்கள் கடந்து வாரங்கள் முடிந்து புறப்படுவதற்கான நாள் நெருங்க ஆரம்பித்தது. விசா வந்ததை அடுத்து  டாலரைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சேன். நம்முடைய பணத்தை அன்நாட்டில் செலவு செய்ய முடியாது என்பதால் அவர்களது பணத்தை பெற முயற்சிகள் ஆரம்பிச்சேன். எனக்கு இதுதான் முதல் வெளிநாட்டு அனுபவம் என்பதால் பணத்தை எங்கு மாற்றுவது என்பதில் தெளிவு கிடையாது.  ஏற்கனவே வெளிநாடு சென்று வந்தவர்களிடம் கேட்டால் உள்ளூரில் இருக்கும் money exchange ஏஜண்டுக்களிடம், வங்கிகள், விமான நிலையத்தில் நம்ம ஊர் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து  சிங்கப்பூர் டாலரை பெறலாம்னு சொன்னார்கள்.

இரண்டு நாடுகளோட  பண மதிப்பு ஒரே மாதிரி இருந்தாக்க ஒரு பிரச்சனையும் இல்ல. கொடுக்குற ருபாக்கு சமமா ஈசியா டாலர்ஸ் பெறலாம். இந்திய ரூபாய்க்கும் சிங்கப்பூர் டாலருக்கும்  இடையே இருக்கும் வித்யாசமோ மலைக்கும் மடுக்கும் உள்ள வித்தியாசம். அது வரை நான் கேள்வி பட்டது ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய்க்குச் சமம் அப்படிங்கிறது மட்டும்தான். நம்ம ஊர் பணத்தை டாலராக மாற்ற ஆரம்பிச்சா  பைய்யிங், செல்லிங், எக்ஸ்சேஜ் போன்ற வார்த்தைகள் எல்லாம் கேள்விபட நேர்ந்தது. இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்கலாம்னா சரியான நபர் யாரும் கிடைக்கல. ஒரு நாள் நடு இரவு தூக்கம் கலைஞ்சது. எவ்வளவோ முயற்சித்தாலும் தூக்கம் வரல. எதைஎதையோ  யோசிச்சுகிட்டே இருக்குறச்சே திடீரென மண்டையில பல்ப் எரிய ஆரம்பிச்சது.

அதாவது இங்கிருந்து சிங்கப்பூருக்கு போறவுங்க சிங்கப்பூர் டாலரை  வாங்க வேண்டும். இதைதான் பையிங் சொல்கிறார்கள். இடத்திற்கு இடம் பையிங் மதிப்பு மாறுபடுது. 48 ரூபாயில் இருந்து 50 ருபாய் வரை ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பாக நிர்ணயித்து விற்பார்கள். ஆனால் சந்தையில் உண்மை நிலவரமோ 47 ருபாயில்தான் இருக்கும்.

செல்லிங்க்னா நம்மிடம் இருக்கும் டாலரை கொடுத்து அதற்கு நம்ம ஊர் பணத்தை பெறுவது. செல்லிங் மதிப்பு எப்போதுமே பைய்யிங்கைவிடவும் குறைவாகதான் இருக்கும். செல்லிங்க் மதிப்பும் சந்தையில் 47 ருபாயில்தான் இருக்கும். 48 ரூபாய் கொடுத்து நீங்கள் ஒரு டாலர் பெற்றால் அதை திருப்பி கொடுத்தால் 46 அல்லது 45 ருபாய்தான் கொடுப்பார்கள். மணி எக்ஸ்சேஜ் செய்பவர்கள் தங்களது லாபத்திற்காக நம்மிடம் டாலரை விற்கும்போது அதிக விலைக்கும், நம்மிடம் இருந்து டாலரை பெறும்போது குறைந்த விலைக்கும் வாங்குவார்கள். பைய்யிங் செல்லிங் கான்செப்ட் புரிஞ்சதும் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. அந்த இரவு நீண்ட நேரத்திற்கு தூக்கமே வரவில்லை.

அடுத்து எங்கு ரூபாய் கொடுத்து டாலர் வாங்குவது என்பதில் தெளிவு இல்லை. ஏதாவது லோக்கல்ல இருக்கும் மணி எக்ஸ்சேஜ் ஏஜண்டிடம் வாங்கலாம்னா ‘எங்க போலி கரன்ஸி கொடுத்திடுவானோ’ ‘அதிக விலை கொடுத்து டாலர் வாங்கணுமோ’னு ஒரு பயம். சரி விமான நிலையத்தில் வாங்கலாம்னா ’சர்வீஸ் சார்ச் அதிகமா இருக்கும்’னு ஒருத்தர் சொல்லி இருந்தார். சரி வங்கிகள்ல நிலவரம் எப்படி இருக்குனு விசாரிக்க திருப்பதி எஸ்பிஐ பிரதான கிளைக்குச் சென்றோம். அங்கிருக்கும் ஃபாரெக்ஸ் கவுண்டருக்குச் சென்று விசாரிச்சா ‘நாங்க பிசிகலாக ரூபாய் பெற்றுக்கோண்டு  டாலரை தருவது கிடையாது. அதற்கு மாற்றாக State Bank Multi-currency Foreign Travel Card வாங்கிக்குமாறு பரிந்துரைத்தார்.

