இந்த வருஷம் முடிய இன்னும் ஒரு மூணுநாள்தான் மிச்சம் இருக்கு. என்னவோ போனவாரம்தான் புத்தாண்டு கொண்டாடுன மாதிரி தோணுது. அதுக்குள்ளயும் வருஷ கடைசிக்கு வந்த ஒரு ஃபீல்...
எந்த வருஷம் இல்லாத அளவு இந்த வருஷம் எதிர் பாராத பல திருப்பங்கள் என்னோட வாழ்க்கையில நிகழ்ந்திருக்கு. இப்படிதான் ஒவ்வொரு வருஷ கடைசியில தோணினாலும் நெஜமாலுமே இந்த வருஷம் எனக்கு எல்லாவித உணர்வுகளையும்
மனிதர்கள் குறித்தான புரிதல்களையும் இந்த வருஷம் எனக்கு உணர்த்திடுச்சுனு சொல்லலாம்...
சிலது நானா தேடி போய் அமைச்சுகிட்டது னு சொல்லலாம்...
சிலது தானா எனக்கு அமைஞ்சதுனு சொல்லலாம்.
எது எப்படியோ...
இந்த வருஷத்துல ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்புனா
அது பாட்டியோட மரணம்தான்...
எழுவது வருஷ சதாப்தம் ஒரு மூணு நாள்ல முடிஞ்சிடுச்சு.
கடைசி வரைக்கும் பாட்டியோட இழப்ப வேறு யார்னாலயும் ஈடு கொடுக்க முடியாதுனு தினமும் பாட்டி நினைவுகள் ஞாபகம் வரும்போதெல்லாம் தோணிட்டே இருக்கும்.
மிஸ் யூ பாட்டி.
***
கொரோனா வந்து உலகமே சில மாதங்களுக்கு இயல்பு வாழ்க்கையில இருந்து முடங்கி போனாலும் தனிபட்ட முறையில எனக்கு நன்மை ஏற்பட்டிருக்குனு சொல்லியே ஆகணும்.
அதே சமயம் தெரிந்த ஒரு அண்ணா தினசரி வாழ்க்கை நகர்த்துவதற்கு அது வரைக்கும் செய்து வந்த வேலையை ஊரடங்கு காரணமாக விட்டுவிட்டு கொஞ்சம் கூட தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலைக்கு போனத கேள்வி பட்டதும் ரொம்ப கஷ்டமா போச்சு....
அதே மாதிரி தெரிந்த ஒரு அக்காகிட்ட பேசிட்டிருக்கும்போது ஒருமுறை அவுங்க தன்னுடைய வாழ்க்கையில எந்த அளவு இந்த
கொரோனாவினால பண நெருக்கடிக்குள்ளானாங்கனு சொன்னத கேட்டபோது
விளிம்பு நிலை மக்களோட வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியல...
***
இந்த வருஷம் புத்தகங்கள் வாசிச்ச அளவு இதற்கு முன்பு வேறு எந்த வருஷமும் இந்த அளவு நாவல்கள் வாசிச்சிருப்பேனானு சந்தேகமே...
லக்ஷ்மி சரவண குமார் அவரது ரூஹ் வாசிக்க ஆரம்பிச்சு தொடர்ந்து அவரது ஐந்து நாவல்கள் வாசித்திருந்த நிலையில்
அடுத்து என்ன வாசிக்கலாம்னு இருந்த சமயம் சரியாக சீனு அவரது வலைப்பூவில் கொம்பு முளைத்தவன் விமர்சனம் வாசிச்சதும்
உடனடியாக அந்த புத்தகம் வாசிக்கனும்னு தோணியதால் கிண்டிலில் கொம்பு முளைத்தவன் வாசித்து அதில் வந்த
யதி பற்றிய குறிப்புகள் யதி நாவலை உடனடியாக வாசிக்கணும்னு தோணியதால்
பாராவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான யதியை வாசிக்க ஆரம்பித்து...இந்த வருடத்திலே நான் வாசித்ததில்
மிகச் சிறந்த நாவலாக யதி எனக்கு பிடித்து போனதுனு சொல்லலாம்...
தவிர ஜெய மோஹன் அவரது அனல் காற்று கண்ணி நிலம் வாசித்ததும் அவரது எழுத்து பிடித்து போக
இரவு வாசிக்க ஆரம்பிச்சு...
உலக இலக்கியத்தில் சிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் க்லாஸிக் படைப்பான டால்ஸ்டாயின் அன்னா கரேனினாவை வாசிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நாவலில் இருக்கும் எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல்
ஆகஸ்ட் மாதம் எப்படி அன்னாவை தவிர்த்தேனோ... நவம்பர் மாதம் நீலிமாவை நேருக்கு நேராக
எதிர்கொள்ள முடியாமல் மனம் தவிப்பதால் ஜெய மோஹனது இரவு பாதியில் நிற்கிறது...
லக்ஷ்மியின் ஐரிஸ் காதலை ரசித்து அனுபவித்து கொண்டாடும் ஒரு நபரால் மட்டுமே
அது மாதிரியானதொரு படைப்பை எழுத முடியும்... மனோவில் மஹேஷை கண்டேன்.
வாழ்த்துகள் லக்ஷ்மி சார்...
கடைசியாக இம்மாதம் 2012 ஆம் வருடம் யுவ புரஸ்கார் பெற்ற மலர்வதி அவரது கருப்பட்டி என்கிற சிறுகதை தொகுப்பு வாசித்தேன்.
