Thursday, August 30, 2018

சிங்கப்பூர் பயணம் - (நாள் 5) ஷாப்பிங் + ஊர் திரும்புதல்ஆகஸ்ட் 17. வியாளக்கிழமை காலையில் எழுந்ததும் ‘இன்னைக்குதான் சிங்கப்பூர்ல இருக்க போற கடைசி நாள். இரவு ஊர் திரும்பணும்’ என்கிற நினைவு  ஞாபகம் வரவும் சிறு பிள்ளை மாதிரி ஓவென்று அழணும்னு தோணிச்சு.

அன்று இரவே ஊர் திரும்புவதால் தயாராகி பைகளை பேக் செய்து பைகளை ரிசப்ஷன் பகுதியில் வைத்துவிட்டு அறையை செக்கவுட் செய்து விட்டோம். விடுதியை விட்டு வெளியே வந்து பத்து நிமிடம் நடந்து முஸ்தப்பா ஷாப்பிங் மால் நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். அன்றைய தினம் நாள் முழுவதும் ஷாப்பிங்காக ஒதுக்கி இருந்தோம். இரவு பதினோரு மணிக்கு  சென்னைக்கு ஃப்லைட்.

சிங்கப்பூர்ல ஷாப்பிங்னா முதல்ல அனைவருக்கும் நினைவிற்கு வருவது முஸ்தப்பா செண்டர்தான். குறைந்த விலையில் அங்குதான் நமக்கும்  உறவினர்களுக்கும்    பொருட்கள் வாங்க ஏற்ற இடம். 24/7  இயங்குவதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் இங்கு உண்டு. சிங்கப்பூருக்கு வந்த முதல் நாள் இரவே நானும் தம்பியும் இங்கு வந்து ஒரு சுற்று சுற்றி சென்றதால் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தோம்.

வெளிநாட்டுக்குச் சென்று  திரும்பும் பெரும்பாலானவர்கள் அன்பளிப்பாக உறவினர்களுக்கு ஃபாரின் சாக்லேட் மற்றும் செண்ட்  கொடுப்பது  பழக்கம். அந்த வரிசையில் நாமும்  வெளி நாட்டுக்கு போய் வந்திருக்கிறோம் என்பதை நம் மக்கள் மனதில் /வரலாற்றில்  பதிய வேண்டும்  என்பதால் முதலில் சாக்லேட் வாங்கிடலாம்னு சாக்லேட்ஏரியாவுக்கு போனோம்:)

2சிங்கை$ முதல் பத்து, இருவது$ வரை  பல வகைகளில் சாக்லேட் கிடைக்கிறது. விலையை பொருட்படுத்தாமல் பெயர் தெரியாட்டியும் பிடித்த சாக்லேட் பாக்ஸ் எடுத்து ட்ராலியில் எடுத்து போட்டுக்கொண்டோம். சாக்லேட் முடிஞ்சதும் அடுத்து செண்ட்  வாங்க சென்றோம். அங்கும் அதே கதைதான். செண்ட் அடிச்சு பழக்கம் இல்லாததால் நல்ல பேக்கிங்க்ல இருந்த செண்ட் எடுத்து ட்ராலில எடுத்து போட்டுக்கொண்டோம். 3$ல இருந்து செண்டின் விலை  ஆரம்பிக்கிறது. அது முடிச்சதும் வீட்டுக்கு  வேண்டிய பொருட்கள் வாங்க உள்ளே ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். மாலினுள் நீங்கள் நடக்க நடக்க வந்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு  தளத்திலும் என்னென்ன கிடைக்கும் என்பதை லிஃப்டில் ஒட்டி  இருப்பார்கள். அதை பார்த்து விட்டு  தேவையானவற்றை வாங்க திட்டமிட்டால்  எளிதாக இருக்கும். ஷாப்பின் விரும்புவர்களுக்கு  அரை நாள் நிச்சயம் போதாது. ‘இனி முஸ்தப்பால போதும்’னு தோணியதும் பில் போடும் இடத்திற்கு வந்து பில் போட்ட போதுதான் தெரிந்தது நாங்கள் 517சிங்கப்பூர் $க்கு பொருட்கள் வாங்கி இருக்கிறோம் அப்படினு. நம்ம ஊர் ரூபாய்க்கு  25,000. காச பத்தி கவலை படாம ட்ராவல் கார்ட் மூலம் பெய்மெண்ட் செய்தோம். சிங்கப்பூரில் சுற்றுலா  பயணிகளுக்கு ஜீஎஸ்டி இல்லாததால்  பொருட்கள் வாங்கும் போது வரி செலுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது  விமான நிலையத்தில் சிங்கப்பூரில் செலுத்திய ஜிஎஸ்டி வரியை  ரிஃபண்ட் பெற முடியும் என்பதால் ஜிஎஸ்டி ரிஃபண்ட் பில் வாங்கி  விட்டு வெளியே வந்தோம்.
பொருட்கள் வாங்கும் போது பணத்த பத்தி கவல படல ஆனா வெளிய வந்ததும் வாங்கின பொருட்களை எப்படி ஊருக்கு கொண்டு போவதுதான் பெரும் குழப்பமா இருந்திச்சு. ட்ராலியில் இருந்து எடுத்த பொருட்களை பில் போட்டு  ஒரு பெரிய கவரில் கட்டி கொடுத்து விட்டிருந்தார்கள். அதை அப்படியே  கொண்டு போக முடியாது என்பதால் முதலில் பேக்கிங் செய்ய வேண்டும்.  வெளியே  வந்ததும் அங்கு பணி புரியும் ஒரு தமிழரிடம்  உதவி கேட்டு பெரிய அட்டை பெட்டி ஒன்றை வாங்கி அதில் வாங்கிய பொருட்களை அடுக்கி கெட்டியாக கட்டி முஸ்தஃபாவில்  நுழைவாயிலில்  உள்ளே போவர்கள் கொண்டு வந்த பொருட்களை  கொடுத்துவிட்டு செல்லும் இடத்திற்கு சென்று எங்களோட பெட்டியை கொடுத்துட்டு பக்கத்தில் இருக்கும் சரவண பவனில் சாப்பிட சென்றோம்.