 ‘என்கிட்டதான் க்லோபல் கார்ட் இருக்கே. உலகத்துல எந்த நாட்டிலும் பயன்படுத்தலாமே. எங்களுக்கு வேண்டியது டாலர்ஸ்‘னு சொன்னா ‘நீங்கள் க்லோபல் கார்ட் சிங்கப்பூரில் தாராளமாக பயன்படுத்தலாம். அங்கு இருக்கும் ஏடிஎம்மில் சிங்கப்பூர் டாலரை வித்ட்ரா செய்யலாம். ஷாப்பிங்கிற்கு போனா க்லோபல் கார்ட் வழியாக ஸ்வைப் செய்து  பணமும் செலுத்தலாம். என்ன கரன்சி கன்வர்ஷன் மற்றும் சர்வீஸ் சார்ஜ் பெயரில் ஒவ்வொரு முறையும் நீங்கள்  ஏடிஎம் கார்ட் பயன்படுத்தும் போது நிறைய பணத்தை இழக்க நேரிடும். கரன்சி கன்வர்ஷன் மற்றும் சர்வீஸ் ச்சார்ச் தொல்லைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க சிறந்தது Foreign Travel Card ’னு சொன்னார்.அவர் சொன்னதை யோசிச்சு பார்த்ததுல விஷயம் இருக்குனு உரைச்சதும் உடனடியா ஃபாரின் ட்ராவெல் கார்ட் வாங்க முடிவு செய்தோம். அந்த கார்ட் வாங்கனும்னா முதல்ல ஒரு அக்கவுண்ட் எஸ்பியைல இருக்கனும். என்னுடைய அக்கவுண்ட் திருத்தனியில் இருப்பதால் தம்பி அக்கவுண்ட் அதே கிளையில் இருந்ததால் தம்பி பெயரில் கார்ட் வாங்குறதாச் சொன்னதும் ஒரு அப்ளிகேஷன் கொடுத்தார். அப்ளிகேஷன்  நிரப்பியதும் அதனுடன்  பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விமான டிக்கெட்டுக்கள் மற்றும் விசா காப்பி இணைச்சு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் பரிசீலித்துவிட்டு  நமக்கு கார்ட் கொடுக்கலாம்னு முடிவு செய்ததும் அன்றைய தினம் சிங்கப்பூர் டாலர் பைய்யிங் விலை-மதிப்பை பார்த்து எவ்வளவு  டாலர் நாம வாங்குறோம்னு சொன்னா கணக்கு போட்டு அதோடு சர்வீஸ் சார்ஜ் மற்றும் கார்டுக்கான விலையும் சேர்த்து சொல்வார்.  பணத்தை  நம்முடைய அக்கவுண்டில் டெப்பாசிட் செய்யனும்.

அடுத்து வித்ரா ஸ்லிப் ஒன்றில்  நிரப்பி கையெழுத்து போட்டு கொடுத்தால் கார்ட் வாங்குபவர் அக்கவுண்டில் இருந்து பணத்தை டெபிட் செய்து Foreign Travel Card.ல் டெபிட் செய்த பணதிற்கு இணையான சிங்கப்பூர் டாலர்களை லோர்ட் செய்து கொடுப்பார்கள்.

தம்பி அக்கவுண்டில் முதலில் ருபாய் 24,000 டெப்பாஸிட் செய்தோம். அன்றைய தினம் சிங்கப்பூர் 1டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு 47.66ருபாயாக இருந்தது. எங்களுக்கு வேண்டியது 500 சிங்கப்பூர் டாலர்கள் என்பதால் அதற்கான சர்விஸ் சார்ஜ் மற்றும் கார்டுக்கான விலையும் (105) கூட்டி 23,980 ருபாய் மொத்தமாக ஆகும் சொன்னார். அந்த தொகையை வித்ட்ரா ஸ்லிப்பில் நிரப்பி கையெழுத்து போட்டு கொடுத்ததை அடுத்து அரை மணி நேரத்தில் எங்களுக்கான 500 சிங்கப்பூர் டாலர்ஸ் லோர்ட் செய்ய பட்ட State Bank Multi-currency Foreign Travel Card கொடுத்தார்.

*
State Bank Multi-currency Foreign Travel Card பற்றி மேலும் ஒரு சில தகவல்கள்:

இந்த கார்டோட விலை 105 ருபாய். வேல்டிடி 5 வருஷம். இது மல்டிபுல்  கரன்சி ஃபாரின் கார்ட் என்பதால்  அங்கிகரிக்கபட்ட நாடுகளுக்குச் செல்லும்போதும் பயன்படுத்திக்கலாம். தற்போதைக்கு  USD, GBP, EUR மற்றும்  SGD மட்டும் சப்போர்ட் செய்கிறது. ஒரு வேளை கார்டில் இருக்கும் டாலர்ஸ் தீர்ந்துவிட்டால் ரீலோர்ட் செய்ஞ்சுக்கும் வசதியும் உண்டு.

மேலும் விவரங்களுக்கு.
*

தம்பி பெயரில் ஒரு கார்ட் பெற்றுக்கொண்டதை அடுத்து அப்பா பெயரிலும் அடுத்த நாள் ஒரு கார்ட் வாங்கினோம். எங்களிடம் சிங்கப்பூர் டாலர்ஸ் முழுவதும் Foreign Travel கார்டில்தான் இருக்கு. ஆனால் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் சமயத்தில் அந்நாட்டிற்குள் நுழைய ’குறைந்தது இவ்வளவு டாலர்ஸ் கையில் இருக்கனும்’னு ஏதாவது சட்டம் இருக்குமோனு புறப்படுவதற்கு ஒரு நாள் இடைவெளி இருக்கும் போது திடீரென ஒரு பயம் தொற்றிக்கொண்டது. அதனால குறைந்தது 500 டாலர்ஸ் ஆச்சும்  கையில் ரொக்கமாக இருந்தால் நல்லதுனு பட்டது.

ஆகஸ்ட் 11-வெள்ளிக்கிழமை அன்று மதியம் இரண்டு மணிக்கெல்லாம் பர்மிஷன் கேட்டு வங்கியில் இருந்து புறப்பட்டேன். திருப்பதியை அடையும்போது சமயம் நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. தம்பி பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். வீட்டிற்கு போகாமல் நேராக இருவரும் திருப்பதியில் இருக்கும் தாமஸ்குக் அலுவலகத்திற்குச் சென்றோம். எங்களது தேவையைச் சொன்னதும் இங்கும் ரூபாய் கொடுத்து டாலர்கள் மாற்றுவதால் எங்கள் இருவரில் யாராவது ஒருத்தரது பாஸ்போர்ட், விமான டிக்கெட் மற்றும் விசா ஜெரோக்ஸ் கேட்டார்கள். தம்பியோடது கொடுத்தோம். எல்லாம் பார்த்து விட்டு  எவ்வளவு டாலர்ஸ் வேண்டும் கேட்டார்கள். நாங்கள் 26,000 கையில் கொண்டு சென்றதால் அந்த பணத்திற்கு  ஈடான டாலர்கள் கேட்டோம். அன்றைய தினம் அவர்கள் சிங்கப்பூர் டாலரை விற்கும்  விலையை இணையத்தில் பார்த்து  சர்விஸ் சார்ச் + ஜீஎஸ்டி கூட்டி  மொத்தம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை சொன்னார்கள்.

பணத்தை கட்டியதும் சிங்கப்பூர் டாலர்ஸ் கையில் கொடுத்தார்கள். ஒரு நூறு டாலர் நோட்டும், ஏழு ஐம்பது டாலர் நோட்டுக்களும், ஏழு பத்து டாலர் நோட்டுக்களும், இரண்டு ஐந்து டாலர்  நோட்டுக்களும் மற்றும் ஒரு இரண்டு டாலர் நோட்டாக மொத்தம் 532 சிங்கப்பூர் டாலர் வாங்கினோம். கையில் சிங்கப்பூர் டாலர்ஸ் கிடைத்ததும் ஒரே சந்தோஷம். முதன் முறையாக வெளிநாட்டு பணத்தை தொட்டு-தடவி பார்த்து மகிழ்ந்தேன்.

