Wednesday, January 18, 2017

என் திருமணம் பற்றிய ரகசிய குறிப்புகள்!


மனுசனா பொறந்தா படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை, குடும்பம்..னு வாழ்ந்து சாகுறதுதான் முழுமையான வாழ்க்கைக்கு அர்த்தமா? வேலைக்கு போக ஆரம்பிச்சு சரியா முழுசா ஒரு மாசம் கூட முடியல. அதுக்குள்ளயும் என்னிடம் பலர் ‘வேலை கிடைச்சாச்சு திருமணம் எப்போ’னு தொடர்ந்து கேக்குறாங்க. இன்னும் ஒரு சிலர் ‘கட்டுனா வேலைக்கு போற பொண்ணா பார்த்து கட்டிக்கோ’னு அட்வைஸ் வேற கொடுக்குறாங்க.
எனக்கு ஒன்னுமே புரியல. ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் ‘படிப்பு முடிச்சாச்சு வேலைக்கு எப்போ போவ?’னு அம்புகளால் துரத்திய சமூகம் வேலை கிடைச்சதும் இப்போ பாக்குறவுங்க எல்லாம் என்னுடைய திருமணம் பத்தி என் கிட்ட பேசுறாங்க.
மனுசன கொஞ்சம் நேரம் ஃப்ரியா விடலாமே? அவனுடைய தனிப்பட்ட ஆசைகள், லச்சியங்கள், விருப்பங்கள்னு ஓட ஆரம்பிக்கும் சமயத்தில் இப்படி முட்டுக்கட்டை போடுறது ஞாயமா? அக்கறையில் கேக்குறாங்களோ இல்ல ஆலோசனை கொடுக்குறேன் பேர்வழினு பேசுறாங்களோ தெரியல. சமூகத்தின் ஒரு அங்கமான நான் சமூகத்தின் விருப்பபடிதான் வாழனுமா?
எனக்கு திருமணத்தின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ கிடையாது. ஒரு வேளை எந்த பெண்ணிடமாவது காதல் வசபட்டிருந்தால் மட்டுமே அடுத்து திருமணம் பற்றிய எண்ணம்தான் என்னுடைய மூளை முழுக்க ஆக்கிரமித்து, வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து அடுத்து அடைய வேண்டிய லட்சியமாக திருமணம் இருந்திருக்குமோ என்னவோ? அதுமாதிரியான ஒரு விபத்து இது வரை ஏற்படாததற்கு சந்தோஷப்படுகிறேன்.
என்னுடைய தனிபட்ட சில ஆசைகள் முதலில் நிறைவேற சந்தர்ப்பம் கிடைச்சதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். திருமணம் பற்றிய எண்ணம் பிறகு பார்த்துக்கலாம்.
 ***
விவரம் தெரிந்ததில் இருந்து இந்த நொடி வரைக்கும் சொற்ப எண்ணிக்கையில்தான் திருமண அழைப்பிற்கு சென்றிருக்கிறேன். திருமண தம்பதியர் யாராவது ஒருத்தர் எனக்கு நெருங்கிய சொந்தமாகவோ/நண்பராகவோ இருந்தால் மட்டும் செல்வது. காரணம் இன்னதென்று சரியாக தெரியாது. ஆனால் சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஆஜரான ஒரு திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. அன்றில் இருந்து சொல்ல ஒரு காரணம் கிடைச்சது.
திருமணம் என்கிற ஒரு நாள் சடங்கிற்கு லட்சங்களில் செலவு செய்து ஆடம்பரமாக ஜாம்ஜாம்னு நடத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் செலவு செய்து போகட்டும். இல்லாதவர்களோ தங்களுடைய சக்திக்கும் அதிகமாக செய்ய நினைத்து, கடன்காரர்களாகி அவர்களது சேமிப்பு+சம்பாத்தியத்தை எல்லாம் திருமண செலவுகள்+கடன் அடைக்கவே ஓடுபவர்களை நம்மைச் சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் ஒரு வித வைராக்கியம் கொழுந்து விட்டு எரிகிறது. ‘செலவே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்கிற ஆசைதான் அது.
என்னை மாதிரியே எல்லாரும் யோசிக்கனும்னு சொல்லல. இந்த காலத்துல பணம் சம்பாதிப்பதில் இருக்கும் சிக்கல்கள் தெரிந்ததால் என்னவோ செலவு செய்ய புத்தி அனுமதிப்பதில்லை. பிற்கால செலவுகளுக்கு அந்த பணத்தை தம்பதியினர் பயன்படுத்தலாம் என்கிற முன் எச்சரிக்கை மட்டும்தான்.
