Tuesday, December 29, 2020

இவ்வருடத்தில்...

இந்த வருஷம் முடிய இன்னும் ஒரு மூணுநாள்தான் மிச்சம் இருக்கு. என்னவோ போனவாரம்தான்  புத்தாண்டு கொண்டாடுன மாதிரி தோணுது. அதுக்குள்ளயும்  வருஷ கடைசிக்கு வந்த ஒரு ஃபீல்...


 எந்த வருஷம் இல்லாத  அளவு இந்த வருஷம் எதிர் பாராத பல திருப்பங்கள் என்னோட  வாழ்க்கையில நிகழ்ந்திருக்கு. இப்படிதான் ஒவ்வொரு வருஷ கடைசியில தோணினாலும் நெஜமாலுமே இந்த வருஷம் எனக்கு எல்லாவித உணர்வுகளையும்

மனிதர்கள் குறித்தான புரிதல்களையும் இந்த வருஷம் எனக்கு உணர்த்திடுச்சுனு சொல்லலாம்...


 சிலது நானா தேடி போய் அமைச்சுகிட்டது னு சொல்லலாம்...

சிலது  தானா எனக்கு அமைஞ்சதுனு சொல்லலாம்.


 எது எப்படியோ...


இந்த வருஷத்துல ஈடு செய்யவே முடியாத ஒரு  இழப்புனா

அது பாட்டியோட மரணம்தான்...

எழுவது வருஷ சதாப்தம்  ஒரு  மூணு நாள்ல முடிஞ்சிடுச்சு.

கடைசி வரைக்கும் பாட்டியோட இழப்ப வேறு யார்னாலயும் ஈடு கொடுக்க முடியாதுனு தினமும் பாட்டி  நினைவுகள் ஞாபகம் வரும்போதெல்லாம் தோணிட்டே இருக்கும்.

மிஸ் யூ பாட்டி.


 ***


 கொரோனா வந்து உலகமே சில மாதங்களுக்கு  இயல்பு வாழ்க்கையில இருந்து முடங்கி போனாலும் தனிபட்ட முறையில எனக்கு  நன்மை ஏற்பட்டிருக்குனு சொல்லியே ஆகணும்.


 அதே சமயம் தெரிந்த ஒரு அண்ணா தினசரி வாழ்க்கை நகர்த்துவதற்கு  அது வரைக்கும் செய்து வந்த வேலையை ஊரடங்கு காரணமாக விட்டுவிட்டு  கொஞ்சம் கூட தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலைக்கு போனத கேள்வி பட்டதும் ரொம்ப கஷ்டமா போச்சு....


 அதே மாதிரி தெரிந்த ஒரு அக்காகிட்ட பேசிட்டிருக்கும்போது ஒருமுறை அவுங்க தன்னுடைய  வாழ்க்கையில எந்த  அளவு இந்த  

கொரோனாவினால பண நெருக்கடிக்குள்ளானாங்கனு சொன்னத கேட்டபோது

விளிம்பு நிலை மக்களோட வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியல...


***


 இந்த வருஷம் புத்தகங்கள் வாசிச்ச  அளவு இதற்கு முன்பு வேறு எந்த வருஷமும் இந்த  அளவு நாவல்கள் வாசிச்சிருப்பேனானு சந்தேகமே...


 லக்‌ஷ்மி சரவண குமார் அவரது ரூஹ் வாசிக்க ஆரம்பிச்சு தொடர்ந்து அவரது ஐந்து நாவல்கள் வாசித்திருந்த நிலையில்

அடுத்து என்ன வாசிக்கலாம்னு இருந்த சமயம் சரியாக  சீனு அவரது வலைப்பூவில் கொம்பு முளைத்தவன் விமர்சனம் வாசிச்சதும்

உடனடியாக அந்த புத்தகம் வாசிக்கனும்னு தோணியதால் கிண்டிலில் கொம்பு முளைத்தவன் வாசித்து அதில் வந்த

யதி பற்றிய குறிப்புகள் யதி நாவலை உடனடியாக வாசிக்கணும்னு  தோணியதால்

பாராவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான யதியை வாசிக்க ஆரம்பித்து...இந்த வருடத்திலே நான் வாசித்ததில்

மிகச் சிறந்த  நாவலாக யதி எனக்கு பிடித்து போனதுனு சொல்லலாம்...


 தவிர ஜெய மோஹன் அவரது அனல் காற்று கண்ணி நிலம்  வாசித்ததும் அவரது எழுத்து பிடித்து போக

இரவு வாசிக்க ஆரம்பிச்சு...


