இரண்டாயிரத்துக்கு முன்பே எங்கள் வீட்டில் BSNL லாண்ட் லைன் கனெக்ஷன் வந்துவிட்டது. ஆனால் எஸ்டிடி வசதி இல்லை. உள்ளூர் அழைப்புகள் மட்டுமே அதில் போகும். நானோ ஒண்ணாவதுல இருந்து சென்னையில் விடுதியில் தங்கி சிறப்பு பள்ளியில் படித்ததால் நண்பர்கள் எல்லாம் தமிழகத்தில்தான். காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டால் நண்பர்கள் யாருக்காச்சும் ஃபோன் செய்து பேசலாம் என்றால் எஸ்டிடி வசதியோ எங்கள் லாண்ட் லைன் கனெக்ஷனுக்கு இல்லை.
அப்போது ட்ரங்க் கால் வசதினு ஒண்ணு இருந்தது. (நூத்தியென்பதுனு நினைக்கிறேன் இப்போது சரியாக ட்ரங்கால் எண் நினைவில்லை). அந்த எண்ணுக்கு நான் முதலில் அழைச்சு எந்த ஊரில் இருக்கும் தொலைபேசி எண்ணோடு பேசணுமோ எஸ்டிடி கோடுடன் சேர்த்து தொலைபேசி எண் சொல்லி நாம் ஃபோன் வெச்சிட்டால் போதும். நாம் பேச வேண்டிய நபர் லைனில் வந்தால் ட்ரங்காலில் இருந்து அவர்கள் நம்மை கூப்பிட்டு நம்மை பேசச் செய்வார்கள். அப்போதெல்லாம் ட்ரங்க்கால் வசதியே எனக்கு பெரிய ஆச்சர்யமான விஷயம்.
இந்த ட்ரங்கால் வசதிக்கு நிமிஷத்துக்கு எவ்வளவு செலவு ஆகும்னு எல்லாம் எனக்கு தெரியாது. என் இஷ்டத்திற்கு ஃப்ரென்ட்ஸ் யாருடைய வீட்டில் எல்லாம் லாண்ட் லைன் கனெக்ஷன் இருக்கிறதோ அவர்களை எல்லாம் ட்ரங்க் கால் மூலம் கூப்பிட்டு பேசுவேன். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் அப்போது லாண்ட் லைன் பில் வரும்னு நினைக்கிறேன். பில் வரும் சமயம் நான் வீட்டில் இருக்க மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு அப்பா லாண்ட் லைனுக்கு பூட்டு போட ஆரம்பிச்சிட்டார்.
அடுத்து இரண்டாயிரத்து நாலா இல்ல அஞ்சானு சரியா வருஷம் தெரியல. அப்பா ஒரு நோக்கியா மொபைல் வாங்கி இருந்தார். கல்லு மாதிரி ரொம்ப ஸ்ட்ராங்க் பாடி அதோடது. ஒரு கட்டத்தில் லேண்ட் லைன் பயன்படுத்த முடியாத கட்டம் வந்து விட்டதால் அதே சமயம் பெரியப்பா மகன் - அண்ணா BSNLல ஜூனியர் டெலிகாம் ஆஃபிசராக வேலையில் சேர்ந்திருந்தார். எப்போதெல்லாம் எங்க வீட்டுக்கு வருவாரோ அவரது ஃபோன தூக்கிட்டு எங்கையாச்சும் ஓடிபோய் போன் பேசிட்டிருப்பேன்.
2007 ஆம் வருஷம் நான் பத்தாவது பொதுத்தேர்வு முடிச்சதுமே வீட்டுல அடம் பிடிச்சு ஏப்ரல் மாசம் இருபதாம் தேதி பதினாலு ஆயிரம் ரூபாய் அப்பாவுக்கு பெரிய செலவு வெச்சேன். என்னோட முதல் மொபைல் நோக்கியா N70.
