Thursday, June 11, 2020

இராஜம்மாள் பாட்டி (1948 - 2020)


கடந்த மாதம் 26/05/2020 செவ்வாய் கிழமை. மதியம் ஒரு மூன்றரை இருக்கும். வீட்டில் எங்களோடு  அம்மாவின் அம்மா  பாட்டி தரையில் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டுதான் இருந்தார்.
திடீரென தலை வலிக்கிறது என்று சொல்லி தரையில் சாய்ந்து விட்டார். நாங்கள் முதலில்
அவருக்கு  உடம்பில் பல்ஸ் குறைந்திருப்பதால் மயங்கி இருப்பார் என நினைத்து  எங்களுக்கு தெரிந்த முதல் உதவி செய்ய சர்க்கரை மற்றும் உப்பு கலந்த  நீர் குடிக்க கொடுத்தோம். எந்த
முன்னேற்றமும் இல்லை. உடனடியாக மருத்துவமனைக்கு பாட்டியை எடுத்துச் செல்ல  108க்கு  ஃபோன் செய்தால்
எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு  ஆம்புலென்ஸ் வருவதில் சில சிக்கல்கள் இருப்பதால்  வர முடியாது என சொல்லிட்டார்கள்.

அப்பறம் ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலென்ஸுக்கு ஃபோன் செய்தால் 15 நிமிடத்திற்குள் வருவதாக சொல்லி இருந்தார்கள்.
இதற்கிடையே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

பாட்டி  மதியம் சாப்பிட்ட சாப்பாட்டை    வாந்தியெடுக்க ஆரம்பிச்சிட்டார்.
ஒரு பக்கம்  அம்மா சுத்தம் செய்ய ,இன்னொரு பக்கம் பாட்டி கொஞ்சம் கொஞ்சமா சுய நினைவு இழக்க ஆரம்பிக்க...
ஆம்புலென்ஸ்  வருவதாக தெரியவில்லை. நேரம் கடத்த    எங்களுக்கு விருப்பம் இல்லை. உடனடியாக தம்பி ரோட்டிற்கு
சென்று ஆட்டோவை அழைச்சிட்டு வந்தான்.
இரண்டாம் தளத்தில் இருக்கும் பாட்டியை   மெதுவாக கீழ் தளத்திற்கு கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றார்கள்.
அந்த மருத்துவமனையில் பாட்டியை பார்த்ததுமே ‘இது ந்யூராலஜி பிரச்சனை. இங்கே
முடியாது  வேறு மருத்துவமனைக்கு கொண்டு போக சொல்லி விட்டனர்.
அங்கிருந்து பாட்டியை இன்னொரு  மருத்துவமனைக்கு  கொண்டு போனார்கள்.
முதலில் பல்ஸ் செக் செய்து பார்த்ததில் 270  சென்றதாக தெரிந்தது. உடனே தலைப்
பகுதியை  CT scan எடுத்துப் பார்த்தார்கள்.
திடீரென   பாட்டியின் உடம்பில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதின் காரணமாக
மூலை பகுதியில் இருக்கும் நரம்புகள் வெடித்து  ரத்த ஓட்டத்தில் பிரச்சனை
ஏற்பட்டதாக சொன்னார்கள்.
மேலும் மருத்துவர் வேலூர் CMC, சென்னை அப்போலோ கொண்டு போனாலும் ஒரு சதவீதம்
மட்டுமே பாட்டி உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.
நாங்கள் இருப்பதோ  ஆந்திராவில். மருத்துவர் சொன்ன மருத்துவமனைகள் இருப்பதோ  தமிழகத்தில்.
இந்த கொரொனா சமயத்தில் மாநிலம் விட்டு  மாநிலம் போவது ஒரு பக்கம் சிரமமாக இருந்தாலும்
எப்படியாவது மருத்துவமனைக்கு சென்றுவிட்டாலும் அவர்கள்   அட்மிட்
செய்யாமல் இருந்தால் கஷ்டமாக இருக்கும்.ஏனெனில் நிறைய மருத்துவமனைகளில் இப்போது அவுட்
பேஷண்ட்ஸ் பார்ப்பதில்லையாம்.
இப்படி பல குழப்பங்கள் ஓடிக்கொண்டிருக்க கடைசியாக திருப்பதியிலேயே பாட்டிக்கு
சிகிச்சை தர முடிவு செய்தோம்.
எங்களுக்கு தெரிந்த மருத்துவர்களிடம் எல்லாம் பாட்டியின் ரிப்போர்ட்ஸ் காட்டி
ஏதாவது  பண்ண முடியுமானு கேட்டால் பாட்டியின் வயதை காட்டி கஷ்டம்னு
சொல்லிட்டாங்க. 24 மணி நேரம்தான் மருத்துவமனையில் பாட்டி  இருந்திருப்பாங்க. அதுவும் வெண்டிலேட்டரில்தான்.

