Thursday, August 01, 2019

என்னடா வாழ்க்கை இது? ஒரே குழப்ப மனநிலை(:-(((2017 ஆகஸ்ட்ல சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு டூர் போனதுக்கு அப்பறம் சரியா ரெண்டு வருஷம் கழிச்சு இதோ இந்தமாசம் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் ஒரு லாங் டூர் போறோம். (நடுவுல இந்த வருஷம் ஏப்ரல் மாதம் ரெண்டு நாள் மைசூருக்கு போய் இருந்தோம்).
இம்முறை டூர் போறது நார்த் இந்தியாவுக்குதான். கடைசியா டெல்லியில் இருந்து சென்னைக்கு ஜூலை 16 அன்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணியதோடு சரி. அதன் பிறகு டூர் ஏற்பாடுகள் கொஞ்சம் கூட முன்னுக்கு நகரல. சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி இப்படியான மனநிலை ஒருநாளும் வந்தது கிடையாது. ஒவ்வொருநாளும் ஏன் ஒவ்வொரு நொடியும் ஒரே எக்சைட்டிங்காதான் இருந்தது. ‘முதன் முறையா வெளிநாட்டுக்கு போறோமே; அதுவும் ஏஜண்ட் மூலம் இல்லாம தனியா போறோமே’ என்கிற ஒரு பயமோ; ஏற்பாடுகளில் குழப்பம் எதுவும் வந்ததில்ல.
இப்போ பயணம் செய்ய போறது இந்தியாவுலதான்; ஆனாலும் என்னவோ லேசா கொஞ்சம் தயக்கமா இருக்கு; பயமா இருக்கு; எனக்கே ஒரு வேளை முன்பு போல பயணத்தின் மீதான ஆர்வம் குறைஞ்சிடுச்சானு சந்தேகமாவும் இருக்கு. சிங்கப்பூர் ட்ரிப் விடவும் இம்முறை கூடுதலாக நாட்கள் அதிகரிச்சிருக்கு. அதோடு சிங்கப்பூர் ட்ரிப்பைவிடவும் இப்போ அதிக தொலைவு பயணமும் செய்ய போறோம். மொத்தம் 4 மாநிலங்களில் சுற்றி பார்க்க இருக்கிறோம். இந்த வட இந்திய பயணம் போகணும் என்கிற யோசனை வந்ததே ஒரு பெரிய கதை.

எட்டு வருஷத்துக்கு முன்பு இணையத்தில் அறிமுகம் ஆன ஒரு நபர்; உயிருக்கும் மேலாக அதுவரையிலும் நேசித்த அந்த ஜீவனை ’இனி அவருக்கும் எனக்கும் செட் ஆகாது’னு புத்திக்கு நல்லா உரைச்சதுக்கு அப்பறம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அவாயிட் பண்ண ஆரம்பிச்சேன். அந்த சமயம் என்னை நான் டைவட் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். பொதுவா இம்மாதிரியான சூழலில் ஒருவரிடம் ஏமாற்றம் கிடைக்கும்போது மனம் அடுத்தவரது ஆதரவு தேடி நகரும். அதுவரையில் வேறு யாரிடமும் எனக்கு அப்படி நெருக்கமா பழக நகர விருப்பம் வரல. ஒரு வேளை அப்படி தோணினாலும் கடந்த கால நினைவுகள் என்னை எச்சரிக்கவும் தவறல. இப்போ யோசிச்சு பார்த்தா எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் பண்ணி இருக்கிறேன்னு எனக்கு எனக்கே நினைக்க தோணுது. ஜீவா படத்துல ஒரு வசனம் வரும். ஒருத்தருக்குப்பிடிச்ச விஷயத்தை டைவர்ட் பண்ண அவருக்குப்பிடிச்ச இன்னொரு விஷயத்தை தூண்டி விடணும் அப்படினு. அதுனால எனக்கு நானே எதாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிட்டு வர நினைச்சேன். ’கொஞ்ச நாளைக்கு ஆச்சும் மனசு நிம்மதியா இருக்கும்’னு என்னை நானே சமாதானபடுத்திகிட்டு டூர் போக தயார் ஆனேன்.

