காலை பதினோரு மணிக்கு பல்ஹார்ஷாவில் புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கு அடுத்த ரயில் நிலையம் நாக்பூர் ஜங்ஷன். இந்த ரெண்டு ரயில் நிலையங்களுக்கு இடையிலான தூரம் 208 கிலோ மீட்டர். மதியம் இரண்டேகாலுக்குதான் நாக்பூர் ஜங்ஷன் வரும். அதுவரைக்கும் அடுத்த மூணு மணி நேரம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்க அம்மா எங்களுக்கு பக்கத்தில் பக்கவாட்டில் இருக்கும் லோயர் பர்த்தில் உட்கார்ந்திருக்கும் வட இந்திய தம்பதியர் குழந்தையிடம் அவனுக்கு தெரியாத மொழியில் ஏதோ பேச முயற்சித்துக் கொண்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்தில் அவன் எங்கள் மத்தியில் வந்து உட்கார்ந்துட்டான். அவனிடம் எங்களுக்கு தெரிஞ்ச தோடாதோடா ஹிந்தியில் பேச்சு கொடுத்ததில் அவர்களது ஊர் டெல்லியெனவும் அவன் முதலாம் வகுப்பு படிப்பதாகவும்; சென்னையில் உறவினர்களது திருமணத்திற்கு வந்ததாகவும் சொன்னான்.
எங்கள் இரண்டு குடும்பங்களைத் தவிர அந்த பெட்டியில் தமிழக கல்லூரி மாணவர்கள் தவிர வேறு யாரும் இல்லை. யாருடைய தொந்தரவோ தொல்லையோ இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு உணர்வே தந்துக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் கவனிச்சது அடிக்கடி குப்பை பெருக்கி துடைப்பது. இப்படி அடிக்கடி சுத்தம் செய்வதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். அப்போது வேலைக்கு முயற்சிக்கும் சமயம்னு நினைக்கிறேன். அவசரமாக சென்னைக்கு போக வேண்டிய கட்டாயம். மதியம் என்பதால் திருப்பதியில் இருந்து எந்த ரயிலும் சென்னைக்கு இல்லாததால் நேரா இங்கிருந்து பத்து கிமீ தொலைவில் இருக்கும் ரெணிகுண்டா ரயில் நிலையத்துக்குச் சென்று மும்பை எக்ஸ்பிரஸில் பொது பெட்டியில் பயணம் செய்த ஞாபகம். அப்போது எங்களோடு எலிகளும் பயணம் செய்வதை பார்த்து அதிர்ந்து போனேன். இந்திய ரயில்வே மீது எனக்கு கடும் அதிர்ப்தி. அன்றில் இருந்து நெடுதூரம் செல்லும் ரயில்களில் பொதுப்பெட்டி பயணம் என்றாலே பயம். இந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சுத்தம் செய்வது போல தொலைதூரம் செல்லும் அனைத்து ரயில்களிலும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாய் இருக்கும்னு நினைச்சுகிட்டேன்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் படிப்படியாக வேகத்தை கூட்டி அதனுடைய உச்ச வேகமான மணிக்கு 110 கீமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கோ நேரம் நகர மாட்டேங்கிறது. எவ்வளவு நேரம்தான் அந்த பையனிடம் பேச்சு கொடுப்பது. மொக்க போடதான் பக்கத்துல எந்த பொண்ணு இல்ல அட்லீஸ்ட் ஆண்ட்டி யாராவது உடன் பயணித்திருந்தாலாவது பேச்சு துணைக்காச்சும் ஆள் கிடைச்சிருந்திருக்கும். அப்படி எதுவும் நடக்காததினால ஒரே ஃபீலிங்ஸ்:(((
*
வட இந்திய பயணம் புறப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சீனியர் ஸ்டாஃப் ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ’தனிமைய மட்டும் எப்பவும் தேர்ந்தெடுத்திடாத. உனக்கென ஒருத்தர் உன்னோட வாழ்க்கையில இருக்கணும். உன்னோட சுக துக்கங்களை பகிர்ந்துக்க; சோர்ந்திருக்கும்போது உற்சாகபடுத்த; கஷ்டத்துல இருக்கும்போது மன தைரியம் கொடுக்க ஒருத்தர் நிச்சயம் ஒவ்வொரது வாழ்விலும் இருக்கணும்; அது உனக்கு ரொம்ப அவசியம்’னு சொல்லி இருந்தார். அப்புறம் அவரே என்னிடம் தோழா படம் பார்க்கலியா. மொதல்ல அந்த படத்த போய் பாருனு சொன்னார். ஏற்கனவே நான் அந்த படத்தை பார்த்திருந்தாலும் சீனியர் ஸ்டாஃப் சொன்னதில் இருந்து இன்னொரு தடவை தோழா படத்தை பார்க்கணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன். சரியா அப்போ தோழா படம் ஞாபகத்துக்கு வர இதுதான் சரியான தருணம்னு ஃபோன்ல தோழா படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.