*

பிறகு வீட்டை அடைந்ததும் பயணத்திற்கு  தேவையான பொருட்கள், சாப்பிடுவதற்கான தீனிபண்டங்கள்,  ஐந்து நாட்கள் அணிய வேண்டிய துணிகள்  எல்லாம் பைகளில்  அடுக்க ஆரம்பித்தோம். நான்கு பேரோட பேக்கிங்கும் முடிய இரவு எட்டு மணி ஆகிவிட்டது. அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்படனும் என்பதால் இரவு சாப்பிட்டு விட்டு  அதிகாலை ஒரு மணிக்கு எழுந்துரிக்க அலாரம் வைத்து படுத்தால் தூக்கமே வரவில்லை. ஒரு வழியாக எப்படியோ துங்கியாச்சு.
*

பின்  குறிப்பு:
இத்தோட இந்த பதிவ நிறுத்திக்கிறேன். 12 ஆகஸ்ட் சனிக்கிழமை எழுந்திரிச்சதுல இருந்து மத்ததெல்லாம் அடுத்த பகுதியில தொடரும்.

Sunday, July 30, 2017

சிங்கப்பூருக்கு!


சிறுவயதில் இருந்தே எனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாகவே உண்டு. எங்காவது வெள்ளையர்களை பார்த்தால் அவர்களோடு பேச  மனம்  பரபரக்கும் (இப்போதும் கூட). உறவினர்கள்/தெரிந்தவர்கள் யாராவது வெளிநாட்டுக்குப் போய் வந்தார்கள் என்று தெரிந்தால் எப்படியாவது அவர்களோடு பேசி வெளி நாட்டு அனுபவத்தை கேட்டுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் அன்றும் இன்றும் இருக்கிறது. அதேமாதிரி எனக்கு அமேரிக்காவிலோ அல்லது ஏதாவது ஐரோப்பா நாடுகளிலாவது குடி ஏறணும்னு சின்னதா ஒரு ஏக்கம் சிறுவயதில் இருந்து எனக்கு இருந்ததுண்டு. இளங்கலை படிப்பு படிக்கும்போதுதான் புத்திக்கு உரைச்சது “அதற்கெல்லாம் எனக்கு சாத்தியம் கிடையாது’ என்கிற  நிஜத்தை. அப்பரம் மேற்படிப்பு படிக்க பலரும் U.S , யூரோப் செல்வதை கவனித்து நானும் அது போன்று ஏதாவது ஒரு  குறுகியகால
பட்டயப் படிப்பாவது படிக்க செல்கிறேன் பெயரில் ஏதாவது ஒரு நாட்டிற்குச் சென்று படிக்கும் சாக்கில் சுற்றிப்பார்த்து எனது ஆசையை தீர்த்துக்க திட்டம் எல்லாம் தீட்டி இருந்தேன். உம். இளங்கலை படிப்பு முடியும் தருணத்தில் அதற்கும் சாத்தியம் இல்லை  என்பதை உணர்ந்ததும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதன் பிறகு வாழ்க்கை வெவ்வேறு திசையில் ஓடி கடைசியாக  ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவில் செட்டில் ஆனதும் மீண்டும் எனக்குள் புதைந்துக்கிடந்த வெளி நாட்டு மோகம் விழித்துக்கொண்டது.

அது வரை நான் மட்டும் வெளிநாட்டிற்கு சென்று வந்தால் போதும் நினைத்திருந்த நான் இப்போது என்னுடன் அப்பா, அம்மா மற்றும் தம்பியை ஏதாவது ஒரு நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். ஏற்கனவே எனக்கும் தம்பிக்கும் பாஸ்போர்ட் இருந்ததால் முதல் மாதச் சம்பளத்தில் அப்பா அம்மாவுக்கு பாஸ்போர்ட் எடுத்துக்கொடுத்தேன்.

அடுத்து எப்போது/எந்த நாட்டிற்கு  செல்வது என்கிற யோசனைக்கு முதல் வருடம்  முடிவில் அல்லது இரண்டாம் வருடத்தில்தான் சிங்கப்பூருக்கு போக முடிவு செய்திருந்தேன். அமேரிக்கா ஐரோப்பா போகும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லாததால் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தேன்.

இவ்வருடம்  மேமாதம்  முதல் வாரம் இருக்கும். ஆகஸ்ட் மாதம்  ஐந்து நாட்கள்  வங்கி விடுமுறை  இருப்பதை கேள்விப்பட்டதும் உடனடியாக முன்பின் எதுவும் யோசிக்காமல் அந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு கூட ஒர் இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு  சிங்கப்பூரை சுற்றிப் பார்த்து வரலாம் என அவசர கால முடிவு ஒன்றை எடுத்ததோடு அல்லாமல் அந்த இரவோடு இரவாக முதலில் விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அதற்கு முன்பு  விமான டிக்கட்  புக் செய்த அனுபவம் இல்லை என்றாலும் பொதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணமாக இருக்கும் என பொதுப்படையான நம்பிக்கையில் மேக்மைட்ரிப் இணையதளம் வழியாக குறைந்த கட்டணமாக இருக்கும் விமானம் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்தாகிவிட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு  ஏர் இந்தியா விமானம். கட்டணம் ஒருத்தருக்கு 6850 ருபாய். விமானத்தில் உணவு+ இலவசமாக நபருக்கு 30 கிலோ வரை செக்கின் லக்கேச் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால் திருப்பு பயண தினத்தன்று குறைந்த கட்டணமாக இருந்த தேர்ந்தெடுத்த விமானத்தில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. உணவும் கிடையாது; செக்கின் லக்கேச்கென தனியாக கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். அது தெரியாமல் வெறும் டிக்கட் மட்டும் முன்பதிவு செய்து விட்டேன். அதைச் சரி செய்ய ஒரு வார போராட்டத்திற்கு பிறகு செக்கின் லக்கேச் 25 கிலோ தம்பி டிக்கெட்டுக்கு மட்டும் தனியாக கட்டணம் (2550 ருபாய்) செலுத்த வேண்டி இருந்தது.