எனக்கு பயணம்னா பிடிக்கும் அதுவும் வெளிநாட்டு பயணம் என்றால்.... இத பத்தி ஒரு தோழியிடம் சொல்ல ‘why don't you try Philippines' னு கேட்டிருந்தா. அதன் பிறகு இணையத்தில் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி பார்த்ததில் பிலிபைன்ஸுக்கு நானும் தம்பி மட்டும் போக முடிவு பண்ணி இருந்தேன். ஆரம்பத்துல சரினு தலையாட்டியவன் ‘இதுதான் திட்டம் இதுக்கு இவ்வளவு செலவாகும்’னு சொன்னதுக்கு அப்பறம் அவன் பின் வாங்கிட்டான்.
சரி பிலிபைன்ஸுக்குதான் போக முடியல செலவு குறைவா இருக்கும் ஏதாவது வேறு ஒரு நாட்டுக்கு போக நினைச்சப்போ நேப்பால் எனக்கு தோணிச்சு. மீண்டும் ஒரு வார கடும் ஆராய்ச்சிக்கு பிறகு தரை மார்கத்தில் நேப்பாலுக்குள் sunauli border வழியாக நுழைந்து பொக்கோரோ மற்றும் காட்மாண்டு சுற்றி பார்த்து விமானம் மூலம் டெல்லி வழியாக சென்னைக்கு வந்து வீடு சேர திட்டம் எல்லாம் போட்டு எந்த நொடியும் ஏற்பாடுக்கு தேவையான ரயில் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தயார் நிலையில் இருந்தேன். இம்முறை தம்பி முழு ஆதரவு தெரிவிச்சிருந்தான்.
ஒரு நண்பரிடம் ‘நானும் தம்பியும் நேப்பாலுக்கு போறோம்’ ‘ எப்படி இருக்கும்’னு சும்மா கேட்டு தொலைச்சேன். அவர் சொன்ன பதில் நேப்பால் பற்றீய யோசனை பின்வாங்க தோணிடுச்சு.

ஒரு விஷயத்துல மட்டும் நா தெளிவா இருந்தேன். கண்டிப்பா ஆகஸ்ட் மாதம் டூர் எங்கையாச்சும் போகணும்னு மட்டும்... ஏன்னா பயணம் அப்படீங்கிற நெனப்பு எனக்கு அந்த சமயம் எனக்குள்ள ஓடாம இருந்திருந்தா இன்நேரம் எங்க இருந்திருப்பேன்னு தெரியல. அது வரைக்கும் ஒவ்வொரு நொடியும் அவரை பற்றீய எண்ணம்தான் எனக்குள்ளே ஓடிகிட்டு இருக்கும். இனி அவர் என் வாழ்க்கையில் இல்லை என்கிற கசப்பான உண்மை என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியல.

நேப்பால் திட்டம் கைவிட்டதுக்கு அப்பறம் லேய் லடக், ச்ரீனகர் போக திட்டம் எல்லாம் போட்டிருந்தேன். பொதுவா இந்த இடங்களுக்கெல்லாம் போகணும்னா ட்ராவல் ஏஜண்ட் மூலம் போவதுதான் நல்லது. அதுனால முதன் முறையா தாமஸ் குக் ட்ராவல் ஏஜண்டுக்கு கால் பண்ணி ட்ராவல் ஐடினரி எல்லாம் வாங்கி இருந்தேன். ஆனாலும் என்னவோ ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாம தத்தளிச்சுகிட்டு இருந்தேன். எனக்கே என்னோட விருப்பு வெறுப்பு மேல குழப்பம் வந்தப்போ. என் மேல எனக்கே நம்பிக்கை இல்லாம போனதா ஒரு ஃபீல்.