  27/05/2020  புதன் கிழமைமாலை ஹாஸ்பிடலில் இருந்து பாட்டியை டிஸ்சார்ஜ் செய்து பக்கத்து தெருவில்  இருக்கும் அவரது
வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
உடனேநான்  பாட்டியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன்.
பாட்டியின் உடலில் எந்த  அசைவும் இல்லை. அவரது கையைப் பிடித்துக் கொண்டு எனது
பெயரைச் சொல்லி அவரை அழைத்தேன். பலன் இல்லை.
கோமா நிலை சொல்லுவார்கள் இல்லையா அது மாதிரி. அமைதியாக படுத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு அந்த கோலத்தில் பாட்டியை பார்க்க கஷ்டமாக இருந்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
73 வயதாகும் அவரை அது வரைக்கும் அது மாதிரி
ஒருபோதும் பார்த்தது கிடையாது.
மருத்துவமனையில் இருந்து பாட்டியை டிஸ்சார்ஜ் செய்யும் போது கொடுத்த
ரிப்போர்ட்டை  தம்பியை  படிக்க சொன்னதில் பாட்டிக்கு

Intracerebral hemorrhage

பிரச்சனை ஏற்பட்டதாகப் படித்துக் காட்டினான்.
அது வரைக்கும் அந்த பெயரை கேல்வி பட்டது கிடையாது.

மருத்துவமனையில் இருந்து பாட்டியை வீட்டிற்கு அனுப்பும் போது வெண்டிலேட்டரில் இருந்து எடுத்தாலே  ’மூச்சு எந்த நொடியும் நின்று விடலாம்’னு
சொல்லி இருந்தார்கள்.
29/05/2020 வெள்ளிக்கிழமை  அதிகாலை ஐந்து மணிக்கு
பாட்டியின் மூச்சு நின்றது.

***

இதற்கு முன்பு குடும்பத்தில் அப்பாவின் அம்மா பாட்டி 2016 ஆம் வருடம் 90
வயதில் இறந்த போது கூட  அவ்வளவு  வருத்தமில்லை எனக்கு.
  இந்த  பாட்டியின் மரணம் என்னை  ரொம்பவும் பாதித்தது.
ரொம்ப  அன்பானவங்க. யாரிடமும் பகைமையே வெச்சுக்க மாட்டாங்க.
எல்லாரிடமும் நல்லா பேசுவாங்க.
எப்போதாவது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாட்டி   ஒரு ஃபோன் கால் பன்னி சொன்னால் போதும். பக்கத்து தெருவில் இருக்கும் பாட்டி  உடனே வந்து விடுவார்.
எனக்கும் உடம்புக்கு வந்தால் பாட்டி பக்கத்தில் கட்டாயம் இருக்கனும்.
என்னதான்  அம்மா அப்பா பக்கத்தில் இருந்தாலும் என்னவோ எனக்கு பக்கத்தில் பாட்டி இருந்தால் ஒரு தைரியம்.
இனி  எனக்கு உடம்புக்கு வந்திட்டால் பாட்டியை எதிர் பார்க்க முடியாது.

அதே மாதிரி அப்பா அம்மா தம்பி நாங்கள் நால்வரும்  எங்கு டூர் போனாலும்
பாட்டிதான் வீட்டை  பார்த்துக்குவாங்க
பெரும்பாலான பயணங்கள் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது  அதிகாலை சமயமாக இருந்தாலும் எங்களுக்காக பாட்டி  வீட்டில் காத்திருப்பார்கள்.
எங்களது பயண கதைகளை எல்லாம் கேட்டு சந்தோஷ படுவார்.
இனி அடுத்த பயணம் சென்று வீடு திரும்பும் போது
எங்களுக்காக கதவு திறந்து வைத்துக் கொண்டு
பாட்டி இருக்க  மாட்டார் என்கிற நினைப்பு வந்தாலே கஷ்டமாக இருக்கிறது.
  பாட்டியை ஒரு முறையாச்சும்  விமானத்தில் ஏற்றி எங்கியாவது கூட்டிட்டு போகனும்னு
ஆசை பட்டிருந்தேன். இப்படி அவர் எங்களை விட்டு போய்விடுவார்னு எதிர் பார்க்கல.

நான் பார்த்த வரைக்கும் எங்கள் குடும்பத்தில் சின்ன வயதில் இருந்து பாட்டி மாதிரி வாழ்கையில் கஷ்டபட்டு  முன்னேரியவர்களை
யாரையும் பார்த்தது கிடையாது.
1948 ஆம் வருடம் பிறந்த பாட்டி 16 வயதில்   திருமணமாகி
30 வயது முடிவதற்குள் பாட்டி நாங்கு பிள்ளைகளைப் பெற்று
கேன்சர் காரணமாக கணவனை இழந்து.
தனி மனுஷியாக அவருக்கு இருந்த நான்கு மாடுகளை வைத்துப் பால் கறந்து நான்கு
பிள்ளைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்து பேர பிள்ளைகளையும் பார்த்து
கடைசி வரைக்கும் படுக்கையில் படுக்காமல்
யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ஆரோக்கியமாக நடமாடிக்கொண்டு
நிம்மதியாக இருக்கும்போது இப்படி
திடீரென இறந்து போனது
நம்ப முடியவில்லை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

  10/06/2020  பாட்டி இறந்த 13 ஆம் நாளான  நேற்று காரியம் முடிந்தது.