விமானத்திற்குள் அனுமதிக்கும் ஹேண்ட் லக்கேச் நபருக்கு 7 கிலோ வரை அனுமதிப்பார்கள். இந்த வசதி அனைத்து விமானங்களிலும் இலவசம். கொண்டு போகும் பொருட்களில்  மட்டும் சில கட்டுப்பாடு+ கைப்பையின் அளவும் நிர்ணயித்த பரிமானத்தில் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு  செண்ட் பாட்டில்கள்+பெர்ஃப்யூம்ஸ் மற்றும் தைலம் ஹெண்ட் பேக்கில் இருக்க கூடாது. அவ்வாறு இருக்கும் பச்சத்தில் சோதனையின்போது பிடி பட்டால் அந்த பொருளை குப்பைத் தொட்டியில் போடவைத்த பிறகுதான்  நம்மை விமானத்திற்குள் அனுமதிப்பார்கள். அதனால் விமானத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை எடுத்துச் செல்ல செக்கின் லக்கெச் தனியாக பெற வேண்டி இருந்தது. மொத்தத்தில் விமான டிக்கட் முன்பதிவு செய்யும்  விஷயத்தில் இப்போது ஒரு தெளிவு வந்திருக்கிறது.

சிங்கப்பூருக்குச் சென்று வர நபருக்கு விமான டிக்கெட் சராசரியாக ஒரு மாதம் முன்பு முன்பதிவு செய்தால் 13 - 14ஆயிரம் வரை ஒருவருக்கு ஆகலாம். இதுவே நீங்கள் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் இன்னும் குறைவான கட்டணத்தில் சென்று வரலாம்.

கவனிக்க: குறைந்த கட்டணமாக இருக்கிறதென விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது செக்கின் லக்கேச் மற்றும் உணவு வசதிகளை பரிசீலிக்கவும். பொதுவாக குறைந்த கட்டணமாக  சிங்கப்பூருக்குச் செல்ல ஸ்கூட் நிறுவன விமானத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் ருபாய் ஐந்தாயிரத்திற்கெல்லாம்  டிக்கெட் கிடைக்கும். ஆனால் அவர்கள் குடிக்க தண்ணீர் கூட தர மாட்டார்கள். அதே நீங்கள் அனைத்து சேவைகளும் அடங்கிய   விமான டிக்கேட் 7 ஆயிரம்-8 ஆயிரத்திற்கு இருந்தாலும் தாராளமாக முன்பதிவு செய்யலாம்.

டிக்கட் எடுத்ததை அடுத்து என்ன செய்வதென்று தெரியாது. வெறும் சிங்கப்பூர் நாட்டின் பெயரைத் தவிர. வீட்டில் இருப்பவர்களிடம் விமான டிக்கட் முன்பதிவு  செய்யப்போவதாக சொல்லவில்லை. எல்லாம் முடிந்த பிறகு சொன்னால் ’ஏதாவது டிராவல் ஏஜண்ட் மூலம் சுற்றுலா செல்வது பாதுகாப்பானது’என்று சொல்லி இருந்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. உள்ளூர் ஆனாலும் சரி; உலக சுற்றுலா ஆனாலும் சரி சுயமாகவே  அனைத்து ஏற்பாடுகளையும்  செய்துக்கொண்டு  சுற்றி வரணும் என்கிறது என்னோட ஆசை. அவ்வாறு
சென்று வந்தால்தான் எனக்கு  முழு திருப்தியாக இருக்கும். அதன் காரணமாகவே டிக்கெட் முன்பதிவு செய்த தினத்தில் இருந்தே  இணையத்தில்  நிறைய தகவல்கள் சேகரிக்க ஆரம்பித்தேன்.

முதலில் சிங்கப்பூரில் இருக்கும் ஐந்து நாட்கள் எங்கெங்கு சுற்றிப்பார்க்கனும் என்னும் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். சிங்கப்பூருக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அங்கு  வசிக்கும் ஒரு சிலரோடு தொடர்பு கொண்டு  தேவையானவற்றை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன்.

எவ்வளவு விசாரித்தாலும் சிங்கப்பூரில் எங்கு தங்குகிறோம் என்பதில் மட்டும் க்ளாரிட்டி வரவில்லை. இணையத்தில் ஹோட்டல்ஸ்  தேடினால்  எக்கச்சக்கமாக வந்து குவிகின்றது. அதில் எது நமக்கு ஏற்றது என்பதில் குழப்பம் இருந்துவந்தது. அதோடு நண்பர் ஒருத்தர் ’சிங்கப்பூர் ஹோட்டல்கள் பொறுத்த வரை அறைக்கு இரண்டு அடல்ட்ஸ் மட்டுமே அனுமதிப்பார்கள்’  என கூறியது மேலும் என்னை பதற்றமடையச்செய்தது. காரணம் சிங்கப்பூரில் ஹோட்டலில் ஒரு நாளுக்கான வாடகைச்  செலவே நம்ம ஊர் கணக்குப்படி பார்த்தால் குறைந்தது ஆறாயிரத்தில் இருந்து ஆரம்பித்தது. நாங்கள் நான்கு பேர் என்பதால் இரண்டு அறை தேவைப்படுவதால் இரண்டு அறைகள்  ஐந்து நாட்களுக்கு என்றால் பட்ஜெட் எங்கோ போய்விடும் என்பதை  உணர்ந்ததும் அதனை சரி செய்யும் விதமாக மின்னல்மாதிரி மூளையில் ஒரு யோசனை பளிச்சென்று தட்டியது. ‘ஹோட்டலில் அறை எடுப்பதே வெறும் இரவு நேரத்தில் மட்டும் வந்து தூங்குவதற்குதானே. எப்படியும் காலை முதல் மாலை வரை வெளியே சுற்றுவதால் ஹோட்டலுக்கு ஏன் அவ்வளவு செலவு செய்ய வேண்டும்’ என எண்ணம் தோன்றியதும் உடனடியாக ஹோட்டலில் இருந்து ஹாஸ்டலுக்கு மாறினேன்.

சிங்கப்பூரில் குறைந்த கட்டணத்தில் சுற்றுலாவாசிகள் தங்க பல தனியார் விடுதிகள் நடத்த  படுவதை கவனிக்கலாம். ஏதாவது ஒன்றில் தங்கிவிடலாம் என முடிவு செய்து பெரும் தயக்கத்தோடு ஒரு விடுதியை தேர்ந்தெடுத்து ’நான்கு பேர் தங்கும் வசதி கொண்ட ஒரு அறை இருக்குமா?’னு விசாரிக்க மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். பதில் உடனுக்குடன்  அனுப்பினார்கள். எல்லாம் விசாரித்த பிறகு லிட்டில் இந்தியாவில் இருக்கும் மித்ரா ஹாஸ்டலில் நாங்கு பேர் தங்கக்கூடிய அறை ஒன்றை முன்பதிவு செய்தேன்.