அம்மாவுக்கு ரொம்ப நாள் ஆசை டெல்லி மற்றும் தாஜ்மஹால் பார்க்கணும்னு. அடிக்கடி என்கிட்ட சொல்லிகிட்டு இருப்பாங்க. ’ட்ரைன்ல டெல்லி வரை போயிட்டு ஃப்ளைட்ல ரிட்டன் வரணும்’னு. ’நாம நினைக்கிறதுதான் நடக்க மாட்டேங்கிறது; அட்லீஸ்ட் அடுத்தவுங்களோட ஆசையாச்சும் நிறைவேற்றி வைப்போமேனு ஒரு கணம் தோணியதோட விளைவுதான் இந்த வட இந்திய பயணம்... எப்படியாவது இந்த வட இந்திய டூர் நல்லபடியா போயிட்டு வந்திட்டா அம்மாவோட பல நாள் ஆசை நிறைவேற்றிய திருப்தியாச்சும் இருக்கும் அப்படி நினைச்ச நொடியில இருந்து கொஞ்சம் என் மீது எனக்கே அக்கறை வந்தது. மனசும் லேசாகிடுச்சு; மன கொந்தளிப்பும் நின்னுடுச்சு. எல்லாம் சரியாக அமைந்தால் எனக்கும் கொஞ்சமாச்சும் மெண்டல் ஸ்டெபிலிடியும் காண்ஃபிடெண்டும் கிடைக்கும்னு நினைச்சு வட இந்தியாவில் எங்கெங்கு சுத்தி பார்க்கணும்னு பயண திட்டம் எல்லாம் தயார் செய்து; ரயில் விமான டிக்கட் எல்லாம் முன்பதிவு செய்தாகிவிட்டது.
திடீரென ஒரு நாள் உடம்புக்கு சரி இல்லாம போச்சு. வேலைக்கும் போகல. வீட்டுல படுத்துகிட்டே கிடந்தேன். அவரிடம் இருந்து பிரிந்து விடலாம் என்கிற எண்ணம் தோன்றீயதுல இருந்து சில மாதங்கள் கடந்திருந்தது. அதுவரையில் தோனாத எண்ணம் ’அவரை மிஸ் பண்ணுறேனோ அப்படினு எண்ணம் வந்ததும் யோசிக்க ஆரம்பிச்சேன். ’இருக்கபோறது ஒரு வாழ்க்கை; ’கடைசி வரைக்கும் ஈகோவோடும்; வைராக்கியத்தோடும் காலம் கடத்தணுமா’னு எண்ணம் தோணியதும் அதுவரையிலும் பிடிவாதத்தோடு இருந்தவன் ஒரு நாள் போராட்டத்துக்கு பிறகு அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தேன். அதை பார்த்ததுமே உடனே கால் செய்திருந்தார். ஒரு வாரம் ஒடிடுச்சு. மீண்டும் பழய கதைதான்.
 என்னடா வாழ்க்கை இது. வாழ்க்கை ஒரு வட்டம் சொல்லுறது இதுதானோ என்னவோ. ஒரே குழப்பமாவே இருக்கு:(((

Friday, March 15, 2019

இந்த வாழ்க்கை இருக்கே...வாழ்க்கை என்பது சரியாக திட்டமிட்டு ஒவ்வொரு நொடியும் வாழவேண்டிய ஒரு விஷயமாக நம்பி அது மாதிரி  நடந்தும் வந்தேன். ஆனால்  சமீபமாக சில நாட்களாக நான் ஒன்று நினைக்க கடைசியில் அது வேறு மாதிரியாக நடக்கிறது. புது புது அனுபவங்கள். எல்லாமே   நினைச்சபடி எனக்கு சாதகமா நடந்திருப்பதா சொல்லிக்க முடியாது. பெரும்பாலும் சொதப்பலும்; ஏமாற்றமும்தான் மிச்சம். அதுமாதிரி எல்லாம் எனக்கு அதற்கு முன்பு ஏற்பட்டிருக்கிறதா இல்ல நான் கவனிக்கலையானு தெரியல.
‘வாழ்க்கைய அது போக்கில் ஓட விடு; அதிகமா அதை பத்தி நீ  வொரி பண்ணிக்காத’னு பலமுறை என்னிடம்கவிப்பூரணி சொல்லியாச்சு. அந்த நொடி கேட்டுக் கொண்டதோடு சரிதான்.

