Sunday, July 30, 2017

சிங்கப்பூருக்கு!


சிறுவயதில் இருந்தே எனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாகவே உண்டு. எங்காவது வெள்ளையர்களை பார்த்தால் அவர்களோடு பேச  மனம்  பரபரக்கும் (இப்போதும் கூட). உறவினர்கள்/தெரிந்தவர்கள் யாராவது வெளிநாட்டுக்குப் போய் வந்தார்கள் என்று தெரிந்தால் எப்படியாவது அவர்களோடு பேசி வெளி நாட்டு அனுபவத்தை கேட்டுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் அன்றும் இன்றும் இருக்கிறது. அதேமாதிரி எனக்கு அமேரிக்காவிலோ அல்லது ஏதாவது ஐரோப்பா நாடுகளிலாவது குடி ஏறணும்னு சின்னதா ஒரு ஏக்கம் சிறுவயதில் இருந்து எனக்கு இருந்ததுண்டு. இளங்கலை படிப்பு படிக்கும்போதுதான் புத்திக்கு உரைச்சது “அதற்கெல்லாம் எனக்கு சாத்தியம் கிடையாது’ என்கிற  நிஜத்தை. அப்பரம் மேற்படிப்பு படிக்க பலரும் U.S , யூரோப் செல்வதை கவனித்து நானும் அது போன்று ஏதாவது ஒரு  குறுகியகால
பட்டயப் படிப்பாவது படிக்க செல்கிறேன் பெயரில் ஏதாவது ஒரு நாட்டிற்குச் சென்று படிக்கும் சாக்கில் சுற்றிப்பார்த்து எனது ஆசையை தீர்த்துக்க திட்டம் எல்லாம் தீட்டி இருந்தேன். உம். இளங்கலை படிப்பு முடியும் தருணத்தில் அதற்கும் சாத்தியம் இல்லை  என்பதை உணர்ந்ததும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதன் பிறகு வாழ்க்கை வெவ்வேறு திசையில் ஓடி கடைசியாக  ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவில் செட்டில் ஆனதும் மீண்டும் எனக்குள் புதைந்துக்கிடந்த வெளி நாட்டு மோகம் விழித்துக்கொண்டது.

அது வரை நான் மட்டும் வெளிநாட்டிற்கு சென்று வந்தால் போதும் நினைத்திருந்த நான் இப்போது என்னுடன் அப்பா, அம்மா மற்றும் தம்பியை ஏதாவது ஒரு நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். ஏற்கனவே எனக்கும் தம்பிக்கும் பாஸ்போர்ட் இருந்ததால் முதல் மாதச் சம்பளத்தில் அப்பா அம்மாவுக்கு பாஸ்போர்ட் எடுத்துக்கொடுத்தேன்.

அடுத்து எப்போது/எந்த நாட்டிற்கு  செல்வது என்கிற யோசனைக்கு முதல் வருடம்  முடிவில் அல்லது இரண்டாம் வருடத்தில்தான் சிங்கப்பூருக்கு போக முடிவு செய்திருந்தேன். அமேரிக்கா ஐரோப்பா போகும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லாததால் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தேன்.

இவ்வருடம்  மேமாதம்  முதல் வாரம் இருக்கும். ஆகஸ்ட் மாதம்  ஐந்து நாட்கள்  வங்கி விடுமுறை  இருப்பதை கேள்விப்பட்டதும் உடனடியாக முன்பின் எதுவும் யோசிக்காமல் அந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு கூட ஒர் இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு  சிங்கப்பூரை சுற்றிப் பார்த்து வரலாம் என அவசர கால முடிவு ஒன்றை எடுத்ததோடு அல்லாமல் அந்த இரவோடு இரவாக முதலில் விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அதற்கு முன்பு  விமான டிக்கட்  புக் செய்த அனுபவம் இல்லை என்றாலும் பொதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணமாக இருக்கும் என பொதுப்படையான நம்பிக்கையில் மேக்மைட்ரிப் இணையதளம் வழியாக குறைந்த கட்டணமாக இருக்கும் விமானம் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்தாகிவிட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு  ஏர் இந்தியா விமானம். கட்டணம் ஒருத்தருக்கு 6850 ருபாய். விமானத்தில் உணவு+ இலவசமாக நபருக்கு 30 கிலோ வரை செக்கின் லக்கேச் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால் திருப்பு பயண தினத்தன்று குறைந்த கட்டணமாக இருந்த தேர்ந்தெடுத்த விமானத்தில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. உணவும் கிடையாது; செக்கின் லக்கேச்கென தனியாக கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். அது தெரியாமல் வெறும் டிக்கட் மட்டும் முன்பதிவு செய்து விட்டேன். அதைச் சரி செய்ய ஒரு வார போராட்டத்திற்கு பிறகு செக்கின் லக்கேச் 25 கிலோ தம்பி டிக்கெட்டுக்கு மட்டும் தனியாக கட்டணம் (2550 ருபாய்) செலுத்த வேண்டி இருந்தது.