ஒரு நாளுக்கான அறை வாடகை 110 சிங்கப்பூர் டாலர் சொல்லி இருந்தார்கள். அதே ஐந்து நாட்களுக்கு 550 டாலர்ஸ் (நம்ம ஊர் பண மதிப்பின் படி சுமார் 27,500 ருபாய்). மொத்த தொகையில் 30% ருபாய் 8165 முன்பணமாக செலுத்தச் சொன்னார்கள்.

தங்கும் இடம்  தேர்ந்தெடுத்ததை அடுத்து விசாவைப் பற்றி விசாரித்தால் நிறைய ரிஸ்ட்ரிக்‌ஷன் வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர் விசா பொருத்தவரை தனி நபர்கள்  இந்தியாவில் இருந்து அப்ளை செய்ய முடியாது. அங்கீகரிக்க பட்ட ஏதாவது  ஒரு விசா  ஏஜண்ட் வழியாகத்தான்  நாம் விண்ணப்பிக்க வேண்டும். விசா கட்டணத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஏஜன்சிஸ்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள். திருப்பதியில் விசாரித்தபோது நபருக்கு  3500 சொல்லி இருந்தார்கள். நான்கு பேர் என்றால் மொத்த தொகையில் ஆயிரம் ருபாய் குறைப்பதாகச் சொல்லி இருந்தார்கள். ‘நாம் ஏன் சென்னையில் முயற்சிக்க கூடாது?’னு இணையத்தில் தேடி ஒவ்வொரு   ஏஜன்சிஸுக்கும் போன் செய்து பார்த்தேன். 1900 முதல் 2500 வரை வசூலிக்கிறார்கள்.

புறப்படும் தேதிக்கு இருவது நாட்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பித்தால் போதும் சொல்லி இருந்தார்கள். அதனால் நான் இம்மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு  எதிரில் இருக்கும் மதுரா டூர் ஏஜன்சி வழியாக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தேன். 1950.

விசா விண்ணப்பிப்பதற்கான தேவையான  ஆவணங்கள் பார்த்தால்: சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைவரும் தனித்தனியே முதலில்
 விண்ணப்ப படிமம் நிரப்ப வேண்டும்.  அதனுடன் ஒரிஜினல் பாஸ்போர்ட், 2 புகைப்படங்கள் (மாதிரி படம்)

 மற்றும் சிங்கப்பூருக்குச் சென்று வரும் டிக்கெட்டுக்கள்+எங்கு தங்குகிறோம் என்பதற்கான ரசீது இணைக்க வேண்டும். கூடுதலாக  சிங்கப்பூர் செல்ல நபருக்கு நபர் மேலும் ஒரு சில ஆவணங்கள் தேவைப்படலாம். உதாரணத்திற்கு நான் அரசு பணியில் இருப்பதால் அலுவலகத்தில் இருந்து நோ அப்ஜக்‌ஷன் சர்டிஃபிகேட் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்தையும் தயார் செய்த பிறகு விசா வாங்க முடிவு செய்த  விசா ஏஜண்டிடம் சமர்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக  இருக்கும் பச்சத்தில்  நான்கு  வேலை நாட்களுக்கு விசா    பெற்றுத்தருவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட விசா ஏஜண்ட் பட்டியல் மற்றும் மேலும் விசா  தகவல்களுக்கு
 பார்க்க.

எங்களது அனைவரது ஆவணங்களும் சரியாக இருந்ததால் சிங்கப்பூர் நாட்டிற்குள் செல்ல நான்கு பேருக்கும் அனுமதி கிடைத்து விட்டது.

மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பாஸ்போர்ட் வாங்கி பக்கங்கள்  பயன்படுத்தாமலே வெறுமனே  ரெனியுவல் செய்யும் பச்சத்தில் திட்டமிட்டபடி முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்பதில் பெருமையாக இருக்கிறது. அவ்வளவுதான். எல்லாம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிங்கப்பூருக்கு புறப்படுவது மட்டும்தான் மீதம் இருக்கிறது. இன்னும் அதற்கு சில தினங்கள் இடைவெளி இருப்பதால் அதற்கு முன்பு என்னைப்போன்று சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்களுக்காக நான் ஏற்பாடுகள் செய்ததைப் பற்றி எழுதினால்  புதிதாக செல்பவர்கள்  யாருக்காவது பயனுள்ளதாக இருக்கட்டும் என கிடைத்த இடைவெளியில் எழுதி இருக்கிறேன். ஆகஸ்ட் 18 ஊர் திரும்பியதும் சிங்கப்பூர் அனுபவத்தை முழுவதும் பயண கட்டூரையாக எழுத உத்தேசம்.

மொத்தத்தில் நான் குடும்பத்தோடு வரும் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்கிறேன் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு:)

Tuesday, February 07, 2017

முதல் சம்பளம்வாழ்வில் முதல்  சம்பளம் வாங்கி  பத்து நாள் ஆகி விட்டது. நேற்றுதான் முதல் செலவை செய்தேன். இத்தனை நாட்களாக ‘முதல் சம்பளம் ரொம்ப ஸ்பெஷல் என்ன பண்ணுனே?’னு பலர் கேட்டிருந்தனர். பெரிதாக பதில்  ஏதும் சொல்லாமல் நகர்ந்துவிடுவேன்.
பொதுவாக பலரும் முதல் சம்பளத்தை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் அதிகம். நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்கிற நிலையில் முதல் சம்பளத்தை ஏதாவதொரு நற்காரியங்களுக்கு பயன்படுத்தவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன். அதன் படி முதல் சம்பளத்தில் ருபாய்  பதிமூன்றாயிரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக பரிமாற்றம் செய்திருக்கிறேன்.
அது என்ன  கணக்கு பதிமூன்றாயிரம்னு யாராவது நினைக்கலாம். முதலில் திட்டமிட்டபடி முதல் மாத சம்பளம் முழுவதையும் நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பதான் திட்டமிட்டிருந்தேன். என்னை பெற்ற பெற்றோருக்கும் ஏதாவது செய்யனும் என்பதால் என்னுடைய அப்பா அம்மாவுக்கு பாஸ்போர்ட் எடுத்து தர இருக்கிறேன்.  அம்மாவிடம் வாழ்வில் மறக்க முடியாத சந்தோஷமான தருணங்கள்னு  அடுக்கச் சொன்னால்  நிச்சயம் அதில் ஒன்றாக நாங்கள் முதன்முறை விமானத்தில் மும்பையில் இருந்து பெங்களூருக்கு  பறந்ததைச் சொல்வார்கள். இத்தனைக்கும் அது நடந்து  பல வருடங்கள் ஆனாலும் அந்த அனுபவம் தந்த திருப்தி இருக்கிறதே வாழ்நாள் முழுவதும் அவர்களால் மறக்க முடியாத ஒன்று. அது மாதிரி  சீக்கிரம் மறக்க முடியாத அனுபவத்தை என்னை பெத்தவங்களுக்கு நிறைய தரணும் என்பது என்னுடைய லச்சியங்களில் ஒன்று.
அதேமாதிரி  எனக்கும் ஒரு சில தனிபட்ட லச்சியங்களும் இருக்கு. முதலில் நிறைய காசு சம்பாதிக்கனும்; முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவனும்; பிறகு உலகம் முழுவதும் சுற்றுலா போகனும் அவ்வளவுதான். அந்த அனுபவம் கிடைத்தாலே வாழ்ந்த திருப்தியோடு சாக தயார் நான்.

