Sunday, January 19, 2020

ஜீவா அக்கா.அது  எந்த  வருஷம்னு சரியா ஞாபகம் இல்ல. ‘உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனு தெரியல மஹேஷ், செத்து போய்விடலாம்னு முடிவு பண்ணி இருந்தவளுக்கு ஜோதிடத்துக்கு எதிரா நீ எழுதி இருந்த பதிவு லிங்க் எனக்கு எப்படியோ கிடைச்சது. அதை வாசிச்சதுமே அப்போதான் எனக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது’னு அவர் என் கிட்ட தொடர்ந்து பேசிட்டு இருந்தாங்க.
அன்றில் இருந்து இன்னை வரைக்கும் அவருக்கு என் மேலயும் என் எழுத்து மேலயும் ஒரு  நல்ல மதிப்பும் நம்பிக்கையும்.
‘நீங்க நினைக்குற அளவு நா வர்த் கிடையாது மேடம்’னு எந்த அளவு என்னைய தாழ்த்திக்க நினைச்சாலும் ‘உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் மஹேஷ்’னு ஒரே வார்த்தையில வாய அடைச்சிடுவாங்க.
எழுத்து மூலமா எனக்கு எத்தனையோ அங்கீகாரம் பாராட்டு கிடைச்சாலும் மேற்சொன்ன ஒரு மேடமோட பாராட்டும் நம்பிக்கையும் என்மேல எனக்கு நம்பிக்கை கொடுக்கும். அது மட்டும் இல்லாம பல நல்ல உள்ளங்கள் பதிவு எழுதுறதன் மூலம் எனக்கு அறிமுகம் ஆச்சுனா  அதுக்கு என்னோட எழுத்துதான் காரணம்...

எழுத்துனு வரும்போது மொதல்ல ரெண்டு பேருக்கு நன்றி சொல்லணும்.
ஒன்னு 2013 இதே ஜனவரி மாசம் என்னைய எழுத ஊக்குவிச்ச ஜீவனுக்கும் அதே  வருஷம் என்னோட பதிவ வாசிச்சிட்டு ‘உன்னோட போஸ்ட்ல  எழுத்து பிழைகள் இருக்குமா. பார்க்க கஷ்டமா இருக்கு. பதிவ ப்ளாக்ல பப்லீஷ் பண்ணுறதுக்கு முன்னாடி என்கிட்ட அனுப்பி ஒரு முறை பிழைகளை சரி செய்துக்கனு சேட்ல சொன்ன ஜீவா அக்காவுக்கு மொதல்ல நன்றி சொல்ல கடமைபட்டிருக்கேன்...

தொடர்ந்து 6 வருஷத்துக்கும் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்கு அவர் செய்துட்டு வரும் உதவிக்கு என்னால என்ன செய்ய போறேனோனு நிறைய நாள் யோசிச்சிருக்கேன்.
சென்ற வருடம் ஜூன் மாதம் மதுரையில ஜீவா அக்காவோட முதல் நாவலான துர்கா மாதா வெளியிட்டு ஃபங்ஷனுக்கு சென்றிருந்தேன். 2013 - ல நாங்க இணையத்துல அறிமுகம் ஆனாலும் துர்காமாதா வெளியீட்டின் போதுதான் இருவரும் நேரில் சந்திச்சுகிட்டோம்.
அன்றைய தினம் நேரில் அவருடன் பேசிய முதல் அனுபவம் மறக்க முடியாதது.
போன வருஷம் நவம்பர் மாசம் ஒரு நாள் கால் பண்ணி இணையேற்பு இன்விடேஷன் அனுப்பணும்மா’னு சொல்லி இருந்தாங்க. “என்ன அக்கா நமக்குள்ள ஃபார்மாலிடிஸ். வாட்ஸப்ல அனுப்புங்க போதும்’னு சொல்லி இருந்தேன்.
போன மாசம் 29.12.2019 அன்னைக்கு மதுரையில நடந்து முடிந்த ஜீவா அக்கா மற்றும் திருப்பூர் குணா அவரகளது இணையேற்புக்கு சென்றிருந்தேன்.