 உலக இலக்கியத்தில் சிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் க்லாஸிக் படைப்பான டால்ஸ்டாயின் அன்னா கரேனினாவை வாசிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நாவலில் இருக்கும் எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல்

ஆகஸ்ட்  மாதம் எப்படி அன்னாவை தவிர்த்தேனோ... நவம்பர் மாதம் நீலிமாவை நேருக்கு நேராக

எதிர்கொள்ள முடியாமல் மனம் தவிப்பதால் ஜெய மோஹனது இரவு பாதியில் நிற்கிறது...


 லக்‌ஷ்மியின் ஐரிஸ் காதலை  ரசித்து அனுபவித்து கொண்டாடும்  ஒரு நபரால் மட்டுமே

அது மாதிரியானதொரு படைப்பை எழுத முடியும்... மனோவில் மஹேஷை கண்டேன்.

வாழ்த்துகள் லக்‌ஷ்மி சார்...


 கடைசியாக இம்மாதம் 2012 ஆம் வருடம் யுவ புரஸ்கார்  பெற்ற மலர்வதி அவரது கருப்பட்டி  என்கிற சிறுகதை தொகுப்பு வாசித்தேன்.

ஒவ்வொரு கதை வாசிக்க பிடிக்கும் நேரம் என்னவோ குறைவுதான் ஆனால் அந்த கதை தாக்கத்தில் இருந்து வெளி வர நிறைய  நேரம் பிடித்தது.

ரொம்ப நாள் கழித்து ஒரு முழு சிறுகதை தொகுப்பு வாசித்த  திருப்தி  கருப்பட்டி எனக்கு கொடுத்தது.


 ***


 பள்ளி நாட்களில் சக வகுப்பு  நண்பர்கள் எல்லாம் எதோ ஒரு துறையில் தத்தம் திறமையை நிருபித்துக் கொண்டிருக்கும் சமயம் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் சுமாரான எனக்கு வாழ்நாள் லட்சியமாக ஒரு காதல் கவிதை எழுதி அதை காதலிக்கு கொடுக்கணும்னு தோணியதெல்லாம் எங்க போய் சொல்ல..

அது வரைக்கும் ஒரு பக்கம்  சுயமாக சிந்தித்து எழுதி இருப்பேனா என்பது சந்தேகமே...


 எப்படியோ நானும் ஒருத்தவுங்களோட  தூண்டுதலினால ஏழு வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆரம்பிச்சு

எழுத்து தொடர்பா என்னோட ஒரே ஒரு  ஆசை வலைப்பூவில் மொக்கை கவிதை தலைப்பில் காதல் கவிதை ஒண்ணு ரெண்டு கிறுக்கி இருக்க...

குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று வந்ததை தொடராக எழுதி இருந்ததை மூணு வருஷத்துக்கு பிறகு  நவம்பர் ஒன்று அமேசான் கிண்டிலில் சிங்கப்பூர் மெமரீஸ் புத்தகமாக கொண்டு வந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்...


 புத்தகம் வெளியான தினத்தன்று முதல் நபராக புத்தகம் வாங்கி அன்னைக்கே முழு  புத்தகம் வாசித்துவிட்டு

ஏற்கனவே ப்ளாக்ல வாசிச்சிருந்தாலும் புத்தகமா வாசிக்கும்போது  புதுசா வாசிக்குற ஒரு ஃபீல் புக்குல இருக்குனு வந்த முதல் விமர்சனம்

மறக்க முடியாதது...


அந்த நபரே அவரது உறவினர் ஒருத்தவுங்களுக்கு புத்தகம் வாசிக்க பரிந்துரைக்க

முன்பின் அறிமுகமோ முக பரிச்சயமோ இல்லாத ஒருத்தர்

புத்தகத்தை  வாசித்துவிட்டு  அவர் சொன்னதை கேட்டதுமே எனக்குள்  ஏற்பட்ட உணர்வையும் அடுத்த  இரண்டு மணி நேரத்துக்கு

என்னிலை மறந்து அனுபவித்த மகிழ்ச்சியையும் இனி என் வாழ்வில் அதைவிடவும் ஒரு சிறந்த;

மனதுக்கு நெருக்கமான விமர்சனம் சிங்கப்பூர் மெமரீஸ்க்கு வருமா என்பது சந்தேகமே...


 புத்தகம் வாசித்து தனது கருத்தை சொன்ன கௌரி அவருக்கு நன்றிகள்.