சரி  ‘ஏன் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடை?’ யாராவது நினைக்கலாம். நிசப்தம்.காம் இணைய தளத்தை பற்றி தெரியாமல் பலரும் இருப்பர் அவர்களுக்காக எழுதிவிடுகிறேன்.
சாதாரண ஒரு வலைப்பதிவராக எழுத ஆரம்பித்து வாசகர்கள் மணிகண்டன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக பெரும் தயக்கத்திற்கு பிறகு சிறிய அரகட்டளையாக அவர் ஆரம்பித்து அறக்கட்டளைக்கு உலகெங்கிலும் இருக்கும்  நிசப்தம் வாசகர்கள் நிதியை லட்சங்களில் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனை தகுதியான பயனாளிகளிடம் சேர்க்கும் கடமை வா.மணிகண்டன் அவருடையது. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவர்  ஆச்சர்யம் ஊட்டும் மனிதர். குடும்பம், வேலை, தினமும் பதிவுகள் என எல்லாவற்றையும் சரிசமமாக பேலன்ஸ் செய்வதை பார்த்து  வியந்திருக்கிறேன். இப்போது நாளுக்கு நாள் தன்னார்வலர்கள் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு வருவது நல்ல விஷயம்.

இன்றோடு நிசப்தம்
வலைப்பதிவு தொடங்கி பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதிமூன்றாம் வருடத்தில் அடிவைக்கிறது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வெறும் வாழ்த்துச் செய்தியை மட்டும் அனுப்புவதுண்டு. எத்தனையோ வாசகர்கள் அறக்கட்டளைக்கு எவ்வளவோ செய்துக்கொண்டிருக்கிறார்கள். ’நம்மால் எதையும் சேய்ய முடியலியே’ என்கிற ஏக்கம் எனக்கு இருந்ததுண்டு. என்னுடைய இந்த சிறிய  செயல் வா.மணிகண்டன் சாருக்கு  உத்வேகம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் அனுப்பி இருக்கிறேன். கூடவே முதல் சம்பளத்தில் ஒரு பகுதி நற்க்காரியங்களுக்கு பயன்பட இருப்பதால் முழு  திருப்தியும் உண்டு. தொடர்ந்து நிசப்தம் சப்தத்தோடு தொடர வாழ்த்துக்கள்.

Wednesday, January 18, 2017

என் திருமணம் பற்றிய ரகசிய குறிப்புகள்!