***

அவன்  என்னை விடவும்  வயதில் நான்கு வயது சிறியவன்;  உயரத்தில் என்னைவிடவும் ஒரு அடி பெரியவன். இன்னமும் அந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 2016 மேமாதம் இருக்கலாம். அவனோடு  பைக்கில் முதன்முறையாக பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவன் பொறியியல் நான்காம் வருடம் முடித்திருந்தான்.

’அண்ணா வீட்டுல எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அண்ணா +2 முடிச்சதும் எனக்கு கணக்கு வராது என்னைய இன்ஜினீரிங் சேர்க்காதீங்க’னு  அப்பா அம்மா கிட்ட சொல்லி பார்த்தேன். அவர்கள் என் பேச்சுக்கு மதிப்பு தரல. வீட்டுக்கு வீடு வாச படி இருக்குற மாதிரி நம்ம வீட்டுலயும்  நீ இஞ்சினீரிங் படிச்சாதான் ஒரு நல்ல வேலைக்கு போக முடியும்’னு சொல்லி சேர்த்துவிட்டார்களாம்.

நாலு வருஷம் எப்படியோ ஓடிடுச்சு. காலேஜ விட்டு வெளிய வந்தாச்சு 15  அரியர்சோட. அண்ணா இப்போ இதைய வெச்சுகிட்டு என்ன பண்ணுறது தெரியல’னு என்னிடம் சொல்லிக் கொண்டே   வண்டி செலுத்திக் கொண்டிருந்தான். அவன்  சொன்னது என்னால் புரிஞ்சுக்கவும் அவனது வருத்தம் என்னால் உணரவும் முடிந்தது.

அதன் பிறகு ஒரு 3 அல்லது 4 மாதம் கழித்து அவனை சந்தித்த போது ‘அண்ணா ஆல் க்ளியர் அண்ணா. டிகிரி சர்டிஃபிகேட்டுக்கு அப்ளை பண்ண போறேன்’னு உற்சாகத்தோடு சொல்லி இருந்தான். எனக்கும் அவன்  எல்லா அரியர்ஸும் க்ளியர் பண்ணியதில் சந்தோஷம்.

சொந்தத்தில் ஒரு தம்பி இருக்கான். அவனுக்கும் இவனுக்கு ஏற்பட்ட மாதிரியே நடந்தது. அவனது பெற்றோரும் அவனுக்கு விருப்பம் இல்லாட்டியும் இன்ஜினீரிங்தான் படிக்கனும்னு சேர்த்துவிட்டார்கள். அவனும்  எப்படியோ கல்லூரியை விட்டு வெளியே வரும்போது இரண்டோ அல்லது மூன்றோ பேப்பர்ஸ்  மட்டுமே அரியர்ஸ் வெச்சு வெளியே வந்தான். அதுக்கே முக்கி முக்கி  2ஆண்டுகள் எடுத்துக்கொண்டு க்ளியர் பண்ணி இருந்ததை பார்த்தபோது 15 அரியர்ஸ் அவன் ஒரே தடவை க்ளியர் செய்ததை கேள்வி பட்டதுமே ‘அவனுக்குள்ள ஏதோ சம்திங் விஷயம் இருக்குனு நம்பி இருந்தேன். அதுவரையிலும் அவன் படிப்பில்  ஏவரேஜ்; வாழ்க்கையில் எந்த இலக்கும் இல்லாமல் இருக்கிறானேனு அவனுக்காக  வருத்தப்பட்டிருக்கேன்.