 அதே சமயம் ஏதாவது பிரச்சனை கஷ்டம்னு போய் நிற்கும்போது சரியான ஆலோசனை கொடுக்கும்

நண்பரும் சிங்கப்பூர் மெமரீஸ் புத்தகத்திற்கு முதல் விமர்சனம்  எழுதி அனுப்பிய  அரவிந்துக்கும் நன்றிகள்.


 ***


 ஏப்ரல் மாதம் குஜராத் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்தபோது ஊரடங்கு உத்தரவு

வந்ததால் குஜராத்  திட்டம் கைவிட பட்டது....


கடந்த ஒன்பது மாதங்களில் அதிகபட்சமாக ஒரு மூணு நாலு தடவை வீட்டு வாசலை தாண்டி இருப்பேன்.

அதுவும்  முடிவெட்டவும் மருத்துவமனைக்கு செல்லதான் இருந்திருக்கும்...


அதை தவிர எதற்கும் வெளியே செல்லவில்லை.

 வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு நீண்ட பயனம் செய்யும் எனக்கு இந்த வருஷம்

எங்குமே போக முடியலைனு வருத்தம்  இருந்தாலும்  உலக பயணம் தொடர்பாக நிறைய தெரிஞ்சுக்க முடிந்தது...


 ஒரு காலத்துல  யூரோப் ட்ரிப்தான் அதிகபட்ச வாழ்நாள் லட்சியமாக எனக்கு இருந்தது

இதுவரைக்கும் இரண்டு நாடுகள் சுற்றி வந்த அனுபவம் கொண்டு  வாழ்நாளில் குறைந்தது 25 நாடுகளுக்காவது  சென்று வரணும்னு இவ்வருடம் ஆசை பிறந்திருக்கு...


 அதனுடைய ஒரு பகுதியாக புது ஆண்டில் நிலமை எல்லா இடங்களிலும்  இயல்பு நிலை அடைந்ததுமே

முதலில் பாகிஸ்தான்  சென்று காற்றை ஸ்வாசித்து வரலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...


 **


 கொரோனா  பிறகு நான்  புரிஞ்சுகிட்டது...

 வாழ்க்கையில  யாருக்கு எப்போ வேணும்னாலும் எந்த நொடியும் எதுவும் நிகழலாம்

எது எப்படி இருந்தாலும் அதை கடந்து வாழ  மன தைரியம்உம் பக்குவமும் அனைவருக்கும் கிடைக்கணும்னு வாழ்த்தி


அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிச்சுக்கறேன்.

 happy new year 2021 to all.


 __

திருப்பதி மஹேஷ்

29.12.2020.

Saturday, November 14, 2020

சிங்கப்பூர் மெமரீஸ்


2012 ஜெனவரி மாதமோ என்னவோ தமிழில் முதல் வலைப்பதிவை வாசித்தேன். சரியாக அடுத்த வருடம்  அதாவது 2013 ஜெனவரி மாதம் முதல் பதிவை எழுதினேன். அதன் பிறகு எப்படி எழுதினேன்; என்ன எழுதினேன்; என்பதை இப்போது திரும்பி பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.


2017-ஆம் வருடம் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சிங்கப்பூரில் சுற்றிவந்த அனுபவத்தை தொடராக எழுதி வந்தேன்.  ஆறு பகுதிகள் வந்திருக்கும், பலரும் என்னிடம் தொடர் நன்றாக   வருவதாகவும், பல புதிய தகவல்கள்  தெரிந்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். 

திடீரென ஒரு பிரச்சனை வீட்டில். எழுதுவதற்கு தடை பட்டது. ஒரு வாரம்,  ஒரு மாதம் என அந்த சமயம் எழுத முடியாமல் போனது.


எல்லாம் சரி ஆனதும் எழுதுவதற்கான ஆர்வம் குறைந்து விட்டது. அவ்வப்போது  நண்பர்கள் யாராவது விட்ட இடத்தில் இருந்து 

தொடருமாறு பல முறை கேட்டிருந்தனர். எழுத முயற்சித்துப் பார்த்தால் எழுதுவதற்கு ஆர்வம் மட்டும் வரவே இல்லை.


ஒருவழியாக ஏற்கனவே ஆறு மாதங்கள் தொடர் எழுத இடைவெளி விட்டதால் இனியும் தாமதிக்க கூடாது என்பதால் எழுதிவிடுவதென முடிவு செய்து 2018 மார்ச் மாதம் என்னவோ    விட்ட இடத்தில் இருந்து மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

தினமும்  140 கிமீ பயணம்; அலுவலக வேலை; தவிர மீண்டும் ஏதோ ஒரு பிரச்சனை.... இரண்டு பகுதிகளோடு நின்றிருக்கும்.