அடுத்ததா திருமணம் செய்துக்க போற துணை பற்றிய எதிர்பார்ப்பு,
 எனக்குள்ள நிறைய இருக்கு,
 சொல்ல தைரியம் இருக்கு ஆனா கூட வெட்கமாகவும் இருக்குது:)))
பொதுவாக திருமன தம்பதியினரை எடுத்துக்கொண்டால் மணமகனுக்கும்-மனப்பெண்ணுக்கும் ஒரு வருடத்தில் இருந்து சராசரியாக ஐந்தாறு வருடங்கள் இடைவெளி இருக்கும். எந்த ஆண் மகனாவது தன்னுடைய வயதிற்கும் அதிகமான மூத்த பெண்னை திருமணம் செய்துக்கொண்டால் அவ்வளவுதான். மண்டபத்திற்கு வந்து வையிறு முட்ட சாப்பிட்டு பின்னால் சாப்பிட்டது செரிமானம் ஆகும் வரை தம்பதியினரைப் பற்றி பேசி தீர்ப்பார்கள். எப்படி ஒரு பெண் தன்னை விடவும் வயதில் மூத்த நபரை திருமணம் செய்துக்க எந்த ஒரு ஆட்சேபனையும் சமூகத்தில் இல்லையோ அது போல ஆணும் தன்னை விடவும் வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதிலும் யாருடைய ஆட்சேபனையும் இருக்க கூடாது.
அறிவியல் விளக்கம்;சாம்ப்ரதாய பழக்கம்; என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதை பற்றி எல்லாம் கண்டுக்காமல் என் வயதை விடவும் மன பொருத்தம் ஆன இரண்டு அல்லது மூன்று வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக்க ஆசை:)))
அடுத்ததா குழந்தை விசயத்தில் ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கனும்னு ஆசை. திருமணம் முடிந்ததும் வருடம் முடிவதற்குள் குழந்தை பெற்றெடுத்து அதனுடைய படிப்பு, வேலை, திருமணம்னு எல்லாரைப் போல ஓட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தை மற்ற குழந்தைகளை விடவும் பெஸ்ட்டாக இருக்கனும்னு பெருமைப்பட பெற்றோர்கள் ஓடுவதன் பின்னால் இருக்கும் சிரமங்கள் எனக்கு பார்த்து பார்த்து சலித்து விட்டது. தங்களை வருத்திக்கொண்டு ஓடுவதோடு குழந்தைகளையும் வாட்டுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு அதே கதைதான்.
அதனால் குழந்தை தத்தெடுத்து வளர்ப்பதால் என் வாரிசு என்கிற ஒரு கர்வம் மனதில் இருக்காது என்பதால் நிம்மதியாக வாழ முடியும்+ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்வு அமைச்சு கொடுத்த திருப்தியும் இருக்கும்னு நா நினைக்கிறேன்.
 இப்போ வரைக்கும் நா சொன்னது செயல்படுத்த முடியாட்டி திருமணமாகி குழந்தையோடு வாழ்ந்துவரும் விதவைப் பெண்ணையாவது திருமணம் செய்துக்கொள்ளனும்னு ஆசை.
அப்பறம் ஒரு விசயம்: இங்கு எழுதிய மாதிரியே வாழ்க்கை அமைச்சுக்கனும்னு லட்சியம் எல்லாம் இப்போதைக்கு கிடையாது. எல்லாம் ஒரு ஆசைகள் அவ்வளவுதான். அதற்கான சமயம் வரும்போது பார்க்கலாம்.
 மேற்சொன்ன விசயங்கள் அனைத்தும் இத்தனை நாளா மனசுக்குள்ள பூட்டி வெச்சிருந்தேன். ஒன்று ரெண்டு பேரைத் தவிர யாரிடமும் பகிர்ந்துக்கொண்டது கிடையாது. வீட்டில் இதைப் பற்றி மூச்சு கூட விடல. காரணம் எவ்வளவு தூரம் பெற்றோர் புரிந்து கொள்வார்கள் என்கிற பயம் உண்டு. எதோ ஒரு தைரியத்தில் இங்கே எழுதியாச்சு. காரணம் ஒன்றுதான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தமிழ் எழுத வாசிக்க தெரியாது என்கிற ஒரே தைரியத்தில்தான்:)))