2016 கடைசியில் கையில் பொறியியல் பட்டம் மட்டும் வைத்துக் கொண்டு என்ன பண்ணலாம்னு தெரியாமல் இருந்திருக்கான். ‘பெங்களூர்ல  ஒரு  6 மாசம்  ஏதாவது ஒரு லேங்வேஜ் ட்ரைனிங் எடுத்துக்கோ எங்காச்சும் வேலைய தேட உதவும்’னு யாரோ சொல்லி இருக்குறாங்க. அதையே அவன் மந்திர சொல்லாக பிடித்துக் கொண்டு வீட்டுல இருந்து பெங்களூருக்கு புறப்பட்டிருக்கான். அவன் பெங்களூருக்கு போனப்போ கூட ஒன்று  ரெண்டு  தடவை அவனை போனில் அழைச்சு பேசி இருக்கேன்.

‘பெங்களூர்னா ரொம்ப செலவாகுமே; எப்படி சமாளிக்கிற; ட்ரைனிங் எப்படி போகுது; என்பதை பற்றி பேசி இருக்கேன். நானும் அப்போதான் வேலைக்கு போக ஆரம்பிச்ச சமயம் என்பதால அவனை மறந்திருந்தேன்.

2018 துவக்கத்தில் இருக்கலாம் திடீரென ஒரு நாள் அவனிடம் இருந்து கால் வந்திருந்தது பெங்களூரில் ஆறு மாசம்  மென்பொருள் லேங்வேஜ்  கத்துகிட்டு திருப்பதிக்கு வந்து வேலைய தேடி இருக்கான். அவனுக்கு அதிர்ஸ்ட தேவதை கதவு திறக்க திருப்பதிக்கு அருகிலே ஒரு பெரிய  ஃபாக்டரியில் அவன் பெங்களூரில் கற்ற  படிப்புக்கு சம்பந்தமான வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைச்சது. அவன் வேலைக்கு சேர்ந்த ஃபேக்டரி மூலம் பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலை அது. எப்படியும் அந்த ஃபாக்டரியில் கிட்ட தட்ட குறைந்தது 10,000 தொழிலாளர்களாச்சும் பணி புரிகிறார்கள்.

இவனோட வேலை என்னனா ஃபாக்டரியில் பணிபுரியும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அவர்களுக்கு பதிலாக இயந்திரங்களை அந்த இடத்தில் ரீப்லேஸ்மெண்ட் செய்து  ரோபோட்ஸ் வெச்சு வேலை வாங்கனும் அதற்காக ரோபோட்ஸ் நிறுவும் குழுவில் பணியில் சேர்ந்திருக்கிறான். தொழில்நுட்பம் என்கிற விஷயம் எனக்கு கைகூடவில்லை என்றால் என்னோட வாழ்க்கை என்ன மாதிரி ஆகி இருக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியல. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் என்னோட வாழ்க்கைய  மேம்படுத்தி இருக்கு. அதனால் எப்போதுமே தொழில்நுட்பத்தில் என்ன என்ன புதிய புதிய அப்டேட்ஸ் வந்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம். எப்படியும் மாதத்தில் ஒருநாள்  அவனோடு போனில் பேசிவிடுவது வழக்கமாகி இருந்தது.

‘இப்போ ஏதாவது புது ரோபோ இறக்குமதி செய்திருக்குறீங்களா’னு கேட்பதுண்டு. ஒவ்வொரு புது  ரோபோ இயந்திரம் நிறுவும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது வேலை பறி போவதை சொல்லும்போது எனக்குள்ளே அவனிடம் சொல்ல முடியாத வருத்தம் ஏற்படும். அந்த ஃபாக்டரியில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் திருப்திகரமாக இருக்காது. குறைவான சம்பளமாக இருந்தாலும் வீட்டுக்கே பஸ் வந்து அள்ளிக் கொண்டு போவதாலும் மதிய உணவும் அங்கே கொடுத்துவிடுவதாலும் உடம்புல சத்து இருக்குற வரைக்கும் அங்கே உழைச்சு குடும்பத்தை நடத்துபவகள்தான் அதிகம்.