 ஃபுல் மீல்ஸ் நான்கு பேருக்குச் சேர்த்து 37.5$ஆச்சு. மதிய உணவு  முடிச்சதை அடுத்து ’சிங்கப்பூரில் தங்கம் விலை நம்ம ஊரைவிடவும் குறைவு என்பதால் அதையும் பார்த்து விடலாம்’னு லிட்டில் இந்தியாவில் பிரபலமான  தங்க கடைக்குச் சென்றோம். சிங்கப்பூர் பொருத்தவரையில் வாங்கும் நகைக்கு  செய்கூலி, சேதாரம் கிடையாது. அதோடு வாங்கும் நகைக்கு செலுத்தும் ஜிஎஸ்டி வரி ரிஃபண்ட் பெற முடியும் என்பதால் சிங்கப்பூரில் நகை எடுப்பது நமக்கு லாபமாகதான் இருக்கும்.

நகை கடையை விட்டு வெளியே வந்து லிட்டில் இந்தியாவில் தெருவோரக் கடைகளில் ஏறி இறங்கி சில பொருட்களை வாங்கினோம். அசல் டீநகர்தான் நினைவு படுத்தியது. பெரும்பாலான கடைகளில்  தமிழர்கள்தான் பணி புரிகிறார்கள். நேரம் தெரியாமல்  பர்ச்செஸ் செய்துகிட்டு இருக்க தூரல் வந்து எங்களை நிறுத்தியது. நேரம் அப்போது பார்த்தால் ஐந்தரை ஆகி இருந்தது. லேசான  தூரலுக்கு ஒதுங்கி நின்ற எங்களை இடத்தை விட்டு  நகர விடாமல் அரை மணி நேரத்திற்கு விடாமல் மழை கொட்டி தீர்த்தது. மழை  நின்றதும் முஸ்தஃபா சென்று மதியம் கொடுத்திருந்த பெட்டியை வாங்கினோம். அங்கிருந்து தங்கி இருந்த விடுதிக்குச் சென்று எங்களோட பைகள் வேறு எடுத்துக்கொண்டு வரணும் என்பதால் அங்கிருந்து விடுதி நோக்கி நடக்க ஆரம்பிச்சொம்.

பதற்றமான  க்லைமெக்ஸ்:

எங்கள்  நான்கு பேருக்கும் சேர்த்து  விமானத்தில் செக்கின் லக்கேஜோ வெறும் 25கிலோதான். ஷாப்பிங் பொருட்கள்+எங்களோட பைகள் சேர்த்து பார்க்கும்போது அதிக எடை இருக்கிறது. ’என்ன செய்ய போகிறோமோ’னு அந்த சமயம் பதற்றம் ஆரம்பிச்சிடுச்சு. கடைசி நிமிடத்தில் எக்ஸ்ட்ரா  லட்கேஜ் எடைக்கு இவ்வளவு டாலர்னு நிறைய ச்சார்ச் செய்வார்கள் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் இருந்தோம். ஷாப்பிங் பொருட்கள் மட்டுமே இரண்டு அட்டை பெட்டிகள். தவிர எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பை. இந்தியாவிற்கு இல்ல  ஏர்போர்ட் வரை ஆச்சும். ‘இதை எப்படி தூக்கிட்டு ஏர்போர்ட் வரை போகபோறோமோணு  ஒரே பதற்றம்.

சிங்கப்பூரில் வந்த இரண்டாவது நாளே கையில் எங்களிடம் ரொக்கமாக  கொண்டு வந்த டாலர்ஸ் தீர்ந்து விட்டதூ. தேவை பட்ட இடத்தில் எல்லாம்  ட்ராவல் கார்ட்தான் பயன்படுத்திகிட்டு வந்தோம். அன்றைய தினம் முஸ்தஃபா தவிர தெரு ஓர கடைகளில்  பொருட்கள் வாங்க  ஒரு 200 டாலர்ஸ் தனியாக எடிஎம் வழியாக  வித்ட்ரா  செய்து வைத்திருந்தோம். அதுவும் தீர்ந்திருந்தது. எங்களிடம்  500$வரை காசு ட்ராவல் கார்டில்தான் இருக்கிறது.

பொருட்களை தூக்கிட்டு போக முடியாது என்பதால் டாக்சி பிடித்து போக நினைத்தாலும் இறங்கும் போது  கையில் பணத்தை கேட்டால் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே விடுதிக்கு வந்து  ரிசப்ஷன் பகுதியில் வைத்திருந்த பைகளை எடுத்துக்கும்போது இரவு ஏழாகி இருந்தது. 11 மணிக்கு விமானம் புறப்படும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செக்கின் செய்திருக்க வேண்டும் என்பதால் எதை பற்றியும் யோசிக்காமல்  இனியும் தாமதித்தால்  சரி படாதுனு மெட்ரோவில் சாங்கி செல்ல முடிவு செய்தோம். மேட்ரோ ஏற போனால் அங்கும் பிரச்சனை. மாலை நேரம் என்பதால்  ட்ரைனில் கூட்ட நெரிசல். அதிலும் ஒவ்வொரு இண்டர் சேஞ்லையும் ட்ரைனில் ஏற நீண்ட வரிசை.   இரண்டு மூன்று   ட்ரைன் விட்ட பிறகுதான் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ட்ரைனில் ஏற வாய்ப்பு கிடைச்சது.

நேரம் ஆக ஆக  உள்ளுக்குள் செக்கின் லக்கேச் நினைத்து பயம் அதோடு நேரத்திற்கு செக்கின் செய்து விடுவோமானு  ஒரே குழப்பம். சரியா எட்டரை அளவில்  சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் நிறுவனத்தின் செக்கின் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செக்கின் லக்கேசாக  அனுப்ப முடிவு செய்திருந்தவற்றை  முதலில் தனியாக நாங்களே எடை போட்டு பார்த்தபோது  30கிலோவையும் தாண்டி இருந்தது. விமானத்திலோ செக்கின் லக்கேசாக 25கிலோ வரைதான் எங்களுக்கு அனுமதி .

’எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’னு தைரியத்தில் செக்கின் செய்யும் இடத்திற்குச் சென்று ச்செக்கின் லகேச் மட்டும் செக்கின் செய்பவரிடம் கொடுத்தபோது எடை பார்த்தபோது 30கிலோவை காட்டியது. ’எடை குறைத்துவிட்டுவா’னு அவர் திருப்பி அனுப்பி விட்டார். ஏற்கனவே ச்செக்கின் லகேச் நினைச்சதோட வெயிட் அதிகமா இருந்ததால்தான் அதுல இருந்ததை எடுத்து எங்களோட பைகளில் போட்டு திணிச்சிருந்தோம். இப்போ  ச்செக்கின் அதிகாரி வேற எடை குறைக்க சொன்னதால  மீண்டும் அதுல இருந்து சிலவற்றை எடுத்து மேலும் திணிச்சு அவரிடம் ச்செக்கின் லகேச் போய் கொடுத்தால் 27கிலோ காட்டியது. ’ஐய்யோ  மீண்டும்  திருப்பி அனுப்பிவிடுவாரோ’னு பயந்துக்கொண்டிருக்க இம்முறை எதுவும் சொல்லாமல் 25கிலோ என எழுதி  செக்கின் லக்கேஜ் விமானத்திற்குள் ஏற்ற டேக் போட்டு அனுப்பிவிட்டார். அப்போதுதான் போன உயி பாதி வந்தது.

செக்கின் செய்து போர்டிங் பாஸ் வாங்கியதை அடுத்து இமிக்ரேஷன்காக போய் வரிசையில் நின்றோம். சிங்கப்பூரில் நுழையும் போது செய்த மாதிரி ஃபார்மாலிடிஸ் செய்து நாட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதற்கான முத்திரை பாஸ்ப்போர்டில்  குத்தி கொடுத்தார். அதன் பிறகு அங்கே இருந்த ஜிஎஸ்டி  ரிஃபண்ட்   கவுண்டருக்குச் சென்று நாங்கள் சிங்கப்பூரில் வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் பெற்ற ஜிஎஸ்டி ரிஃபண்ட் பில் கொடுத்து டாலர்ஸ் பெற்றோம். முஸ்தஃபாவில் வாங்கிய பொருட்களுக்கு மட்டும் 34 டாலர்.   அம்மா வாங்கிய நகைக்கு ஜிஎஸ்டி ரிஃபண்ட் தனி கணக்கு.

சிங்கப்பூர் செண்ட்ரல் பேங்ல இருந்து நேரா டாலர்ஸ்  பிரிண்ட் செய்து கொண்டு வந்திருப்பார்கள் போல என்னவோ. ஒவ்வொரு நோட்டும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷா வளவளப்பா இருந்திச்சு. ஜிஎஸ்டி ரிஃபண்ட் பெற்றதை அடுத்து கஸ்டம்ஸ் மற்றும் செக்யூரிடி பரிசோதனைக்காக சென்றோம். ச்செக்கின் லக்கேச் தலவலியில இருந்து இப்போ  ஹேண்ட் லகேச் தலைவலிக்கு பிரச்சனை மாறிடுச்சு. ஹெண்ட் லக்கெஜ் ஏழு கிலோ வரை விமானத்திற்குள்ளே எடுத்துச் செல்ல அணுமதி உண்டு. எங்களோட பைகளை   வாங்கி  வெயிட் பார்ப்பார்களோனு இருந்தது.

ஒவ்வொரு பையிலும் பொருட்கள்+எங்களோட துணிகள் சேர்த்தா குறைந்தது 15கிலோ ஆச்சும் தேறும். அப்படியேதும் பார்க்காமல்  எப்போதும் போல்   அவர்கள்  வேலை செய்து    அனுப்பி விட்டார்கள். இனி விமானத்திற்குள்   ஏற வேண்டியதுதான் மிச்சம்.

விமானத்திற்குள் நுழைய வரிசையில் நின்ற போது சிலர் பெரிய ட்ராவல் பேக்கையே கொண்டு வந்ததை பார்த்து அந்த பாதி உயிரும் வந்தது. ஏரோ பிரிட்ஜ் வழியாக ஸ்கூட் விமானத்திற்குள் நுழைந்து எங்களோட இருக்கையில் போய் உட்கார்ந்தோம்.

சரியாக சிங்கப்பூர் நேரம் படி இரவு  11 மணிக்கு சுமக்க முடியாமல் வாங்கிய பொருட்களை சுமந்து வந்து விமானத்தில் சேர்க்க ஐந்து நாட்கள் சிங்கப்பூரில் சுற்றிய நினைவுகளை சுமந்துக்கொண்டு இதோ நாங்கள் பயணிக்கும் ஸ்கூட் விமானம் புறப்பட்டு மெல்ல முன்னோக்கி நகரத் தொடங்கியதும், பிரிய மனமில்லாமல் சிங்கப்பூருக்கு பைபை சொன்னோம்.

அன்றைய தினம் ஓய்வின்றி தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்ததால் உடனடியாக உறங்கி விட்டிருந்தோம். ’சென்னைல லாண்ட் ஆக போறோம். சீட் பெல்ட்  எல்லாம் போட்டுக்கோங்க’னு அறிவிப்பு வந்ததும் முழிப்பு வந்திடுச்சு. சென்னையில் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் வானில் எக்ஸ்ட்ரா  நாலு சுத்து சுற்றி சென்னை விமான நிலையத்தில் பைலெட் விமானத்தை பத்திரமாக இறக்கினார்.

செக்குரிடி, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் முடிச்சு வெளியே வரும்போது  அதிகாலை  ஒன்னரை ஆகி இருந்தது. எங்களை திருப்பதிக்கு அழைச்சிட்டு போக கார் தயாராக இருந்தது. நான்கு மணி நேர பயணத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னையை வந்தடைந்தோம். இரண்டரை மணி நேர பயணத்தில் சென்னையில் இருந்து கடைசியாக வீட்டை அடைந்தோம்.