Saturday, January 14, 2017

என்னில் உணர்ந்தவை-காயத்ரி அக்காவின் தற்கொலைக் கடிதம்-புத்தக அறிமுகம்இதோ புலி வருது புலி வருது கதையாட்டும் அக்காவோட புத்தக கதையும் ரெண்டு மூணு பதிவுக்கு மேல கடந்த வருசம் ப்ளாக்ல எழுதி இருப்பாங்க. எதாவது ஒரு காரணத்துனால தடை பட்டுகிட்டே வர திடீரென சர்ஜிகல் ஸ்ட்ரைக் மாதிரி ஒரு நாள் அக்கா வெளியிட்டபதிவை வாசிச்சதும் நான் சொல்ல முடியாத இன்ப அதிர்ச்சிக்குள்ளானேன். அதன் பிறகு தனது முதல் புத்தகத்தை எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி வெற்றிகரமாக சென்னை புக் ஃபேரில் சந்தைக்கு கொண்டு வந்திருக்கும் அக்காவிற்கு முதலில் பாராட்டுக்கள். வலையுலகில் காயத்ரி அக்காவோட பதிவுகள் பலருக்கும் பரிட்சையமானதுதான்.
தன்னுடைய உணர்வுகளை எழுத்தில் வெளிப்படுத்துவதில் ஒரு தேர்ந்த வலைப்பதிவருனே சொல்லலாம். இப்போ அடுத்த கட்டமாக அச்சிலும் தனது எழுத்தை கொண்டு வந்திருக்கும் அக்காவோட முதல் பிரசவ குழந்தை தற்கொலைக் கடிதம் மொத்தம் 20 கட்டுரைகள் 110பக்கங்கள் அடங்கிய தொகுப்பு விலை 100தான். எழுத்தாளர், சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொன்னீலன் அவர்கள் புத்தகத்திற்கான அணிந்துரை எழுதி இருக்கிறார். 20 கட்டுரைகளில் தன்னுடைய அனுபவம் சார்ந்த கட்டுரைகள், தவிரவும் சமூகத்தில் பார்த்தது, கேட்டது, பதிலுக்கு தான் சொல்ல நினைத்ததை எழுதி இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கும்போது ஒவ்வொரு உணர்வு நம்முள் தோன்றும். ராக்காயி வீட்டு மருமவகட்டுரை பயங்கரமான முடிவு. மனதில் என்றென்றும் நினைவிருக்க கூடிய முடிவாக எழுதி இருப்பார். புத்தகத்தின் தலைப்பாக இந்த தலைப்பு வைத்தால் நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்குமோ என்பது எனது எண்ணம்.
ஒரு தற்கொலை கடிதம் உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைக்கும் முயற்சி. உடைந்து போன உறவுகள் ஒருபோதும் பழய நிலைக்கு திரும்பாததை உணர்த்தும் கட்டுரை. அன்புள்ள ராமையாவுக்கு கட்டுரை பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் கட்டுரை. இது போன்று ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய உணர்வுகளையும், உனர்ச்சிகளையும் கொட்டி இருக்கிறார்.
புத்தகம் கைக்கு கிடைச்சு ஒரு வாரத்துக்கும் மேல ஆனாலும் ஒரே மூச்சில் வாசிச்சு முடிக்க நேரம் கிடைக்காததால சமயம் கிடைச்சப்போ மட்டும் வாசிச்சதால புத்தகம் பத்தி நிறைய சொல்ல முடியல. மொத்தத்தில் பதிவராக எழுத ஆரம்பித்து எழுத்தாளர் கட்டத்தை நோக்கி நகர அடி வைத்திருக்கும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
எழுத வேண்டும் என்கிற வைராக்கிய நெருப்பு முதல் புத்தகத்தோடு அணைந்து விடாமல் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன் அக்கா.
***
சென்னை புக் ஃபேரில் புத்தகம் வாங்க விரும்புவர்கள்
புதினம் புக்ஸ்: ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536
மேற்சொன்ன அரங்குகளில் புத்தகத்தை வாங்கலாம். வாங்கி வாசித்து முடித்ததோடு இல்லாமல் புத்தகம் பற்றி ஒரு வார்த்தை நிறையோ-குறையோ புத்தகம் பற்றி தளத்தில் சொல்லுங்கள்
***
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Sunday, January 08, 2017