போக போக நானும் என்னோட பணி அழுத்தத்தாலும் பயண களைப்பாலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஓய்வு எடுக்கும் நாளாக மாறி இருந்ததால அவனோடு போனிலும் பேசுவது குறைந்துவிட்டது. வெகு நாட்களுக்கு பிறகு சென்ற மாதம் ஒரு நாள் அவனே கால் செய்திருந்தான்.

‘அண்ணா எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சு அண்ணா‘னு சொல்லி இருந்தான். அவன் சொன்னதை கேட்டதும் என்னால் நம்பவே முடியல. ‘எப்படிதான் இவன் எதிர்காலத்துல பிழைக்க போறானோ’னு எங்களது முதல் சந்திப்பில் அவனுக்காக பரிதாபபட்டனா அவன்  ஒரு குடும்பஸ்தனா ஆக போறான் என்பதை கேட்டதுமே ஒரே சந்தோஷம். ’அப்படியா’ ‘என்ன மண்டபம்’ ‘என்ன தேதி’ எல்லாம் கேட்டு குறித்துக்கொண்டு கண்டிப்பா அவனது கல்யாணத்துக்கு போகணும்னு முடிவு பண்ணி இருந்தேன்.

நேற்று முந்தினம் அவனது திருமண ரிசப்ஷனுக்கு சென்றிருந்தேன். மணமகன் மணமகளோடு ஃபோட்டோ எடுத்துக்க மேடையில் ஏறியதும் என்னை மணப்பெண்ணிடம் ’அண்ணா வந்து எனக்கு  பல விஷயங்களில் இன்ஸ்பிரேஷன். பயங்கர டேலண்டட் பர்சன். தினமும் திருப்பதியில இருந்து திருத்தனிக்கு சென்று வர்றார். திருத்தனி ஸ்டேட் பேங்க்கில் பணி புரிகிறார்’னு சொல்லிட்டு எனக்காக இவ்வளவு தூரம் சிரமம் பார்க்காமல் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் அண்ணா’னு சொல்லிட்டு இருந்தான். ஃபோட்டோ எடுத்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கியதும் ஏனோ கண்ணீல்  இரண்டு துளி கண்ணிர் எட்டி பார்த்தது.

**

மீண்டும்  பதிவின் துவக்கத்தில் எழுதிய வரிகளுக்கு வருவோம்.
வாழ்க்கை மீது எனக்கு அதீத பயம் இருக்கு. எதிர்காலத்துல ’ஐய்யோ  அப்படி நடந்திடுமோ’ ‘இப்படி நடந்திடுமோ’னு ஏகப்பட்ட பயமும் பதற்றமும்  நிறைந்த கொந்தளிப்பான மன நிலையோடு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன். அவன்தான்  இந்த நொடி உத்வேகத்தை கொடுக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன் மனுஷனா தெரிகிறான்.

*
வங்கியில் ரம்யானு  ஒருத்தவுங்க என்னுடன் பணி புரிந்து வர்றாங்க. வயதில் என்னை விடவும் ஆறு வயது சிறியவர். இத்தனைக்கும் அவர் ஒப்பந்த அடிப்படையில் வங்கியில் பணி புரியும் ஒரு சாதாரண ஊழியர். வாழ்க்கையில் அவர் படும் கஷ்டம் எல்லாம் அதுவரையிலும் படத்துலயும்  கதைகளிலும் பெண் படுவதை பார்த்திருக்கிறேன். நிஜத்தில் அது மாதிரி எல்லாம்  22 வயது பெண்  அனுபவிப்பாளா என்கிற சந்தேகம் எல்லாம் எப்போதாவது ஏற்பட்டாலும் அடுத்த நொடியே  அதை மறந்து விட்டு அடுத்த விஷயத்தை நோக்கி யோசிக்க ஆரம்பிச்சிடுவேன். நாவல்களிலும்  திரைப்படங்களிலும் காட்டுவதெல்லாம் ஒரு சோற்று பருக்கைதான் என்பதை ரம்யாவோடு பேச ஆரம்பிச்ச பிறகு உணர்ந்துக் கொண்டேன்.