சிங்கப்பூர் புரப்படுவதற்கு முன்பு செய்த ஏற்பாடுகளை பற்றி
 இந்த
 கட்டுரையில் எழுதி இருந்தேன். அதன் பிறகு சிங்கப்பூர் சென்று வந்து சுற்றி வந்த அனுபவத்தை எழுத ஆரம்பிச்சா பாதியிலே நின்னுடுச்சு.  ஒரு வருஷம் கழிச்சு எப்படியாவது சிங்கப்பூர் அனுபவத்தை தொகுத்து எழுதி முடிச்சிடனும்னு  திட்டமிட்டு எழுதி முடித்தாகிவிட்டது

 இந்த தொடர் சீக்கிரம் எழுதி முடிக்க  ஒரு காரணம் கடைசியாக சொல்வதாக எழுதி இருந்தேன்.
வரும் அக்டோபர் மாதம்  இரண்டாவது வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள போகிறேன் என்பதுதான் அது.
அதற்குள் எப்படியாவது எழுதி முடிக்க பார்த்தேன் எழுதியும் முடிச்சாச்சு. என் அளவில் இது மிகப் பெரிய வெற்றி. ஆரம்பத்தில் இருந்து படித்து பின்னோட்டத்திலும் கைபேசி வழியாகவும் தங்களது  கருத்தை சொன்னவர்களுக்கு நன்றிகள்.

அடுத்து  ஜீவா அக்காவிற்குதான்  நன்றி கடன் பட்டிருக்கேன். அவர்  செய்யும் உதவிக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்பது தெரியவில்லை. நன்றி அக்கா. நீங்கள் இல்லை என்றால்  வலை உலகில் நான் இல்லை.
*
 சிங்கப்பூர் பயணம் எனக்கு உணர்த்தியது:

 ஒரு பயணம் மனநிலையையும் உடல்நிலையையும் மாற்றியமைக்கும் சக்திவுடையது என்கிறபோது நிச்சயம் அடுத்தடுத்த பயணம் மேற்கொள்ள  ஆர்வம் பிறந்தது.

முந்தைய பாகங்கள் படிக்க:

1.  சிங்கப்பூருக்கு!
2.  ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி?
3. சென்னை விமான நிலைய அனுபவங்கள்.
4.  விமான பயண அணுபவம்.
5.  சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.
6.  சிங்கப்பூரில் முதல் மெட்ரோ பயணம்
7. சிங்கப்பூரில் நெகிழ்ச்சியான இரவு அனுபவம்!
8. சிங்கப்பூர் பயணம் - (நாள் 1)
9. சிங்கப்பூர் பயணம் - (நாள் 2)
10. சிங்கப்பூர் பயணம் - (நாள் 3)
11.  சிங்கப்பூர் பயணம் - (நாள் 4)

Thursday, August 23, 2018

சிங்கப்பூர் பயணம் - நாள் 4 சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-11)

தொடர்ந்து இரண்டு நாட்கள் செண்டோசாவில் சுற்றியதை அடுத்து ஆகஸ்ட் 16 அன்று ஜூவைப் பகலிலும் நைட் சஃபாரி இரவிலும் பார்க்க முடிவு பண்ணினதால், மெதுவாகவே அறையை விட்டு புறப்பட்டோம். எப்போதும் போல விடுதியில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து ஃபெரர் பார்க்  ரயில் நிலையத்திற்கு வந்து வடக்கு கிழக்கு வழித்தடத்தில் ஹார்பர்ஃப்ரெண்ட் நோக்கிச் செல்லும் ரயில் ஏறி டோபி காட் நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து வடக்கு தெற்கு வழித்தடத்தில் ஜூரோங் கிழக்கு நோக்கிச் செல்லும் ரயில் பிடித்து அங் மோ கியோ நிறுத்தத்தில் இறங்கி பஸ் பிடிச்சு ஜூ போகனும். அங் மோ கியோ ரயில் நிறுத்தம் வந்ததும் இறங்கி வெளியே வந்தால் பேருந்து நிலையம் அருகில்தான் இருக்கிறது. சிங்கப்பூருக்கு வந்து  மூன்று நாட்களுக்கும் மேல் ஆனாலும் பேருந்தில் பயணிக்க வேண்டிய  அவசியம் அதுவரை ஏற்படவில்லை. ஜூவிற்கு போகும்138 எண் பேருந்து ஏற வரிசையில் காத்திருந்தபோது உடன் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தம்பதியினரிடம் பேச்சைக் கொடுத்தேன். அவர்கள் சிங்கப்பூர் ஜூவிற்கு வருவது நான்காவது முறையாம். எப்போதெல்லாம் சிங்கப்பூர் வருகிறார்களோ அப்போதெல்லாம் ஜூவிற்குச் சென்று நேரம் செலவிடுவார்களாம். சிங்கப்பூர் ஜூ மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார்கள். இங்கையும்  (திருப்பதியிலும்) ஒரு ஜூ இருக்கு  யாராவது போகனும் சொன்னா ‘அங்க ஒன்னுமே இல்லையப்பா’னு பலரிடம் சொல்லி இருக்கேன். இதோ இப்போது   ஆசியாவில் இல்லை ஏன் உலக அளவில் சிறந்த ஜூக்களில் ஒன்றான சிங்கப்பூர் ஜூவை சுற்றிப் பார்க்க போகிறேன்  என்பதை நினைத்துக்கொண்டிருக்க 138 எண்  பேருந்து வந்தது.