படம் பார்த்து முடிக்கவும் நாக்பூர் ஜங்ஷன் வர சரியாக இருந்தது. பல்ஹார்ஷாவுக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்தமாதிரி நாக்பூருக்கு கால் மணி நேரம் முன்பே வந்து விட்டது. நாக்பூர் ஜங்ஷனுக்கு இரண்டேகாலுக்கு வந்து இரண்டு இருபதுக்கு புறப்படணும். மதியம் லன்ச் நாக்பூர் தாண்டியதும் சாப்பிடலாம்னு முடிவு செய்ததால் நேரம் இருக்க நாக்பூர் ஜங்ஷன் சுத்தி பார்க்கலாம்னு தம்பியும் நானும் ட்ரைனைவிட்டு இறங்கினோம்.
*
நாக்பூர் நகரை ஆரஞ்சு சிட்டினு அழைப்பாங்கனு கேள்விபட்டிருக்கேன். சாப்பிட ஆரஞ்சு பழம் ஃப்ளாட்பாரத்தில் எங்கையாவது விப்பார்களானு பார்த்துகிட்டே நடக்க கண்ணுக்கு எங்கும் தென்படவில்லை.

நாக்பூரானது இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரம். அது மட்டும் இல்லாமல் சென்னை- புது டெல்லி வழிதடத்திற்கு இடையே இரு புறமும் சரி சம தொலைவில் நடுவே இருக்கும் ஒரு நிருத்தம். (சென்னையில் இருந்து நாக்பூருக்கு 1089 கிமீ. அதுவே புது டெல்லியில் இருந்து நாக்பூருக்கு 1091 கிமீ).
நாங்கள் நாக்பூரில் இருந்த சமயம் எங்களுக்கு எதிர் திசையில் புது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பக்கத்து ப்ளாட்பாரத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. தம்பியும் நானும் பேசிகிட்டே நடக்க ரயிலின் கடைசி பெட்டிக்கு வந்து விட்டோம்.
மீண்டும் வந்த வழியிலே எங்களது பெட்டியை நோக்கி நடக்கும்போதுதான் நாக்பூரில் இருக்கும் ஒரு சிஸ்ட்டர் ஞாபகத்துக்கு வந்தாங்க. அவர் பெயர் குஞ்சம் சிங். கடைசியாக அவருடன் எப்போது பேசினேன் என்பது நினைவில் இல்லை. அனேகமாக பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும். அவருடன் தொடர்பில் இல்லாததினால் அவருடன் பேசவோ தொடர்புகொள்ளவோ எந்த முயற்சியும் எடுக்காததால் எனக்கு நினைவில் இருப்பது குஞ்சம் சிஸ்டர் ஊர் - நாக்பூர் மட்டும்.
*
நாக்பூரைச் சேர்ந்த குஞ்சம் சிங் என்பவர் 2010 ஆம் வருடம் இணையத்தில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் எம். ஏ இங்க்லீஷ் லிட்ரேச்சர் முடித்து விட்டு யூஜீசீ நடத்தும் நெட் தகுதி தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மூலம் அவரது தோழி அன்ஜும்கான்னு இன்னொரு சிஸ்டர் அறிமுகம் ஆகி இருந்தாங்க. அன்ஜும்கான் சிஸ்டரது பூர்விகம் என்னவோ வட நாட்டு பக்கம் ஆனால் அவர்கள் கோயம்புத்தூரில் செட்டில் ஆகி இருந்தாங்க. அவரும் அப்போது எம். ஏ இங்லீஷ் லிட்ரேச்சர் முடித்து விட்டு யூஜீஸீ நெட் தகுதி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாங்க.
