2012 ஜெனவரி மாதமோ என்னவோ தமிழில் முதல் வலைப்பதிவை வாசித்தேன். சரியாக அடுத்த வருடம் அதாவது 2013 ஜெனவரி மாதம் முதல் பதிவை எழுதினேன். அதன் பிறகு எப்படி எழுதினேன்; என்ன எழுதினேன்; என்பதை இப்போது திரும்பி பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
2017-ஆம் வருடம் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சிங்கப்பூரில் சுற்றிவந்த அனுபவத்தை தொடராக எழுதி வந்தேன். ஆறு பகுதிகள் வந்திருக்கும், பலரும் என்னிடம் தொடர் நன்றாக வருவதாகவும், பல புதிய தகவல்கள் தெரிந்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.
திடீரென ஒரு பிரச்சனை வீட்டில். எழுதுவதற்கு தடை பட்டது. ஒரு வாரம், ஒரு மாதம் என அந்த சமயம் எழுத முடியாமல் போனது.
எல்லாம் சரி ஆனதும் எழுதுவதற்கான ஆர்வம் குறைந்து விட்டது. அவ்வப்போது நண்பர்கள் யாராவது விட்ட இடத்தில் இருந்து
தொடருமாறு பல முறை கேட்டிருந்தனர். எழுத முயற்சித்துப் பார்த்தால் எழுதுவதற்கு ஆர்வம் மட்டும் வரவே இல்லை.
ஒருவழியாக ஏற்கனவே ஆறு மாதங்கள் தொடர் எழுத இடைவெளி விட்டதால் இனியும் தாமதிக்க கூடாது என்பதால் எழுதிவிடுவதென முடிவு செய்து 2018 மார்ச் மாதம் என்னவோ விட்ட இடத்தில் இருந்து மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.
தினமும் 140 கிமீ பயணம்; அலுவலக வேலை; தவிர மீண்டும் ஏதோ ஒரு பிரச்சனை.... இரண்டு பகுதிகளோடு நின்றிருக்கும்.
அதே வருடம் அக்டோபர் மாதம் எனது இரண்டாவது வெளிநாட்டு பயணம் உறுதி செய்யபட்டதுமே 2018 ஆகஸ்ட் பதினைந்து தாய்லாண்ட் சென்று வர விமான டிக்கெட் புக் செய்ததும் அந்த வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் தொடர் முழுமையாக எழுதி முடித்தேன்.
பலர் தொடரை வாசித்துவிட்டு 'நாங்களே சிங்கப்பூர் போய்ட்டு வந்த ஃபீல் கொடுத்திட்ட’னு பாராட்டி இருந்தனர். அதோடு அதை புத்தகமாக கொண்டு வர சொல்லியும் ஆலோசனைகள் தந்தனர். நாந்தான் எதையும் கண்டுக்காமல் இருந்திட்டேன்.
இவ்வருடம் மார்ச் மாதம் இருக்கும். அலுவலகத்தில் அஸ்வினினு ஒரு மேடம் இருக்குராங்க. அவருக்கு புத்தகம் வாசிக்குற பழக்கம் இருக்குனு தெரிஞ்சதுமே ப்ளாகில் எழுதி இருந்த சிங்கப்பூர் தொடரை ப்ரிண்டவுட் எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
அது வரைக்கும் எத்தனையோ பேர் என்னிடம் சிங்கப்பூர் தொடரை புத்தகமாக கொண்டு வர சொன்னாலும் கொஞ்சம் கூட உரைக்காத எனக்கு அஸ்வினி மேடத்திடம் சிங்கப்பூர் பயணக்கட்டுரை தொகுப்பு கொடுக்கும்போது என் எழுத்து; என் எண்ணம்; என் அனுபவம் என பலதர பட்ட உணர்வுகள் என்னுள் எழுந்த அந்த நொடியை எளிதில் இங்கு எழுதிவிட முடியாது; வாழ்நாளில் மறக்கவும் முடியாது. அந்த நொடி முடிவு செய்தேன். சிங்கப்பூர் தொடரை நிச்சயம் புத்தகமாக கொண்டு வரணும்னு.
திடீர் ஊரடங்கு உத்தரவு; வீட்டில் பாட்டியின் மரணம் என மனதளவில் சோர்ந்து போன சமயம் ஜூலை முதல் வாரத்தில் புத்தக வேலைகள் ஆரம்பித்து ஜூலை இருபது அமேசான் கிண்டிலில் கொண்டு வருவோம் என ஒரு எண்ணம் தோன்றியது. அதற்கேற்ப புத்தகம் தொடர்பாக வேலைகள் ஆரம்பிக்க, அந்த முயற்சி தோல்வியில் முடிய; மீண்டும் கடந்த மாதம் முதல் வாரத்தில் நவம்பர் - 1 புத்தகம் அமேசான் கிண்டிலில் கொண்டு வந்திடனும்னு முடிவு செய்து வெற்றிகரமாக நவம்பர் - 1 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் மெமரீஸ் அமேசான் கிண்டிலில் கொண்டு வந்தாச்சு :).
வாட்ஸாப், ஃபேஸ்புக் என லிங் ஷேர் செய்திருந்தாலும் இங்கு கொஞ்சம் தாமதமாகத்தான் லிங்க் ஷேர் செய்கிறேன்.
வலைப்பூவில் எழுதிய சிங்கப்பூர் தொடரை புத்தகமாக கொண்டு வருவதால் தேவைபட்ட இடத்தில் மாற்றங்கள் செய்து முழுமையான ஒரு புத்தகமாக கொண்டு வந்திருக்கிறேன்.
பயணத்திலும்; வெளிநாட்டின் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த புத்தகம் பிடிக்கும் என நம்புகிறேன்.
உங்களது ஆதரவை வேண்டி
அமேசான் கிண்டிலில் சிங்கப்பூர் மெமரீஸ்
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.