Wednesday, June 09, 2021

மறக்க முடியாத பயணம் ராஜபாளையம் - திருப்பதி  ஏழு வயதில் என் பெற்றோர்  என்னை ஒரு மருத்துவரின் ஆலோசனை படி சென்னையில்  பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்த்திருந்தனர். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த  கன்னியாஸ்த்ரிகளால் நடத்தப்படும் ஒரு க்ரிஷ்டியன் மிஷ்னரி பள்ளிக்குடம் அது.


ஜூன் முதல் வாரம் முழு ஆண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளி கூடம் திறந்ததும் ஹாஸ்டலுக்கு வந்துவிட்டால் அதோடு செப்டம்பர் மாதம் காலாண்டு விடுமுறைக்குதான் வீட்டிற்கு செல்வது. நடுவில் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் இருப்பவர்கள் ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து என்னிடம் பேசினால்தான் உண்டு. அதுவும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் ஃபோன் செய்வார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஆனால் நானோ ஞாயிறு வந்தாலே ஃபோன் வருமா என எதிர் பார்ப்பதுண்டு.


ஒரு பக்கம் வீட்டை  பற்றிய  ஏக்கம் இன்னொரு பக்கம் படிப்புனு வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தது. எப்படி எனக்கு அந்த யோசனை வந்ததுனு தெரியல. ஏழாவது படிக்கும்போது முதன் முதலாக தனியாக நான் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வர துவங்கி விட்டேன். பத்திரமாக நான் வீடு சேரவும் ஹாஸ்டல் வாடனும்;   வீட்டிலும் என்னை நம்பியதால் அன்றில் இருந்து பணிரெண்டாவது முடிக்கும் வரைக்கும் நானே மாதத்தில் ஒரு தடவை தனியாக வீட்டிற்கு வந்து செல்வதுண்டு.


  மாலை நாலு பத்துக்கு ஸ்கூல் முடிந்ததும் நான் புறப்பட்டு எக்மோரில் ஐந்து மணிக்கு புறப்படும்  காச்சிகூடா எக்ஸ்பிரஸ் பிடிப்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது  என்னால் நம்பவே முடியவில்லை நானா அது என்று. ஐம்பது நிமிடத்திற்குள் ஸ்கூலில் இருந்து எக்மோர் வந்து ட்ரயின் பிடிப்பதெல்லாம்... ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட ரயிலை தவற விட்டது  கிடையாது.


பனிரெண்டாவது பொதுத் தேர்வில்  நான் எடுத்த மதிப்பென்களுக்கு சென்னை லையோலா  கல்லூரியில் நிச்சயம் எனக்கு இடம்  கிடைத்திருக்கும். அப்பாவுக்கு  கல்லூரி கூட என்னை சென்னையில் படிக்க வைக்கனும்னுதான் விருப்பம். நான் உறுதியாக இருந்தேன். என்னால இனி வீட்டை விட்டு சென்னையில படிக்க முடியாதுன்னு.


திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வேங்கடேஸ்வரா ஆர்ட்ஸ்  அண்ட் சைன்ஸ் கல்லூரியில்  பீ.யே எனக்கு இடம் கிடைத்தும் இங்கும் என்னை ஹாஸ்டலில்  சேர்க்கத்தான் முடிவு செய்திருந்தார்கள். முதலாம் ஆண்டு வகுப்புகள்   தாமதமாக ஆரம்பித்த இடைவெளியில் எப்படியோ வீட்டில் இருப்பவர்களது மனம் மாறி இருக்கிறது.


கல்லூரி துவங்கிய நாள் முதல்  நல்ல நண்பர்கள் எனக்கு அமைந்தார்கள். அதன் பிறகு பி.யெட் எம்.ஏ வகுப்புகளுக்கு எல்லாம்

வீட்டில் இருந்தே  தினமும் சென்று வந்தேன்.

என்னதான் நான் சென்னையில் தனியாக சுற்றினாலும் திருப்பதியில் மட்டும் 

யாராவது ஒருத்தர் துணையோடுதான் வெளியே

செல்வதுண்டு.


ஆறு ஆண்டுகளில் கல்லூரி வீடு தவிர  பெரிதாக வெளியே சென்றதாக நினைவு இல்லை. யூஜீ நாட்களாவது பரவாலை.

ஒரு கேங்காக நாங்கள் நாங்கைந்து பேர் இருந்ததால் மூன்றாண்டுகளில் நாங்கைந்து  படத்துக்கு போனதா நினைவு.

பீ.யெட் வகுப்புக்கள்  நடந்ததே பத்து மாதங்கள்தான். பி.ஜி நாட்கள் படு மோசம்.

நவீன்னு ஒருத்தன் இருந்ததால் தப்பித்தென்.


இதற்க்கிடையே  2011 அக்டோபர் முதல் வாரத்தில், புதுச்சேரி, திருச்சுராப்பள்ளி மற்றும் கோயம்பத்தூர் என இணையம் வாயிலாக

அறிமுகமான நண்பர்களை நேரில் சந்திக்க தம்பியை  உடன் அழைத்துச் சென்றிருந்தேன்.


