Sunday, February 09, 2020

குஜராத் நோக்கி.சென்ற வருடம்  அதாவது 2019 டிசம்பர்ல இருந்து இருக்கலாம். இந்த வருஷம் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா போகணும்னு முடிவு பண்ணி மெல்பேர்ன், சிட்னி நகரங்களுக்கு போகணும்னு திட்டமிட்டு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் உறவினர்  அண்ணா  ஒருத்தரை தொடர்புகொண்டு ‘நாங்கள் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியா வருகிறோம்’னு தகவல் சொல்லி முதன் முறையாக அந்த அண்னாவோட பேசி இருந்தேன்.
அப்போதான் அனைத்து ஊடகங்களிலும் அந்தச் சமயம் ஆஸ்திரேலியாவில் வரலாறுகாணாத அளவு பல இடங்களில் காட்டுத்தீ எரிந்துக்கொண்டிருக்கிறது என்கிற செய்தி பரபரப்பாக  பேசப்படுவதை கேள்விபட்டதோடு இல்லாமல் தற்போது நான் பணி புரியும் திருத்தனியில் இருந்து திருப்பதிக்கு பணி இடம் மாறுதலுக்கு தீவிரமாக முயற்சி எடுக்க ஆரம்பிச்சதாலும் ஆஸ்திரேலியா பயணத்தையே  ஒரு கட்டத்தில் மறந்துவிட்டேன்.

திடீரென தம்பி போன வாரம் ஞாயிறு அன்னைக்கு ‘ஏப்ரல் மாசம் ஒரு அஞ்சு நாள்  லீவ்  வர்ற மாதிரி இருக்கு. எங்கையாச்சும் போக டூர்  ப்ளான் பண்ணேன்’னு சொல்லி இருந்தான். நான் ஏப்ரல் மாசம் ஆஸ்திரேலியாவுக்கு போகணும்னு முடிவு பண்ணியபோதும் சரி; அதன் பிறகும்  தம்பி சொல்லுற வரைக்கும் ஏப்ரல் மாதம் சொன்ன அந்த அஞ்சு நாள் விடுமுறை பற்றிய தகவல் எனக்கு தெரியவே தெரியாது.
‘சும்மா சொல்லாத, அப்படி எல்லாம் இருக்காது; எனக்கு எப்படி அது தெரியாம போச்சு; இரு கேலண்டர்ல பார்க்கலாம்’னு பார்த்தா தம்பி சொன்ன மாதிரி ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்தால் அஞ்சு நாள் வருது. அதுக்கு மேல என்ன வேணும். எனக்கும் தம்பிக்கும் ஒரே  சமயத்துல அஞ்சு நாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம். இது மாதிரி அடுத்த வாய்ப்பு மீண்டும் எப்போ வரும்னு தெரியாது. அதுனால உடனே எங்க போகலாம்னு யோசிக்க  ஆரம்பிச்சிட்டோம்.
இப்படிதான் போன வருஷம் ஏப்ரல் மாசம் துபாய்க்கு போகணும்னு முடிவு பண்ணி இருக்க கடைசியில போக முடியாம போச்சு. அது மாதிரி இந்த சமயம்  ஏப்ரல் மாசம் வெயில் அதிகமா இருக்குனு எந்த சாக்கும் சொல்ல கூடாதுனு முன்னாடியே முடிவு பண்ணி தீவிர யோசனைக்கு பிறகு கடைசியில நாங்க போக முடிவு செய்த இடம் குஜராத் மாநிலம்...

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடும்பத்தோடு  வட  இந்திய பயணம் சென்றிருந்த போது ஆக்ரா, மதுரா, அம்ரிட்ஸர்,  ஷிம்லா மற்றும் புது டெல்லி என ரெண்டு மூணு மாநிலங்களை தொட்டு பயணம் செய்திருப்போம். அந்த பயணத்துலயே ஜெய்பூர் சேர்க்க நினைச்சாலும் ஏற்கனவே அதிக நாட்கள்  ஆனதால்  ராஜேஸ்தான் மற்றும் குஜராத் வேறு ஒரு முறை சுத்தி பார்க்கலாம்னு  முடிவு பண்ணி இருந்தேன்.
எனக்கு ரொம்ப நாளாவே குஜராத் மாநிலத்தில் வட மேற்கு எல்லையில் இருக்கும் ஓக்கா   வரை ஒருமுறை சென்று வரணும்னு ஆசை.
அதுவும் ரயிலில்தான்...
இம்முறை  குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே பயணம் செய்து; ஓக்கா வரை சென்று முடிந்தவரை எத்தனை இடங்களை ஐந்து நாட்களில் பார்க்க முடியுமோ அத்தனை இடங்களை சுத்தி பார்க்கணும்னு முடிவு பண்ணி எப்பவும் போல கூகுல் தேவதையை அணுகினேன். ஓரளவு பயண திட்டம்  தயாராகி இருக்கிறது.

ஏப்ரல் 9 வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து அஹமதாபாத் செல்லும் அஹமதாபாத் எக்ஸ்ப்ரெஸில் ரேனிகுண்டாவில் இருந்து அஹமதாபாத் வரை ரயிலில் நான்கு பேருக்கும் சேர்த்து முன்பதிவு செய்தாகி விட்டது. அதே போல ஏப்ரல்  14 செவ்வாய்க் கிழமை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று இரவு பதினொன்னரைக்கு அஹமதாபாத்தில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட்டும் நான்கு பேருக்கும் புக் பண்ணியாச்சு.