இரண்டாம் வாரம்
 

நேற்றோடு வேலைக்கு போக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. முதல் வார முடிவில் இருக்கும் களைப்பேதும் இம்முறை தெரியவில்லை. நிலமை என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன். அதிகாலை எழுந்துரிக்கணும், அவசரம் அவசரமாக ரயிலை பிடிக்க ஓடணும்என்கிற பரபரப்பான காலை பொழுதிற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

 

வங்கிக்கு ரயிலுக்கு பதிலாக பேருந்தில் செல்கிறேன். காலை உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்புகிறேன். ஒன்னரை மணி நேரம் பேருந்து பயணம் மட்டும்தான் பிரச்சனை. இசையின் துணையோடு அதையும் கடக்கிறேன்.

 

சரியாக வீட்டில் இருந்து ஏழரைக்கு புறப்பட்டால் ஏழே முக்காலுக்கு ஒரு பேருந்து திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்படும். அந்த பேருந்தில் ஏறினால் ஒன்பதரை அளவில் திருத்தனியில் இறங்கிடுவேன். இறங்கியதும் நடக்க ஆரம்பித்தால் சரியாக ஐந்து நிமிடத்திற்குள் வங்கியில் நுழைந்து விடலாம்.

 

சராசரியாக ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து திருப்பதிக்குச் செல்பவை வங்கி முன்பிலிருந்து செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. தினமும் நாலே முக்காலுக்கு ஒரு பேருந்து இருக்கிறது. வங்கி வாசலிலே ஏறிடுவேன். ஆறரை மணிக்கு திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கிடுவேன்.

 

தம்பியோ, அப்பாவோ யாராவது ஒருத்தர்  பேருந்து நிலையத்திற்கு வருவார்கள். இரவு ஏழு மணிக்கு முன்பாகவே வீட்டிற்குள் வந்து முகம், கை கால் கழுவி மாலை சிற்றுண்டியையும் முடித்து விடுவதால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஏதாவது கனினியில் பார்க்க வேண்டி இருப்பதை பார்த்துவிட்டு இரவு உணவை முடித்து விட்டு உறங்க சரியாக இருக்கிறது.

 

வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு பயண களைப்பு முதல் வாரத்தை விடவும் இரண்டாம் வாரம் பல மடங்கு குறைந்திருப்பதாக உணர்கிறேன். பணியில் பத்து மணியில் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களோடு பேசிக்கொண்டிருப்பதால் மதிய உணவிற்குள்ளாகவே ஒட்டுமொத்த எனர்ஜியும் தீர்ந்து விடுவதைப் போன்றதொரு உணர்வு.

 

எது எப்படியோ மோடியின் டீமானிடைசேஷன் புண்ணியத்தில் வங்கி ஊழியர்கள் ஒருபுறம்; பொது மக்கள் ஒருபுறம் அவஸ்தை படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. என்றுதான் இந்த நிலமை தீருமோ? அவர் சொல்லுற மாதிரி பணமில்லாப் பொருளாதாரம் சாத்தியமானால் இப்பொது வங்கிக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே நாங்களும் கூலாக வேலை செய்து வீடு திரும்பலாமே :)