எப்போதுமே நான் வெளியூர் செல்லணும் என்றாலும் முன் ஏற்பாடுகள் செய்துக்கொண்டுதான் செல்வேன். இம்முறை புத்தாண்டு சமயம் என்பதாலும் என்னவோ திருப்பும் பயணத்தில்   ரயிலில் ரிசர்வேஷன் கிடைக்காததாலும்; தட்கல் முயற்சியும் மறந்ததாலும் இணையேற்புக்குச்  சென்று மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்ததால் இணையேற்பு விழா ஆரம்பிப்பதற்கு முன்னாடி ஜீவா அக்காவுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு உடனடியாக கிளம்பவேண்டிய சூழல்.

ஒரு பக்கம் ஜீவா அக்காவின் இணையேற்பையும் ஈஸ்வரன்கள் நாவல் வெளியீட்டையும் பார்க்க முடியலியேனு வருத்தமா  இருந்தாலும் அட்லீஸ்ட் இணையேற்பில் கலந்து கொண்ட  திருப்தியில் 30.12.2019 அன்று சென்னை வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.

ஈஸ்வரன்கள் நாவல் கைக்கு கிடைச்சதுல இருந்து வாசிக்கணும் வாசிக்கணும் நினைச்சிட்டு ஒரு வழியா நேத்து காலையில வாசிக்க ஆரம்பிச்சு இன்னைக்கு காலையிலதான் வாசிச்சு முடிச்சேன். உட்கார்ந்தால் அதிகபச்சமா மூணு மணி நேரத்துக்குள்ள வாசிச்சு முடிக்க கூடிய நாவலுக்கு ஒரு நாள் நான் எடுத்துகிட்டது அதிகம்தான்.
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நாவல் வாசிக்க ஆரம்பிச்சதால ஆரம்பத்துல இருக்கும் சோம்பலையும் சோம்பேறி தனத்தையும் தாண்டி வாசிக்கிறதுக்குள்ள ஏதோ ஒரு டிஸ்டர்பென்ஸ் நடுவுல வர  இன்னைக்குதான் முழு நாவலையும் வாசிச்சு முடிச்சேன்.
இது ஜீவா அக்காவோட ரெண்டாவது நாவல்.
துர்கா மாதா வாசிச்சு முடிச்சதுமே நாவல் பற்றிய என்னோட பார்வைய எழுத நினைச்சாலும் எழுத முடியாம போச்சு. ஆனா எனக்குள்ள அந்த நாவலின் தாக்கம் எந்த அளவு ஊடுருவி இருக்குனா ஒவ்வொரு தடவையும் நா ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும்போது உணவு பரிமாறும் பெண்களை பார்க்கும்போதெல்லாம் துர்கா மாதா நாவலில் ஒரு சில வார்த்தைகளில் ஜீவா அக்காவும் தோழர் ஒருவரும் பேசிய உரையாடல் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவு எனக்குள்ள பாதிச்சு என்னைய யோசிக்க தூண்டிய நாவல் துர்கா மாதா.
இப்போ எனக்கு இந்த ஈஸ்வரன்கள் நாவல் துர்கா மாதா அளவு நெருக்கமா ஃபீல் பண்ண வைக்கல. ஒருவேளை இந்த நாவல புரிஞ்சுக்க கூடிய பக்குவம் இன்னும் எனக்கு  வரலைனுதான் நான்  நினைக்குறேன். ஏன்னா அரசியல், கொள்கை சித்தாந்தம்னு நாவல்  பல்வேறு தளத்துல பயணிக்கிறது. ஒட்டு மொத்தமா  நாவல பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா தந்தை வழி சமூகத்தால பாதிக்கபடுற பெண்களை பத்தி ஒரு செக்கண்ட்  நின்னு யோசிக்க  வைக்கிறது இந்த ஈஸ்வரன்கள். இதுதான் இந்த நாவலோட வெற்றினு நினைக்கிறேன்.

இது போன்று சமூக மாற்றத்துக்கு மென்மேலும் பல படைப்புகள் கொண்டு வரணும்னு வாழ்த்துகிறேன் அக்கா.