மனுசனா பொறந்தா படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை, குடும்பம்..னு வாழ்ந்து சாகுறதுதான் முழுமையான வாழ்க்கைக்கு அர்த்தமா? வேலைக்கு போக ஆரம்பிச்சு சரியா முழுசா ஒரு மாசம் கூட முடியல. அதுக்குள்ளயும் என்னிடம் பலர் ‘வேலை கிடைச்சாச்சு திருமணம் எப்போ’னு தொடர்ந்து கேக்குறாங்க. இன்னும் ஒரு சிலர் ‘கட்டுனா வேலைக்கு போற பொண்ணா பார்த்து கட்டிக்கோ’னு அட்வைஸ் வேற கொடுக்குறாங்க.
எனக்கு ஒன்னுமே புரியல. ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் ‘படிப்பு முடிச்சாச்சு வேலைக்கு எப்போ போவ?’னு அம்புகளால் துரத்திய சமூகம் வேலை கிடைச்சதும் இப்போ பாக்குறவுங்க எல்லாம் என்னுடைய திருமணம் பத்தி என் கிட்ட பேசுறாங்க.
மனுசன கொஞ்சம் நேரம் ஃப்ரியா விடலாமே? அவனுடைய தனிப்பட்ட ஆசைகள், லச்சியங்கள், விருப்பங்கள்னு ஓட ஆரம்பிக்கும் சமயத்தில் இப்படி முட்டுக்கட்டை போடுறது ஞாயமா? அக்கறையில் கேக்குறாங்களோ இல்ல ஆலோசனை கொடுக்குறேன் பேர்வழினு பேசுறாங்களோ தெரியல. சமூகத்தின் ஒரு அங்கமான நான் சமூகத்தின் விருப்பபடிதான் வாழனுமா?
எனக்கு திருமணத்தின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ கிடையாது. ஒரு வேளை எந்த பெண்ணிடமாவது காதல் வசபட்டிருந்தால் மட்டுமே அடுத்து திருமணம் பற்றிய எண்ணம்தான் என்னுடைய மூளை முழுக்க ஆக்கிரமித்து, வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து அடுத்து அடைய வேண்டிய லட்சியமாக திருமணம் இருந்திருக்குமோ என்னவோ? அதுமாதிரியான ஒரு விபத்து இது வரை ஏற்படாததற்கு சந்தோஷப்படுகிறேன்.
என்னுடைய தனிபட்ட சில ஆசைகள் முதலில் நிறைவேற சந்தர்ப்பம் கிடைச்சதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். திருமணம் பற்றிய எண்ணம் பிறகு பார்த்துக்கலாம்.
 ***
விவரம் தெரிந்ததில் இருந்து இந்த நொடி வரைக்கும் சொற்ப எண்ணிக்கையில்தான் திருமண அழைப்பிற்கு சென்றிருக்கிறேன். திருமண தம்பதியர் யாராவது ஒருத்தர் எனக்கு நெருங்கிய சொந்தமாகவோ/நண்பராகவோ இருந்தால் மட்டும் செல்வது. காரணம் இன்னதென்று சரியாக தெரியாது. ஆனால் சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஆஜரான ஒரு திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. அன்றில் இருந்து சொல்ல ஒரு காரணம் கிடைச்சது.
திருமணம் என்கிற ஒரு நாள் சடங்கிற்கு லட்சங்களில் செலவு செய்து ஆடம்பரமாக ஜாம்ஜாம்னு நடத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் செலவு செய்து போகட்டும். இல்லாதவர்களோ தங்களுடைய சக்திக்கும் அதிகமாக செய்ய நினைத்து, கடன்காரர்களாகி அவர்களது சேமிப்பு+சம்பாத்தியத்தை எல்லாம் திருமண செலவுகள்+கடன் அடைக்கவே ஓடுபவர்களை நம்மைச் சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் ஒரு வித வைராக்கியம் கொழுந்து விட்டு எரிகிறது. ‘செலவே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்கிற ஆசைதான் அது.
என்னை மாதிரியே எல்லாரும் யோசிக்கனும்னு சொல்லல. இந்த காலத்துல பணம் சம்பாதிப்பதில் இருக்கும் சிக்கல்கள் தெரிந்ததால் என்னவோ செலவு செய்ய புத்தி அனுமதிப்பதில்லை. பிற்கால செலவுகளுக்கு அந்த பணத்தை தம்பதியினர் பயன்படுத்தலாம் என்கிற முன் எச்சரிக்கை மட்டும்தான்.
அடுத்ததா திருமணம் செய்துக்க போற துணை பற்றிய எதிர்பார்ப்பு,
 எனக்குள்ள நிறைய இருக்கு,
 சொல்ல தைரியம் இருக்கு ஆனா கூட வெட்கமாகவும் இருக்குது:)))
பொதுவாக திருமன தம்பதியினரை எடுத்துக்கொண்டால் மணமகனுக்கும்-மனப்பெண்ணுக்கும் ஒரு வருடத்தில் இருந்து சராசரியாக ஐந்தாறு வருடங்கள் இடைவெளி இருக்கும். எந்த ஆண் மகனாவது தன்னுடைய வயதிற்கும் அதிகமான மூத்த பெண்னை திருமணம் செய்துக்கொண்டால் அவ்வளவுதான். மண்டபத்திற்கு வந்து வையிறு முட்ட சாப்பிட்டு பின்னால் சாப்பிட்டது செரிமானம் ஆகும் வரை தம்பதியினரைப் பற்றி பேசி தீர்ப்பார்கள். எப்படி ஒரு பெண் தன்னை விடவும் வயதில் மூத்த நபரை திருமணம் செய்துக்க எந்த ஒரு ஆட்சேபனையும் சமூகத்தில் இல்லையோ அது போல ஆணும் தன்னை விடவும் வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதிலும் யாருடைய ஆட்சேபனையும் இருக்க கூடாது.
அறிவியல் விளக்கம்;சாம்ப்ரதாய பழக்கம்; என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதை பற்றி எல்லாம் கண்டுக்காமல் என் வயதை விடவும் மன பொருத்தம் ஆன இரண்டு அல்லது மூன்று வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக்க ஆசை:)))
அடுத்ததா குழந்தை விசயத்தில் ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கனும்னு ஆசை. திருமணம் முடிந்ததும் வருடம் முடிவதற்குள் குழந்தை பெற்றெடுத்து அதனுடைய படிப்பு, வேலை, திருமணம்னு எல்லாரைப் போல ஓட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தை மற்ற குழந்தைகளை விடவும் பெஸ்ட்டாக இருக்கனும்னு பெருமைப்பட பெற்றோர்கள் ஓடுவதன் பின்னால் இருக்கும் சிரமங்கள் எனக்கு பார்த்து பார்த்து சலித்து விட்டது. தங்களை வருத்திக்கொண்டு ஓடுவதோடு குழந்தைகளையும் வாட்டுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு அதே கதைதான்.
அதனால் குழந்தை தத்தெடுத்து வளர்ப்பதால் என் வாரிசு என்கிற ஒரு கர்வம் மனதில் இருக்காது என்பதால் நிம்மதியாக வாழ முடியும்+ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்வு அமைச்சு கொடுத்த திருப்தியும் இருக்கும்னு நா நினைக்கிறேன்.
 இப்போ வரைக்கும் நா சொன்னது செயல்படுத்த முடியாட்டி திருமணமாகி குழந்தையோடு வாழ்ந்துவரும் விதவைப் பெண்ணையாவது திருமணம் செய்துக்கொள்ளனும்னு ஆசை.
அப்பறம் ஒரு விசயம்: இங்கு எழுதிய மாதிரியே வாழ்க்கை அமைச்சுக்கனும்னு லட்சியம் எல்லாம் இப்போதைக்கு கிடையாது. எல்லாம் ஒரு ஆசைகள் அவ்வளவுதான். அதற்கான சமயம் வரும்போது பார்க்கலாம்.
 மேற்சொன்ன விசயங்கள் அனைத்தும் இத்தனை நாளா மனசுக்குள்ள பூட்டி வெச்சிருந்தேன். ஒன்று ரெண்டு பேரைத் தவிர யாரிடமும் பகிர்ந்துக்கொண்டது கிடையாது. வீட்டில் இதைப் பற்றி மூச்சு கூட விடல. காரணம் எவ்வளவு தூரம் பெற்றோர் புரிந்து கொள்வார்கள் என்கிற பயம் உண்டு. எதோ ஒரு தைரியத்தில் இங்கே எழுதியாச்சு. காரணம் ஒன்றுதான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தமிழ் எழுத வாசிக்க தெரியாது என்கிற ஒரே தைரியத்தில்தான்:)))