விமானத்திற்குள் அனுமதிக்கும் ஹேண்ட் லக்கேச் நபருக்கு 7 கிலோ வரை அனுமதிப்பார்கள். இந்த வசதி அனைத்து விமானங்களிலும் இலவசம். கொண்டு போகும் பொருட்களில்  மட்டும் சில கட்டுப்பாடு+ கைப்பையின் அளவும் நிர்ணயித்த பரிமானத்தில் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு  செண்ட் பாட்டில்கள்+பெர்ஃப்யூம்ஸ் மற்றும் தைலம் ஹெண்ட் பேக்கில் இருக்க கூடாது. அவ்வாறு இருக்கும் பச்சத்தில் சோதனையின்போது பிடி பட்டால் அந்த பொருளை குப்பைத் தொட்டியில் போடவைத்த பிறகுதான்  நம்மை விமானத்திற்குள் அனுமதிப்பார்கள். அதனால் விமானத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை எடுத்துச் செல்ல செக்கின் லக்கெச் தனியாக பெற வேண்டி இருந்தது. மொத்தத்தில் விமான டிக்கட் முன்பதிவு செய்யும்  விஷயத்தில் இப்போது ஒரு தெளிவு வந்திருக்கிறது.

சிங்கப்பூருக்குச் சென்று வர நபருக்கு விமான டிக்கெட் சராசரியாக ஒரு மாதம் முன்பு முன்பதிவு செய்தால் 13 - 14ஆயிரம் வரை ஒருவருக்கு ஆகலாம். இதுவே நீங்கள் பயணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் இன்னும் குறைவான கட்டணத்தில் சென்று வரலாம்.

கவனிக்க: குறைந்த கட்டணமாக இருக்கிறதென விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது செக்கின் லக்கேச் மற்றும் உணவு வசதிகளை பரிசீலிக்கவும். பொதுவாக குறைந்த கட்டணமாக  சிங்கப்பூருக்குச் செல்ல ஸ்கூட் நிறுவன விமானத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புக் செய்தால் ருபாய் ஐந்தாயிரத்திற்கெல்லாம்  டிக்கெட் கிடைக்கும். ஆனால் அவர்கள் குடிக்க தண்ணீர் கூட தர மாட்டார்கள். அதே நீங்கள் அனைத்து சேவைகளும் அடங்கிய   விமான டிக்கேட் 7 ஆயிரம்-8 ஆயிரத்திற்கு இருந்தாலும் தாராளமாக முன்பதிவு செய்யலாம்.

டிக்கட் எடுத்ததை அடுத்து என்ன செய்வதென்று தெரியாது. வெறும் சிங்கப்பூர் நாட்டின் பெயரைத் தவிர. வீட்டில் இருப்பவர்களிடம் விமான டிக்கட் முன்பதிவு  செய்யப்போவதாக சொல்லவில்லை. எல்லாம் முடிந்த பிறகு சொன்னால் ’ஏதாவது டிராவல் ஏஜண்ட் மூலம் சுற்றுலா செல்வது பாதுகாப்பானது’என்று சொல்லி இருந்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. உள்ளூர் ஆனாலும் சரி; உலக சுற்றுலா ஆனாலும் சரி சுயமாகவே  அனைத்து ஏற்பாடுகளையும்  செய்துக்கொண்டு  சுற்றி வரணும் என்கிறது என்னோட ஆசை. அவ்வாறு
சென்று வந்தால்தான் எனக்கு  முழு திருப்தியாக இருக்கும். அதன் காரணமாகவே டிக்கெட் முன்பதிவு செய்த தினத்தில் இருந்தே  இணையத்தில்  நிறைய தகவல்கள் சேகரிக்க ஆரம்பித்தேன்.