2016 ஜூன் 9 அன்று பள்ளி நண்பன் ஜோசப் ரீகனுக்கு ராஜபாளையத்தில் திருமணம் என்பதால் ஜூன் எட்டு திருப்பதியில் இருந்து மும்பை -கன்னியாகுமரி ரயிலில் சேலம் வரை பயணித்து அங்கிருந்து ஒரு நண்பரோடு சேர்ந்து வேறு ஒரு ரயிலில் ராஜபாளையம் சென்றிருந்தோம்.


திருமணம்  காலையில் செர்ச்சில் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு சென்கோட்டை - மதுரை பாசெஞ்சர்  ராஜ பாளையத்திற்கு வரும் என்பதை கேள்வி பட்டதுமே மதிய  உணவு சாப்பிட்டு முடிச்சதுமே உடனடியாக கிளம்பிவிட்டேன்.


திருப்பு பயணத்தில்  தனியாக நான் மட்டுமே பயணம் செய்ய ஆரம்பித்தேன். இரவு  பத்து மணிக்கு ஈரோட்டில் இருந்து திருப்பதிக்கு ரயில் எனக்கு. ராஜபாளையத்தில் இருந்து இரோட் வரைக்கும்  எப்படி பயணம் செய்ய போகிறேன் என்கிற திட்டம் ஏதும் இல்லாமல்  இரோட் - திருப்பதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன்.

நான் ஸ்டேஷனுக்கு வரவும் ரயில் ஃப்லாட்பாரத்திற்குள் நுழையவும் சரியாக  இருந்தது. இரோட் வரை பொதுப் பெட்டி டிக்கெட் எடுத்துக் கொண்டு எங்க ட்ரைன் கிழம்பிடுமோ என்கிற பயத்தில் வேகமாக ஓடி ரயில் ஏறினால்... குறைந்தது அரைமணி நேரமாவது ராஜபாளையம் ஸ்டேஷனில் ட்ரைன் நின்னிருக்கும்.


ஒரு வழியாக  ரயில் புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் வழியாக பயணித்து மூன்று மணிக்கு என்னவோ  மதுரை ஜென்ஷனில் இறங்கினேன். அங்கிருந்து ஐந்து மணிக்குத்தான் ஈரோட் செல்ல அடுத்த ரயில் என்பதால்  அதுவரைக்கும் ஃப்லாட்பாரத்தில் போடப்பட்டிருந்த  இருக்கைகளில் உட்கார்ந்திருந்தேன்.


ஐந்து மணிக்கு வர வேண்டிய திருநல்வேலி - மும்பை ரயில் தாமதமாக வந்ததோடு மட்டும் இல்லாமல் கூட்டமாகவும் வந்திருந்தது. யாரோ ஒருத்தறது தயவில் உட்கார எனக்கு இடம் கிடைத்தது. அந்த பயணத்தில்தான் 

சீமாவை பற்றி  அவளது அம்மாவின் பேச்சின் வழியே தெரிந்து கொண்டேன். அவளுக்காக ஒருகனம் வருத்தப்பட முடிந்தது தவிர 

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. திண்டுக்கல், கரூர்  வழியாக பயணித்து இரவு ஒன்பதறைக்கு என்னவோ ஈரோட் ஜென்ஷனில் இறங்கினேன்.


ஒரு பக்கம்  பசி;

இன்னொரு பக்கம் அடுத்த ரயில் எப்படி பிடிக்க போறேனோ என்கிற பதற்றம்.

பத்து வயது இருக்கும் ஒரு சிறுவன்தான் எனக்கு  ஈரோட் ஜென்ஷனில் திருவனந்தபுரத்தில் இருந்து புது டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் பிடிக்க உதவினான்.

5 comments:

 1. நல்ல அட்வென்ச்சரஸ் ஆழுதான் நீ.
  யார் அந்த சீமா?

  ReplyDelete
 2. நினைவுகள்.... சொன்ன விதம் நன்று.

  தொடரட்டும் நினைவுகள்.

  ReplyDelete
 3. பரபரப்பான பயணமாக அமைந்திருக்கும்.  தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. நல்ல அனுபவ பயணம் மகேஷ் , தொடரட்டு. விடுதி வாழ்க்கைக்கும் எனக்கும் பரீட்சயமே இல்லை பள்ளி கல்லூரி நாட்களில். சீமா? Who is அந்த "she" -மா?

  ReplyDelete
 5. தனியான பயணம் நிறைய அனுபவம் கற்றுத் தந்திருக்குமே மகேஷ். நல்ல தைரியம் அடுத்து என்னனு ஆவல்...

  மகேஷ் துளசிக்கு வேக்சின் ரியாக்ஷன் கொஞ்சம் படுத்தல், அப்புறம் ஆன்லைன் க்ளாஸ் 80 ஸ்டூடன்ட்ஸ் டெய்லி அட்டெண்டன்ஸ் வாட்சப்ல...நொட்ஸ் அனுப்பனும், புது பாடங்கள் போல ஸோ ப்ரிப்பரேஷன் ஜாஸ்தியா இருக்கு டைம் டைட் நு அதான்வ் ப்ளாக் வரமுடிலனு..

  கீதா

  கீதா

  ReplyDelete