Saturday, January 14, 2017

என்னில் உணர்ந்தவை-காயத்ரி அக்காவின் தற்கொலைக் கடிதம்-புத்தக அறிமுகம்இதோ புலி வருது புலி வருது கதையாட்டும் அக்காவோட புத்தக கதையும் ரெண்டு மூணு பதிவுக்கு மேல கடந்த வருசம் ப்ளாக்ல எழுதி இருப்பாங்க. எதாவது ஒரு காரணத்துனால தடை பட்டுகிட்டே வர திடீரென சர்ஜிகல் ஸ்ட்ரைக் மாதிரி ஒரு நாள் அக்கா வெளியிட்டபதிவை வாசிச்சதும் நான் சொல்ல முடியாத இன்ப அதிர்ச்சிக்குள்ளானேன். அதன் பிறகு தனது முதல் புத்தகத்தை எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி வெற்றிகரமாக சென்னை புக் ஃபேரில் சந்தைக்கு கொண்டு வந்திருக்கும் அக்காவிற்கு முதலில் பாராட்டுக்கள். வலையுலகில் காயத்ரி அக்காவோட பதிவுகள் பலருக்கும் பரிட்சையமானதுதான்.
தன்னுடைய உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்துவதில் ஒரு தேர்ந்த வலைப்பதிவருனே சொல்லலாம். இப்போ அடுத்த கட்டமாக அச்சிலும் தனது எழுத்தை கொண்டு வந்திருக்கும் அக்காவோட முதல் பிரசவ குழந்தை தற்கொலைக் கடிதம் மொத்தம் 20 கட்டுரைகள் 110பக்கங்கள் அடங்கிய தொகுப்பு விலை 100தான். எழுத்தாளர், சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை எழுதி இருக்கிறார். 20 கட்டுரைகளில் தன்னுடைய அனுபவம் சார்ந்த கட்டுரைகள், தவிரவும் சமூகத்தில் பார்த்தது, கேட்டது, பதிலுக்கு தான் சொல்ல நினைத்ததை எழுதி இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கும்போது ஒவ்வொரு உணர்வு நம்முள் தோன்றும். ராக்காயி வீட்டு மருமவகட்டுரை பயங்கரமான முடிவு. மனதில் என்றென்றும் நினைவிருக்க கூடிய முடிவாக எழுதி இருப்பார். புத்தகத்தின் தலைப்பாக இந்த தலைப்பு வைத்தால் நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்குமோ என்பது எனது எண்ணம்.
ஒரு தற்கொலை கடிதம் உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைக்கும் முயற்சி. உடைந்து போன உறவுகள் ஒருபோதும் பழய நிலைக்கு திரும்பாததை உணர்த்தும் கட்டுரை. அன்புள்ள ராமையாவுக்கு கட்டுரை பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் கட்டுரை. இது போன்று ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய உணர்வுகளையும், உனர்ச்சிகளையும் கொட்டி இருக்கிறார்.
புத்தகம் கைக்கு கிடைச்சு ஒரு வாரத்துக்கும் மேல ஆனாலும் ஒரே மூச்சில் வாசிச்சு முடிக்க நேரம் கிடைக்காததால சமயம் கிடைச்சப்போ மட்டும் வாசிச்சதால புத்தகம் பத்தி நிறைய சொல்ல முடியல. மொத்தத்தில் பதிவராக எழுத ஆரம்பித்து எழுத்தாளர் கட்டத்தை நோக்கி நகர அடி வைத்திருக்கும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
எழுத வேண்டும் என்கிற வைராக்கிய நெருப்பு முதல் புத்தகத்தோடு அணைந்து விடாமல் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன் அக்கா.
***
சென்னை புக் ஃபேரில் புத்தகம் வாங்க விரும்புவர்கள்
புதினம் புக்ஸ்: ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536
மேற்சொன்ன அரங்குகளில் புத்தகத்தை வாங்கலாம். வாங்கி வாசித்து முடித்ததோடு இல்லாமல் புத்தகம் பற்றி ஒரு வார்த்தை நிறையோ-குறையோ புத்தகம் பற்றி தளத்தில் சொல்லுங்கள்
***
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Sunday, January 08, 2017

இரண்டாம் வாரம்
 

நேற்றோடு வேலைக்கு போக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. முதல் வார முடிவில் இருக்கும் களைப்பேதும் இம்முறை தெரியவில்லை. நிலமை என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன். அதிகாலை எழுந்துரிக்கணும், அவசரம் அவசரமாக ரயிலை பிடிக்க ஓடணும்என்கிற பரபரப்பான காலை பொழுதிற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

 

வங்கிக்கு ரயிலுக்கு பதிலாக பேருந்தில் செல்கிறேன். காலை உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்புகிறேன். ஒன்னரை மணி நேரம் பேருந்து பயணம் மட்டும்தான் பிரச்சனை. இசையின் துணையோடு அதையும் கடக்கிறேன்.

 

சரியாக வீட்டில் இருந்து ஏழரைக்கு புறப்பட்டால் ஏழே முக்காலுக்கு ஒரு பேருந்து திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்படும். அந்த பேருந்தில் ஏறினால் ஒன்பதரை அளவில் திருத்தனியில் இறங்கிடுவேன். இறங்கியதும் நடக்க ஆரம்பித்தால் சரியாக ஐந்து நிமிடத்திற்குள் வங்கியில் நுழைந்து விடலாம்.

 

சராசரியாக ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து திருப்பதிக்குச் செல்பவை வங்கி முன்பிலிருந்து செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. தினமும் நாலே முக்காலுக்கு ஒரு பேருந்து இருக்கிறது. வங்கி வாசலிலே ஏறிடுவேன். ஆறரை மணிக்கு திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கிடுவேன்.

 

தம்பியோ, அப்பாவோ யாராவது ஒருத்தர்  பேருந்து நிலையத்திற்கு வருவார்கள். இரவு ஏழு மணிக்கு முன்பாகவே வீட்டிற்குள் வந்து முகம், கை கால் கழுவி மாலை சிற்றுண்டியையும் முடித்து விடுவதால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஏதாவது கனினியில் பார்க்க வேண்டி இருப்பதை பார்த்துவிட்டு இரவு உணவை முடித்து விட்டு உறங்க சரியாக இருக்கிறது.

 

வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு பயண களைப்பு முதல் வாரத்தை விடவும் இரண்டாம் வாரம் பல மடங்கு குறைந்திருப்பதாக உணர்கிறேன். பணியில் பத்து மணியில் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களோடு பேசிக்கொண்டிருப்பதால் மதிய உணவிற்குள்ளாகவே ஒட்டுமொத்த எனர்ஜியும் தீர்ந்து விடுவதைப் போன்றதொரு உணர்வு.

 

எது எப்படியோ மோடியின் டீமானிடைசேஷன் புண்ணியத்தில் வங்கி ஊழியர்கள் ஒருபுறம்; பொது மக்கள் ஒருபுறம் அவஸ்தை படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. என்றுதான் இந்த நிலமை தீருமோ? அவர் சொல்லுற மாதிரி பணமில்லாப் பொருளாதாரம் சாத்தியமானால் இப்பொது வங்கிக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே நாங்களும் கூலாக வேலை செய்து வீடு திரும்பலாமே :)