சிங்கப்பூர்  பேருந்துகளை பொருத்தவரையில் ட்ரைவர் மட்டும்தான் இருப்பார். கண்டக்டர் கிடையாது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் EZ-Link கார்ட் தான் இங்கும் பயன்படுத்தனும். பயணிகள்  பேருந்தில் முன் கதவு வழியாக ஏறும்போது ட்ரைவர் பக்கத்தில் வைத்திருக்கும் மிஷினில் கார்டை தேய்க்க வேண்டும். இறங்குபவர்கள் பேருந்தின் பின் கதவின் வழியாக இறங்கும்போது  அங்கு வைத்திருக்கும் மெஷினில் கார்டை தேய்க்க வேண்டும். அப்போதுதான்  அது நீங்க எந்த நிறுத்தத்தில் ஏறினீர்களோ  அந்த இடத்தில் இருந்து இறங்கிய இடம் வரைக்குமான கட்டணத்தை கணக்கு போட்டு உங்கள் கார்டில் இருந்து எடுத்துக்கும். சிங்கப்பூர்ல சுத்தும்  பேருந்துகள் எல்லாமே மெர்சிடிஸ் பென்ஸ்  கம்பெனி பேருந்துகள்தான். இருபுறமும் இருவர்  உட்காரும் வகையில்  இருக்கைகள்  இருந்தது. குளிர்சாதன வசதியும் செய்யபட்டிருந்தது.

 சிங்கப்பூர் ஒரு குட்டி நாடுதான். நிலப்பரப்போ மிக குறைவு. ஆனாலும் அங் மோ கியோ வில் இருந்து ஜூவிற்கு போகும் சாலையில் வழி நெடுக்க மரங்கள் இருப்பதை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. பேருந்தில் ஒரு  அரை மணி நேரம் பயணித்திருப்போம். ஜூதான் கடைசி ஸ்டாப். காலையில் 8.30 மணிக்குத் திறக்கப்படும் ஜூவானது மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். சிங்கப்பூர் ஜூ நுழைவு கட்டணம் நபருக்கு 35சிங்கை$. ஜூ+நைட் சஃபாரி டிக்கேட் சேர்த்து வாங்கினால் விலை சற்று குறையும் என்பதால்
 இந்த
இணைய தளத்தில் 2-Park Admission ஜூ+நைட் சஃபாரி சேர்த்து சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி இருந்தோம். நான்கு பேருக்குச் சேர்த்து 244$ ஆச்சு. நம்ம காசில் 11,819.

 நுழைவாயிலில்  ஜூ வரைபடம் வைத்திருப்பார்கள். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே நடக்க ஆரம்பிச்சா ஜூவை திட்டமிட்டு நிதானமாக சுத்தி பார்க்கலாம். 69 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜூவை சுத்தி பார்க்க அரை நாள் போதும். இங்கு 315வகையான உயிரினங்களும், 2500க்கும் மேற்பட்ட விலங்குகளும் இருக்கிறது. சிங்கப்பூரின்  அடர்ந்த காட்டு பகுதியில் அமைவிடமாக ஜூ இருப்பதாலும் விலங்குகளை நன்றாக பராமரிப்பதாலும் சிங்கப்பூர்  மற்ற ஜூக்களிடம்  இருந்து எப்படி வேறுபடுகிறது  என்பதை  ஒவ்வொரு  மிருகத்தையும் பார்த்துக்கொண்டு வர  தெரிந்தது. இது  திறந்தவெளி ஜூ என்பதால் மிருகங்களை கூண்டில் அடைத்து வைக்காமல் அதற்கான ஒரு இடத்தில் ப்ரியா உலாவ விட்டிருப்பாங்க. பார்வையாளருக்கும்  மிருகத்திற்கும்  நடுவே பாதுகாப்பிற்காக வேலிகள் உண்டு. நடக்க முடியாதவர்கள் ஜூவினுள் சுற்ற ட்ராம் வசதி உண்டு. தனியாக  அதற்கு டிக்கட் வாங்க வேண்டும். ஒருத்தருக்கு 5$ ஆகும். ஒருமுறை டிக்கட் வாங்கிவிட்டால் நாள் முழுவதும் அதை காட்டி வேண்டிய இடத்தில் ட்ராமில் ஏறி சுத்தி பார்க்கலாம். ட்ராமில் பயணிக்கும் போது  இரு புறமும்  தென் படும் விலங்குகளை பற்றிய தகவல்கள் ஸ்பீக்கர் வழியாக ட்ராமினுள்  கேட்கும் வசதியும் உண்டு.

பார்வையாளர்கள் இங்கு விலங்குகளை பார்ப்பதோடு மட்டும் இல்லாமல் ஜூவில்   நாள்தோறும் விலங்குகளை கொண்டு நடத்தபடும் நான்கு வகையான ஷோஸ் பார்க்கலாம். ஒவ்வொன்றும் தினமும்  இரண்டு முறை  நடத்துவார்கள். நாங்கள் மதிய உணவு சாப்பிடும் வரை ஜூவை சுத்தி பார்த்துவிட்டு மதிய உணவிற்கு  பிறகு 4 ஷோஸ் பார்க்க திட்டமிட்டிருந்தோம். மதியத்திற்கு பிறகு ஒவ்வொரு ஷோவையும் ஒவ்வொன்றாக சென்று பார்க்க நேரம் சரியாக இருந்தது. யானைகளின் சாகசத்தையும்  காலிஃஃபோர்னியா ஸீலையனின்  புத்திசாலிதனத்தையும் கண்டு ரசித்தோம். ஒரு ஷோவில்  பாம்பை தொட்டும் பார்த்தோம்.


 ஜூவை விட்டு வெளியே வரும்போது மாலை ஐந்தரை ஆகி இருந்தது. ஜூ  பார்த்து முடித்ததை அடுத்து மாலை ஏழு மணிக்குதான் நைட் சபாரி என்பதால் சிறிது நேரம் கால்களுக்கு ஓய்வு கொடுப்போம் என ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தோம்.