அதே வருடம்  அக்டோபர்  மாதம் எனது இரண்டாவது வெளிநாட்டு பயணம் உறுதி செய்யபட்டதுமே 2018 ஆகஸ்ட் பதினைந்து தாய்லாண்ட் சென்று வர  விமான டிக்கெட்  புக் செய்ததும் அந்த வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு  விடுப்பு எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் தொடர் முழுமையாக எழுதி முடித்தேன்.


பலர்  தொடரை வாசித்துவிட்டு 'நாங்களே சிங்கப்பூர் போய்ட்டு வந்த ஃபீல் கொடுத்திட்ட’னு பாராட்டி இருந்தனர். அதோடு அதை புத்தகமாக கொண்டு வர சொல்லியும் ஆலோசனைகள் தந்தனர். நாந்தான் எதையும் கண்டுக்காமல் இருந்திட்டேன்.


இவ்வருடம் மார்ச் மாதம் இருக்கும். அலுவலகத்தில் அஸ்வினினு ஒரு மேடம் இருக்குராங்க. அவருக்கு புத்தகம் வாசிக்குற பழக்கம் இருக்குனு  தெரிஞ்சதுமே  ப்ளாகில் எழுதி இருந்த சிங்கப்பூர் தொடரை ப்ரிண்டவுட் எடுத்து அவரிடம் கொடுத்தேன். 

அது வரைக்கும் எத்தனையோ பேர் என்னிடம் சிங்கப்பூர்  தொடரை புத்தகமாக  கொண்டு வர சொன்னாலும் கொஞ்சம் கூட உரைக்காத எனக்கு அஸ்வினி மேடத்திடம் சிங்கப்பூர்  பயணக்கட்டுரை தொகுப்பு கொடுக்கும்போது என் எழுத்து; என் எண்ணம்; என் அனுபவம் என பலதர பட்ட உணர்வுகள் என்னுள் எழுந்த அந்த நொடியை எளிதில் இங்கு எழுதிவிட முடியாது; வாழ்நாளில் மறக்கவும் முடியாது. அந்த நொடி முடிவு செய்தேன். சிங்கப்பூர் தொடரை நிச்சயம் புத்தகமாக கொண்டு வரணும்னு.


திடீர் ஊரடங்கு உத்தரவு; வீட்டில் பாட்டியின் மரணம் என மனதளவில்  சோர்ந்து போன சமயம் ஜூலை முதல்  வாரத்தில் புத்தக வேலைகள் ஆரம்பித்து ஜூலை இருபது அமேசான் கிண்டிலில் கொண்டு வருவோம் என ஒரு எண்ணம் தோன்றியது. அதற்கேற்ப புத்தகம் தொடர்பாக வேலைகள் ஆரம்பிக்க, அந்த முயற்சி தோல்வியில் முடிய; மீண்டும் கடந்த மாதம் முதல் வாரத்தில் நவம்பர் - 1  புத்தகம் அமேசான் கிண்டிலில்  கொண்டு வந்திடனும்னு முடிவு செய்து வெற்றிகரமாக  நவம்பர் - 1 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் மெமரீஸ் அமேசான் கிண்டிலில் கொண்டு வந்தாச்சு :).


வாட்ஸாப்,  ஃபேஸ்புக் என லிங் ஷேர் செய்திருந்தாலும் இங்கு கொஞ்சம் தாமதமாகத்தான்  லிங்க் ஷேர் செய்கிறேன்.

வலைப்பூவில் எழுதிய சிங்கப்பூர் தொடரை புத்தகமாக கொண்டு வருவதால் தேவைபட்ட இடத்தில் மாற்றங்கள் செய்து முழுமையான ஒரு புத்தகமாக கொண்டு வந்திருக்கிறேன்.


பயணத்திலும்; வெளிநாட்டின் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த புத்தகம்  பிடிக்கும் என நம்புகிறேன்.


உங்களது ஆதரவை வேண்டி 


அமேசான் கிண்டிலில் சிங்கப்பூர் மெமரீஸ்


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Tuesday, September 29, 2020

எனக்கு வந்த சோதனை...