ரம்யா புதியவர்களிடம் பேச மாட்டார். அதைவிடவும் நண்பர்களிடமும் யாரிடமும் அவர் அதிகமாகவும் பேச மாட்டார். சென்ற வருடம்  ஃபெப்ரவரி மாதம்  வங்கியில் சேர்ந்திருக்கிரார். ரம்யானு ஒரு பெண் உடன் பணி புரிகிறாள் என்பதை தெரிஞ்சுக்கவே எனக்கு பல மாதங்கள் ஆச்சு. பிறகு பேசுவது எங்கே.

அக்டோபர் மாதம்தாய்லாண்ட் சென்று வந்த பிறகுதான் என்னிடம்  அவர் பேச ஆரம்பிச்சதும்தான் நானும் மெது மெதுவாக அவரோடு பேச்சு கொடுக்க ஆரம்பிச்சேன். ரம்யாவுடனான நட்பு கிடைத்த பிறகு நாங்கள் இருவரும் அலுவலகத்தில் கிடைக்கும் ஒன்று  ரெண்டு நிமிஷத்துக்கு பேசிக்கிறது அவ்வளவுதான். அந்த ரெண்டு நிமிஷத்துலயே  ஏதாவது நா கேட்க என்னிடம் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லி விடுவார். ஒரு முறை ‘இவ்வளவு கஷ்ட்டத்தோடு குறைவான சம்பளத்தில் எப்படி குடும்பத்தையும் உன்னையும்  பார்த்துகிட்டு  உள்ளுக்குள் எவ்வளவோ கஷ்ட்டங்களும் சோகங்களும் இருந்தாலும் சிரிச்ச முகத்தோடு சுறுசுறுப்பா வேலைய எப்படி பண்ணுற ரம்யா?’னு கேட்டிருந்தேன்.

’நாம வருத்தப்பட்டுகிட்டே இருந்தாக்க மட்டும் என்ன அந்த கஷ்டம் நம்மை விட்டு போய்விட போகுதா என்ன’னு சொல்லி இருந்தாள். அவள் சொன்ன பதிலை கேட்டு ஒரு நொடி ஸ்தம்பித்து போனேன்.

29 வயதில் எனக்கு வராத தெளிவு என்னைவிடவும் வயதில் சிறிய பெண்ணுக்கு வந்த பக்குவமும் தெளிவும் எனக்கு வரலியேனு என்னை நான் கடிந்துக் கொண்டேன். இத்தனைக்கும் ஒரு நல்ல சம்பளத்தில் வீட்டில் எனது  பணத்தில்தான் குடும்பம் நடத்தி ஆகணும் என்கிற சூழ்நிலை இல்லாத நிலையில் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும்  ஏதோ தீர்க்க முடியாத துயரம் எனக்கு ஏற்பட்டதா உள்ளுக்குள் எப்போதுமே ஒரு கொந்தளிப்பு இருந்துக் கொண்டேதான் இருக்கிறது.

அவ்வப்போது ரம்யாவே  கேள்வியாகவும்  பதிலாகவும் சொல்லும் விஷயங்கள் கேட்டுக் கொண்டிருக்க திறமையும் உடம்புலயும் மனசுலயும்  உழைக்கும் திரானி இருந்தும் இப்போது செய்துக்கொண்டிருக்கும் வேலைய விட்டு ஒரு நல்ல வேலைக்கு போக கூட முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அந்த பெண்  எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  ஒரு முடிவுக்கு வராதானு  ஏங்கி இருக்கேன்.

**

ஃபோட்டோ எடுத்துகிட்டு  மேடையை விட்டு இறங்கியதும் இரண்டு சொட்டு கண்ணீர் வந்து ஏதோ ஒரு விஷயம் உள்உணர்வு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதாக தோணுது.

அது என்னனுதான் தெரியல.

இந்த வாழ்க்கை இருக்கே...