நைட் சஃபாரி சுத்தி பார்க்க ஏற்கனவே நாங்கள்  டிக்கட் எடுத்ததால் நேரா வரிசையில் போய் நின்றோம். நைட் சஃபாரி நுழைவு கட்டணம் ஒருத்தருக்கு 47சிங்கை$. உள்ளே ட்ராமில் சுற்றி பார்க்க வேண்டி இருப்பதால் ட்ராம் டிக்கட்டும் நுழைவு கட்டணத்தோடு சேர்த்து வாங்கிவிடுகிரார்கள். பகல் முழுவதும்  வெவ்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்தவர்கள் இரவு நேரத்தில் விலங்குகளை பார்க்க  ஒரே இடத்தில் குவிந்ததால் வரிசை நீண்டு இருந்தது.
உள்ளே  வந்ததும் முதலில் Creatures of the Night Show பார்த்து விடலாம் என நினைத்தால் போகும் வழி எங்கும் அங்கும் கூட்டம். 7:30 ஷோவை பார்க்க தவறி விட்டால் அடுத்து  8:30க்குதான் ஷோ என்பதால் நேராக  ஷோ நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம். ஷோ முடித்ததும்  டிராமில் ஏறி  சுற்றி பார்க்க போக நினைச்சா அங்கும் வரிசை...
ஒரு வழியா நாங்க டிராமில் ஏற அரை மணி நேரம் ஆச்சு. டிராமில் போகும்போது  போட்டோ எடுக்கும்போது பிளாஷ் போட்டு  எடுத்தால் மிருகங்களுக்கு டிஸ்டபென்ஸாக இருக்கும் என்பதால் டிராமில் ஏறும்போதே நம்மிடம்  சொல்லி விடுகிறார்கள். அடர்ந்த காட்டுப் பகுதியில் மிருகங்களை இயல்பான சூழலில் மிக நெருக்கமாக ட்ராமில் பயணித்துக்கொண்டே பார்ப்பது  புது அனுபவமாக இருந்தது. இங்கும் ஸ்பீக்கர் வழியாக  இருபுறமும் தெரியும் மிருகங்களை பற்றிய தகவல்கள்   கேட்க முடியும். ட்ராமில் ஒரு சுற்று சுற்றியதை அடுத்து ஒரு  இடத்தில் இறங்கி காட்டுக்குள் நடந்து போய் விலங்குகளைப் பார்க்க இருக்கும் 4 பாதைகளில் ஒன்றில் நடக்க ஆரம்பிச்சோம். இரவு நேரத்தில் துளி கூட வெளிச்சம் இல்லாத இடத்தில்  தூய்மையான காற்றை ஸ்வாசித்துக்கொண்டு நடந்தால் ஏற்படும் அனுபவத்தை  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒரு பத்து நிமிஷம் அந்த இருட்டில்  விலங்குகளை பார்த்துக்கொண்டே நடந்திருப்போம். ‘இனி போதும்  இங்கிருந்து புறப்படலாம். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் சீக்கிரம் வெளியேறினால்தான் பேருந்து  ட்ரைன் பிடிச்சு  லிட்டில் இந்தியாவுக்கு போய் ஹோட்டலில் சாப்பிட்டு  அறைக்கு திரும்ப சரியாக் இருக்கும்’னு அப்பா சொல்ல எனக்கோ நைட் சஃபாரி முழுவதுமாக நடந்து சுற்றி பார்க்க முடியலனு ஒரே வருத்தம். அதோடு அங்க இருந்து  புறப்படவும் மனமில்லை. முன் எச்சரிக்கையாக கடைசி பேருந்து மற்றும் மெட்ரோ சமயத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு வந்தால் இரவு பனிரெண்டு வரை நன்றாக சுற்றி பார்த்து வெளியேறலாம்.
 அங்கிருந்து நாங்கள் 138 எண் பேருந்தை பிடித்து  அரை மணி நேரம் பயணித்து அங் மோ கியோ வை அடைந்து அங்கிருந்து மெட்ரோ ஏறி டோபிகாட் வந்து  ட்ரைன் மாறி லிட்டில் இந்தியாவிற்கு  வந்து சாப்பிட்டு அறைக்கு திரும்பி  அந்த நாள் வெற்றிகரமாக முடிச்சோம்.

 அன்றைய தினம் பகலில் மிருகங்களை ஜூவிலும், இரவில் நைட் சஃபாரியிலும் மிருகங்களை  பார்ப்பது புது அனுபவமாக இருந்தது.

அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் ஐந்தாம் நாள்/கடைசி நாளான ஷாப்பிங் + ஊர் திரும்புதல்.

Saturday, August 18, 2018

சிங்கப்பூர் பயணம் - (நாள் 3) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-10)

கடந்த வருடம் (2017) ஆகஸ்ட் 12 முதல் 17 வரை சிங்கப்பூரில் சுற்றிவந்த அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாக எழுத ஆரம்பித்து தொடர் முழுவதும் எழுதி முடிக்கப்படாமலே ஓர் ஆண்டும் முடிந்து விட்டது. எப்போதாவது தொடர் எழுதி முடிக்கவில்லை என்கிற நினைவு எட்டிப் பார்த்தாலும் எழுதுவதற்கான ஆர்வம் இன்மையால் தொடர் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் நண்பர் அரவிந்த் துளசிதரன் சாரோட காலம் செய்த கோலமடி புதினத்திற்கு எழுதி இருந்த
 விமர்சனத்திற்கு
 நெல்லைத் தமிழன் அவர்கள் இட்ட பின்னோட்டத்தை பார்த்ததும் தொடர் மீண்டும் எழுத ஆர்வம் தொற்றிக் கொண்டது. நன்றி சார். அதோடு இந்த தொடர் சீக்கிரம் எழுதி முடிக்க கைகள் பரபரக்க மற்றொரு காரணமும் இருக்கிறது. அதை இந்த தொடரின் முடிவில் சொல்கிறேன்:)