இரண்டாயிரத்துக்கு முன்பே எங்கள் வீட்டில் BSNL  லாண்ட் லைன் கனெக்‌ஷன் வந்துவிட்டது.  ஆனால் எஸ்டிடி  வசதி இல்லை.  உள்ளூர் அழைப்புகள் மட்டுமே அதில் போகும். நானோ ஒண்ணாவதுல இருந்து சென்னையில் விடுதியில் தங்கி சிறப்பு பள்ளியில் படித்ததால் நண்பர்கள் எல்லாம் தமிழகத்தில்தான். காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டால் நண்பர்கள்  யாருக்காச்சும் ஃபோன் செய்து பேசலாம் என்றால் எஸ்டிடி  வசதியோ  எங்கள் லாண்ட் லைன் கனெக்‌ஷனுக்கு இல்லை.


அப்போது ட்ரங்க் கால் வசதினு ஒண்ணு இருந்தது. (நூத்தியென்பதுனு நினைக்கிறேன் இப்போது சரியாக ட்ரங்கால் எண் நினைவில்லை).  அந்த எண்ணுக்கு நான் முதலில் அழைச்சு  எந்த ஊரில் இருக்கும் தொலைபேசி எண்ணோடு பேசணுமோ எஸ்டிடி கோடுடன் சேர்த்து  தொலைபேசி எண் சொல்லி நாம் ஃபோன் வெச்சிட்டால் போதும். நாம் பேச வேண்டிய நபர் லைனில் வந்தால் ட்ரங்காலில் இருந்து அவர்கள் நம்மை கூப்பிட்டு நம்மை பேசச் செய்வார்கள். அப்போதெல்லாம் ட்ரங்க்கால் வசதியே எனக்கு பெரிய ஆச்சர்யமான விஷயம்.


இந்த ட்ரங்கால் வசதிக்கு நிமிஷத்துக்கு எவ்வளவு செலவு ஆகும்னு எல்லாம் எனக்கு தெரியாது.  என் இஷ்டத்திற்கு  ஃப்ரென்ட்ஸ் யாருடைய வீட்டில் எல்லாம்  லாண்ட் லைன் கனெக்‌ஷன் இருக்கிறதோ அவர்களை எல்லாம் ட்ரங்க் கால் மூலம் கூப்பிட்டு பேசுவேன். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் அப்போது லாண்ட் லைன் பில் வரும்னு நினைக்கிறேன்.  பில் வரும்  சமயம் நான் வீட்டில் இருக்க மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு அப்பா லாண்ட் லைனுக்கு பூட்டு போட ஆரம்பிச்சிட்டார்.


அடுத்து இரண்டாயிரத்து நாலா இல்ல அஞ்சானு சரியா வருஷம் தெரியல. அப்பா ஒரு நோக்கியா மொபைல் வாங்கி இருந்தார். கல்லு மாதிரி ரொம்ப ஸ்ட்ராங்க் பாடி அதோடது. ஒரு கட்டத்தில் லேண்ட் லைன் பயன்படுத்த முடியாத கட்டம் வந்து விட்டதால் அதே சமயம் பெரியப்பா மகன் - அண்ணா BSNLல ஜூனியர் டெலிகாம் ஆஃபிசராக வேலையில்  சேர்ந்திருந்தார். எப்போதெல்லாம் எங்க வீட்டுக்கு வருவாரோ அவரது ஃபோன தூக்கிட்டு   எங்கையாச்சும் ஓடிபோய் போன் பேசிட்டிருப்பேன். 


2007 ஆம் வருஷம் நான் பத்தாவது பொதுத்தேர்வு முடிச்சதுமே வீட்டுல அடம் பிடிச்சு ஏப்ரல் மாசம் இருபதாம் தேதி பதினாலு ஆயிரம் ரூபாய் அப்பாவுக்கு பெரிய செலவு வெச்சேன். என்னோட முதல் மொபைல் நோக்கியா N70.

என்னதான் ஃபோன் மட்டும் வாங்கிட்டாலும் ஃபோன்  பேசணும்னா சிம்கார்டும் அதுல காசும் இருக்கணுமே.  அப்பாவுக்கு டிப்பார்ட்மெண்ட்ல சிம் கொடுத்ததால் அவரது சிம் எனக்கு கொடுத்துட்டார். அதுல அப்போ  எப்படியும் மூவாயிரத்துக்கும் மேல பேலன்ஸ் இருந்ததா ஞாபகம். அப்பா என்னிடம் சிம்கார்ட் கொடுக்கும்போது ஒரு நாளைக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் பேசணும்னு சொல்லி கொடுத்தார். நானும் சரி சரினு தலையை ஆட்டினேன்.