முதலில் சிங்கப்பூரில் இருக்கும் ஐந்து நாட்கள் எங்கெங்கு சுற்றிப்பார்க்கனும் என்னும் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். சிங்கப்பூருக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அங்கு  வசிக்கும் ஒரு சிலரோடு தொடர்பு கொண்டு  தேவையானவற்றை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன்.

எவ்வளவு விசாரித்தாலும் சிங்கப்பூரில் எங்கு தங்குகிறோம் என்பதில் மட்டும் க்ளாரிட்டி வரவில்லை. இணையத்தில் ஹோட்டல்ஸ்  தேடினால்  எக்கச்சக்கமாக வந்து குவிகின்றது. அதில் எது நமக்கு ஏற்றது என்பதில் குழப்பம் இருந்துவந்தது. அதோடு நண்பர் ஒருத்தர் ’சிங்கப்பூர் ஹோட்டல்கள் பொறுத்த வரை அறைக்கு இரண்டு அடல்ட்ஸ் மட்டுமே அனுமதிப்பார்கள்’  என கூறியது மேலும் என்னை பதற்றமடையச்செய்தது. காரணம் சிங்கப்பூரில் ஹோட்டலில் ஒரு நாளுக்கான வாடகைச்  செலவே நம்ம ஊர் கணக்குப்படி பார்த்தால் குறைந்தது ஆறாயிரத்தில் இருந்து ஆரம்பித்தது. நாங்கள் நான்கு பேர் என்பதால் இரண்டு அறை தேவைப்படுவதால் இரண்டு அறைகள்  ஐந்து நாட்களுக்கு என்றால் பட்ஜெட் எங்கோ போய்விடும் என்பதை  உணர்ந்ததும் அதனை சரி செய்யும் விதமாக மின்னல்மாதிரி மூளையில் ஒரு யோசனை பளிச்சென்று தட்டியது. ‘ஹோட்டலில் அறை எடுப்பதே வெறும் இரவு நேரத்தில் மட்டும் வந்து தூங்குவதற்குதானே. எப்படியும் காலை முதல் மாலை வரை வெளியே சுற்றுவதால் ஹோட்டலுக்கு ஏன் அவ்வளவு செலவு செய்ய வேண்டும்’ என எண்ணம் தோன்றியதும் உடனடியாக ஹோட்டலில் இருந்து ஹாஸ்டலுக்கு மாறினேன்.

சிங்கப்பூரில் குறைந்த கட்டணத்தில் சுற்றுலாவாசிகள் தங்க பல தனியார் விடுதிகள் நடத்த  படுவதை கவனிக்கலாம். ஏதாவது ஒன்றில் தங்கிவிடலாம் என முடிவு செய்து பெரும் தயக்கத்தோடு ஒரு விடுதியை தேர்ந்தெடுத்து ’நான்கு பேர் தங்கும் வசதி கொண்ட ஒரு அறை இருக்குமா?’னு விசாரிக்க மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். பதில் உடனுக்குடன்  அனுப்பினார்கள். எல்லாம் விசாரித்த பிறகு லிட்டில் இந்தியாவில் இருக்கும் மித்ரா ஹாஸ்டலில் நாங்கு பேர் தங்கக்கூடிய அறை ஒன்றை முன்பதிவு செய்தேன்.

ஒரு நாளுக்கான அறை வாடகை 110 சிங்கப்பூர் டாலர் சொல்லி இருந்தார்கள். அதே ஐந்து நாட்களுக்கு 550 டாலர்ஸ் (நம்ம ஊர் பண மதிப்பின் படி சுமார் 27,500 ருபாய்). மொத்த தொகையில் 30% ருபாய் 8165 முன்பணமாக செலுத்தச் சொன்னார்கள்.