*
முந்தைய பதிவில் சிங்கப்பூரில் நாங்கள் இரண்டாம் நாள் சுற்றி பார்த்த யுனிவர்சல் ஸ்டூடியோஸ் அனுபவத்தை எழுதி இருந்தேன். அதனுடைய தொடர்ச்சியாக சிங்கப்பூரில் மூன்றாம் நாளான 15 ஆகஸ்ட் தினத்தன்று சுற்றிப்பார்த்த செண்டோசா தீவு அனுபவத்தை பார்க்கலாம்.
*
சிங்கப்பூருக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் சுத்தி பார்க்க விரும்பும் இடங்களில் இந்த செண்டோசா தீவும் ஒன்று. இந்த தீவானது பல பகுதிகளாக பிரிக்கப் பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாக நிருத்தி நிதானமாக சுற்றி பார்க்க விரும்பினால் இரண்டு மூன்று நாட்கள் நிச்சயம் போதாது. செண்டோசாவைப் பொருத்தவரையில் நுழைவு இலவசம். ஆனால் ஒவ்வொரு அட்ராக்‌ஷனுக்கும் தனித் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். எல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்ததில் கட்டணம் ரொம்ப அதிகமாக இருப்பதால் 2-DAY FUN PASS இந்தியாவில் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு
 இந்த
இணையதளத்தில் டிக்கெட் வாங்கினோம். அப்போது ஒருத்தருக்கு 175 சிங்கப்பூர் $. நான்கு பேருக்கு சேர்த்து 700$. இந்திய ரூபாயில் 35,000 ஆச்சு. இப்போ அதே 2-DAY FUN பாஸ் நபருக்கு 185 சிங்கை $ ஆகும்.

நாங்கள் வாங்கிய 2-DAY FUN பாஸ்ஐ கொண்டு செண்டோசாவில் இரண்டு நாள் சுற்றிப்பார்க்க முடியும். ஒரு நாள் யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ஐயும் இன்னொருநாள் செண்டோசா தீவில் இருக்கும் மற்ற அட்ராக்‌ஷன்களை பார்க்க முடியும். செண்டோசாவில் முதல் நாள் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நாங்கள் பார்த்து விட்டதால் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்ப்பதுதான் எங்களது அன்றைய திட்டம்.

ஆகஸ்ட் 15 அன்று சீக்கிரம் எழுந்திருத்து தயார் ஆகி ஃபெரர் பார்க் ரயில் நிலையத்திற்கு வந்து வடக்கு கிழக்கு வழித்தடத்தில் ஹார்பர்ஃப்ரெண்ட் நோக்கிச் செல்லும் ரயில் ஏறி ஹார்பர்ஃப்ரெண்ட் ஸ்டேஷனில் இறங்கி எஸ்குலேடர் வழியாக லெவல் இரண்டை அடைந்தோம். அங்கிருந்துதான் செண்டோசா தீவிற்கு நடந்து செல்ல முடியும். ஒரு 500 மீட்டர் தொலைவுதான் நடக்க வேண்டி இருக்கும். அது தெரியாமல் நாங்கள் நேற்றைய தினம் விவோ சிட்டி ஷாப்பிங் மால் அமைந்திருக்கும் லெவல் மூன்றில் இருந்து செண்டோசா எக்ஸ்ப்ரஸ் என அழைக்கப்படும் மோனொ ரயில் ஏறி செண்டோசா தீவிற்கு சென்றிருந்தோம். அதில் பயணிக்க நபருக்கு 4 $. நான்கு பேருக்கு கூட்டி பெருக்கி நம்ம ஊர் கணக்கில் பார்த்தால் 800 ருபாய் ஆகும். ஏற்கனவே முடிவு செய்தது போல நாங்கள் Sentosa Boardwalk என அழைக்கப்படும் நடை பாதை வழியாக நடந்து செண்டோசா தீவிற்குள் நுழைந்தோம்.

இந்த தீவானது 1. Resorts World, 2. Imbiah மற்றும் 3. beach பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் அட்ராக்‌ஷன்கள் இருக்கும் இம்பியா லுக்கவுட் பகுதியை முதலில் பார்த்து விடலாம் என முடிவு செய்து தொடர்ந்து நடந்தோம். முதலில் நாங்கள் சென்றது Butterfly Park & Insect Kingdom. பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மற்றும் பெயர் தெரியாத பூச்சிகள் வளர்க்கப்படுவதை பார்த்தோம். பத்து நிமிடம் போதும்.

அடுத்து நாங்கள் சென்றது Madame Tussauds சிங்கப்பூர் மெழுகுச்சிலை காட்சியகம். இது லண்டனில் உள்ள புகழ் பெற்ற Madame Tussauds மெழுகுச்சிலை காட்சியகத்தின் மாதிரியானதொரு செட்டப். அதில் புகழ் பெற்ற உலக தலைவர்கள், அரசியல், சினிமா, விளையாட்டு என பல துறைகளில் பிரபலமானவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் கூட்ட நெரிசல் இல்லாததால் ஒவ்வொரு சிலையாக பார்த்துக்கொண்டு அதன் பக்கத்தில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தோம்.

Madame Tussauds மெழுகுச்சிலை காட்சியகத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள்:

வெளியே வந்ததும் சில அடிகள் தொலைவில்தான் Images of Singapore LIVE அரங்கம் இருந்தது. இது ஒரு ஷோ. நாங்கள் அங்கு செல்ல காட்சி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. மீனவ கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி கடந்து வந்த சிங்கப்பூரின் வரலாற்றை நமக்கு முன்னால் ஒரு பெண் கதை சொல்லி நடித்துக் காட்டினாள்.

அடுத்து நாங்கள் சென்றது Sentosa 4D AdventureLand இந்த அட்வென்சர் லான்டில் மூன்று பகுதிகள் இருக்கு. அதில் Extreme Log Ride மற்றும் The Mysterious Island இரண்டும் நாங்கு D கண்ணாடி போட்டுகிட்டு உட்கார்ந்து பார்க்கும் வகையில் இருந்தது. Desperados மட்டும் சற்று வித்யாசமாக இருந்தது. நாங்கு D ஷூட்டிங் விளையாட்டு மூன்றையும் பார்க்க ஒரு முக்கால் மணி நேரம் பிடித்திருக்கும்.

அடுத்து சென்றது Sentosa Merlion. சிங்கப்பூரில் இருக்கும் மிகப்பெரிய மெர்லயன் இதுவாகும். 37மீட்டர் உயரம் கொண்டது. இதன் வாயிலும், தலையிலும் இரண்டு வியூ பாயிண்ட்ஸ் இருக்கு

பசி எடுக்க ஆரம்பிச்சதும்தான் மதிய உணவு சாப்பிட நினைவுக்கு வந்தது. இன்னும் இம்பியா பகுதியில் பார்க்க வேறு சிலவை இருந்தாலும் அங்கிருந்து புறப்பட்டு Resorts World Sentosa பகுதிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு உடனடியாக S.E.A. Aquarium பார்க்கச் சென்றோம்.