என்னதான் ஃபோன் மட்டும் வாங்கிட்டாலும் ஃபோன் பேசணும்னா சிம்கார்டும் அதுல காசும் இருக்கணுமே. அப்பாவுக்கு டிப்பார்ட்மெண்ட்ல சிம் கொடுத்ததால் அவரது சிம் எனக்கு கொடுத்துட்டார். அதுல அப்போ எப்படியும் மூவாயிரத்துக்கும் மேல பேலன்ஸ் இருந்ததா ஞாபகம். அப்பா என்னிடம் சிம்கார்ட் கொடுக்கும்போது ஒரு நாளைக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் பேசணும்னு சொல்லி கொடுத்தார். நானும் சரி சரினு தலையை ஆட்டினேன்.
அப்போலாம் BSNL அவுட்கோயிங் சார்ஜஸ் ரொம்ப அதிகம். ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டில் இருக்கும் BSNL எண்ணிற்கு அழைத்து பேசினால் நிமிடத்திற்கு இரண்டு ரூபாய். அதுவே மற்ற நெட்வொர்க் என்றால் நிமிடத்திற்கு இரண்டு ருபாய் நாற்பது காசு என்னவோ. பதினோராம் வகுப்பு சேருவதற்குள்ளவே இடைபட்ட இரண்டு மாதத்திற்குள்ளாக கிட்டதட்ட இரண்டாயிரம் ரூபாய் பேசி காலி செய்திருப்பேன். விடுமுறை முடிஞ்சு ஸ்கூலுக்கு போற சமயம் வீட்டுல அம்மாவோட பீரோவுக்குள்ள ஃபோன ஒழிச்சு வெச்சிட்டு போவேன். (நான் இல்லாத சமயம் வேறு யாரும் ஃபோன் எடுத்து யூஸ் பண்ண கூடாது இல்லையா).
2009 ஆம் வருடம் பனிரெண்டாவது பொதுத் தேர்வு முடிச்சதும் சென்னைக்கு டாட்டா சொல்லிட்டு இனி தமிழகம் பக்கமே வரக்கூடாதுனு நினைச்சுகிட்டு வீட்டுக்கு வந்திட்டேன். அப்போ கையில் ஃபோன் இருந்தாலும் அதில் பெரும்பாலும் பேலன்ஸ் இருக்காது. வாரத்தில் ஒரு முறை அம்மா ரீசார்ஜ் செய்தாலும் ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல பேசி காலி பண்ணிடுவேன். இது செட் ஆகாதுனு முடிவு பண்ணி பழைய படி அந்த சமயம் லேண்ட் லைன் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அப்போ எஸ்டிடி கனெக்ஷனும் லேண்ட் லைனுக்கு இருந்ததால் நடுவுல ட்ரங் காலுக்கு வேலை இல்லாமல் போச்சு.
அப்போதான் நான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தேன். கொஞ்ச நாளிலேயே இண்டெர்னெட் கனெக்ஷன் மேல எனக்கு ஆசை வந்திடுச்சு. ‘லேண்ட் லைன் பில் அதிகமா வர்றதால ப்ராட்பேண்ட் கனெக்ஷன் வாங்கிட்டோம்னா செலவு குறைஞ்சிடும்மா’னு ஒரு சாக்க அம்மா கிட்ட சொல்லி அண்ணா மூலமா சீக்கிரம் நெட் கனெக்ஷனும் வாங்கியாச்சு. அதன் பிறகு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ஃப்ரென்ட்ஸோடு பேச ஸ்கைப் மற்றும் மெயில் பயன்படுத்துவேன்.
யூஜி நான் திருப்பதியிலயே சேர்ந்ததால் எனக்கு நண்பர்கள் எல்லாம் ஆந்திராவுக்குள்ள இருந்ததாலயும் அதிலும் மாசத்திற்கு ஒரு பூஸ்டர் பேக் போட்டால் லோக்கல் கால் சார்ஜஸ் ரொம்ப கம்மியாகிடுச்சு. ஆனாலும் எப்போ எல்லாம் அண்ணா வீட்டுக்கு வருவாரோ அப்போலாம் அவரோட ஃபோன் பயன்படுத்துவது நிற்கல. (ஃப்ரீ ஃபோன் கால் ஆச்சே).