அப்போலாம் BSNL அவுட்கோயிங் சார்ஜஸ் ரொம்ப அதிகம். ஆந்திராவில் இருந்து  தமிழ் நாட்டில் இருக்கும் BSNL எண்ணிற்கு  அழைத்து பேசினால் நிமிடத்திற்கு இரண்டு ரூபாய். அதுவே மற்ற  நெட்வொர்க் என்றால் நிமிடத்திற்கு இரண்டு ருபாய் நாற்பது காசு என்னவோ. பதினோராம் வகுப்பு சேருவதற்குள்ளவே இடைபட்ட இரண்டு மாதத்திற்குள்ளாக கிட்டதட்ட  இரண்டாயிரம் ரூபாய் பேசி காலி செய்திருப்பேன். விடுமுறை முடிஞ்சு ஸ்கூலுக்கு போற சமயம் வீட்டுல அம்மாவோட பீரோவுக்குள்ள ஃபோன ஒழிச்சு வெச்சிட்டு போவேன். (நான் இல்லாத சமயம் வேறு யாரும் ஃபோன் எடுத்து யூஸ் பண்ண கூடாது இல்லையா).


2009 ஆம் வருடம் பனிரெண்டாவது பொதுத் தேர்வு முடிச்சதும் சென்னைக்கு டாட்டா சொல்லிட்டு இனி தமிழகம் பக்கமே வரக்கூடாதுனு நினைச்சுகிட்டு வீட்டுக்கு வந்திட்டேன். அப்போ கையில் ஃபோன் இருந்தாலும் அதில் பெரும்பாலும் பேலன்ஸ்  இருக்காது. வாரத்தில் ஒரு முறை அம்மா  ரீசார்ஜ் செய்தாலும் ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல பேசி காலி பண்ணிடுவேன். இது செட் ஆகாதுனு முடிவு பண்ணி பழைய படி அந்த சமயம் லேண்ட் லைன் பயன்படுத்த ஆரம்பிச்சேன்.  அப்போ  எஸ்டிடி கனெக்‌ஷனும் லேண்ட் லைனுக்கு இருந்ததால் நடுவுல ட்ரங் காலுக்கு வேலை இல்லாமல் போச்சு.


அப்போதான்  நான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தேன். கொஞ்ச நாளிலேயே இண்டெர்னெட் கனெக்‌ஷன் மேல எனக்கு ஆசை வந்திடுச்சு. ‘லேண்ட் லைன் பில் அதிகமா வர்றதால ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் வாங்கிட்டோம்னா செலவு குறைஞ்சிடும்மா’னு ஒரு சாக்க அம்மா கிட்ட சொல்லி அண்ணா மூலமா சீக்கிரம் நெட் கனெக்‌ஷனும் வாங்கியாச்சு. அதன் பிறகு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும்  ஃப்ரென்ட்ஸோடு பேச ஸ்கைப் மற்றும் மெயில் பயன்படுத்துவேன்.


யூஜி நான் திருப்பதியிலயே சேர்ந்ததால் எனக்கு நண்பர்கள் எல்லாம்  ஆந்திராவுக்குள்ள இருந்ததாலயும் அதிலும் மாசத்திற்கு ஒரு பூஸ்டர் பேக் போட்டால் லோக்கல் கால் சார்ஜஸ் ரொம்ப கம்மியாகிடுச்சு. ஆனாலும் எப்போ எல்லாம் அண்ணா வீட்டுக்கு வருவாரோ அப்போலாம் அவரோட ஃபோன் பயன்படுத்துவது நிற்கல. (ஃப்ரீ ஃபோன் கால் ஆச்சே).


மே ஒண்ணு 2012 இரண்டாவது ஃபோன் வாங்கினேன். என்னோட மொத  ஃபோன்   அஞ்சு வருஷத்துக்கு மேல ஆனதால  சரியா வேல செய்யாததுனால என்னோட இரண்டாவது மொபைலான சாம்சங் ஆண்ட்ராய்ட் டச் மொபைல் வாங்கினேன். ஃபோன் வாங்கியதுமே முதன் முதலா 

சாமுண்டீஸ்வரி 

அக்காவுக்குதான்  ஃபோன் பண்ணி பேசணும்னு  ஏற்கனவே முடிவு பண்ணி இருந்ததால் அது படியே  கடையில ஃபோன் வாங்கியதும்  வீட்டுக்கு வந்ததுமே   பழைய ஃபோனில் இருந்து சிம்மை கழட்டி புதிய ஃபோனில் போட்டதுமே அக்காவுக்கு  ஃபோன் செய்து பேசினேன். கிட்டதட்ட   அஞ்சு வருஷத்துக்கு சாம்சங் ஃபோனையே வெச்சிருந்தேன்.