தங்கும் இடம்  தேர்ந்தெடுத்ததை அடுத்து விசாவைப் பற்றி விசாரித்தால் நிறைய ரிஸ்ட்ரிக்‌ஷன் வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர் விசா பொருத்தவரை தனி நபர்கள்  இந்தியாவில் இருந்து அப்ளை செய்ய முடியாது. அங்கீகரிக்க பட்ட ஏதாவது  ஒரு விசா  ஏஜண்ட் வழியாகத்தான்  நாம் விண்ணப்பிக்க வேண்டும். விசா கட்டணத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஏஜன்சிஸ்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள். திருப்பதியில் விசாரித்தபோது நபருக்கு  3500 சொல்லி இருந்தார்கள். நான்கு பேர் என்றால் மொத்த தொகையில் ஆயிரம் ருபாய் குறைப்பதாகச் சொல்லி இருந்தார்கள். ‘நாம் ஏன் சென்னையில் முயற்சிக்க கூடாது?’னு இணையத்தில் தேடி ஒவ்வொரு   ஏஜன்சிஸுக்கும் போன் செய்து பார்த்தேன். 1900 முதல் 2500 வரை வசூலிக்கிறார்கள்.

புறப்படும் தேதிக்கு இருவது நாட்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பித்தால் போதும் சொல்லி இருந்தார்கள். அதனால் நான் இம்மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு  எதிரில் இருக்கும் மதுரா டூர் ஏஜன்சி வழியாக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தேன். 1950.

விசா விண்ணப்பிப்பதற்கான தேவையான  ஆவணங்கள் பார்த்தால்: சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைவரும் தனித்தனியே முதலில்
 விண்ணப்ப படிமம் நிரப்ப வேண்டும்.  அதனுடன் ஒரிஜினல் பாஸ்போர்ட், 2 புகைப்படங்கள் (மாதிரி படம்)

 மற்றும் சிங்கப்பூருக்குச் சென்று வரும் டிக்கெட்டுக்கள்+எங்கு தங்குகிறோம் என்பதற்கான ரசீது இணைக்க வேண்டும். கூடுதலாக  சிங்கப்பூர் செல்ல நபருக்கு நபர் மேலும் ஒரு சில ஆவணங்கள் தேவைப்படலாம். உதாரணத்திற்கு நான் அரசு பணியில் இருப்பதால் அலுவலகத்தில் இருந்து நோ அப்ஜக்‌ஷன் சர்டிஃபிகேட் சமர்ப்பிக்கவேண்டும். அனைத்தையும் தயார் செய்த பிறகு விசா வாங்க முடிவு செய்த  விசா ஏஜண்டிடம் சமர்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக  இருக்கும் பச்சத்தில்  நான்கு  வேலை நாட்களுக்கு விசா    பெற்றுத்தருவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட விசா ஏஜண்ட் பட்டியல் மற்றும் மேலும் விசா  தகவல்களுக்கு
 பார்க்க.

எங்களது அனைவரது ஆவணங்களும் சரியாக இருந்ததால் சிங்கப்பூர் நாட்டிற்குள் செல்ல நான்கு பேருக்கும் அனுமதி கிடைத்து விட்டது.

மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பாஸ்போர்ட் வாங்கி பக்கங்கள்  பயன்படுத்தாமலே வெறுமனே  ரெனியுவல் செய்யும் பச்சத்தில் திட்டமிட்டபடி முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்பதில் பெருமையாக இருக்கிறது. அவ்வளவுதான். எல்லாம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிங்கப்பூருக்கு புறப்படுவது மட்டும்தான் மீதம் இருக்கிறது. இன்னும் அதற்கு சில தினங்கள் இடைவெளி இருப்பதால் அதற்கு முன்பு என்னைப்போன்று சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்களுக்காக நான் ஏற்பாடுகள் செய்ததைப் பற்றி எழுதினால்  புதிதாக செல்பவர்கள்  யாருக்காவது பயனுள்ளதாக இருக்கட்டும் என கிடைத்த இடைவெளியில் எழுதி இருக்கிறேன். ஆகஸ்ட் 18 ஊர் திரும்பியதும் சிங்கப்பூர் அனுபவத்தை முழுவதும் பயண கட்டூரையாக எழுத உத்தேசம்.

மொத்தத்தில் நான் குடும்பத்தோடு வரும் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்கிறேன் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு:)