குஞ்சம் சிங் மற்றும் அன்ஜும்கான் சிஸ்டர்ஸ் அறிமுகமான அந்தச் சமயம் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் மூவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கைப்பில் பேசுவோம். ஒரு கட்டத்தில் அதில் கோயம்புத்தூர் சிஸ்டர் அன்ஜும்கான் நெட் தேர்வில் ஜேஆரெஃப்க்கு தேர்வாகி இருந்தாங்க. நாக்பூர் சிஸ்ட்டரால் முடியவில்லை. இதெல்லாம் இரண்டாயிரத்து பத்துல நடந்த கதை . அதன் பிறகு என்ன ஆச்சுனு நியாபகம் இல்ல. நாங்க ஸ்கைப்பில் பேசுவதும் நின்று போனது. அதன் பிறகு இருவரிடமும் வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
சரியாக இம்மாதம் 11ஆம் தேதி காஞ்சிபுரத்தில் ஃப்ரெண்ட் ஒருத்தியோட மேரேஜ் ரிசப்ஷனுக்கு சென்றிருந்தேன். கடைசி வரைக்கும் போக வேணாம்னுதான் நினைச்சிட்டிருந்தேன். ஃபோன் பண்ணி கூப்பிட்ட ஓரே காரணத்துக்காக போவோம்னு முடிவு பண்ணி போய் இருந்தேன். எதிர்பார்க்கா வகையில் அப்போது அங்கு கோயம்பத்தூர் சிஸ்டர் அன்ஜும்கான் அவரை நேரில் பார்க்க முடிந்தது. இருவரும் கடைசியாக பேசி பல வருடங்கள் ஆனாலும் என்னை அவர் மறக்கவில்லை.
என்னை பார்த்ததுமே
do you remember me mahesh?னு கேட்டாங்க.
yes. how can i forget you sister.
what are doing mahesh?
i am working in SBI. from here its just a 1 hour travel distance.
i heard that you are working in Avinashilingam University sister?
yes mahesh.
what about gunjam singh sister, we all chat on skype.
now what is she doing?
i don't know mahesh but she is working some other bank.
பக்கத்தில் நிற்கும் அவரது கணவரை அழைத்து. this is mahesh. help me a lot for learning computer working in SBI என என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் அனைவரும் ஒன்றாக மேடையில் ஏறி மணப்பெண் மற்றும் மணமகனுடன் புகைப்படம் எடுத்துகிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்து அன்ஜும்கான் சிஸ்டரோடு நேரம் செலவிட்டு கிளம்பணும்னுதான் ஆசை. ஆனால் அப்போதே நேரம் இரவு ஒன்பதை தாண்டியதால் உடனே கிளம்பவேண்டிய கட்டாயம் எனக்கு. கிளம்பும்போது அன்ஜும்கான் சிஸ்டரது கணவர் ’கோயம்புத்தூர் பக்கம் வந்தால் வீட்டுக்கு கட்டாயம் வாங்க’னு சொல்லி இருந்தார். நானும் சரினு சொல்லி அவர்களிடம் இருந்து விடை பெற்று மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
அன்றைய தினம் பல நாட்களுக்கு பிறகு மனம் உற்சாகமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு சில நாட்கள் மட்டும் பேசிய ஒருத்தர் அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லாட்டியும் எதிர்பாராவகையில் நேரில் சந்தித்தபோது மறக்காமல் என்னிடம் வந்து பேசியதை நினைச்சு நினைச்சு சந்தோஷபட்டுட்டிருந்தேன். கடந்த காலத்தில் என்னை மறக்காமல் ஞாபகம் வைத்து பேசும் நல்ல உள்ளங்களை எல்லாம் சம்பாதிச்சிருக்கேன் என்பதை நினைச்சப்போ என்மேல எனக்கே பெருமையா இருந்தது. அதே ஒரு சிலரிடம் மாத கணக்கில் ஏன் வருட கணக்கில் யாருக்குமே கொடுக்காத முக்கியத்துவம் கொடுத்து பழகி இருந்தாலும் அவர்கள் என்னையும் எனது அன்பையும் உதாசீனபடுத்திவிட்டு சென்றவர்களை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
*
குஞ்சம் சிஸ்டரை பற்றி சொல்ல ஆரம்பிச்சு அவரது ஃப்ரெண்ட் அன்ஜும்கான் சிஸ்டர்ரை பல வருஷங்களுக்கு பிறகு ஃப்ரெண்ட் ஒருத்தியோட மேரேஜ்ல நேருல சந்திச்ச கதையை சொல்லி பதிவு நாக்பூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு போயிடுச்சு..
நாங்க ட்ரைன்ல ஏறி உட்கார்ந்த கொஞ்ச நேரத்துல நாக்பூர் நிலையத்திலிருந்து இட்டார்சி நோக்கி தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் சரியாக இரண்டேகாலுக்கு புறப்பட்டது. நாங்களும் மதிய லன்ச்சுக்கு சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சோம். ஒரு இருவது நிமிஷம் நாக்பூரை விட்டு பயணிச்சிருப்போம். வெல்கம் டூ மத்திய பிரதேஷ்னு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்தது.....