ஒவ்வொரு கதை வாசிக்க பிடிக்கும் நேரம் என்னவோ குறைவுதான் ஆனால் அந்த கதை தாக்கத்தில் இருந்து வெளி வர நிறைய நேரம் பிடித்தது.
ரொம்ப நாள் கழித்து ஒரு முழு சிறுகதை தொகுப்பு வாசித்த திருப்தி கருப்பட்டி எனக்கு கொடுத்தது.
***
பள்ளி நாட்களில் சக வகுப்பு நண்பர்கள் எல்லாம் எதோ ஒரு துறையில் தத்தம் திறமையை நிருபித்துக் கொண்டிருக்கும் சமயம் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் சுமாரான எனக்கு வாழ்நாள் லட்சியமாக ஒரு காதல் கவிதை எழுதி அதை காதலிக்கு கொடுக்கணும்னு தோணியதெல்லாம் எங்க போய் சொல்ல..
அது வரைக்கும் ஒரு பக்கம் சுயமாக சிந்தித்து எழுதி இருப்பேனா என்பது சந்தேகமே...
எப்படியோ நானும் ஒருத்தவுங்களோட தூண்டுதலினால ஏழு வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆரம்பிச்சு
எழுத்து தொடர்பா என்னோட ஒரே ஒரு ஆசை வலைப்பூவில் மொக்கை கவிதை தலைப்பில் காதல் கவிதை ஒண்ணு ரெண்டு கிறுக்கி இருக்க...
குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று வந்ததை தொடராக எழுதி இருந்ததை மூணு வருஷத்துக்கு பிறகு நவம்பர் ஒன்று அமேசான் கிண்டிலில் சிங்கப்பூர் மெமரீஸ் புத்தகமாக கொண்டு வந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்...
புத்தகம் வெளியான தினத்தன்று முதல் நபராக புத்தகம் வாங்கி அன்னைக்கே முழு புத்தகம் வாசித்துவிட்டு
ஏற்கனவே ப்ளாக்ல வாசிச்சிருந்தாலும் புத்தகமா வாசிக்கும்போது புதுசா வாசிக்குற ஒரு ஃபீல் புக்குல இருக்குனு வந்த முதல் விமர்சனம்
மறக்க முடியாதது...
அந்த நபரே அவரது உறவினர் ஒருத்தவுங்களுக்கு புத்தகம் வாசிக்க பரிந்துரைக்க
முன்பின் அறிமுகமோ முக பரிச்சயமோ இல்லாத ஒருத்தர்
புத்தகத்தை வாசித்துவிட்டு அவர் சொன்னதை கேட்டதுமே எனக்குள் ஏற்பட்ட உணர்வையும் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு
என்னிலை மறந்து அனுபவித்த மகிழ்ச்சியையும் இனி என் வாழ்வில் அதைவிடவும் ஒரு சிறந்த;
மனதுக்கு நெருக்கமான விமர்சனம் சிங்கப்பூர் மெமரீஸ்க்கு வருமா என்பது சந்தேகமே...
புத்தகம் வாசித்து தனது கருத்தை சொன்ன கௌரி அவருக்கு நன்றிகள்.
அதே சமயம் ஏதாவது பிரச்சனை கஷ்டம்னு போய் நிற்கும்போது சரியான ஆலோசனை கொடுக்கும்
நண்பரும் சிங்கப்பூர் மெமரீஸ் புத்தகத்திற்கு முதல் விமர்சனம் எழுதி அனுப்பிய அரவிந்துக்கும் நன்றிகள்.
***
ஏப்ரல் மாதம் குஜராத் போக எல்லா ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்தபோது ஊரடங்கு உத்தரவு
வந்ததால் குஜராத் திட்டம் கைவிட பட்டது....
கடந்த ஒன்பது மாதங்களில் அதிகபட்சமாக ஒரு மூணு நாலு தடவை வீட்டு வாசலை தாண்டி இருப்பேன்.
அதுவும் முடிவெட்டவும் மருத்துவமனைக்கு செல்லதான் இருந்திருக்கும்...
அதை தவிர எதற்கும் வெளியே செல்லவில்லை.
வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு நீண்ட பயனம் செய்யும் எனக்கு இந்த வருஷம்
எங்குமே போக முடியலைனு வருத்தம் இருந்தாலும் உலக பயணம் தொடர்பாக நிறைய தெரிஞ்சுக்க முடிந்தது...
ஒரு காலத்துல யூரோப் ட்ரிப்தான் அதிகபட்ச வாழ்நாள் லட்சியமாக எனக்கு இருந்தது
இதுவரைக்கும் இரண்டு நாடுகள் சுற்றி வந்த அனுபவம் கொண்டு வாழ்நாளில் குறைந்தது 25 நாடுகளுக்காவது சென்று வரணும்னு இவ்வருடம் ஆசை பிறந்திருக்கு...
அதனுடைய ஒரு பகுதியாக புது ஆண்டில் நிலமை எல்லா இடங்களிலும் இயல்பு நிலை அடைந்ததுமே
முதலில் பாகிஸ்தான் சென்று காற்றை ஸ்வாசித்து வரலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...
**
கொரோனா பிறகு நான் புரிஞ்சுகிட்டது...
வாழ்க்கையில யாருக்கு எப்போ வேணும்னாலும் எந்த நொடியும் எதுவும் நிகழலாம்
எது எப்படி இருந்தாலும் அதை கடந்து வாழ மன தைரியம்உம் பக்குவமும் அனைவருக்கும் கிடைக்கணும்னு வாழ்த்தி
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிச்சுக்கறேன்.
happy new year 2021 to all.
__
திருப்பதி மஹேஷ்
29.12.2020.