ஏப்ரல் பத்து வெள்ளிக்கிழமை அன்னைக்கு எப்படியும் நாள் முழுவதும் ரயிலிலே போய்விடுவதால் அன்னைக்கு எத பத்தியும் யோசிக்க தேவை இல்ல. ஏப்ரல் 11 சனிக்கிழமை  காலை  ஐந்தரைக்கு அஹமதாபாத்-இல் நாங்கள் பயணிக்கும் சென்னை அஹமதாபாத் எக்ஸ்பிரெஸ் சென்று சேரும். அங்கிருந்து ஆரம்பிச்சு எப்ரல் 14  செவ்வாய்க் கிழமை   இரவு    விமானம் ஏறும் வரையிலான இடைபட்ட காலத்தில் குஜராத்தில் இருக்கும் நாங்கு  நாட்கள் எங்கெங்கு சுத்தி பார்க்கணும்னு திட்டமிடணும்.

சென்ற வருடம் வட இந்திய  பயணத்தில் புது டெல்லி வர இருப்பதை பதிவின் மூலம் நான் சொன்னபோது வெங்கட் நாகராஜ் சார் ’எங்க ஊர் வருகுறீர்கள். முடிந்தால் சந்திப்போம்’னு சொல்லி இருந்தார். பல முறை மின் அஞ்சல் மூலம் அவரை தொடர்பு கொள்ள நினைச்சாலும் கடைசி வரைக்கும் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கல. எனக்கு பயணம் என்பது சுயமாக திட்டமிட்டு சுத்தி பார்க்கணும்னு ஆசை. அப்போதான் உண்மையான திருப்தியும் மன நிறைவும் கிடைக்கும் என்பதால சுயமாகவே வட இந்திய பயணம் திட்டமிட  ஆரம்பிச்சதுல இருந்து ரயில் ஏறும் வரைக்கும் ஒரே பதற்றம். அதனாலயே வெங்கட் நாகராஜ் சாரை தொடர்பு கொள்ள நினைச்சாலும் பயண டென்ஷன்லையே கடைசி வரைக்கும்  தொடர்பு கொள்ள முடியல.

எப்படியோ எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்ட படி சென்ற வருடம் வட இந்திய பயணம் ஆக்ராவில் தாஜ் மஹாலும், மதுராவில் க்ரிஷ்னர் கோவிலும், அமிர்தசரசில் பொற்கோவில் மற்றும் வாகா  எல்லை, ஷிம்லாவில் மால் ரோட்,  குஃப்ரி மற்றும் புது டெல்லியில் இந்தியா கேட், பிர்லா மந்திர், குதுப்மினார், லோடர்ஸ்  டெம்பில், ராஜ் காட், (காந்தி சமாதி), இந்திரா காந்தி சமாதி,  ஹூமாயூன் சமாதி மற்றும் ரெட் ஃபோர்ட்  சுற்றி பார்த்தோம். இதை தவிர ராஷ்ரபதி பவனுக்குள் செல்ல முன்னதாகவே  அனுமதி பெற்றும் சுற்றி பார்த்தோம்.

மொத்தம் எட்டு நாட்கள் சென்ற வட இந்திய பயணம் சக்ஸஸ் ஆன மாதிரி இம்முறை குஜராத் பயணம் போக போறேன். சென்ற வருடம்  கிடைச்ச அனுபவத்தால இம்முறை அந்த அளவு பயம் இல்ல.

என்ன என்ன இடங்கள் குஜராத் மாநிலத்தில் சுத்தி பார்க்கணும்னு தேடிட்டு இருக்குறப்போ  வெங்கட் நாகராஜ் சார் நியாபகத்துக்கு வந்தார். அவரது பதிவுகள் தினமும் வாசிப்பது கிடையாது என்றாலும் அவரது  பயண கட்டுரைகளின் ரசிகன் நான்.
சரி அவர் குஜராத் போய் இருக்கிறாரா’னு அவரது வலை தளத்திற்கு சென்று தேடி பார்க்க
 குஜராத் போகலாம் வாங்கனு
 அழகாக  பயண தொடரையே எழுதி வெச்சிருக்கார். அந்த தொடர் முழுவதும் வாசிச்சு முடிச்சாச்சு. ஓரளவு குஜராத் சுற்றுலா இடங்கள் பற்றிய அறிமுகம் கிடைச்சாச்சு. இனி அடுத்து வெங்கட் நாகராஜ் சார் அவரது பயண தொடர் மூலம் எனக்கு அறிமுகம் ஆன இடங்களோடு நானும் பார்த்து வெச்ச ஒரு சில இடங்களைச்  சேர்த்து நாங்கு  நாள் குஜராத்தில் திட்டமிடணும்.
இந்த சமயத்துல குஜராத் தொடர் எழுதியமைக்கு வெங்கட் நாகராஜ் சாருக்கு என்னோட நன்றிகளும் பாராட்டுகளும்.
தொடர்ந்து  பயணம் செய்யுங்கள்
 பயண தொடராவும் எழுதுங்கள் சார்!
*
இன்னைக்கு தேதி ஃபெப்ரவரி 9.  சரியா ரெண்டு மாசம் கழிச்சு ஏப்ரல் 9 அன்னைக்கு  எங்களோட குஜராத் பயணம் ஆரம்பிக்க போகிறது என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு:))))

அடுத்து இதோடு இந்த பக்கம் எப்போ வருவேனு தெரியல. எழுத நிறைய இருந்தாலும் மனசு ஒத்துழைக்க மாட்டேங்கிறது.
அதுனால வர்ற 21 அன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஸ்வீட் ஸிக்ஸ்டீன் அதிரா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மீண்டும் விரைவில் வேருறு ஒரு பதிவின் மூலம் வருகிறேன்.