2012க்கு பிறகு இந்தியாவில் தொலை தொடர்பு தொழில் நுட்பம்  வேகம் எடுக்க ஆரம்பிச்சது. வாட்ஸாப் வருகை;  மொபைல் டேட்டா  குறைந்த கட்டணத்தில்; வீட்டில் இருக்கும்  ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக மொபைல் ஃபோன் என ஜெட் வேகத்தில் இந்தியா பயணிக்க ஆரம்பிச்சது. என்னுடைய மொபைல் போனோ பேசிக் ஆண்ட்ராய்ட் டச் ஃபோன் மாடல் என்பதால் அதில்  எதுவும் பயன்படுத்த முடியாது.


2017 ஏப்ரல் மாதம் என்னோட மூன்றாவது மொபைலான ஐஃபோன் வாங்கிய பிறகுதான் அதில் வாட்ஸாப் இன்ஸ்டால் செய்தேன். அதன் பிறகு... 

ஐய்யோ லேண்ட்லைன் கதை சொல்ல ஆரம்பிச்சு  ஐஃபோனில் வந்து நிற்கிறது...


விஷயம் என்னனா கடந்த ஒரு வாரமாக வீட்டில் ப்ராட்பெண்ட் லைன் சரியாக வருவதில்லை. கனெக்‌ஷன் விட்டுவிட்டு வருகிறது. ஒரு பக்கம் நான் என்னோட வேலையை செய்ய நெட் பயன்படுத்த இன்னொரு பக்கம் தம்பி அவனோட  ஆஃபிஸ் வேலையை செய்ய நெட்  பயன்படுத்த நெட் கனெக்‌ஷன் விட்டுவிட்டு வந்ததால நான் கம்ளெய்ண்ட் பண்ண; BSNL பிரச்சனை சரி செய்ய மீண்டும் பிரச்சனை வர மீண்டும் நான் கம்ப்ளெயிண்ட் பண்ண என போய்கிட்டு இருக்க இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு கால் வந்தது.

ஃபோனை எடுத்து நான்  ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருப்பவர் என்னப்பா தம்பி சும்மா சும்மா கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டிருக்க. இனி லைன்  வொர்க் ஆகலயினா கம்ப்ளெயின்ட் பண்ணாத எனக்கு  கால் பண்ணி சொல்லுனு சொல்லி இருந்தார். உடனே நான் என்னோட அண்ணா BSNLல டிவிஷன் இஞ்சினியருங்கனு சொல்ல வாய் எடுக்க போக ஃபோனில் பேசிய  நபர்  என்னைய  தம்பினு சொல்லி சின்ன பையன் கிட்ட பேசுற மாதிரி பேசியதால நா  சொல்ல நினைச்சத சொல்லிக்கல.


ஞாயிற்றுக் கிழமை  காலையில் மீண்டும்  நெட்  வரல அவரது  செல்ஃபோனுக்கு கூப்பிட்டு சொன்னேன். கொஞ்ச நேரத்துல மீண்டும் அவரே கால் செய்து  இப்போ நெட் வருதானு கேட்டார். வருதுனு சொன்னேன். நேற்றும் கால் செய்து லைன் சரியா வருதானு கேட்டார். ம்ம்ம் நல்லா வருது அங்கிள்னு சொன்னேன்.  இனி க்ளாஸ்க்கு இண்ட்ரப்ட்  இல்லாம நல்லா படினு  சொல்லி ஃபோன் வெச்சிட்டார்.

கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டதுமே மனசு  மைனஸ்  இருபது டிகிரி செல்சியஸ் அளவு குளிர்ந்திடுச்சு போங்க:)))


*


ஒரு பத்து நாள் முன்னாடி ஃப்ரெண்ட் ஒருத்தி ரெண்டு யூட்யூப் சேனல் சொல்லி நல்லா இருக்கும்னு பார்க்க சொல்லி இருந்தா. சரி நானும்  ஒரு சேனல் ஓப்பன் செய்து அவ சொன்ன கண்டெட்ண்ட்  தேடி பார்க்க ஆரம்பிச்சேன். அது  

ராம் ஜானு காதல் கதை எபிசோட்ஸ்.