மே ஒண்ணு 2012 இரண்டாவது ஃபோன் வாங்கினேன். என்னோட மொத ஃபோன் அஞ்சு வருஷத்துக்கு மேல ஆனதால சரியா வேல செய்யாததுனால என்னோட இரண்டாவது மொபைலான சாம்சங் ஆண்ட்ராய்ட் டச் மொபைல் வாங்கினேன். ஃபோன் வாங்கியதுமே முதன் முதலா
அக்காவுக்குதான் ஃபோன் பண்ணி பேசணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி இருந்ததால் அது படியே கடையில ஃபோன் வாங்கியதும் வீட்டுக்கு வந்ததுமே பழைய ஃபோனில் இருந்து சிம்மை கழட்டி புதிய ஃபோனில் போட்டதுமே அக்காவுக்கு ஃபோன் செய்து பேசினேன். கிட்டதட்ட அஞ்சு வருஷத்துக்கு சாம்சங் ஃபோனையே வெச்சிருந்தேன்.
2012க்கு பிறகு இந்தியாவில் தொலை தொடர்பு தொழில் நுட்பம் வேகம் எடுக்க ஆரம்பிச்சது. வாட்ஸாப் வருகை; மொபைல் டேட்டா குறைந்த கட்டணத்தில்; வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக மொபைல் ஃபோன் என ஜெட் வேகத்தில் இந்தியா பயணிக்க ஆரம்பிச்சது. என்னுடைய மொபைல் போனோ பேசிக் ஆண்ட்ராய்ட் டச் ஃபோன் மாடல் என்பதால் அதில் எதுவும் பயன்படுத்த முடியாது.
2017 ஏப்ரல் மாதம் என்னோட மூன்றாவது மொபைலான ஐஃபோன் வாங்கிய பிறகுதான் அதில் வாட்ஸாப் இன்ஸ்டால் செய்தேன். அதன் பிறகு...
ஐய்யோ லேண்ட்லைன் கதை சொல்ல ஆரம்பிச்சு ஐஃபோனில் வந்து நிற்கிறது...
விஷயம் என்னனா கடந்த ஒரு வாரமாக வீட்டில் ப்ராட்பெண்ட் லைன் சரியாக வருவதில்லை. கனெக்ஷன் விட்டுவிட்டு வருகிறது. ஒரு பக்கம் நான் என்னோட வேலையை செய்ய நெட் பயன்படுத்த இன்னொரு பக்கம் தம்பி அவனோட ஆஃபிஸ் வேலையை செய்ய நெட் பயன்படுத்த நெட் கனெக்ஷன் விட்டுவிட்டு வந்ததால நான் கம்ளெய்ண்ட் பண்ண; BSNL பிரச்சனை சரி செய்ய மீண்டும் பிரச்சனை வர மீண்டும் நான் கம்ப்ளெயிண்ட் பண்ண என போய்கிட்டு இருக்க இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு கால் வந்தது.
ஃபோனை எடுத்து நான் ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருப்பவர் என்னப்பா தம்பி சும்மா சும்மா கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டிருக்க. இனி லைன் வொர்க் ஆகலயினா கம்ப்ளெயின்ட் பண்ணாத எனக்கு கால் பண்ணி சொல்லுனு சொல்லி இருந்தார். உடனே நான் என்னோட அண்ணா BSNLல டிவிஷன் இஞ்சினியருங்கனு சொல்ல வாய் எடுக்க போக ஃபோனில் பேசிய நபர் என்னைய தம்பினு சொல்லி சின்ன பையன் கிட்ட பேசுற மாதிரி பேசியதால நா சொல்ல நினைச்சத சொல்லிக்கல.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மீண்டும் நெட் வரல அவரது செல்ஃபோனுக்கு கூப்பிட்டு சொன்னேன். கொஞ்ச நேரத்துல மீண்டும் அவரே கால் செய்து இப்போ நெட் வருதானு கேட்டார். வருதுனு சொன்னேன். நேற்றும் கால் செய்து லைன் சரியா வருதானு கேட்டார். ம்ம்ம் நல்லா வருது அங்கிள்னு சொன்னேன். இனி க்ளாஸ்க்கு இண்ட்ரப்ட் இல்லாம நல்லா படினு சொல்லி ஃபோன் வெச்சிட்டார்.
கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டதுமே மனசு மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ் அளவு குளிர்ந்திடுச்சு போங்க:)))
*
ஒரு பத்து நாள் முன்னாடி ஃப்ரெண்ட் ஒருத்தி ரெண்டு யூட்யூப் சேனல் சொல்லி நல்லா இருக்கும்னு பார்க்க சொல்லி இருந்தா. சரி நானும் ஒரு சேனல் ஓப்பன் செய்து அவ சொன்ன கண்டெட்ண்ட் தேடி பார்க்க ஆரம்பிச்சேன். அது
ராம் ஜானு காதல் கதை எபிசோட்ஸ்.
முழுவதும் பார்த்ததும் நா சும்மா இருந்திருக்கணுமே உடனே ஒரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் போட்டு அரை மணி நேரம் அறுஅறுனு ராம் ஜானு காதல் கதை எபிசோட்ஸ் பத்தி பேசி தள்ள, எல்லாம் கேட்டுட்டு படுபாவி கடைசியில ‘முப்பது வயசு ஆனாலும் இன்னும் அடுத்தவன் காதல் கதை பார்க்குறதுதான் ஸ்வாரஸ்யமா உனக்கு இருக்குல’னு சொல்லி என்னை பயங்கரமா டேமேஜ் பண்ணிட்டான்.
அது கூட பரவால அடுத்ததா இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் போட்டு அவனிடமும் ராம் ஜானு காதல் கதை பத்தி பேச ஆரம்பிச்சா ஆரம்பத்துலயே என்னைய பேச விடாம தடுத்திட்டு ’மொதல்ல ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிட்டு வாழ்கையில உருப்படுற வேலைய பாரு’னு சொல்லிட்டான்.
இரண்டு பேர் கிட்ட பேசியதுல மனம் உடைஞ்சு போன நான் இனி யாரிடமும் ராம் ஜானு காதல் கதைய பத்தி பேச கூடாதுனு முடிவு பண்ணி ஒருத்தருக்கு மட்டும் மெயிலில் லிங்க் அனுப்பி இருந்தேன். அவர் என்ன நினைச்சுக்கிட்டாரோனு தெரியல. பதில் ஒண்ணும் வரக்கானோம்.
*
ஃப்ரெண்ட் ஒருத்தன் லாக்டவுன் சமயத்துல யூட்யூப்லையே ஜோதிடம் பார்ப்பது எப்படினு கத்துகிட்டு வந்தான். ஜோதிடம் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் ஃப்ரெண்ட் கேட்டுகிட்டதால என்னோட பிறந்த நேரம், தேதி, பிறந்த இடம் மற்றும் என்ன ராசினு தகவல் சொல்லி இருந்தேன்.
ஒரு வாரம் பிறகு இரண்டு ஃபைல்கள் வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தான். அதில் சொல்லி இருப்பதெல்லாம் உன்மையோ பொய்யோ எனக்கு தேவை இல்லை You will get a matured and understanding wife and an intelligent and beautiful daughter என எழுதி இருந்தது.
இதற்கு மேல் என்ன வேண்டும். நம்பியதெல்லாம் கைவிட நண்பன் சொன்ன படி ஜோதிடத்தைத் இனி நம்பலாம்னு இருக்கேன்.
பார்ப்போம் ஜோதிட நண்பன் சொன்னமாதிரி நடக்குமானு.
ஜெய் ஜோதிடம்:)))