உலகில் மிகப் பெரிய அக்வாரியம் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சிங்கப்பூர் அக்வாரியத்திற்கு உள்ளே போக டன்னலின் வழியாக செல்ல வேண்டும். இரு புரம் மற்றும் தலைக்கு மேலே மீன்கள் பார்த்தது புதுவித அனுபவமாக இருந்தது. உள்ளே போனதும் சிறியது, பெரியதுமாக கண்ணாடி தொட்டிகளில் பல வகைகளான மீன்கள் வளர்க்கிறார்கள். அட இவ்வளவுதான நினைத்துக்கொண்டு நடந்து போய் ஓர் இடத்தில் திரும்பினால்... பிரம்மாண்ட ஓசினரியம் பகுதி தெரிந்தது. இந்த ஓசினரியம் தொட்டியானது பல மீட்டர் நீளமும்; உயரமும் கொண்ட பிரம்மாண்ட மீன் தொட்டியை பார்க்க பார்க்க கடலின் அடி பாகத்தில் வந்திருக்கிறோமோ உணர்வைத் தரும். உட்கார்ந்து பார்த்து ரசிக்க வசதி செய்திருந்தார்கள். உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சா பார்த்துக்கொண்டே இருக்கலாமோ என்கிற அளவு அனைத்தையும் மறக்கச் செய்து நம்முடைய ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்வாரியம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு மணி நேரமாவது செலவிட்டிருப்போம். அதன் பிறகு அங்கிருந்து வெளியே வந்து Trick Eye Museum Singapore காட்சியகத்திற்கு வந்தோம். ஒரு இடத்தில் நின்று புகைப்படம் எடுத்திருப்போம் ஆனால் புகைப்படத்தில் கால்கள் தரையில் தொடாமல் அந்தரத்தில் பரப்பதைப் போன்று புகைப்படங்கள் பார்த்திருப்போம். அது மாதிரி பல விதங்களில் அங்கு எடுக்கலாம். புகைப்படம் எப்படி, எந்த ஆங்கிலில் எடுக்க வேண்டும் என்று புகைப்படம் எடுக்க இருக்கும் இடத்தில் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்திருந்தார்கள்.

Trick Eye காட்சியகத்தில் எடுத்த சில புகைப் படங்கள்:
அடுத்து நாங்கள் சென்றது K-live Sentosa. ஹோலோகிராம் டெக்னாலஜியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஷோ. நாங்கள் சென்ற ஐந்து நிமிடத்தில் காட்சி ஆரம்பிக்க சரியாக இருந்தது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 1980ஆம் ஆண்டு எழுதிய என் இனிய இயந்திரா நாவலில் அப்போதே ஹோலோகிராம் டெக்னாலஜியை பற்றி எழுதி இருந்தார். சமீபத்தில் அந்த நாவலை வாசிக்கும் போது சுஜாதா அவரை நினைத்து பிரமிப்பாக இருந்தது. நமக்கு முன்னால் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் நாங்குடி வடிவில் உருவாக்க பட்டவையாகும். சிறிதும் கூட சந்தேகம் வராத அளவிற்கு நிகழ்வுகள் நேரடியாக நம் கண் முன்னால் நடப்பது போன்று தோன்றும். அதுதான் இந்த ஹோலோகிராம் டெக்னாலஜி.

வெளியே வரும்போது இருட்டத் துவங்கி இருந்தது. இன்னும் சில அட்ராக்‌ஷன்கள் நாங்கள் பார்க்க மீதம் இருந்தாலும் பார்த்த வரைக்கும் போதும் என கடைசியாக Wings of Time ஷோ பார்த்துவிட்டு திரும்பிடலாம்னு நேராக பீச் பகுதிக்குச் செல்ல அருகில் இருந்த வாட்டர் ப்ரண்ட் ஸ்டேஷன்க்கு வந்து மோணொ ரயிலில் பீச் பகுதியில் இறங்கினோம். Wings of Time ஏழரைக்குதான் ஷோ என்பதால் பீச் பகுதி சுத்தி பார்க்க ட்ராம் வசதி இருக்கு. அதுல ஏறி ஒரு ரவுண்ட் அடிச்சு நேரா நாங்கள் ஏழரை ஷோக்கு ஏழு மணிக்கே போய்ட்டோம்.

ஏழு மணிக்கெல்லாம் இருக்கைகள் பெரும்பாலானவை நிரம்பி இருந்தன. கடற்கரையில் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட வாட்டர்+லேசர் ஷோவான இது இருவது நிமிட ஷோ ஆகும்.

 இந்த நிகழ்ச்சி உலக அளவில் பல விருதுகளை பெற்றிருக்கிறது. ஷோ முடிச்சதும் மோணொ ரயில் ஏற வரிசையில் நிற்பதை தவிர்க்க வேகமாக பீச் ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். நாங்கள் பீச் ஸ்டேஷன் வரவும் வரிசை ஏதும் இல்லாததால் நேராக ரயிலில் ஏறி ஹார்பர் ப்ரெண்டில் இறங்கி பொங்கோல் வரைச் செல்லும் வடக்கு-கிழக்கு பாதையில் பயணித்து லிட்டில் இந்தியாவில் இறங்கி கோமள விலாஸ் உணவகத்துக்கு சற்று தள்ளி அமைந்திருக்கும் அருணாச்சலம் பவனில் இரவு உணவை முடித்து விட்டு லிட்டில் இந்தியா நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து ரயில் ஏறி ஃபெரர் பார்க் நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்து ரூமை அடைந்து மூன்றாவது நாளை வெற்றிகரமா முடிச்சோம்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 16 சிங்கப்பூரில் நான்காம் நாள் சிங்கப்பூர் ஜூ மற்றும் நைட் சபாரி அனுபவங்கள் அடுத்த பதிவில் தொடரும்.