முழுவதும் பார்த்ததும் நா சும்மா இருந்திருக்கணுமே உடனே ஒரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் போட்டு அரை மணி நேரம்   அறுஅறுனு  ராம் ஜானு காதல் கதை எபிசோட்ஸ் பத்தி பேசி தள்ள, எல்லாம் கேட்டுட்டு படுபாவி கடைசியில ‘முப்பது வயசு ஆனாலும் இன்னும் அடுத்தவன் காதல் கதை பார்க்குறதுதான் ஸ்வாரஸ்யமா உனக்கு இருக்குல’னு சொல்லி என்னை பயங்கரமா டேமேஜ்  பண்ணிட்டான்.


 அது கூட பரவால அடுத்ததா இன்னொரு ஃப்ரெண்டுக்கு  ஃபோன் போட்டு அவனிடமும் ராம் ஜானு காதல் கதை பத்தி பேச ஆரம்பிச்சா ஆரம்பத்துலயே என்னைய பேச விடாம தடுத்திட்டு ’மொதல்ல ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிட்டு வாழ்கையில உருப்படுற வேலைய பாரு’னு சொல்லிட்டான். 


இரண்டு பேர் கிட்ட பேசியதுல மனம்  உடைஞ்சு போன நான் இனி  யாரிடமும் ராம் ஜானு காதல் கதைய பத்தி பேச கூடாதுனு  முடிவு பண்ணி ஒருத்தருக்கு மட்டும் மெயிலில் லிங்க் அனுப்பி இருந்தேன். அவர் என்ன நினைச்சுக்கிட்டாரோனு தெரியல. பதில் ஒண்ணும் வரக்கானோம்.


*


ஃப்ரெண்ட் ஒருத்தன் லாக்டவுன் சமயத்துல யூட்யூப்லையே ஜோதிடம் பார்ப்பது எப்படினு கத்துகிட்டு வந்தான். ஜோதிடம் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும்  ஃப்ரெண்ட் கேட்டுகிட்டதால என்னோட பிறந்த  நேரம், தேதி, பிறந்த இடம் மற்றும் என்ன  ராசினு தகவல் சொல்லி இருந்தேன்.

ஒரு வாரம் பிறகு இரண்டு ஃபைல்கள் வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தான். அதில்  சொல்லி இருப்பதெல்லாம்  உன்மையோ பொய்யோ எனக்கு தேவை இல்லை You will get a matured and understanding  wife and an  intelligent and beautiful daughter என எழுதி இருந்தது. 

இதற்கு மேல் என்ன வேண்டும். நம்பியதெல்லாம் கைவிட நண்பன் சொன்ன படி ஜோதிடத்தைத் இனி நம்பலாம்னு இருக்கேன்.

பார்ப்போம்  ஜோதிட நண்பன் சொன்னமாதிரி நடக்குமானு.


ஜெய் ஜோதிடம்:)))

Saturday, September 05, 2020

2019இல் நான் சுற்றி பார்த்த இடங்கள்


2020ஆம் வருடம்  முடிய இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்  நிலையில் இது வரைக்கும் எந்த பயணமும் கோவிட்19-பேண்டமிக் காரணமாக வெளியே  எங்கும் போக முடியாத சூழல்.

ஏப்ரல் மாதம் குஜராத்  பயணத்திற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்து ஊரடங்கு வந்து குஜராத்  பயணம் கைவிடப்பட்டது.
இப்போதைக்கு யூட்யூபில் பயணம் தொடர்பாக வீடியோக்கள் பார்த்து வர்ச்சுவலாக மட்டுமே  பயணிக்க முடிகிறது. கூடிய சீக்கிரம் நிலைமை மாறவேண்டும். மாறும் என்கிற நம்பிக்கையோடு...

திரும்பிப் பார்த்தால்  சென்ற வருடம் நான்  பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன் போலும்.
மைசூர்-ஸ்ரீரங்கப்பட்டணம்,
மதுரை-குற்றாலம்,
வட இந்திய பயணத்தில்:
ஆக்ரா, மதுரா, அம்ரித்சர், ஷிம்லா மற்றும்  புது டெல்லி,
கடைசியாக கொடைக்கானல் என 2019 ஆம் வருடம் நிறைய இடங்கள்  சுற்றி பார்த்திருக்கிறேன்.

தவிர சென்ற வருடம்  அக்டோபர் மாதம் கர்னாடகா மாநிலத்தில்  இந்தியாவில் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான ஜோக் ஃபால்ஸ்க்கு போக திட்டமிட்டு     கடைசி நிமிடத்தில் திடீரென உடல்நிலை சொதப்ப ஜோக் ஃபால்ஸ் போக முடியாமல் போச்சு.

***
 


d